என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

லால்பகதூர் சாஸ்திரியை ஏகமனதாக தேர்ந்தெடுத்து "கிங்மேக்கர்" ஆன காமராஜர்

- நாடே துயரத்தில் ஆழ்ந்து ஸ்தம்பித்து போய் நின்ற நிலையில் காமராஜர் மட்டும் துக்கத்தை தொலைத்து விட்டு சுறுசுறுப்பாக இயங்கினார்.
- தனது சாதுரியமான, பொறுமையான, நிதானமான அணுகுமுறையால் போட்டியின்றி சாஸ்திரியை பிரதமராக தேர்வு செய்து வரலாற்றில் இடம் பெற்று புதிய சரித்திரம் படைத்தார் காமராஜர்.
இயற்கையின் நியதியை வெல்ல எவரால் முடியும். எப்பேர்பட்ட தலைவராக இருந்தாலும் மரணத்தின் பிடியில் இருந்து தப்பித்து எவரும் வெளியே வந்துவிட முடியாது. ஆசிய ஜோதியாக இருந்தாலும் சரி, மனிதருள் மாணிக்கமாக இருந்தாலும் சரி, நவபாரத சிற்பியாக இருந்தாலும், இன்னும் பல பட்டங்களை பெற்றவராக இருந்தாலும் சரி... மரணத்தேவனின் கணக்கு ஒரே கணக்கு தான். ஆம்! நேருவின் மரணம் நிகழ்ந்தே விட்டது.
1964 மே 27-ம் நாள் நிகழ்ந்த பண்டித ஜவஹர்லால் நேருவின் மரணம் உலகையே உலுக்கி எடுத்தது. மக்களை கண்ணீரில் மிதக்க வைத்தது. ஒவ்வொரு நாட்டுத் தலைவர்களும் தங்கள் நாட்டு தலைவர்கள் இறந்தது போல் துக்கம் அனுசரித்தனர். இதயத்தைப் பிழிந்து எடுத்து இரங்கல் அறிக்கைகளை வெளியிட்டு தங்கள் துயரத்தை வெளிப்படுத்தினர். நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக பல உலக தலைவர்கள் டெல்லியிலேயே வந்து குவிந்தனர்.
புதுடெல்லி மாநகரமே சோகத்தில் ஆழ்ந்தது. காங்கிரசின் மூத்த தலைவர்களும் அடுத்த கட்ட நடவடிக்கைச் சிந்தனையில் ஆழ்ந்தனர். காங்கிரஸ் தொண்டர்களும் பொதுமக்களும் கைபிசைந்து செய்வதறியாது கண்ணீர் சிந்தினர்.
நேருவின் மீது அளப்பரிய அன்பும் மரியாதையும் கொண்டிருந்த காமராஜர் சோகத்தை எல்லாம் மனதிலே தாங்கிக் கொண்டு டெல்லிக்கு விரைந்து வந்து சேர்ந்தார். அப்போது ஜனாதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணன் இதற்கிடையில் ஜி.எல். நந்தாவை இடைக்கால பிரதமராக பொறுப்பேற்கச் செய்தார். அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று காமராஜரை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
நாடே துயரத்தில் ஆழ்ந்து ஸ்தம்பித்து போய் நின்ற நிலையில் காமராஜர் மட்டும் துக்கத்தை தொலைத்து விட்டு சுறுசுறுப்பாக இயங்கினார். டெல்லியிலே இருந்த சூழல் அவரை அப்படி இயங்க வைத்தது.
எதையும் தைரியமாக எதிர்கொள்கிற வீரப்பெண்மணியாகத் திகழ்ந்த நேருவின் அருமை மகளான இந்திரா சோகத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். இந்திய தலைவர்களாக இருந்தாலும் சரி, வெளிநாட்டில் இருந்து வந்தவர்களாக இருந்தாலும் சரி, இந்திராவிடம் சென்று தானே துக்கம் விசாரித்தாக வேண்டும் அல்லவா... அவர்கள் வந்து விசாரிக்கும்போது அழுது கொண்டிருக்க முடியுமா? எனவே, கண்ணீரை துடைத்துக்கொண்டு துக்கத்தை அடி மனதில் புதைத்து விட்டு மனதை திடமாக்கிக் கொண்டு, வருகிறவர்களை சந்தித்து அவர்களின் அனுதாபங்களை ஏற்றுக் கொண்டிருந்தார் இந்திரா.
