search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மண்டியா திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா இன்று தொடக்கம்
    X

    மண்டியா திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா இன்று தொடக்கம்

    • இந்த கும்பமேளா வருகிற 16-ந் தேதி நிறைவு பெறுகிறது.
    • 16-ந் தேதி திரிவேணி சங்கமத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    மண்டியா :

    மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா அம்பிரகரஹள்ளி கிராமத்தில் காவிரி, ஹேமாவதி, லட்சுமிதீர்த்தா நதிகள் ஒன்றாக இணையும் திரிவேணி சங்கமம் உள்ளது. இந்த திரிவேணி சங்கமத்தில் சாமி மலை மாதேஸ்வரா கால்பதித்ததாக கூறப்படுகிறது. இதை நினைவு கூறும் வகையில் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து புனித நீராடி வருகின்றனர். இங்கு புனிதநீராடினால் நலன் பயக்கும் என்பது ஐதீகம்.

    இதனை மையமாக வைத்து மாநில அறநிலையத்துறை மற்றும் கன்னட கலாசாரத்துறை, சுற்றுலாத்துறை, விளையாட்டு துறை ஆகியவை இணைந்து மகா கும்பமேளா நடந்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா கடந்த 2013-ம் ஆண்டு நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக 2-வது முறையாக திரிவேணி சங்கமம் கும்பமேளா இன்று தொடங்குகிறது. தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும் இந்த கும்பமேளா வருகிற 16-ந் தேதி நிறைவு பெறுகிறது.

    முதல் நாளான இன்று மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர் மலை மாதேஸ்வரா கோவிலில் இருந்து ஜோதிகளை எடுத்து வந்து, அந்த ஜோதியை வைத்து ரத ஊர்வலங்கள் நடத்தப்படுகிறது. மேலும் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இதையடுத்து நாளை மகா கும்பமேளா நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை தர்மஸ்தலா கோவில் தலைவர் வீரேந்திர ஹெக்டே எம்.பி. தொடங்கி வைக்கிறார். இதில் ஆதிசுஞ்சன கிரி மடாதிபதி நிர்மலானந்த சாமி கலந்து கொள்கிறார்.

    15-ந் தேதி மடாதிபதிகள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து வரும் 300-க்கும் மேற்பட்ட மடாதிபதிகள் கலந்து கொள்கின்றனர். இதையடுத்து 16-ந் தேதி திரிவேணி சங்கமத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இந்த பூஜையில் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனிதநீராடுகிறார். இவருடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் மத்திய-மாநில மந்திரிகள் புனிதநீராட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் 200-க்கும் அதிகமான கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த மகா கும்பமேளாவில் 6 லட்சத்திற்கு அதிகமான மக்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் கூட்ட நெரிசலை போக்கவும், சாமி தரிசனம் செய்யவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்களை தடுப்பதற்கும், வாகன போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×