என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சிறப்புக் கட்டுரைகள்
அமைதிப்புரட்சி ஏற்படுத்திய வைகுண்டர்
- ஆளவருவார் அவர் வரும் நாளிது காண் எனக் கணித்து, மன்னர்க்குப் புரோகிதன் உரைத்தனன்.
- பூவண்டனார் மொழி கேட்டுப்பொங்கி எழுந்தான் மன்னன்.
திருவிதாங்கூரை அப்போது சுவாதித் திருநாள் மன்னர் (1829-1847) ஆண்டு வந்தார். சங்கீத சிரோன்மணிகளுக்கு இவருடைய ஆட்சிக்காலம் ஒரு பொற்காலமாகவே விளங்கிற்று. இம்மன்னரின் ஆட்சிக்காலத்தில் பிற மன்னர்களை காட்டிலும் ஏராளமாக பணம் செலவு செய்யப்பட்டு, திருமாடம்பு, ஹிரண்ய கர்ப்பதானம் எனப் பல்வேறு வைதீக சடங்குகள் நடத்தப்பட்டன. கொல்லம் வருடம் 1009-ம் ஆண்டு தை 6-ம் நாள் ஹிரண்ய கர்ப்பதானமாக ரூ.27236 செலவிடப்பட்டது. அது முடிந்து, ஸ்ரீபத்மநாபதாச பாலராமவர்ம குலசேகரப்பெருமாள் எனப் பெயர் பெற்று தை 7-ம் நாள் படியேற்றம் நடந்ததில் மட்டும் ஒரு லட்சம் ரூபாய் செலவாயிற்று. தனது தாயாருக்குப் பாவ பரிகாரத்திற்காக சர்வ பிராயசித்தம் செய்தபோது 1009 பசுக்கள் தானம் கொடுக்கப்பட்டன. தானம் தட்சணை முதலிய வகைகளில் அன்றைய தினம் மட்டும் 1,18,108 ¼ பணம் செலவிடப்பட்டது.
இது தவிர கோவில்களுக்கு ஏராளமான அளவில் பணமும், விலை மதிப்புள்ள பொருட்களும் அளிக்கப்பட்டன. மன்னரின் இச்செய்கைகள் கோவிலை அண்டியிருந்த மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தன. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் அல்லல்கள் பொருட்படுத்தப்படாமலேயே இருந்தன. பெரும்பான்மையான மக்களின் நலனைப் புறக்கணித்து மேட்டுக்குடியினர் சிலரின் சுகபோக வாழ்விற்காக ஆட்சி செய்து வந்த திருவிதாங்கூர் மன்னனை சுவாமிகள் வெறுத்தார். முறையற்ற செய்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த மன்னனை "அனந்த நீசன்"" என்று சாடினார். ஆளும் வர்க்கத்தின் அராஜக அரசியலுக்கு எதிராக வைகுண்ட சுவாமிகள் ஓர் அமைதிப் புரட்சியை அரங்கேற்றினார். "அவன் பட்டத்தைப் பறித்திடுவேன், கொட்டிக் குலைத்திடுவேன்" என்று சூளுரைத்தார். இதையெல்லாம் கண்ணுற்ற ஓங்கு சாதியினர் வெகுண்டெழுந்தனர். வைகுண்ட சுவாமிகளை ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டினர்.
