என் மலர்
இந்தியா

அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு

- செந்தில்பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமின் வழங்கியபோது பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
- நீதிசார் நடைமுறைகளை தெள்ளத்தெளிவாக அவமதிப்பதையும் எடுத்துக் காட்டுகின்றன.
புதுடெல்லி:
போக்குவரத்துத்துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு (2024) செப்டம்பர் 26-ந்தேதி ஜாமின் வழங்கியது.
இந்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சென்னையை சேர்ந்த வித்யாகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த 12-ந்தேதி நடந்த விசாரணையின்போது, அமைச்சராக தொடர விருப்பமா? என செந்தில்பாலாஜியிடம் கேட்டுத் தெரிவிக்க வேண்டும் என அவர் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 4-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
இதற்கிடையே அமலாக்கத் துறை தலைமையகத்தின் இணை இயக்குநர் ஜவாலின் தேஜ்பால் சார்பில் வக்கீல் அர்விந்த் குமார் சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
செந்தில்பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமின் வழங்கியபோது பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பதிவு செய்துள்ள ஊழல் வழக்குகளின் அரசு தரப்பு சாட்சிகளையோ, பாதிக்கப்பட்ட நபர்களையோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு கொள்ளக்கூடாது.
ஊழல் வழக்கிலோ, பண மோசடி வழக்கிலோ இவ்வாறு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புகொண்டால் ஜாமின் ரத்து செய்வதற்கான முகாந்திரமாக கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் அமலாக்கத் துறை தரப்பு முக்கிய சாட்சியான தமிழ்நாடு மாநில தடயவியல் துறை நிபுணர் மணிவண்ணன் வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகி வந்தார். ஆனால் ஜாமீனில் செந்தில்பாலாஜி விடுவிக்கப்பட்ட பிறகு செப்டம்பர் 26, 30-ந்தேதிகளில் நடைபெற்ற விசாரணையின்போது அவர் ஆஜராகவில்லை. பின்னர் ஆஜரான மணிவண்ணனிடம் செந்தில்பாலாஜி தரப்பு வக்கீல்கள் எவ்வித அர்த்தமும் இல்லாமல் குறுக்கு விசாரணை செய்தனர்.
இதுதவிர மூத்த வக்கீலை மாற்றிக் கொள்ளும் கோரிக்கையை செந்தில்பாலாஜி முன்வைத்ததுடன், டிஜிட்டல் ஆவணங்களின் நகல்களையும் கேட்டு மனு செய்தார்.
மேற்கண்ட நடவடிக்கைகள் எல்லாம் பண மோசடி வழக்கு விசாரணையை திட்டமிட்டே தாமதப்படுத்தும் செந்தில்பாலாஜியின் முயற்சிகள். நீதிசார் நடைமுறைகளை தெள்ளத்தெளிவாக அவமதிப்பதையும் எடுத்துக் காட்டுகின்றன.
பண மோசடி வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் கூட, அமலாக்கத்துறை தரப்பு 4-வது சாட்சியிடம் குறுக்கு விசாரணையை ஏதாவது ஒரு காரணம் கூறி 2 மாதங்களுக்கு அவர் தரப்பு இழுத்தடித்து உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அவமதிக்கும் செந்தில்பாலாஜியின் செயல்பாடு பண மோசடி வழக்கின் விசாரணையை தாமதப்படுத்துவதையும், காலந்தாழ்த்துவதையும் தெளிவாக்குகிறது.
இல்லாத, அற்ப காரணங்களை முன்வைத்து விசாரணையை தள்ளி வைக்க கோருவதும், விசாரணையை விரைந்து நடத்தி முடிக்க தடங்கல்களை உருவாக்குவதும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை செந்தில் பாலாஜி மீறியிருப்பது தெளிவாகிறது. எனவே செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய வேண்டும் மேலும் ஜாமின் தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.