என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
ஒவ்வொரு நாளும் அதே கனவு!
- மாநாடு தொடங்கியதும் மன்னர் ஜனகர் நாள்தோறும் தான் காணும் கனவை விவரித்துவிட்டுத் தன் வினாவைக் கேட்கலானார்.
- தோற்றத்திற்கும் ஞானத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? தோற்றம் இயற்கையாக நேர்வது. ஞானம் கல்வியின் மூலமும் அனுபவத்தின் மூலமும் அடைவது!
உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார் விதேக நாட்டை ஆட்சி செய்யும் மகாராஜா ஜனகர்.
உறக்கம் வரவில்லையே என்பதல்ல அவர் கவலை. உறக்கம் வந்துவிடுமோ என்பதே அவர் கவலை!
உறக்கம் வந்தால் நாள்தோறும் வரும் அந்தக் கனவு மறுபடி அன்றும் வரும். கனவில் அவர் கந்தல் துணி உடுத்திய பிச்சைக்காரனாக மாறுவார். கையில் திருவோட்டைத் தூக்கிக்கொண்டு விதேக நாட்டின் தலைநகரான மிதிலையில் தெருத்தெருவாக `அம்மா தாயே! பிச்சை போடுங்கள்!` எனக் கூவியவாறு பிச்சையெடுக்க ஆரம்பிப்பார்.
என்ன கொடுமை இது? ஒரு மாமன்னனுக்கா இந்த நிலை?
மக்களில் சிலர் பிச்சை போடுவார்கள். வேறு சிலர் போ போ என விரட்டுவார்கள். ஒருசிலர் கல்லால் அடித்துத் துரத்துவார்கள்.
கல்லடி பட்டதும் அந்த வலியில் அவர் உறக்கம் கலைந்து கண்விழித்துக் கொள்வார்.
அவர் மனம் திகைப்பில் ஆழும். தான் யார்? நாட்டை ஆளும் மன்னனா? இல்லை தெருக்களில் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரனா?
கனவில் கண்டது நிஜமா, இல்லை இப்போதுள்ள மன்னர் நிலை நிஜமா? அவர் தலை வெடித்துவிடும்போல் விண்விண்ணென்று வலிக்கும்.
இன்றும் அந்த விபரீதமான சொப்பனம் வருமோ? அச்சத்தோடு புரண்டு புரண்டு படுத்த மன்னர் அசதியில் உறங்கிப் போனார்.
அன்றும் வந்தது அந்தக் கனவு. அதே கனவு. மீண்டும் அவர் கந்தல் துணி உடுத்திய பிச்சைக்காரனானார். தெருத்தெருவாகப் பிச்சையெடுக்கத் தொடங்கினார். மறுபடியும் கல்லடி பட்டு திடுக்கிட்டு விழித்துக் கொண்டார்.
உடலெல்லாம் குப்பென வியர்த்தது. மெல்ல எழுந்து குடுவையில் இருந்த தண்ணீரை எடுத்துப் பருகினார். அவர் கைநடுக்கத்தில் அந்தத் தண்ணீர்க் குவளை கீழே விழுந்து கடகடவென உருண்டது.
மகாராணி சுனயனா குவளைச் சப்தம் கேட்டு விழித்துக் கொண்டாள். மன்னரின் உடலெல்லாம் வியர்ப்பதையும் கை நடுங்குவதையும் பார்த்தாள்.
அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்துப் படுக்கையில் அமர வைத்தாள். சாமரத்தால் விசிறினாள். விசிறிக் கொண்டே மெல்லக் கேட்டாள்:
`பிராண நாதா! என்ன சிக்கல் உங்களுக்கு? நாள்தோறும் இப்படி நள்ளிரவில் நடுநடுங்குகிறீர்களே? ஏதேனும் உடல்நலக் கோளாறா? மருத்துவரை அழைக்கவா?`
ஒரு பெருமூச்சோடு மாமன்னர் ஜனகர் சொன்னார்:
`வேண்டாம் அன்பே! இது உடல்நலக் கோளாறல்ல. நாள்தோறும் எனக்கு ஒரு கனவு வருகிறது. அதனால் நேரும் சிக்கல் இது!`
மன்னர் தன் கனவை மனைவியிடம் விவரித்தார். மகாராணி சுனயனா சிந்தனையில் ஆழ்ந்தாள். பின் சொல்லலானாள்:
`பிரபோ! உங்களை ராஜரிஷி எனப் புகழ்கிறது உலகம். நீங்களே மாபெரும் ஞானிதான். ஆனால் இப்போது உங்களுக்கு ஒரு விந்தையான ஐயம் எழுந்துள்ளது. எது நிஜம், கனவா நனவா எனத் திகைக்கிறது உங்கள் உள்ளம்.
