என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சிறப்புக் கட்டுரைகள்
பல தலைமுறை பித்ரு சாபம் நீக்கும் தில தர்ப்பணம்
- தர்ப்பணம் என்ற சொல்லுக்கு திருப்திப்படுத்துதல் என்று பொருள்.
- இயற்கைக்கு மாறாக இறந்தவர்களின் ஆத்மாவை தில ஹோமத்தால் மட்டுமே சரி செய்ய முடியும்.
நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் உருவாகுகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும். ஒருவரின் ஜாதகத்தில் சென்ற பிறவியைக் குறிக்கும் பாவம் ஒன்பதாம் பாவமாகும், இந்த பிறப்பைக் குறிக்கும் பாவம் முதல் பாவமாகும், அடுத்த பிறப்பை பற்றி தெரிவிக்கும் பாவம் ஐந்தாம் பாவமாகும். ஜென்ம லக்கினத்திற்கு பத்தாமிடம் கர்மஸ்தானம் எனப்படும். அதாவது இந்த பிறவியில் அனுபவிக்கப் போகும் பிராப்த கர்மங்களை குறிக்குமிடமாகும். லக்கினம் ஜாதகரை குறிக்குமிடமாகும். லக்கினத்திற்கு ஒன்பதாமிடம் ஜாதகருடைய தந்தையைக் குறிக்குமிடமாகும். ஒன்பதிற்கு ஒன்பதாமிடமான ஐந்தாம் பாவம் தந்தைக்கு தந்தையான பாட்டனாரைக் குறிக்குமிடமாகும்.
ஜாதகரின் தகப்பனைக் குறிக்குமிடம் ஒன்பதாமிடமாகும். எனவே தகப்பன் தெய்வத்திற்கு சமமானவனாவார். தகப்பன் வழிபட்ட தெய்வத்தைக் குறிக்குமிடம் ஒன்பதிற்கு ஒன்பதாமிடமான ஐந்தாமிடமாகும். எனவே ஐந்தாமிடம் குல தெய்வத்தைக் குறிக்குமிடமாகக் கருதப்படுகிறது. தந்தைக்கு தந்தையான பாட்டனாரைக் குறிக்குமிடமாகவும் ஐந்தாமிடம் வருவதால் பாட்டனாரும் தெய்வத்திற்கு சமமானவராவார். இதன் அடிப்படையில் பார்க்கும்போது ஐந்தாமிடம் பித்ரு வழிபாட்டைக் குறிக்குமிடமாகவும் அமைகிறது. கர்மத்தால் வந்தது தர்மத்தால் போகும் என்பது சான்றோர் வாக்கு. மேலும் ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு பன்னிரண்டாவதாக அமையும் பாவம் அந்த குறிப்பிட்ட பாவத்திற்கு எதிராக செயல்படும் அல்லது அந்த குறிப்பிட்ட பாவத்தை அழிக்கும்.
இதன்படி பூர்வஜென்ம கர்மத்தைக் குறிக்கும் பாவமான ஆறாம் பாவத்தை அழிக்க அதற்கு பன்னிரண்டாவதாக வரும் ஐந்தாம் பாவம் குறிக்கும் குல தெய்வ வழிபாடு மற்றும் ஒன்பதாம் பாவகம் குறிக்கும் பித்ருக்கள் வழிபாடு நம்மை ஆபத்து மற்றும் இடையூறுகளில் இருந்தும் நாம் காப்பாற்றப்படுவோம். இந்த ஜென்மத்தில் நாம் செய்யும் கர்மங்களைக் குறிக்கும் பாவம் பத்தாம் பாவமாகும். அதற்கு பன்னிரண்டாவதாக வரும் ஒன்பதாமிடம் இஷ்ட தெய்வ வழிபாட்டைக் குறிக்குமிடம்.
எனவே இந்த ஜென்மத்தில் தெரிந்தோ, அல்லது தெரியாமலோ செய்யும் வினைகளில் இருந்து விடுபட, முதலில் நம் பெற்றோர்களை நல்ல முறையில் பேணிக்காத்து அவர்களுடைய அன்பும் ஆசியும் எப்பொழும் நமக்கு கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
தாய், தந்தையின் மரபணுவில் உருவாகுவதே குழந்தை. முன்னோர்களின் மரபணுவில் தோன்றிய ஒருவர் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையவும், சாந்தி அடைந்த ஆன்மாவிடம் இருந்து ஆசி பெறுவதற்கும் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய பித்ரு கர்மாக்களை செய்ய வேண்டியது ஒவ்வொருவரின் முக்கிய கடமையாகும்.