நேரு உயிருடன் இருந்த காலத்திலேயே பத்திரிகை நிருபர்கள், உங்கள் காலத்திற்குப் பிறகு இந்திரா காந்தி பிரதமராக வரவேண்டும் என்ற நோக்கத்தில் அவரை எங்கு சென்றாலும் அழைத்துச் சென்று வளர்த்து வருகிறீர்களா? என்று ஒரு கேள்வி எழுப்பினார்கள்.
அந்த அடிப்படையில் அவரை நான் வளர்க்கவில்லை. அதே சமயத்தில் எந்த பொறுப்பையும் அவர் ஏற்க கூடாது என்பதும் எனது கருத்து அல்ல. ஏற்கனவே அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ஒரு முறை அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது நான் எந்த உதவியும் அவருக்கு செய்ததில்லை. என்னை எதிர்ப்பவர்கள் கூட அவரை நல்ல காங்கிரஸ் தலைவர் என்று பாராட்டுகிறார்கள். சில வேலைகளில் என்னுடைய எண்ண ஓட்டங்களுக்கு மாறாக அவர் செயல்படுவதும் உண்டு. அது அவருடைய சுதந்திரம். சில கருத்துக்களில் நாங்கள் ஒன்றுபடுகிறோம். சில கருத்துக்களில் வேறுபடுகிறோம். சுதந்திரமாக செயல்படக்கூடிய ஆற்றலும் உறுதியான உள்ளமும் உள்ளவர் இந்திரா. ஒரு வேளை அவரை காங்கிரஸ் தேர்ந்தெடுத்தால் நான் நடுநிலை வகிப்பேன் என்று நிருபர்களிடம் பதில் அளித்தார் நேரு.
ஒரு முறை இந்திரா அமெரிக்கா சென்றிருந்தபோது நிருபர் ஒருவர், காங்கிரஸ் பிரதமர் பதவிக்கு உங்களை தேர்வு செய்தால் உங்கள் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்று கேட்டபோது, நான் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல. நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாமல் அந்த பதவியில் எப்படி அமர முடியும் என்று திரும்ப கேள்வி கேட்டு அவரை திணறடித்து விட்டார் இந்திரா.
ஒருவேளை "மக்களே" நீங்கள் பிரதமராவதற்கு விருப்பம் தெரிவித்தால் அப்போது உங்கள் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்று அதே நிருபர் கேட்டபோது, இப்படி ஒரு யூகமான கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. அப்படி நம்புவது உகந்ததும் அல்ல என்று பதில் சொல்லி இருக்கிறார் இந்திரா.
மேற்கண்ட பதில்களில் இருந்து இந்திராவுக்கு பிரதமர் பதவியில் அதிக நாட்டம் இல்லை என்பதும் தெரிகிறது. ஆனால் அந்த சமயத்தில் அப்போது நிலவுகிற சூழ்நிலையை பொறுத்து அவரது நிலைப்பாடு இருக்கும் என்று நம்மால் யூகிக்க முடிகிறது.
இந்த செய்திகளை எல்லாம் காமராஜர் அறிந்திருந்தாரா என்பது நமக்கு புலப்படவில்லை. அவரது எண்ண ஓட்டம் அடுத்த பிரதமராக வருவதற்கு இந்த காலகட்டத்தில் லால் பகதூர் சாஸ்திரி தான் பொருத்தமானவர் என்று நினைத்திருப்பார் என்று நமக்கு தோன்றுகிறது. அப்படி காமராஜர் நினைத்ததற்கு அடிப்படைக் காரணங்கள் ஒன்றிரண்டு இருந்திருக்கிறது. "கே பிளான்" திட்டத்தால் பதவி விலகிய எத்தனையோ மந்திரிகளுக்கு மத்தியில் நேருவின் உடல் நலம் கருதி அவரது பணிச்சுமையை குறைப்பதற்காக சாஸ்திரி மீண்டும் மந்திரி சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்பது ஒன்று.
