search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மகளிர் நலனில் சித்த மருத்துவம்- பூப்பு சுழற்சி மாறுபாடுக்கு என்ன காரணம்?
    X

    மகளிர் நலனில் சித்த மருத்துவம்- பூப்பு சுழற்சி மாறுபாடுக்கு என்ன காரணம்?

    • பொதுவாக பெண்களை நிலவின் அம்சமாக குறிப்பது வழக்கம்.
    • பெண்களுக்கும் நிலவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதை காட்டுகிறது.

    'பூப்பு' என்பது பெண்களின் பருவமடைதல் நிலை. இதுவே அடுத்த சந்ததியை உருவாக்கும் இனப்பெருக்கத்திற்கான ஆதாரம். அதே சமயம் பூப்பினை பெண்களின் ஆற்றல் இழப்பு என்றே கூறலாம். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு 16 வயதுகளில் தான் பெண்கள் பூப்பு எய்தி வந்ததாக வரலாற்று செய்திகள் கூறுகின்றது.

    அதன் பின்னர் உணவில் அதிகப்படியான புரதச்சத்தும், கொழுப்புச்சத்தும் சேர்ந்ததால் பெண்கள் 12-13 வயதுகளில் பூப்பு எய்தி வந்தனர். ஆனால் தற்போதைய காலக் கட்டத்தில் பத்தாவது வயதிலேயே பெண்கள் பூப்பு எய்துவது என்பதற்கு இப்போதுள்ள துரித உணவு வகைகளே காரணம் என்கிறது நவீன அறிவியல்.

    பூப்பு சுழற்சி என்பது பொதுவாக 30 நாட்களாக இருக்கும். இருப்பினும் பெண்களின் வயது மற்றும் வாழ்க்கை முறைகளை பொறுத்து பூப்பு சுழற்சி, 20 முதல் 40 நாட்கள்.வரை இருக்கலாம்.

    பொதுவாக பெண்களை நிலவின் அம்சமாக குறிப்பது வழக்கம். பெண்களின் முகத்தை வர்ணிக்கும் இடத்தில் பெரும்பாலும் நிலவை பயன்படுத்துவது கவிஞர்கள் இயல்பு. ஆண் என்றால் வெப்பம், பெண் என்றால் தட்பம் (குளிர்ச்சி) என்பதும் வாய்மொழி. அதற்கான காரணத்தை சற்றே ஆராய்ந்தால், நிச்சயம் வியப்பளிக்கும்.

    என்னவெனில் பெண்களின் மாதம் தோறும் நிகழும் பூப்பு, முழு நிலவு நாளிலோ அல்லது புது நிலவு நாளிலோ (அமாவாசை) துவங்குவதாக ஆய்வுகள் கூறுவது, பெண்களுக்கும் நிலவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதை காட்டுகிறது. அதாவது 30 தினங்களுக்கு ஒரு முறை தோன்றும் அமாவாசை, பவுர்ணமி போலத் தான் மாதர்களின் மாதவிடாயும் இயற்கையானது என்பது அறியக்கிடக்கிறது. இது மட்டுமல்லாமல் பெண்களுக்கும், இயற்கை பிரபஞ்சத்திற்கும் கூட நெருங்கிய தொடர்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யம்.

    இவ்வாறு துவங்கும் பூப்பு (மாதவிடாய்) பெண்களின் கருப்பை, சினைப்பை உறுப்புகள் சார்ந்தது மட்டுமல்ல. பெண்களின் உடலில் செயல்படும் 'ஹார்மோன் அச்சு' அதில் முக்கிய காரணமாகிறது. அதென்ன ஹார்மோன் அச்சு? மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ் எனும் பகுதிக்கும், பிட்யூட்டரி சுரப்பிக்கும், சினைப்பைக்கும் உள்ள தொடர்பே இந்த அச்சு. இந்த அச்சு சரியான முறையில் செயல்படாததே இன்றைய நவீன வாழ்வியலில் பெண்களின் குழந்தைப்பேறின்மைக்கு முதன்மைக் காரணமாக உள்ளது. செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அதிகரிப்பதற்கும், சரிவர செயல்படாத இந்த ஹார்மோன் அச்சு தான் காரணம் என்று சொன்னாலும் அது மிகையல்ல.

    மாதவிடாயின் முதல் பகுதியில் ஈஸ்ட்ரோஜென் எனும் பெண் ஹார்மோன் ஆதிக்கம் செலுத்துகிறது. பூப்பு துவங்கிய 12-16 நாட்களில் இதன் அளவு உச்சத்தை அடைகிறது. இது உச்சத்தை அடையும் போது ஒற்றைத் தலைவலி, உடல்வெப்பம் போன்ற இயற்கையான மாறுதலை பலருக்கும் ஏற்படுத்தும். அடுத்த 15 நாட்கள் புரோஜெஸ்டீரோன் எனும் மற்றொரு ஹார்மோன் ஆதிக்கம் செலுத்த துவங்கி, இந்த மாதவிடாயை உண்டாக்குகிறது. இந்த காலம் தான் பெண்களுக்கு பெரும் சவால். அதாவது பூப்பு தோன்றும் முன் பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

    இதற்கிடையில் மூளையின் ஹைபோதலாமஸ் பகுதியில் இருந்து உருவாகும் ஹார்மோன் சுரப்பிகள், பிட்யூட்டரி முன் பகுதியில் செயல்பட்டு இரண்டு முக்கிய ஹார்மோன்களை உற்பத்தி செய்யும். இவை தான் சினைப்பையில் இருந்து சினைமுட்டை வெளிவருவதற்கும், அதன் வளர்ச்சிக்கும் காரணமானவை.

