search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    அன்று முதல் இன்று வரை... மும்மொழி கொள்கை உருவானதும் சர்ச்சையாக உருவெடுத்ததும்..
    X

    அன்று முதல் இன்று வரை... மும்மொழி கொள்கை உருவானதும் சர்ச்சையாக உருவெடுத்ததும்..

    • இந்தியாவை பொறுத்தவரை மும்மொழி கட்டாயமில்லை என்று தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் கூறியது.
    • இந்தியை நாடு முழுவதும் கட்டாய மொழியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

    மும்மொழி கொள்கையை ஒரு போதும் ஏற்க போவதில்லை. இதற்காக மத்திய அரசு ரூ.2,152 கோடியை நிறுத்தி வைத்திருந்தாலும் சரி. ஏன், பத்தாயிரம் கோடி தருவதாக இருந்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்ட வட்டமாக கூறி உள்ளார்.

    பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு ஆர்வம் காட்டினாலும் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்து வதை ஏற்கவில்லை. அதற்கு காரணம் மும்மொழி கொள்கையை அது வலியுறுத்துகிறது என்பதால்தான்.

    இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் எழுதிய கடிதத்தில் மொழியை வைத்து அரசியல் வேண்டாம். அரசியலமைப்பு சட்டத்துடன் ஒத்துப் போக வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    மும்மொழி கொள்கை பற்றி அரசியலமைப்பு சட்டத்தில் எங்கே கூறப்பட்டு உள்ளது என்று மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.

    இப்படி மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே நெருடலை ஏற்படுத்தி இருக்கும் இந்த விவகாரத்தின் தொடக்கப்புள்ளி ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பே வைக்கப்பட்டது.

    நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஒவ்வொரு துறையும் புதிதாக கட்டமைக்கப்பட்டது. அப்போது இந்தியாவை போல் பன்மொழி பேசும் பெல்ஜியம், சுவிட்சர்லாந்து போன்ற சில நாடுகளை மேற்கோள் காட்டி பல்கலைக் கழக மானிய குழுவானது மும்மொழி திட்டத்தை தயாரித்தது. அதில் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகியவை கட்டாயமாக்கப்பட்டது.

    ஆனால் இந்தியாவை பொறுத்தவரை மும்மொழி கட்டாயமில்லை என்று தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் கூறியது.

    இந்தியை பொறுத்தவரை சிறுபான்மை மொழியாக இருந்தாலும் மாநிலங்கள் கூட்டாட்சி செயல்பாடுகளில் பங்கேற்க கூடிய வகையில் இந்தியை கட்டாயமாக கொண்டு வர இந்தி ஆணையம் பரிந்துரை செய்து இருந்தது. ஆனால் அதை இந்தி பேசாத மாநிலங்கள் ஏற்கவில்லை.

    கடந்த 2020-ல் புதிய தேசிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டது. இதில் ஆரம்பத்தில் வகுக்கப்பட்ட மும்மொழி கொள்கையை தக்க வைத்து கொண்டது.

    ஆனால் ஒரே ஒரு வேறுபாடு. அப்போது இந்தியை நாடு முழுவதும் கட்டாய மொழியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் இப்போது இந்தியை கட்டாய மொழியாக வைக்கவில்லை. அவ்வளவு தான் வேறுபாடு.

    இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஒரு மொழியை கற்பிக்க வேண்டும். அதில் தென்னிந்திய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இருந்தது.

    புதிய கல்வி கொள்கை 2020-ன்படி எந்த மாநிலத்தின் மீதும் எந்த குறிப்பிட்ட மொழியும் திணிக்கப்பட மாட்டாது. குழந்தைகள் கற்றுக் கொள்ளும் மொழிகள் அவர்கள் விருப்பம் சார்ந்ததாக இருக்க வேண்டும்.

    அந்த மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். இதன் பொருள் மாநிலத்தின் இரு மொழிகளையும் தாண்டி இந்திய மொழிகளில் கூடுதலாக ஒரு மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறது.

    தாய்மொழியுடன் ஆங்கிலத்தையும் கட்டாயமாக்கும் அதே வேளையில் விருப்ப பாடமாக சமஸ்கிருதத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உ ள்ளது.