சுவாமிகளை பெருமைப்படுத்துவதாக கூறி மருந்துவாழ் மலையில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்து, உணவில் நஞ்சு கலந்து அளித்தனர். தன்னைக் கொல்லவே வஞ்சமும் சூழ்ச்சியுமாக விருந்து நடைபெறுகிறது என அறிந்திருந்தும், நச்சு உணவை மிக்க மகிழ்ச்சியுடன் உண்டார் சுவாமிகள். கடலினுள் மூன்று நாட்களையே கழித்த வைகுண்ட சுவாமியை நச்சுணவு ஒன்றும் செய்து விடவில்லை. ஓங்கு சாதியாரின் சதியிலிருந்து எளிதாக தப்பினார். தங்கள் முயற்சியில் தோல்வியுற்ற ஓங்குசாதி மக்கள் மனம் வெதும்பினர். எவ்வாறேனும் வைகுண்டரை கொன்றுவிட வேண்டும் எனத் தக்கத் தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
வைகுண்ட சுவாமியின் இயக்கம் பற்றியும், புரட்சி முழக்கம் பற்றியும் ஏற்கனவே பலமுறை மன்னனிடம் மேட்டுக்குடியினர் முறையிட்டிருந்தனர். மன்னர் ஒரு சமயம் சுசீந்திரம் வந்திருந்தபோது, அங்குள்ள கோயில் மண்டப அரங்கில் விசாரணை நடத்தினார். "நமக்கே உரியதாக இருந்த நம்முடைய நாடு. தற்போது ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்குள் ஆகிவிட்டது. எனினும், நம் பேச்சுக்கு மறு சொல் நமது நாட்டில் இல்லாது இருந்து வருகிறது. இப்படியிருக்கும் வேளையில், இப்பூமியில் நமக்கு எதிரியாக யாராவது தோன்றியுள்ளனரா? என ஆய்ந்து விசாரித்துச் சொல்லும்" என அமைச்சரை வினவினார்.
நமக்கு இறையிறுத்து நாடூழியங்கள் செய்யும்
குமுக்காயினம் பெருத்த கூண்ட சாணாரினத்தில்
வைகுண்டமாக வந்து பிறந்தோம் என்று
மெய்கொண்ட பூமியெல்லாம் வேறு ஒருவர் ஆளாமல்
நான்தான் முடிசூடி நாடு கட்டி ஆள்வேன் என
தான் தானுரை பகர்ந்து சாதிபலதும் வருத்தி
ஒரு தலத்தில் ஊட்டுவித்தானுற்ற நீரானதையும்
அருகிருக்குஞ் சாணார்க்கு அதிக விதி தோணுதுகாண்
ஆகாத பொல்லாரை அழித்துப்போடுவேன் என்றும்,
சாகாவரங்கள் சாணார்க்கு ஈவேன் என்றும்
சொல்லியிருக்கிறான் சுவாமி வைகுண்டமென்று
தொல்லுலகில் இந்த சொல் கேட்குது.
என வைகுண்டரை பற்றி மன்னனிடம் குற்றம் சாட்டினான். அம்மொழி கேட்டு, மன்னன் "எல்லோரிலும் தாழ்ந்த சாதியில் உள்ள ஒருவன் கூறுவானோ இம்மொழி; இதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கிறது" என உரைத்துப் புரோகிதனிடம் "இந்த தர்ம ராச்சியத்தில் எனக்கு எதிரி யாராவது உள்ளனரா பார்! எனக் கேட்டான்.
மனுவாய்ப் பிறந்து வைகுண்டம் என்று சொல்லி
தனுவையடக்கி தவசுமிக இருந்து
நல்லோரையெல்லாம் நாடிமிக எடுத்து
ஆளவருவார் அவர் வரும் நாளிது காண் எனக் கணித்து, மன்னர்க்குப் புரோகிதன் உரைத்தனன். அதனை கேட்ட மன்னன், "சோதிரியே! நீ சொன்னது யாவும் உண்மையானவையாக இருப்பினும் அவர் (விஷ்ணு) வந்திருக்கும் இனங்கள் என்ன? எனக் கேட்கையில், புரோகிதன்.
"இன்ன வகை சாதியிலே இவர் வருவார் எனவே
சொன்னகுறி வைத்து இயக்குது காண் என் மனங்கண்
தர்மம் கொண்டு சுவாமி தரணியில் வந்ததினால்
பொறுமை குலமாயிருக்கும் பெரிய வழியாய் இருக்கும்
நம்மாலே சொல்லி நவிலக்கூடாது.
எனக் கூறினான். இது கேட்டு மன்னன் மறுப்புரைத்தான்.
அப்படித்தான் ஆனால் ஆதிமகா விட்டுணுவும்
இப்படியே வந்து பிறக்க வேணுமென்றால்
போத்தி நம்பூதிரி பிராமண சூத்திர குலத்தில்
பிறக்காமல் இந்தப் பிறர் தீண்டாச் சாண் குலத்தில்
பிறக்க வருவாரோ பெரிய நாராயணரும்
சும்மா இந்த சாணான் சுவாமி என சமைந்ததெல்லாம்
பம்மாத்தாய்க் காணுது பராக்கிரம மந்திரியே
இப்போது ஓர் நொடியில் இந்த சாணான்தனையும்
மெய்யாக கொண்டு விட வேணும் எந்தன்முன்னே"
என அமைச்சரை ஏவினான்.
