search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கிருமாம்பாக்கம் பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கையை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது.
    • புதுவையில் கடந்த ஆண்டு 1,673 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.

    இந்த மாதத்தில் தினந்தோறும் சராசரியாக 11 பேர் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஒரு மாதமாக டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்தநிலையில் புதுச்சேரியை அடுத்த கிருமாம்பாக்கம், பனித்திட்டு, பிள்ளையார்குப்பம், ஈச்சங்காடு உள்ளிட்ட கிராமங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    கிருமாம்பாக்கத்தை அடுத்த பனித்திட்டு ஆலடிமேடு கிராமத்தை சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர் பூங்காவேல் (வயது 53) என்பவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

    அவர் புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுபோல் நேற்று முன்தினம் ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த ஜானகி (62), மற்றும் அவரது கணவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் ஜானகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிருமாம்பாக்கம் பகுதியில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு அடுத்தடுத்து 2 பேர் பலியானது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து கிருமாம்பாக்கம் பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கையை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது.

    புதுவையில் கடந்த ஆண்டு 1,673 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு இதுவரை 1,724 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 4 நாட்களுக்கு முன்பு கோரிமேடு பகுதியில் மர்ம கும்பல் வாகனங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி சென்றனர்.
    • கடைகளின் ஷட்டர்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் சமீப காலமாக போதை கும்பல் செய்யும் செயல்கள் அத்துமீறி வருகின்றன.

    குறிப்பாக கஞ்சா பழக்கத்துக்குள்ளான ஆசாமிகள் என்ன செய்கிறோம் என்றே அறியாமல் பொதுமக்களை பயமுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.

    அதிலும் 15 வயது முதலான சிறுவர்கள் கஞ்சா போதையில் பெண்களிடம் வரம்பு மீறி நடந்து கொள்கின்றனர். இதனால் பெண்கள் தனியாக நடந்து செல்லவே அச்சமடைந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக போதை ஆசாமிகள் சாலைகளில் நிறுத்தி வைத்திருக்கும் வாகனங்களை நள்ளிரவில் அடித்து நொறுக்கி செல்கின்றனர்.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு கோரிமேடு பகுதியில் மர்ம கும்பல் வாகனங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி சென்றனர்.

    இதுபோல் கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி எதிரே நிறுத்தியிருந்த ஆட்டோக்களின் கண்ணாடிகளையும் மர்ம நபர்கள் உடைத்து சென்றனர்.

    இந்த நிலையில் புதிய பஸ்நிலையம் அருகே உருளையன்பேட்டை போலீஸ்நிலையம் எதிரே தென்னஞ்சாலை ரோடு பகுதியில் நேற்று நள்ளிரவு சில போதை ஆசாமிகள் அங்கு நிறுத்தி வைத்திருந்த சொகுசு கார், மினி வேன் போன்றவற்றின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

    மேலும் அங்குள்ள கடைகளின் ஷட்டர்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.

    உடைக்கப்பட்ட கார் கண்ணாடியை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

    உடைக்கப்பட்ட கார் கண்ணாடியை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

     சேதமடைந்த வாகனங்களை பார்வையிட்டார். போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரழைத்தார்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும் என்று போலீசாரிடம் கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வாகனங்களை உடைத்து சேதப்படுத்திய போதை ஆசாமிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    புதுவையில் தொடர்ந்து இதுபோன்று நள்ளிரவில் சாலைகளில் நிறுத்தி வைத்திருக்கும் வாகனங்களை மர்ம நபர்கள் அடித்து உடைத்து செல்லும் சம்பவத்தால் பொதுமக்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்லவே அச்சமடைந்துள்ளனர். 

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
    • சில மணி நேரங்களிலேயே வானம் மீண்டும் இருண்டு குளிர்ந்த சீதோஷ்ண நிலையாக மாறியது

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த பல மாதங்களாக வெயில் வாட்டி எடுத்து வருகிறது

    இதனால் புதுவை மக்கள் மிகவும் அவதியடைந்தனர். இதனிடையே, இலங்கை மற்றும் அதையொட்டிய குமரிக் கடல் பகு திகளில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நில வுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திரு ந்தது.