புவனேஸ்வர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேரு ஹெலிகாப்டரில் ஜனவரி 6-ந் தேதியே வந்துவிட்டார். ஆனால் அங்கே திடீரென்று ஏற்பட்ட ரத்த கொதிப்பினால் அவரால் "காங்கிரஸ் பொருள் ஆய்வுக் கூட்டத்தில்" பங்கேற்க இயலவில்லை. அப்படி இருந்தும் மாநாட்டுக்கு வருகிறேன் என்று புறப்பட்ட நேருவை நான் தான் தடுத்து நிறுத்தி அவருடைய எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டேன் என்று லால் பகதூர் சாஸ்திரி புவனேஸ்வர் மாநாட்டில் பேசும்போது தெரிவித்தது குறிப்பிடத்தக்க செய்தி ஆகும். ஒரு பிரதமரையே வரவேண்டாம் என்று சொல்லக்கூடிய தைரியம் உள்ளவராக சாஸ்திரி, நேருவின் ஆத்மார்த்தமான நண்பராக விளங்கினார் என்பது தான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
இதைவிட இன்னொரு செய்தி என்னவென்றால் நேரு உடல் நலக்குறைவு ஏற்பட்டு தீன் மூர்த்தி பவனில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது அவரை சந்திக்க சென்ற லால் பகதூர் சாஸ்திரி உடல் நலத்தை விசாரித்துவிட்டு "நான் அடுத்து என்ன செய்ய வேண்டும்" என்று நேருவிடம் கேட்டபோது... உடனே சற்றும் தயங்காமல் என்னுடைய வேலைகளை செய்யுங்கள் என்று நேரு கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல... தினமும் தன்னை வந்து சந்தித்து நிர்வாகம் பற்றிய ஆலோசனைகளை பெற்றுச் செல்லுங்கள் என்றும் நேரு சாஸ்திரியை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
மிக முக்கியமான ஏடாக கருதப்பட்ட இந்தியா டுடே என்ற நூலின் ஆசிரியர் ஆன பிராங் மோரேஸ் என்ற பிரபல எழுத்தாளரும் அடுத்த பிரதமராக வரக்கூடியவர் யார்? (After Nehru who?) என்ற நூலினை எழுதிய "வெல்ஸ் ஹென்ஜென்" என்ற எழுத்தாளரும் தற்போது தொழில் மற்றும் வாணிபத் துறையை கவனித்து வரும் லால் பகதூர் சாஸ்திரிக்குத்தான் அடுத்த பிரதமராக வருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று எழுதியிருந்தனர். இந்த செய்தி எல்லோராலும் அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. எழுதிய நூலாசிரியர்கள் இருவரும் பத்திரிகை உலகில் மிகவும் முக்கியமானவர்கள் என்பதால் இக்கருத்து எல்லா இடங்களிலும் எதிரொலிக்க தொடங்கியது.
இதனை எல்லாம் நன்கு அறிந்திருந்த காமராஜர், தனது தனிப்பட்ட எந்த கருத்தினையும் வெளியிடாமல் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டார். போட்டியில்லாமல் பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் காங்கிரஸ் கட்சியை மக்கள் நம்புவார்கள். தனது தலைமைக்கும் ஒரு மரியாதை இருக்கும் என்று காங்கிரஸ் காரிய கமிட்டியின் ஒப்புதலோடு ஒவ்வொரு காயையும் நகர்த்தி செயல்பட்டார் காமராஜர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் வரவழைத்து தனியாக அவர்களிடம் பேசி அவர்களுடைய கருத்தினை அறிந்து கொண்டார். லால் பகதூர் சாஸ்திரி காந்தியவாதி மட்டுமல்ல சோசலிசத்தில் மிகுந்த நம்பிக்கை உடையவர். நடுநிலையோடு எதிலும் செயல்படக்கூடியவர். நேருவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து பணியாற்றியவர். எனவே அவரே பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதனை உள் வாங்கிக்கொண்ட காமராஜர் போட்டியாளராக குதிக்க இருந்த மொரார்ஜி தேசாயை சந்தித்து பேச அவருடைய இல்லத்திற்கு நேரில் சென்றிட தொடர்பு கொண்டபோது, இல்லை இல்லை.. நீங்கள் வர வேண்டாம். நானே உங்களை சந்திக்க வருகிறேன் என்று கூறி காமராஜரை வந்து சந்தித்தார் மொரார்ஜி தேசாய்.
காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர் என்ற முறையில் எனக்கு தான் பிரதமர் பதவி அளிக்கப்பட வேண்டும் என்று காமராஜரிடம் வலியுறுத்தி, வற்புறுத்தி பேசிப் பார்த்தார். பெரும்பாலான தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய விருப்பமெல்லாம் சாஸ்திரியை சுற்றித்தான் இருக்கிறது. ஜனநாயகம் நிறைந்த நாட்டில் பெரும்பான்மைக்கு மதிப்பு கொடுத்து தானே ஆக வேண்டும். அதற்காக உங்கள் மீது உள்ள மதிப்பிலும் மரியாதையிலும் கடுகளவும் குறைவில்லை என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார் காமராஜர்.
இப்போது எடுக்கப்பட்டு இருக்கும் இந்த முடிவு உங்களுக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும். நான் மறுக்கவில்லை. சாஸ்திரியை ஏகமனதாக தேர்வு செய்வதற்கு எங்களுடன் நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். இதனால் காங்கிரசின் கட்டுக்கோப்பு காப்பாற்றப்படும். பொதுமக்கள் மத்தியிலும் காங்கிரசுக்கு மதிப்புக்கூடும் என்பதை விளக்கமாக காமராஜர் எடுத்துச் சொல்லி மொரார்ஜியை இசைய வைத்தார். அது மட்டுமல்ல 1964 ஜூன் 2-ந் தேதி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி சாஸ்திரி பெயரை எல்.ஜி. நந்தாவை முன்மொழிய வைத்தார். மொரார்ஜி தேசாயை வழிமொழிய வைத்து உறுப்பினர்களின் கரகோஷத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றார் காமராஜர்.
தனது சாதுரியமான, பொறுமையான, நிதானமான அணுகுமுறையால் போட்டியின்றி சாஸ்திரியை பிரதமராக தேர்வு செய்து வரலாற்றில் இடம் பெற்று புதிய சரித்திரம் படைத்தார் காமராஜர். எல்லோராலும் "கிங்மேக்கர்" என போற்றப்பட்டார்.
மறைந்த மாபெரும் தலைவர் நேருவின் இடத்தை எவராலும் இட்டு நிரப்ப முடியாது. கூட்டுப் பொறுப்பினை உணர்ந்து நாம் கூட்டுத் தலைமையாக செயல்படுவோம். கடந்த காலங்களில் நாம் சில தவறுகளை செய்திருக்கலாம். ஆனால் நேரு என்ற மாமனிதரால் அந்த தவறுகள் பெரிதுபடுத்தப்படவில்லை. அவருடைய செல்வாக்கு நமக்கு பாதுகாப்பு கவசமாக இருந்தது. எனவே தவறுகள் ஏதும் இல்லாமல் குறைகள் எதுவும் இல்லாமல் பணியாற்றிட வேண்டும் என்று அந்த கூட்டத்தில் பேசினார் காமராஜர். இந்த வரலாற்றுச் சிறப்பான முடிவு எடுக்க காரணமாக இருந்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டார் காமராஜர்.
அடுத்து பேசிய லால் பகதூர் சாஸ்திரியும் தன்னை ஒருமனதாக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டதோடு என்னுடைய பொறுப்பினை கண்ணியத்துடன் நிறைவேற்றிட உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பும் தேவை என்றும் அதற்கும் உறுதுணையாக நீங்கள் எப்போதும் இருந்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
நேருவுக்கு பின்னாலே பதவி வெறிச்சண்டையில் கட்சி பிளவுபடும், சிதைந்து போகும் என்று கணித்தவர்கள், கருத்து சொன்னவர்கள், ஏடுகளில் வரிந்து கட்டிக் கொண்டு எழுதியவர்கள் எல்லோரும் வாயடைத்துப் போனார்கள். அவர்கள் ஏமாற்றம் அடையும் விதத்தில், நாட்டுக்கு வந்த ஆபத்தை கட்சிக்கு ஏற்பட இருந்த பேரிடியை தனது சாமர்த்தியமான செயலால் தடுத்து நிறுத்தினார் காமராஜர்.
அடுத்த நாள் ஏடுகளில் எல்லாம் காமராஜரின் படத்தை போட்டு முதல் பக்கத்திலேயே செய்திகளை வெளியிட்டனர். எதிர்க்கட்சியினரும் எதிர்முகாமில் இருந்தவர்களும் காமராஜரின் ஆற்றலை கண்டு வியந்தனர். உலகத் தலைவர்கள் அனைவருமே தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்ந்தனர்.