நம் மிதிலையில் ஞானிகளுக்குப் பஞ்சமில்லை. அக்கம்பக்கத்திலும் பல ஞானியர் வசிக்கிறார்கள். ஞானியர் மாநாடு ஒன்று நடத்தி அவர்களிடம் உங்கள் சந்தேகத்தைக் கேளுங்களேன். யாராவது ஒருவர் நிச்சயம் உங்கள் ஐயத்தைத் தீர்த்துவைப்பார்!`
மன்னனுக்கு மகாராணியின் யோசனை மிகச் சரி என்றே பட்டது. `நீ எனக்கு மனைவி மட்டுமல்ல, சரியான யோசனை சொல்லும் மந்திரியும் கூட `எனச் சொல்லிச் சிரித்தார் மன்னர். அப்படியே படுத்து மெல்ல உறங்கிப் போனார்...
மறுநாள் எழுந்ததும் மனைவி சொன்ன யோசனையைச் செயல்படுத்த முடிவு செய்தார்.
மந்திரி சபையைக் கூட்டினார். உடனே ஞானியர் மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டார். அக்கம் பக்கத்தில் உள்ள அனைத்து ஞானிகளையும் அழைக்க வேண்டும் என ஆணையிட்டார்.
மாநாட்டுக்கான தேதி குறிக்கப்பட்டது. விறுவிறுவென்று அழைப்போலைகள் தூதுவர்கள் மூலம் எங்கும் அனுப்பப்பட்டன.
குறிப்பிட்ட தினம் வந்தது. தூர தேசத்தில் இருந்தெல்லாம் பண்டிதர்கள், முனிவர்கள், வேத விற்பன்னர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக வந்து ராஜசபையில் குழுமினர்.
உடலில் எட்டுக் கோணல்களை உடைய முனிவரான அஷ்டாவக்கிரரும் மாநாட்டுக்கு வந்து சேர்ந்தார். குள்ளமாக, கறுப்பாக, எண் கோணலாக வளைந்த உடலை உடைய அவரைப் பார்த்ததும் மன்னர் ஜனகரைத் தவிர மற்ற அனைவரும் ஒருவருக்கொருவர் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டு ஏளனமாக நகைத்தார்கள்.
அவர்களின் நகைப்பைப் பார்த்த அஷ்டாவக்கிரர் எந்தச் சலனமும் இல்லாமல் தமக்குள் நகைத்துக் கொண்டார்.
மாநாடு தொடங்கியதும் மன்னர் ஜனகர் நாள்தோறும் தான் காணும் கனவை விவரித்துவிட்டுத் தன் வினாவைக் கேட்கலானார்:
"நான் பிச்சைக்காரனா, இல்லை மன்னனா? நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா? அல்லது பிச்சைக்காரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது போல் கனவு காண்கிறேனா? இதில் எது நிஜம் எது பொய்?"
சபையில் எல்லோரும் அமைதி காத்தார்கள். பதில் தெரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
`யாருக்குமேவா பதில் தெரியவில்லை?`
வியந்தார் மன்னர். அஷ்டாவக்கிரர் குறுக்கிட்டார்.
`பதில் எனக்குத் தெரியும் மன்னா! ஆனால் ஞானியர் சபையில்தான் என்னால் பதில் சொல்ல முடியும். நீங்கள் கூட்டியிருப்பதோ தோல் வியாபாரிகள் மற்றும் கசாப்புக் கடைக்காரர்களின் சபை!`
அஷ்டாவக்கிரரின் பேச்சைக் கேட்டு மற்ற அனைவரும் சீற்றத்தில் குதித்தார்கள்.
`நாங்களெல்லாம் ஞானிகள் இல்லையா? தோல் வியாபாரிகளா? கசாப்புக் கடைக்காரர்களா? என்ன முட்டாள்தனமான பேச்சு இது!`
அஷ்டாவக்கிரர் அமைதியாகப் புன்முறுவல் பூத்தார்.
`என் தோற்றத்தைப் பார்த்து நீங்களெல்லாம் ஏளனமாகச் சிரித்தீர்களே? அதற்குள் மறந்து விட்டீர்களா? தோலை வைத்து என்னை மதிப்பிடும் நீங்கள் தோல் வியாபாரிகள் தானே? கசாப்புக் கடைக்காரர்கள் தானே?
தோற்றத்திற்கும் ஞானத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? தோற்றம் இயற்கையாக நேர்வது. ஞானம் கல்வியின் மூலமும் அனுபவத்தின் மூலமும் அடைவது!
ஜனகன் ஒருவன்தான் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்காமல் இருந்தவன். ஆகையால் மன்னன் ஜனகனுக்கு நான் பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன்.