    அதன்படி, புதுவையில் நேற்றிரவு குளிர்ந்த காற்று வீசியது. இன்று அதிகாலை 4 மணியளவில் மழை பெய்தது. பின்னர் 8 மணிக்கு மேல் வானம் இருண்டு திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 15 நிமிடங்கள் மழை நீடித்தது. இதனையடுத்து வெயில் சுட்டெரித்தது.

    அடுத்த சில மணி நேரங்களிலேயே வானம் மீண்டும் இருண்டு குளிர்ந்த சீதோஷ்ண நிலையாக மாறியது. இதனால் புதுவை க்கு வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • கடற்கரை சாலை காந்தி சிலை அருகே தொடங்கிய மாரத்தான் போட்டியில் வயது வரம்பின்றி 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
    • கோப்பை தன்னார்வலர் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    மோட்டார் சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மோட்டார் சைக்கிள் வாகன பேரணி புதுவை கடற்கரை சாலையில் நடந்தது.

    காந்தி சிலை அருகே பேரணியை செல்வகணபதி எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர்.

    நகரத்தின் முக்கிய வீதிகளில் சென்ற பேரணியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளையும் கையில் ஏந்திய படி சென்றனர். புதுவை அரசு மற்றும் தன்னார்வலர் அமைப்பு சார்பில் போதை பொருள் ஒழிப்பை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    புதுவை கடற்கரை சாலை காந்தி சிலை அருகே தொடங்கிய மாரத்தான் போட்டியில் வயது வரம்பின்றி 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    போட்டி நகரம் முழுவதும் 5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது.

    மாரத்தான் கடற்கரை சாலை, பட்டேல் சாலை, அண்ணாசாலை, புஸ்சி வீதி வழியாக மீண்டும் கடற்கரை சாலையை அடைந்தது.

    போட்டியில் முதலிடம் பெற்ற 5 பேருக்கு பரிசு, கோப்பை தன்னார்வலர் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

    கோவிலில் திருமணம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை தவளகுப்பம் அருகே தமிழகப்பகுதியான சிங்கிரிக்குடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் பக்தர்களுக்கு திருமணம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதை யடுத்து கோவில் சன்னதியில் திருமணம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து கோவிலில் திருமணம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து உரிய அனுமதிபெற்று ஒரு ஜோ டிக்கு கோவில் வளாகத்தில் உள்ள ஆண்டாள்சன்னதி முன்பு பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் முன்னிலையில் திருமணம் நடை பெற்றது.

    மணமக்களை கிராம பஞ்சாயத்து தலைவர் ராமச்சந்திரன், கோவில் செயல் அதிகாரி ரமேஷ் பாபு ஆகியோர் வாழ்த்தினர்.

    • ஒரு சிறிய தொகையை ராமகிருஷ்ணன் பெயரிலேயே கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து 5 சதவீதம் உடனடியாக லாபம் கிடைக்குமாறு செய்துள்ளனர்.
    • கடந்த 15 நாட்களாக ரூ.34 லட்சத்து 50 ஆயிரத்தை பல தவணைகளாக அனுப்பியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை கோலாஸ் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 65) தொழிலதிபர்.

    பிரைவேட் கன்சல்டன்சி நடத்தி வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவரை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் தற்போது கிரிட்டோ கரன்சியில் முதலீடு செய்தால் நிறைய லாபம் வருகிறது.

    எனவே கிரிப்டோ கரன்சியில் நீங்கள் முதலீடு செய்யுங்கள் என்று கூறியுள்ளனர். மேலும், அவருக்கு கிரிப்டோ கரன்சி எப்படி முதலீடு செய்வது என்ற விவரத்தை சில வீடியோக்கள் மற்றும் வாட்ஸ்-அப் மூலமாக அனுப்பியுள்ளனர். தங்களுக்கு எந்த கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற விவரம் தெரியும் என்றும் கூறியுள்ளனர்.