    பூப்பு துவங்கியதும் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் பருவமடைந்த பல மங்கையர்கள் தூக்கமின்மைக்கு ஆளாகின்றனர். மனநிலை மற்றும் நடத்தை மாற்றங்கள் பலருக்கும் இயற்கையாகவே ஏற்படக்கூடும். இந்த மாற்றங்கள் பெண்ணுக்குப் பெண் பரவலாக மாறுபடும். இத்தகைய மாற்றம் ஏற்படும் தருணங்களில் அவர்களை உளவியல் ரீதியாகவும் அரவணைத்து காக்க வேண்டியது அவசியம்.

    இவ்வாறு சிக்கலான உடல் செயலியலில் பல்வேறு உடல்உறுப்பு மாற்றங்களையும், உளவியல் மாற்றங்களையும் சந்திக்கும் பெண்கள், நடைமுறை வாழ்விலும் பல்வேறு சவால்களை சந்திக்கின்றனர். தினம் தினம் சவால்களை எதிர்கொள்ளும் அவர்கள் அனைவருமே சாதனையாளர்கள் தான் என்றால் அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

    சித்த மருத்துவ தத்துவத்தின் அடிப்படையில், பூப்பு துவங்கும் நிகழ்வு தச வாயுக்களில் ஒன்றான அபானனின் செயல்பாடாக கூறப்பட்டுள்ளது. நம் உடலை ஆட்சி செய்யும் வாயுக்கள் மொத்தம் பத்து. அவற்றை 'தச வாயுக்கள்' என்கிறது சித்த மருத்துவம். இதில் பிராணன் என்பது நாம் விடும் மூச்சு காற்று. இது தச வாயுக்களில் முதன்மையானது. நம் உடலில் மேல்நோக்கி செயல்படக்கூடியது. அதற்கு மாறாக அபானன் எனும் கீழ்நோக்கி செயல்படும் வாயு நம் அன்றாட கழிவுகளை நீக்க உதவுவது. அதாவது மலம், சிறுநீர் இவற்றை இயல்பாக கழிக்க உதவும். அதே போல் தான் மாதவிடாய் இயல்பாக நிகழ்வதில் துவங்கி, கருப்பை வழியே இயல்பாக பிள்ளைபேற்றை நிகழ்த்துவது வரை இந்த அபானன் உதவும் என்கிறது சித்த மருத்துவம்.

    இவ்வாறு தோன்றும் முதல் பூப்பு பல்வேறு காரணங்களால் சரிவர சுழற்சி இல்லாமல் உடல் நலக்கோளாறுகளை உண்டாக்கும். உடல் நலமின்மை, மன அழுத்தம், போதிய சத்தற்ற உணவுப்பழக்கம், மாறுபட்ட வாழ்வியல் நெறிமுறைகள், உடற்பயிற்சியின்மை இவை அனைத்தும் மாதவிடாய் சுழற்சியை சீர்குலைக்கும் தன்மை உடையன. மேலும் மாதவிடாயின் முந்தைய நாட்களில் மகளிர் பலரும், முன் பூப்பு கோளாறுகளால் அவதியுறுகின்றனர்.

    இவ்வாறு தோன்றிய பூப்பு சுழற்சி சரிவர செயல்படாமைக்கு முதன்மைக் காரணம் 'அனீமியா' எனும் 'ரத்த சோகை' தான். பொதுவாக பெண்களுக்கு ரத்தத்தில் இருக்க வேண்டிய ஹீமோகுளோபின் அளவு 12-க்கும் கீழ் குறைவதே ரத்த சோகை. இந்த ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்பு சத்து அவசியம். முதல் மாதவிடாயின் போது ஏற்படும் ரத்த இழப்பு, அதனை ஈடுகட்ட தேவையான சத்துக்கள் நிறைந்த உணவினை பயன்படுத்த தவறுவதும் இந்த அனீமியா நிலைக்கு முக்கிய காரணம்.

    'பாட்டி எனக்கு முதல் மாதவிடாய்க்கு அப்புறம் சரியா மாதவிடாய் ஆகல' என்று கூறியதும் அவர் கையில் எடுக்கும் முதல் மருத்துவ ஆயுதம் முருங்கை கீரை தான். கொஞ்சம் முருங்கை கீரையை காம்போடு கிள்ளிப் போட்டு, பனைவெல்லம் சேர்த்து பதமாய் காய்ச்சி தினமும் ஒரு கப் குடிமா, எந்த இரும்பு சத்து மாத்திரையும் தேவை இல்லை என்று, அசத்தும் குறிப்பினை கொடுத்து அதிர வைக்கும் பாட்டி வைத்தியமாய் சித்த மருத்துவம் உள்ளது.