ஆனால் தனித்துத்தான் என்னால் பதில் சொல்ல முடியும். உங்களைப் போன்ற தோல் வணிகர்களின் கசாப்புக் கடைக்காரர்களின் முன்னிலையில் அல்ல.`
அஷ்டாவக்கிரரின் பேச்சைக் கேட்டு வந்தவர்களின் முகங்கள் சூரியனைக் கண்ட அல்லி மலர்போல் வாடின. மன்னர் உத்தரவிடாமலே ஒவ்வொருவராக சபையை விட்டுத் தயக்கத்தோடு விலகி வெளியேறினார்கள்.
மன்னர் ஜனகர் சிம்மாசனத்தை விட்டு இறங்கி மகாஞானியான அஷ்டாவக்கிரரின் காலடியில் வந்து அமர்ந்து கொண்டார்.
`சுவாமி! சொல்லுங்கள். என் சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கள். எது நிஜம்? நான் மன்னனா இல்லை பிச்சைக்காரனா?`
அஷ்டாவக்கிரர் மன்னனின் தலையில் கைவைத்து ஆசீர்வதித்தார்.
`நீ ஞானத் தேடல் உள்ளவன். ஆகையால் உண்மையை அறியும் உரிமையை நீ பெற்றிருக்கிறாய்!` என்றவர், அவன் விழிகளை உற்றுப் பார்த்துப் பேசலானார்:
`ஜனகனே! நான் சொல்வதை கவனத்தோடு கேட்பாயாக. உறங்கினபோது நீ கண்டதும் கனவு தான். இப்போது மன்னனாக நீ வாழும் இந்த வாழ்வும் கனவுதான். உன்னுடைய அரச வாழ்வு, பிச்சைக்கார வாழ்வு இரண்டுமே உண்மையில்லை.
இந்த இரண்டையும் தவிர்த்த வாழ்வொன்று இருக்கிறது. அந்த வாழ்வுதான் உண்மை. அது எதுவென்று நாம் அறிய மாட்டோம்.
இறந்தபின் கனவும் நனவும் அற்ற ஒரு நிலை தோன்றும். அப்போதுதான் அந்த வாழ்வே மெய் என்பதை நாம் உணர முடியும். அதுவரை அதை உணர இயலாது.
எனவே கனவு நிலையும் பொய், நனவு நிலையும் பொய் என்பதை உணர்ந்துகொள். இரண்டுமே உண்மையென மயங்காதே. இரண்டும் பொய்தான்.
அரசனாக இருக்கும்போது எது குறித்தும் சந்தோஷப்படாதே. நீ உறங்கும்போது அந்த உறக்கத்தில் அந்த சந்தோஷம் உன்னை விட்டு முற்றிலுமாக விலகிவிடும். பிச்சைக்காரனாக இருக்கும்போது வருத்தப்படாதே. விழித்தால் அந்த வருத்தம் மறைந்து விடும்.
இரண்டு நிலைகளிலும் மனச் சலனமில்லாமல் ஒரே மாதிரி இருக்கக் கற்றுக் கொள்வாயாக!` என்றார்.
மனச்சாந்தி பெற்ற ஜனகர் தன் மனைவி சுனயனாவை அழைத்தார். இருவருமாக அஷ்டாவக்கிரரின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்து அவர் ஆசியைப் பெற்றார்கள்.
எதையும் எதிர்பாராத, எந்தத் தேவைகளும் இல்லாத முனிவருக்கு இந்த அரிய ஞானத்தைத் தந்ததன் பொருட்டாகப் பிரதியாகவோ நன்றிக் கடனாகவோ எதைத்தான் தர முடியும்?
விழிகளில் நன்றிக் கண்ணீர் வழிய வழிய மன்னனும் அரசியும் அவரை அரண்மனை வாயில்வரை சென்று வழியனுப்பி வைத்தார்கள்.
அஷ்டாவக்கிரரின் உபதேசத்தை நாள்தோறும் சிந்தித்த ராஜரிஷி ஜனகர், கனவு நனவு எல்லாம் மாயையே என்ற பேருண்மையைப் புரிந்துகொண்டார்.
மகிழ்ச்சியில் ஒருசிறிதும் துள்ளாமலும் துயரத்தில் ஒருபோதும் துவளாமலும் இருக்கும் நிலையை ஓயாத மனப் பயிற்சியின் மூலம் அடையலானார்.
`உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை கடவுளைத் தவிர!` என்ற சத்தியத்தை அவர் மனம் உணர்ந்து கொண்டது.
மெய்ஞ்ஞானி அஷ்டாவக்கிரர் மாமன்னர் ஜனகருக்கு உபதேசித்த உபதேசம் கண்ணன் அருளிய பகவத் கீதைக்கு இணையாக அஷ்டாவக்கிர கீதை என ஆன்மிக உலகில் புகழ்பெற்று நிலைத்துள்ளது.
தொடர்புக்கு:
thiruppurkrishnan@gmail.com