    ஒரு சிறிய தொகையை ராமகிருஷ்ணன் பெயரிலேயே கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து 5 சதவீதம் உடனடியாக லாபம் கிடைக்குமாறு செய்துள்ளனர். இதனால் அவர்கள் மீது ராமகிருஷ்ணனுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து கடந்த 15 நாட்களாக ரூ.34 லட்சத்து 50 ஆயிரத்தை பல தவணைகளாக அனுப்பியுள்ளார். ஆனால் அவர்கள் எந்த லாபத்தையும் ராமகிருஷ்ணனுக்கு அவர்கள் அனுப்பவில்லை.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் போலீஸ் சூப்பிண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, கார்த்திகேயன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    • . 4 பிராந்தியங்களை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வன் நேரு வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மையத்தின் சார்பில் மாநில அளவிலான போட்டிகள் லாஸ்பேட்டையில் நடந்தது.

    கிராமிய நடனத்திற்கான நடுவர்களாக திருமுருகன், பாரதியார் பல்கலைக்கூடத்தின் விரிவுரையாளர்கள் பாஸ்கர், வசந்த், பால்ராஜ், மனிஷ்குமார் ஆகியோர் சிறந்த போட்டியாளர்களை தேர்வு செய்தனர். 4 பிராந்தியங்களை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

    போட்டியின்போது மாணவர்களின் படைப்புகள் குறித்து நடுவர்கள் கேள்வி எழுப்பினர். மாணவர்கள் அளித்த பதிலின் அடிப்படையிலும், அவர்களின் கலை மற்றும் வாழ்வியல் திறன் அடிப்படையிலும் வெற்றியாளர்கள் தேர்வு செய்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்பாளர்கள் டெல்லியில் தேசிய அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். போட்டியை மாநில பயிற்சி மையத்தின் சார்பில் சிறப்பு அலுவலர் கருணா சுகிர்தாபாய் தொடங்கி வைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வன் நேரு வழங்கினார்.

    • அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் திறந்து வைத்தார்
    • கெங்கைவராக நதீஸ்வரருக்கு பால்,தயிர், சந்தனம் உள்ளிட்ட 9 வகையான வாசனை திரவங்களுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவில் காசியைவிட வீசம் அதிகம் என போற்றப்படுகிறது.

    இங்கு காசியில் நடைபெறுவது போல் சனிக்கிழமை தோறும் சங்கராபரணி ஆற்றங்கரையில் கங்கா ஆரத்தி நடந்தது.

    இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அகல் விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.

    ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது. கெங்கைவராக நதீஸ்வரருக்கு பால்,தயிர், சந்தனம் உள்ளிட்ட 9 வகையான வாசனை திரவங்களுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து கெங்கைவராக நதீஸ்வரருக்கு அன்னம் மற்றும் விவசாய நிலங்களில் விளைவிக்கப்பட்ட கத்திரிக்காய், அவரைக்காய், பீர்க்கங்காய், பீன்ஸ் சுரக்காய், வெண்டைக்காய், முருங்கக்காய் உள்ளிட்ட காய்கறிகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    முன்னதாக திருக்காஞ்சி கோவிலுக்கு புதிய கலையரங்கத்தை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் சொந்த செலவில் கட்டியுள்ளார். கலையரங்கத்தை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

    • விஞ்ஞானிகளை பாராட்டுவதில் தேசம் ஒன்றாக நிற்கிறது
    • சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட வாழ்த்து செய்தியை சபாநாயகர் பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கடந்த 20-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சந்திரயான்-3 உலக அளவில் முதன்முதலாக நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த வரலாற்று வெற்றியை பாராட்டி சட்டசபையில் பிரதமர் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட வாழ்த்து செய்தியை சபாநாயகர் பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்து பிரதமர் மோடி சபாநாயகர் செல்வத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    சந்திரயான்-3 அற்புதமான வெற்றி தொடர்பான உங்கள் கடிதம் எனக்கு கிடைத்தது. ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில், நமது தேசத்தை நிலவுக்கு கொண்டுசென்ற சந்திரப் பயணத்தை நினைத்து நாடு பெருமை கொள்கிறது. இஸ்ரோ மற்றும் நமது விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களின் கடின உழைப்பு, ஆர்வம் இந்தியாவின் நிலையை உலகளாவிய அளவில் மேம்படுத்தியுள்ளன.

    விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது விண்வெளித்துறையில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. பல நாடுகள் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தவும் உதவி வருகின்றது. முதல் முயற்சியில் செவ்வாய் கிரகத்தில் சக்திரயான் 3 தரையிறங்கியது மற்றும் மூலம் இந்தியாவை உலகம் தீவிரமாக கவனித்துள்ளது.

    ஒவ்வொரு இந்தியரும் இதனை தனது சொந்த வெற்றியாக எடுத்துக் கொண்டனர். இந்த சந்திரப்பயணத்திற்கான உங்கள் ஆதரவும் உற்சாகமும் நமது விஞ்ஞானிகளை போற்றுவது ஒட்டுமொத்த தேசமும் ஒன்றாக நிற்கிறது என்பதைக் காட்டுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

    • 130 டன் வெங்காயம் மட்டுமே வந்தது. இதனால் வெங்காயம் கிலோ ரூ.70க்கு விற்கப்படுகிறது.
    • வெங்காயத்தின் தேவைக்கு ஏற்ப வரத்து இல்லாததால் மேலும் விலை உயரும் அபாயம் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மார்க்கெட்டுக்கு தக்காளி, வெங்காயம், முட்டைகோஸ், கேரட் உள்ளிட்ட காய்கறிகள் அண்டை மாநிலங்களில் இருந்து நாள்தோறும் லாரிகளில் வரும்.

    நாசிக், புனே, ஆந்திரா, ஆகிய பகுதியிலிருந்து புதுவைக்கு தினந்தோறும் 300 டன் வெங்காயம் வருவது வழக்கம். நாசிக், புனேவில் மழை காரணமாக வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது.

    நேற்று 150 டன் வெங்காயம் புதுவைக்கு வந்தது. இதனால் வெங்காயம் கிலோ ரூ. 65-க்கு விற்கப்பட்டது.

    130 டன் வெங்காயம் மட்டுமே வந்தது. இதனால் வெங்காயம் கிலோ ரூ.70க்கு விற்கப்படுகிறது.

    அதுவும் மொத்த வியாபாரிகளிடம் மட்டுமே வெங்காயம் இருந்தது.

    சில்லறை கடைகளில் வெங்காயம் இல்லை. வெங்காயத்தின் தேவைக்கு ஏற்ப வரத்து இல்லாததால் மேலும் விலை உயரும் அபாயம் உள்ளது.

    • கோரிமேடு அருகே பட்டனூர் கிராமத்தில் ஓம் ஸ்ரீ வழி காட்டும் சாய்பாபா ஆலயம்
    • சாய்பாபாவை சிவனாக பாவித்து அன்னா பிஷேகம் நடைபெற்றது


    புதுச்சேரி:

    கோரிமேடு அருகே பட்டனூர் கிராமத்தில் ஓம் ஸ்ரீ வழி காட்டும் சாய்பாபா ஆலயம் உள்ளது.

    108 மூலிகையால் காப்பு கண்ட 12 அடி செப்பு கோபுரத்தின் கீழ் கருட கருங்கல்லால் ஆன 6 அடி உயரத்தில் சாய்பாபா சிலை உள்ளது.

    இந்த ஆலயத்தில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி வழிகாட்டும் சாய்பாபாவை சிவனாக பாவித்து அன்னா பிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து சாய்பாபா விற்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் மற்றும் பாபாவின் பிரசாதம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை ஆலய டிரஸ்டி சாய் சசி அம்மையார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்


    • நீர்த்–தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி
    • நண்பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை
    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை பொதுசுகாதார கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில்வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வில்லியனூர் குடிநீர் பிரிவுகூடப்பாக்கம் கிராமம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி வருகிற 31-ந் தேதி நடக்கிறது.இதையொட்டி அன்று நண்பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை கூடப்பாக்கம் கிராமம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

    கூடப்பாக்கம்பேட் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் வருகிற 1-ந் தேதியும், கணுவாப்பேட்டை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் 2-ந் தே தியும், தில்லை நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் 3-ந் தேதியும் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.இதனால் அந்த பகுதிகளில் நண்பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்படுகிறது.


    ×