    ஏனெனில் ரத்த சோகையைப் போக்கும் 'இரும்பு சத்து'முருங்கை கீரையில், மற்ற கீரையில் உள்ளதை விட 25 மடங்கு அதிகம் உள்ளதாம். மேலும் முருங்கை கீரையில், ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட 7-மடங்கு வைட்டமின்-சி உள்ளது. கண் பார்வைக்கு அவசியமான வைட்டமின்-ஏ, கேரட்டில் உள்ளது போல் 10-மடங்கும், உடல் எலும்பு வன்மைக்கு தேவையான 'கால்சியம்'பாலில் உள்ளதை விட 17-மடங்கும், உடல் வளர்ச்சிக்கு தேவையான 'புரதம்' தயிரில் உள்ளதை விட 9-மடங்கும், இருதயத்தை காக்கும் 'பொட்டாசியம் சத்து' வாழைப்பழத்தில் உள்ளதை விட 15-மடங்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பருவம் வந்த பெண்களுக்கு நாம் பயன்படுத்த மறந்த பாரம்பரிய உணவு இந்த 'முருங்கை கீரை சூப்'. ஏதாவது ஒரு வகையில் பெண்களுக்கு முருங்கையை தவறாமல் தருவதால் அவர்களின் ஆரோக்கியம் பலப்படும் என்கிறது சித்த மருத்துவம்.

    அடுத்து இரும்பு சத்தினை அதிகம் கொண்ட எளிய மற்றொரு மூலிகை கருவேப்பிலை. பூப்பு எய்திய கால கட்டத்தில் மாதாந்திர பூப்பினை ஒழுங்குபடுத்த இரும்பு சத்து கொண்ட கருவேப்பிலை உதவும். இதனை முருங்கை கீரையுடன் சேர்த்தும் இஞ்சி,பூண்டு,மிளகு,உப்பு சேர்த்து சூப் வைத்து கொடுக்கலாம். மிகச்சிறந்த இயற்கை உணவு. எலும்பு வன்மைக்கு தேவையான கால்சியம் சத்து, ரத்த விருத்திக்கு தேவையான இரும்பு சத்தும், வைட்டமின் சி-யும் இன்னும் பல தாது உப்புக்களும் வைட்டமின்களும் இதில் உள்ளது.

    சர்க்கரையை போல் அல்லாமல் வெல்லம், மற்றும் பனை வெல்லத்தில் வைட்டமின் பி வகைகள், வைட்டமின் சி ,போலிக் அமிலம், இரும்பு சத்து, கால்சியம், இன்னும் பிற அத்தியாவசிய தாதுஉப்புகள் உள்ளது. ஆகையால் பருவமடைந்த பெண்களுக்கு தரப்படும் உணவு வகைகளில் இதனை சேர்த்து கொடுக்க உடல் உறுப்புகள் பலப்படும்.

    மேலும் இரும்பு சத்தினை தவிர, ரத்தத்தை உடலில் உற்பத்தி செய்ய இரண்டு அத்தியாவசிய வைட்டமின்கள் பி-12 மற்றும் போலிக் அமிலம் தேவைப்படுகிறது. இவை ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியில் முக்கிய பங்காற்றுகிறது. வைட்டமின் பி-12 பெரும்பாலும் இறைச்சி சார்ந்த உணவுகளில் அதிகம் காணப்படும். சைவ உணவு வகைகளில் பாலில் சிறிதளவே உள்ளது.

    போலிக் அமிலம் எனும் மற்றொரு வைட்டமின் ஆரஞ்சு பழம், கீரைகள், பச்சை காய்கறிகள், முட்டைக்கோஸ் இவற்றில் அதிகம் உள்ளது .இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதோடு, காய்கறி கீரை சூப் வைத்து குடிக்க ரத்த விருத்தியை உண்டாக்கும். சித்த மருத்துவ மூலிகைகளில் 'தண்ணீர்விட்டான் கிழங்கு' போலிக் அமிலம் அதிகம் உடையது. மேலும் இது பெண்களுக்கென தனித்துவமான மருத்துவ குணங்களை கொண்டது.

    சித்த மருத்துவக் கூற்றுப்படி நாம் உண்ணும் உணவு சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு ஆகிய அடுத்தடுத்த நிலைகளை கடந்து ஏழாவது நாளில், ஏழாவது நிலையான சுரோணிதம் (கருமுட்டை)-ஆக மாறுகிறது. ஆகவே சத்தான உணவு உண்பது பெண்களுக்கு ரத்தத்தை மட்டுமல்ல, வளமான கருமுட்டையையும் உண்டாக்கும் என்பது இதில் தெரிய வருகிறது.

    (தொடரும்)

    தொடர்புக்கு: drthillai.mdsiddha@gmail.com

    Next Story
    ×