search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    ஸ்ருதிக்கு வீடு கட்டும் பணியை சித்திக் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்ததையும், அதனை ஆம்புலன்சில் இருந்தவாறு ஸ்ருதி பார்த்ததையும் படத்தில் காணலாம்.
    X

    நிலச்சரிவில் குடும்பத்தினர் பலி- விபத்தில் வருங்கால கணவர் மரணம்: உறவுகளை இழந்த வயநாடு ஸ்ருதிக்கு புதிய வீடு கட்டும் பணி தொடக்கம்

    • வயநாடு பொன்னாடை பகுதியில் 11.5 சென்ட் நிலத்தில் 1,500 சதுர அடியில் ஸ்ருதிக்கு புது வீடு கட்டப்பட உள்ளது.
    • வீடு கட்டும் பணியை கல்பெட்டா தொகுதி எம்.எல்.ஏ. சித்திக் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரளா வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் 30-ந்தேதி கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் இருந்த வீடுகள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களும் மண்ணுக்குள் புதைந்தும், இடிந்தும் சேதமடைந்தன.

    இந்த பயங்கர நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாயமாகிவிட்டனர். அவரகளின் கதி என்ன என்றே தெரியாமல்போனது. உயிர் தப்பிய பலர் தங்களின் குடும்ப உறுப்பினர்களை இழந்துவிட்டனர். அவர்களில் ஒருவர் தான் சூரல்மலை பகுதியை சேர்ந்த ஸ்ருதி.

    இவர் நிலச்சரிவில் தனது குடும்பத்தினர் 9 பேரை பறிகொடுத்தார். அவர்களது குடும்பத்தில் ஸ்ருதி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உறவுகள் அனைத்தையும் இழந்து தவித்த அவருக்கு, அவருடைய வருங்கால கணவரான ஜென்சன்(24) ஆதரவாக இருந்து வந்தார்.

    தற்காலிக மறுவாழ்வு மையத்தில் தங்கியிருந்த அவரை, ஜென்சன் தினமும் சந்தித்து வந்தார். நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பே இவர்களுக்கு திருமண ஏற்பாட்டை இரு வீட்டினரும் செய்து வந்தனர். இந்த நிலையில் தான் நிலச்சரிவில் தனது பெற்றோர், சகோதரி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரையும் ஸ்ருதி பறி கொடுத்தார்.

    பெற்றோரை இழந்து தவிக்கும் ஸ்ருதிக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன் என்று ஜென்சன் கூறியிருந்தார். அதன்படி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது போன்று திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தபோது தான், இருவரும் சாலை விபத்தில் சிக்கினர். காரில் சென்றபோது, அவர்களின் மீது பஸ் மோதியது.

    இந்த விபத்தில் ஜென்சன் படுகாயமைந்தார். ஸ்ருதிக்கு காலில் எலும்புமுறிவு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ஜென்சன் பரிதாபமாக இறந்தார்.

    குடும்பத்தினர் அனைவரும் பலியாகிவிட்ட நிலையில், தன்னை தாங்க தூண் போன் ஒரு உறவு இருக்கிறது என்று ஜென்சனை நினைத்த நிலையில், அவரும் விபத்தில் பலியாகிவிட்டது ஸ்ருதியை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது. மீளாத் துயரில் ஆழ்ந்த அவரை எவ்வாறு தேற்றுவது என்பது கேள்விக்குறியானது.

    ஆஸ்பத்திரியில் ஜென்சன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற போது ஸ்டெக்சரில் சென்று ஸ்ருதி பார்த்தது, பின்பு இறந்த பிறகு உடலை பார்த்து கண்ணீர்விட்டது போன்ற காட்சிகள் பார்த்த அனைவரையும் கண்கலங்க செய்தது. அவரது மறு வாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கேரள அரசு அறிவித்தது.

    மேலும் அவருக்கு உதவ பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் முன்வந்தனர். அதன் ஒரு பகுதியாக ஸ்ருதிக்கு புதிதாக வீடு கட்டிக்கொடுக்க திருச்சூர் சாலக்குடியை சேர்ந்த டெனிஷ் டேவிஸ், இனோக் ஜோசப் ஆன்டனி ஆகியோர் முன்வந்தனர். வீடு கட்டுவதற்கு செலவாகும் மொத்த தொகையான ரூ.35 லட்சத்தையும் தாங்களே தர அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து ஸ்ருதிக்கு புதிய வீடு கட்டி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. வயநாடு பொன்னாடை பகுதியில் 11.5 சென்ட் நிலத்தில் 1,500 சதுர அடியில் ஸ்ருதிக்கு புது வீடு கட்டப்பட உள்ளது. அந்த வீடு கட்டும் பணியை கல்பெட்டா தொகுதி எம்.எல்.ஏ. சித்திக் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து ஸ்ருதிக்கான புதிய வீடு கட்டும் பணி தொடங்கப்பட்டது. தனக்காக புதிய வீடு கட்டும் பணி தொடங்கியிருப்பதை அறிந்த ஸ்ருதி மகிழ்ச்சியடைந்தார். அதனை நேரில் பார்க்க விரும்பினார்.

    இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார். தனக்கு புதிய வீடு கட்டுவதை மகிழ்ச்சியுடன் பார்த்தார். பின்பு மீண்டும் தான் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் திரும்பிச் சென்றார்.

    Next Story
    ×