அமைச்சரை மன்னன் பணித்தபோது, அங்கிருந்த ஆயிடையர் வழித்தோன்றலாகிய பூவண்டர் எழுந்துரைத்தார்.
"சாணான் குலத்தில் மாயன்
சார்வாரோ என்றெண்ண வேண்டாம்
பாணனாய்த் தோன்றி நிற்பார்
பறையனாய்த் தோன்றி நிற்பார்
தூணெனத் தோன்றி நிற்பார்
தோழனாய்த் தோன்றி நிற்பார்
ஆணெனத் தோன்றி நிற்பார்
அவர் உருகேட்டிலிரோ!
குசவனின் குலத்தில் வந்தார்
குறவனின் குலத்தில் வந்தார்
மசவெனக் குலத்தில் வந்தார்
மாடெனக் குலத்தில் வந்தார்
வேடனின் குலத்தில் வந்தார்
விசுவெனக் குலத்தில் வந்தார்
அசுவெனக் குலத்தில் வந்தார்
அவர் உரு கேட்டிலிரோ!
இவ்விடந்தானாய் மேவி இருப்பவர்க்கெந்த சாதி
அவ்விட மாகாது என்று அவர் தள்ள மாட்டாரையா
செவ்விட மாலோன் சூட்சம் செப்பிடத் தொலையாதையா"
எனக் கூறியதும் கோபமடைந்த மன்னன், "மன்றலத்தோர்க்கு ஏற்காத வார்த்தையை உரைத்த இவனை பிடித்து அடையுங்கள்" எனக் கூறி மேலுரை மொழிந்தான்.
"நித்தமுன்னாலே லட்சம் நெடிய பொன்களிட்டு
சத்திர சாலை தோறும் தர்மமு மளித்து நாமள்
சித்திர திருநாள் நித்தமும் செய்கிற குலத்தைத் தள்ளி
நித்தியம் வேலை செய்யும் எழில்குலம் புக்குவாரோ!
பிரமனையொப்பாஞ் சாதி பிராமணக் குலத்தைத் தள்ளி
சீரா மனு மற்றோர் தன்னில் சேர்வது திடனோயில்லை"
வராகமாய் உதித்த மாயன் மனுவெனப் பிறக்க மாட்டார்
ஏதடா இந்த வார்த்தை என் முன்னே சொல்லி நின்றாய்!
கருப்புடிச் சாணான் கையில் கைக் கூலி வேண்டிக் கொண்டு
இப்படி மழுப்ப வந்தாயடா!"
என வெகுண்டு மன்னன் உரைத்ததும் பூவண்டர் மறுமொழி நவின்றார்.
ஆனையும் படையும் உந்தன் அரண்மனைக் கோவில்காலும் சேனையும் குடையும் வியாழ செல்வமும் சிறப்பு எல்லாம்
ஏனமுமிகவே தோற்று எரிந்து நீ கரிந்து சாவாய்
நானிதைச் சொல்ல வில்லை நாராயணர் உரைத்தார்.
பூவண்டனார் மொழி கேட்டுப்பொங்கி எழுந்தான் மன்னன். இவனைக் கொண்டு போய் விலங்கிட்டுச் சிறை செய்" என்று கட்டளையிட்டான். மேலும், சாணான் சாமியைப் பார்க்கப் போக, சிங்கத் தண்டிகை எடுத்துவரும்படிப் பணித்தான். வைகுண்ட சுவாமியைப் பார்க்கப்போவோம் என மன்னன் சொன்னதும், யார்க்கு இது ஏற்கும் சாணான் அவனி டம் போவதென்ன! அவனைக் கைது செய்து கொண்டுவர சாஸ்திரி கடிகனை அனுப்பும் எனச் சொன்னதும், 'சுவாமி என்றுரைத்த சாணானைக் கட்டி என் முன்னே கட்டுடன் கொண்டு வருக' என மன்னன் ஏவலர்களை அனுப்பி வைத்தான். அவர்கள் செய்தது என்ன? அடுத்த தொடரில் பார்ப்போம்....
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்