    தமிழ்நாட்டில் இந்த கொள்கைக்கு எதிர்ப்பு உருவாக காரணம் நீண்ட காலமாக இங்கு இந்தி திணிப்பை மாநில அரசும், பல்வேறு கட்சிகளும் எதிர்த்து வருகின்றன.

    1937-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ராஜாஜி பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக கொண்டு வந்த போது நீதிக் கட்சி அதை கடுமையாக எதிர்த்தது.

    அப்போது நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தாளமுத்து, நடராஜன் ஆகிய இரண்டு வாலிபர்கள் உயிர் இழந்தனர். அவர்கள் இருவரும் இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் சின்னங்களாகவும் மாறிவிட்டார்கள். இந்த போராட்டம் காரணமாக ராஜாஜி பதவியை துறக்க வேண்டியதாயிற்று. அதன் பிறகு ஆங்கிலேய அரசு அந்த உத்தரவை வாபஸ் பெற்றது.

    1965-ம் ஆண்டில் நாடு முழுவதும் அலுவல் மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கான காலக்கெடு நெருங்கிய போது மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தின் போது தீக்குளிப்பு, போலீஸ் துப்பாக்கி சூடு ஆகியவற்றால் சுமார் 70 பேர் உயிர் இழந்தார்கள்.

    இந்த நிலையில் 1967-ம் ஆண்டு அதிகாரப்பூர்வ மொழி திருத்தச் சட்டம் மற்றும் அதிகாரப் பூர்வமான மொழி குறித்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மும்மொழியின் ஒரு பகுதியாக இந்தி மொழி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தியது.

    இதை அப்போது முதல்வராக இருந்த அண்ணா எதிர்த்தார். சட்டமன்றத்தில் மும்மொழி கொள்கையை ரத்து செய்ய வேண்டும். பள்ளி பாடங்களில் இருந்து இந்தியை நீக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அப்போது முதல்வராக இருந்த அண்ணா 'வெளி உலகத்துடன் எங்களை இணைக்க ஆங்கிலம் இருக்கும் போது அதுவே இந்தியாவுக்குள்ளும் இணைப்பு மொழியாக இருக்க வல்லது' என்றார்.

    அப்போது இந்தி எதிர்ப்பு போராட்டமும் தீவிரமாக நடந்த நிலையில் இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை இந்தியுடன், ஆங்கிலமும் இணை அலுவல் மொழியாக தொடரும் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. அதை தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டமும் முடிவுக்கு வந்தது.

    சட்ட சபையில் அண்ணா தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளை மட்டுமே கற்பிக்கும் இருமொழி கொள்கையை தமிழக அரசு உறுதியாக பின்பற்றி வருகிறது.

    ஆளும் தி.மு.க. மற்றும் பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க. உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சிகள் தொடர்ந்து இரு மொழி கொள்கையை வலியுறுத்துவதோடு அதில் எந்த திருத்தம் கொண்டு வருவதையும் எதிர்த்து வருகிறது.

    2019-ல் கஸ்தூரிரெங்கன் கமிட்டி பரிந்துரை கட்டாய இந்தி கற்றல் என்ற பிரிவை தேசிய கல்வி கொள்கையில் இருந்து நீக்குவதற்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

    மும்மொழி கொள்கையை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பதற்கு காரணம் பின்வாசல் வழியாக இது இந்தியை திணிக்கும் முயற்சி என்று கருதுகிறார்கள்.

    மும்மொழி திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறையில் இந்தியை கற்பிப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது என்று கருதுகிறார்கள்.

    இந்தி பேசாத மாநிலங்களில் கூடுதல் நிதி ஒதுக்கி இந்தி மொழியை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதையும் சுட்டி காட்டுகிறார்கள். அதே நேரம் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தென்னிந்திய மொழிகள் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

    கல்வித் துறையில் முக்கிய அளவீடுகளில் பல மாநிலங்களை விட தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது. அதே நேரம் 3-வது மொழியை கற்பிப்பதில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் கல்விக்கான விரிவான திட்டமான சமக்ர சிக்ஷாவிற்கான நிதியை தடம் புரண்டு செல்ல அனுமதித்து விடக் கூடாது.

    மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் மற்றும் நடைமுறை சமரச முயற்சிகள் மட்டுமே இதற்கு சாத்தியமான தீர்வை தரும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

    Next Story
    ×