search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழர் பாரம்பரிய உடையில் அ.தி.மு.க. கரை வேட்டியுடன் கெத்து காட்டிய தொண்டர்கள்
    X

    தமிழர் பாரம்பரிய உடையில் அ.தி.மு.க. கரை வேட்டியுடன் கெத்து காட்டிய தொண்டர்கள்

    • அ.தி.மு.க. கரை வேட்டியுடன் தொண்டர்கள் திரண்டதால் மாநாட்டு திடல் முழுவதுமே பளிச்சென காணப்பட்டது.
    • அ.தி.மு.க.வினர் வாகனங்களில் சாரை சாரையாக வலையங்குளம் நோக்கி சென்றனர்.

    மதுரை:

    மதுரையில் அ.தி.மு.க. பொன் விழா மாநாடு இன்று எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள் உற்சாகத்துடன் திரண்டனர். காலை 7 மணி முதலே பாரம்பரிய வெள்ளை வேட்டி சட்டையில் அ.தி.மு.க. மாநாட்டு திடலில் தொண்டர்கள் குவிந்தனர்.

    அ.தி.மு.க. கரை வேட்டியுடன் தொண்டர்கள் திரண்டதால் மாநாட்டு திடல் முழுவதுமே பளிச்சென காணப்பட்டது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டு கொடியேற்றிய இடத்தில் தலைகள் மட்டுமே தெரியும் அளவுக்கு தொண்டர்கள் நின்றிருந்தனர்.

    அ.தி.மு.க. கரை வைத்த சேலை அணிந்த மகளிர் அணியினரும் மாநாட்டு திடலில் திரளாக குழுமியிருந்தனர். குடும்பம் குடும்பமாக வந்திருந்தாலும் கரை வைத்த வேட்டி அணிந்து வருவதிலேயே தொண்டர்கள் ஆர்வம் காட்டினார்.

    மாநாட்டு பந்தலில் தொண்டர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருந்தபோதிலும் அதிகாலையிலேயே ஓட்டல்கள், டீ கடைகளை அ.தி.மு.க.வினர் முழுவதுமாக ஆக்கிரமித்தனர். அனைத்துக் கடைகளிலும் அ.தி.மு.க.வினர் உற்சாகமாக பேசியபடி சாலையில் செல்வோருக்கு இரட்டை விரலை காட்டியபடி கெத்து காட்டியபடி இருந்தனர்.

    மதுரை எங்கும் அ.தி.மு.க.வினரின் கார்கள், வேன்கள், மோட்டார் சைக்கிள்களே காணப்பட்டன. பல இடங்களில் நீண்ட வரிசையில் அ.தி.மு.க.வினரின் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    ஆரப்பாளையம், காளவாசல், சிம்மக்கல், தெற்கு வாசல், கீழவாசல், கோரிப்பாளையம், அவுட்போஸ்ட், நாகமலை புதுக்கோட்டை பகுதிகளிலும் அ.தி.மு.க.வினர் வாகனங்களில் சாரை சாரையாக வலையங்குளம் நோக்கி சென்றனர்.

    மேலும் ரிங் ரோடு பகுதியில் எங்கு பார்த்தாலும் அ.தி.மு.க.வினரே காணப்பட்டனர். கம்பம், தேனி பகுதியில் இருந்து வந்த வாகனங்கள் நாகமலை புதுக்கோட்டையில் இருந்து திருமங்கலம் நான்கு வழிச்சாலை வழியாக வலையங்குளத்திற்கு திருப்பி விடப்பட்டதால் அ.தி.மு.க. கொடி மற்றும் மாநாட்டு ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தன. வாகனங்களில் சென்ற தொண்டர்கள் உற்சாகமாக இரட்டை விரலை அசைத்துக் காட்டியபடி சென்றனர். இதனால் மதுரை மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகள் முழுவதிலும் அ.தி.மு.க. கரை வேட்டி அணிந்த தொண்டர்களால் உற்சாகம் கரை புரண்டது.

    Next Story
    ×