பிதுர் தோஷம் நீங்காமல் எந்த பரிகாரங்கள் செய்தாலும் பரிகாரங்கள் பலன் தருவதில்லை. எத்தகைய மந்திர ஜெபங்களும் சித்தியடைவதில்லை. எனவே முதலில் பிதுர் தோஷத்தினைப் போக்கிட வேண்டும். பிதுர் தோஷம் உள்ளவர்களின் ஜாதகம் பிதுர் தோஷம் நீங்கிய பின்பு தான் வேலையே செய்ய ஆரம்பிக்கும். இந்த தோஷம் இருக்கும் வரையில் ஜாதகத்தில் உள்ள எந்த ஒரு யோகமும் தன்னுடைய பலனை தராது. மாறாக பிதுர் தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் துன்பமே மிஞ்சும். பிதுர் தோஷம் உள்ளவர்கள் முதலில் அதனை போக்கிட வேண்டும். பிதுர் தோஷமும் பரிகாரங்களும் ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேது கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உள்ள ஜாதகமாக கருதப்படும். நிழல் கிரகங்களான ராகுவும், கேதுவும் நமது முன்வினைகளை பிரதிபலிப்பவை. மேலும் ராகு தந்தை வழி பாட்டனாரைக் குறிக்கும் கிரகமாகும். அதே போல் கேது தாய் வழி பாட்டனாரைக் குறிக்கும கிரகமாகும். இந்த இரண்டு கிரகங்களும், ஒருவர் செய்த முன்வினை கணக்கினை தெளிவாக காட்டும். ராகுவும், கேதுவும் அவரவர் முன்னோர்கள் செய்த பாவ, புண்ணிய கணக்கினை தெளிவாக காட்டுவதோடு மட்டுமல்லாமல் அந்த பாவங்களை தீர்க்க முடியுமா அல்லது முடியாதா என்பதை சுட்டிக்காட்டும் கிரகங்களாகும்.
ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும் பித்ரு தோஷம் வருவது ஏன்?
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கு மட்டும் இந்த தோஷம் வரலாம். ஒரு வீட்டில் 4 ஆண்கள் இருந்தால் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு மட்டும் பித்ரு தோஷ தாக்கம் அதிகமாக இருக்கும்.
முன்னோர்களின் மரபணு ஒருவரின் உடம்பில் எந்த அளவு இருக்கிறதோ அதற்கு ஏற்றாற்போல் பித்ரு தோஷ தாக்கத்தின் வலிமையில் மாற்றம் ஏற்படும்.
ஆனால் பாதிப்பு என்பது ஏதாவது ஒரு கால கட்டத்தில் வெளிப்பட்டே தீரும். நம் அண்ணன் கஷ்டப்படுகிறான், தம்பி கஷ்டப்படுகிறான். நாம் நிறைய புண்ணியம் பண்ணி இருக்கிறோம் அதனால் நன்றாக இருக்கிறோம் என்று யாரும் நினைத்து விட முடியாது. இந்த பிறவிக்குள் ஏதாவது ஒரு கால கட்டத்திற்குள் நிச்சயம் பாதிப்பு உண்டு. அவர் பாதிக்கப்படவில்லை என்றால் அவரின் வாரிசுகள் பல மடங்காக பாதிக்கப்படுகிறார்கள். வசதி கொட்டி கிடக்கும். ஆனால் அதை அனுபவிக்கும் பாக்கியமற்ற வாரிசுகள் உருவாகும். கொடுத்து கெடுக்கும் யோகம். இது ஒரு வகையான பித்ரு தோஷம். நமக்கு தான் பாதிப்பு என்று யாரும் வருந்த வேண்டாம். ஒரே தாயின் வயிற்றில் உருவாகிய வாரிசுகளில் பாதிப்பு ஏற்படும் காலம் மட்டுமே மாறுபடும்.
திருமணமான பிறகும் பிறந்த வீட்டு வழியில் சில பெண்களுக்கு பித்ரு தோஷம் தொடரும்.
தர்ப்பணம் என்ற சொல்லுக்கு திருப்திப்படுத்துதல் என்று பொருள். இயற்கை முறையில் இறந்தவர்களுக்கு வருடாந்தர திதி, அமாவாசை திதி, மகாளயபட்ச வழிபாடு மற்றும் தர்ப்பணங்களில் சரி செய்ய முடியும். இயற்கைக்கு மாறாக இறந்தவர்களின் ஆத்மாவை தில ஹோமத்தால் மட்டுமே சரி செய்ய முடியும்.
