search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வரலாற்றை மாற்றி எழுத பார்க்கிறார்- மோடி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
    X

    வரலாற்றை மாற்றி எழுத பார்க்கிறார்- மோடி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

    • காபந்து பிரதமருக்கு கண்ணியமும், தார்மீகமும் இருக்கும் என்று யாராவது சொல்ல முடியுமா? அவரை மக்கள் மொத்தமாக நிராகரித்தும் ஆட்சி அமைக்க முயற்சிக்கிறார்.
    • ஐக்கிய ஜனதாதளம், பீகாருக்கு சிறப்பு நிதிதொகுப்பு வேண்டும் என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதிப்பதாக கேள்விப்படுகிறோம்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'எக்ஸ்' தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், "பதவி விலகப்போகும் பிரதமர் மோடி, இப்போது காபந்து பிரதமர் ஆகிவிட்டார். காபந்து பிரதமர், 1962-ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் ஒரே கட்சி 3-வது தடவையாக ஆட்சி அமைப்பதாக மார் தட்டுகிறார். அவர் வரலாற்றை மாற்றி எழுத பார்க்கிறார்.

    ஜவகர்லால் நேரு 1952-ம் ஆண்டு 364 தொகுதிகளிலும், 1957-ம் ஆண்டு தேர்தலில் 371 தொகுதிகளிலும், 1962-ம் ஆண்டு தேர்தலில் 361 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பிரதமர் ஆனார். ஆனால் மோடி 2024-ம் ஆண்டில் வெறும் 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். இது அவருக்கு எதிரான பெரிய தீர்ப்பு. மக்கள் தீர்ப்பை நாசமாக்குவதை நோக்கமாக கொண்டு அவர் செயல்பட்டு வருகிறார்.

    கடந்த 1989-ம் ஆண்டு தேர்தல் முடிவில், காங்கிரஸ் கட்சி 197 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்தது. அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்தி நினைத்திருந்தால், ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கலாம். ஆனால், அவர் கண்ணியமும், தார்மீகமும் கருதி, அதை செய்யவில்லை.

    காபந்து பிரதமருக்கு கண்ணியமும், தார்மீகமும் இருக்கும் என்று யாராவது சொல்ல முடியுமா? அவரை மக்கள் மொத்தமாக நிராகரித்தும் ஆட்சி அமைக்க முயற்சிக்கிறார்.

    ஐக்கிய ஜனதாதளம், பீகாருக்கு சிறப்பு நிதிதொகுப்பு வேண்டும் என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதிப்பதாக கேள்விப்படுகிறோம். சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான முந்தைய நிலைப்பாட்டில் மோடி உறுதியாக இருப்பாரா?" என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

    Next Story
    ×