பாரதப் பிரதமராக பொறுப்பேற்ற சாஸ்திரி அவரது விருப்பப்படியே அமைச்சர்களை நியமனம் செய்தார். காமராஜர் பரிந்துரை செய்தது இந்திரா காந்திக்கு மட்டுமே. இந்திரா காந்தி சாஸ்திரி மந்திரி சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். எனினும் இந்திரா காந்தியை கட்டுப்படுத்துவதில் மிகவும் விழிப்போடு இருந்தார் சாஸ்திரி. உடல் நலக்குறைவு ஏற்பட்டு வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது கூட இந்திரா உள்பட யாரையும் சந்திக்க சாஸ்திரி உடன்படவில்லை. மிகுந்த கண்ணும் கருத்துமாக இருந்து கடமையாற்றினார் லால் பகதூர் சாஸ்திரி.
பிரதமர் சாஸ்திரி தனது ஆட்சிப் பணிகளில் முழு கவனம் செலுத்தி மத்திய அரசை வழிநடத்தி சென்றார். பெருந்தலைவர் காமராஜர் கட்சி பணிகளில் தீவிரம் காட்டினார். அகில இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து அவர்தம் குறைகளை கேட்டறிந்து, கட்சித் தலைவர்களையும் தொண்டர்களையும் சந்தித்து, உடனுக்குடன் ஆக வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டார் காமராஜர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி என்பது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே உரியது. காமராஜருடைய பதவி காலம் முடிவடையும் நிலையில் இருந்தது. இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் காமராஜரை மீண்டும் தலைவராக கொண்டு வந்தால் தான் நாட்டுக்கு நல்லது என இந்திரா, சாஸ்திரி உட்பட எல்லோருமே நினைத்தனர். அதற்காக காங்கிரஸ் கட்சியின் விதியினை திருத்த வேண்டியிருந்தது.
விதியினை திருத்தும் நடவடிக்கைக்கு மொரார்ஜி கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். பிரதமர் சாஸ்திரி எவ்வளவு எடுத்துச் சொல்லியும் மொரார்ஜி உடன்படவில்லை. இறுதியில் 1965 ஜூலையில் பெங்களூருவில் நடைபெற்ற மாநாட்டில் இத்தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. திருத்தம் செய்யலாம் என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 400 வாக்குகளும் எதிர்ப்பதாக 50 வாக்குகளும் பதிவாயின. எனவே இந்திய தேசிய காங்கிரஸ் வரலாற்றில் இரண்டாவது முறையாக தலைவராகும் பெருமை காமராஜருக்கு கிடைத்தது. இந்த முயற்சியில் மிகுந்த முனைப்பு காட்டிய பிரதமர் சாஸ்திரி வெற்றி பெற்றார்.
ஒரு கட்சியின் தலைவரும் ஆட்சியை தலைமை தாங்கி நடத்துகின்ற பிரதமரும் இணைந்து செயல்படுவதுதான் நாட்டிற்கு நன்மை பயக்கும். அப்பொழுதுதான் மக்களின் நாடி துடிப்பினை அறிந்து கட்சி பரிந்துரைக்கும் தீர்மானங்களை ஆட்சித் தலைமை பொறுப்பில் உள்ளோர் அமல்படுத்த முடியும். இது எல்லோரும் அறிந்ததே.
இந்த நடைமுறையில் சிக்கல் ஏதாவது வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் கட்சியின் கட்டுப்பாட்டினை கட்டி காப்பதற்காகவும் சில கட்சிகளில் ஆட்சித் தலைமை பொறுப்பில் இருப்பவரே கட்சி தலைமை ஏற்று வழிநடத்தி செல்வதுண்டு. இதனால் தேவையில்லாத பிரச்சினைகளும் குழப்பங்களும் வராமல் அவை தடுக்கப்பட்டு விடும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தை குறிப்பிடலாம். ஆட்சித்தலைவராகவும் கட்சித் தலைவராகவும் இருக்கிற படியால் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் தமிழகத்தை நன்கு வழி நடத்தி செல்கிறார்.
காங்கிரசில் கட்சித் தலைவராக காமராஜரும் ஆட்சித் தலைவராக சாஸ்திரியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பணியாற்றியதால் நேருவின் மறைவுக்கு பிறகு நாடு முன்னேற்ற பாதையில் நடைபோட்டது. அப்போதுதான் சோதனை காலமாக இந்தியா-பாகிஸ்தான் போர் மூண்டது.
அடுத்த வாரம் சந்திப்போம்.