ஒரு ஆத்மா உடலை விட்டு வெளியேறும்போது மனதால் துன்பப்பட்டால் அதன் மனதை துன்புறுத்திய நிகழ்வில் திருப்தி ஏற்படும் வரை அதைச் சார்ந்தவர்களை தாக்கிக்கொண்டே இருக்கும். அதனால் தான் அடுத்தவர் மனம் நோகும்படி நடக்கக்கூடாது. இன்று நகர்ப்புறங்களில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். வீடு மற்றும் குழந்தைகள் பராமரிப்பிற்கு தாய், தந்தை அல்லது மாமனார், மாமியாரை கொண்டு வந்து வைத்து விடுகிறார்கள். வயதான அந்த ஜீவன்கள் படும் கஷ்டத்திற்கு அளவுகோலே இல்லை.
சொந்த ஊரில் உற்றார் உறவினர்களுடன் வாழ்ந்து பழகியவர்களுக்கு நகர வாழ்க்கை ஒத்து வருவதில்லை. வேலைக்கு செல்பவர்களுக்கு அவர்களை கவனிக்கவே நேரம் கிடைப்பதில்லை. இதில் பெற்றோரை கவனிக்க ஏது நேரம். பல இடங்களில் அவர்களின் வயதிற்கு மீறிய வேலை கொடுத்து மன உளைச்சலை அதிகப்படுத்துகிறார்கள்.
இன்னும் சிலர் முதியோர் இல்லத்தில் பெற்றோர்களை கொண்டு விடுகிறார்கள். பல பெற்றோர்கள் தங்களின் மன வேதனையை வெளியில் சொல்லியும், சொல்ல முடியாமலும் மன வேதனையுடன் இறந்து விடுகிறார்கள். இதை இயற்கை மரணத்தில் சேர்ப்பதா? இல்லை இயற்கைக்கு மாறான மரணத்தில் சேர்ப்பதா? இது இரண்டும் இல்லாத புது விதம். இறந்த ஆன்மாவின் மனவேதனையால் பாதிக்கும் காலம் வரும்போது கூட பல பேர் தங்கள் தவறை புரிந்து கொள்ளாமல் நியாயப்படுத்து கிறார்கள். இந்த வகை பித்ரு தோஷம் எவ்வளவு திதி, தர்பணம் கொடுத்தாலும் விலகாது. திருப்தி அடையாத ஆத்மாக்கள் அந்த தலைமுறையை ஏதோ ஒரு வகையில் வேதனை ஏற்படுத்திவிடுகிறது. அப்படி தலைமுறை தலைமுறையாக ஏங்கித் தவிக்கும் ஆத்மாக்களை , சாந்தி அடையச் செய்து அவர்களின் முழு ஆசீர்வாதம் வேண்டி செய்யப்படும் ஹோமமே தில ஹோமம். இவ்வகை பிதுர் தோஷம் நீங்குவதற்கு ஒரே பரிகாரம் இந்த திலாஹோமம் தான். எவர் ஒருவர் குடும்பத்தில் முன்னோர்களுக்கு உரிய தர்ப்பணங்கள் தரப் படவில்லையோ, எவர் ஒருவர் தலைமுறையில் இயற்கைக்கு மாறான இறப்பு அதிகம் இருக்கிறதோ அவர்களுக்கு தில ஹோமமே தீர்வு. அந்த ஜாதகர் தில ஹோமம் செய்யாமல் வேறு எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் பலன் கிடைப்பது அரிது.
தில என்றால் எள். தில ஹோமம் என்பது எள்ளினால் செய்யப்படும் ஹோமம். சாதாரணமாக பிதுர்க்களுக்கு செய்யும் தர்ப்பணத்திற்கும், தில ஹோமத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
தில ஹோமம் செய்யும்போது கவனிக்க வேண்டியது
உங்களுடைய ஜாதகத்தில் யோகம் பொருந்திய நாளாக இருப்பது சிறப்பு.
தாய், தந்தை, குல, குடும்ப , இஷ்ட, உபாசன, காலடி, காவல் தெய்வ ஆசியை மானசீகமாகவோ நேரடியாகவோ பெற்ற பின்பே பரிகாரம் செய்ய வேண்டும். சந்திராஷ்டம நாளாக இருக்கக்கூடாது.
