என் மலர்
இந்தியா

நிபா வைரஸ் பாதிப்பு எச்சரிக்கை- தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்டங்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவு

- பயன்படுத்துவதற்கு முன்பு பழங்களை நன்கு கழுவவும்.
- நேரடியாக தொடும் நிலை ஏற்பட்டால் உடனடியாக சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவவும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஏதாவது ஒரு தொற்று நோய் பரவியபடி இருக்கிறது. பருவமழை காலத்தில் டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தநிலையில் தற்போது அங்கு நிபா வைரஸ் பரவுவதற்கு சாதகமான பருவம் தொடங்கியிருப்பதாவும், ஆகவே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டங்களுக்கும் மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
* பறவைகள்-விலங்குகளால் பகுதியளவு உண்ணப்பட்ட அல்லது தரையில் விழுந்த பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
* பயன்படுத்துவதற்கு முன்பு பழங்களை நன்கு கழுவவும்.
* திறந்த கொள்கலன்களில் சேமித்து வைக்கப்பட்ட கள் அல்லது அது போன்ற பானங்களை உட்கொள்ள வேண்டாம்.
* கீழே விழுந்த பழங்கள், பாக்கு அல்லது அதுபோன்ற பொருட்களை கையாளும் போது எப்போதும் கையுறைகளை அணியுங்கள்.
* வவ்வால்களால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய பழங்கள் அல்லது பழங்களின் மேற்பரப்புகளை தொடும்போது கையுறைகளை பயன்படுத்தவும். நேரடியாக தொடும் நிலை ஏற்பட்டால் உடனடியாக சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவவும்.
* வவ்வால்களின் வாழ்விடங்களை தொந்தரவு செய்யவோ அல்லது அழிக்கவோ வேண்டாம், ஏனென்றால் இது அவற்றை கிளர்ச்சியடைய செய்து உடல் திரவங்களின் சுரப்பை அதிகரிக்க வழிவகுக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.