ஜனன ஜாதகத்தில் சுப கிரகமாக இருந்தால் கூட நீச, அஸ்தமனம் பெற்ற கிரகத்திற்கான தசா, புத்தி, அந்தர காலங்களை தவிர்த்தல் நலம்.
திரிகோணாதிகளுடன் தொடர்பு பெறும் தசா, புத்தி, அந்தர காலமாக இருப்பது சிறப்பு. 6, 8, 12 அதிபதிகளின் தசா, புத்தி, அந்தர காலமாக இருக்கக்கூடாது.
மிகப் பெரிய யாகங்கள் பரிகார பூஜை செய்யும்போது ஜாதகரின் பட்சி அரசு செய்யும் காலமாக இருப்பது மிகச் சிறப்பு.
ஜாதகருக்கு தாராபலம் உள்ள நாளாக இருப்பது மேலும் பலனை அதிகரிக்க செய்யும்.
பரிகாரம் உடனே யாருக்கு நிறைவேறும் என்று பார்க்கலாம்.
லக்னாதிபதி வலிமையுடன் இருப்பவருக்கு தில ஹோமத்தின் பலன் 6 மாதத்திற்குள் தெரிந்துவிடும்.
பரிகாரம் செய்யும் நாளின் நட்சத்திரத்திற்கு சுய ஜாதகத்தில் திரிகோணாதிபதிகள் தொடர்பு இருக்க வேண்டும்.
பரிகாரம் செய்யும் கிரகம் கோச்சாரத்தில் ஆட்சி, உச்சம், நட்பு பெற்று இருக்க வேண்டும்.
மிகப் பெரிய பரிகார பூஜை செய்யும் போது குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பு பிரமச்சரியத்தை கடைபிடித்து புலால் உண்பதை தவிர்த்து மானசீகமாக காரிய சித்தி வழிபாடு செய்பவரின் பரிகாரம் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் நிறைவேறும்.
வேத விற்பனர் ஏதோ மந்திரம் சொல்கிறார் தனக்கும் அந்த பரிகாரத்திற்கும் தொடர்பு இல்லாதது போல் எண்ண அலைகளை பரவவிட்டு பரிகாரத்தில் காட்சியாளராக ஈடுபடுவது கூடாது. ஆத்மார்த்தமாக முன்னோர்களின் ஆத்ம சாந்திக்கு வழிபாடு செய்ய வேண்டும்.
தில ஹோமம் முடித்தவுடன் முடிந்த அளவுக்கு அன்னதானம் செய்வதும் நல்லது.
இது ஒரு சக்தி வாய்ந்த ஹோமம். முழு மனதுடன் செய்ய வேண்டும். முறைப்படி செய்ய வேண்டும்.
ஒரு மனிதன் வாழ்நாளில் ஒரு தடவை மட்டுமே இதை செய்ய வேண்டும். சரியாக செய்யப்படும் திலா ஹோமம் அந்த சந்ததிக்கே நல்ல வழிகாட்டும்.
முறையான தில ஹோமத்தின் பலன் 6 மாதத்தில் தெரியும். முறையாக தில ஹோமம் செய்தவர்களுடைய வாரிசுகளின் வாழ்வில் திருப்புமுனை உடனே ஏற்படும்.
உங்கள் லக்கினத்திற்கு 9-ம் வீட்டு அதிபதியின் நட்சத்திரம், கிழமை, 9-ம் வீட்டில் மாந்தி இல்லாத நாளாக இருப்பது நன்று.
தில ஹோமம் என்பது இயற்கைக்கு மாறாக இறந்த நம் முன்னோர்களுக்கு செலுத்தும் அஞ்சலியாகும். இது வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டுமே செய்யப்படும் ஹோமம் என்பதால் குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் இதில் பங்கு கொள்ள வேண்டியது அவசியம்.
தில ஹோமத்தின் நன்மைகள்:
உங்கள் முன்னோர்களுக்கு தில ஹோமம் செய்வதன் மூலம் சாந்தி அடைய முடியாத மற்றும் அகால மரணமடைந்த ஆன்மாக்களுக்கு விடுதலை கிடைக்கும். இறந்த ஆன்மாக்களுக்கு முக்தி ஏற்படும். எதிர்மறை ஆற்றல்களை நீக்கும். ஒரு ஆன்மாவை இறைவனடி சேர உதவிய புண்ணியம் கிடைக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்