search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லையில் அரசு ஒப்பந்ததாரர் வீடு-அலுவலகத்தில் வருமானவரி சோதனை 2-வது நாளாக நீடிப்பு
    X

    நெல்லையில் அரசு ஒப்பந்ததாரர் வீடு-அலுவலகத்தில் வருமானவரி சோதனை 2-வது நாளாக நீடிப்பு

    • சோதனையானது சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக இன்று காலையும் தொடர்ந்து வருகிறது.
    • சோதனையில் கிடைத்த சில ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அரசியல் கட்சியினர் மூலம் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக அரசு ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்கள் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்துள்ளதாகவும், அதனை அரசியல் கட்சியினருக்கு நன்கொடையாக வழங்க திட்டமிட்டிருப்பதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் வருவமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறையின் டெண்டர்களை எடுக்கும் அரசு ஒப்பந்ததார் ஆர்.எஸ்.முருகன் என்பவருக்கு சொந்தமான நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணத்தில் அவரது பண்ணை வீட்டில் நேற்று மதியம் வருமானவரித்துறை அதிகாரிகள் 6 பேர் குழுவினர் சோதனையை தொடங்கினர்.

    தொடர்ந்து பாளை பெருமாள்புரத்தில் உள்ள ஆர்.எஸ்.முருகனின் அலுவலகத்திலும், என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    இதில் என்.ஜி.ஓ. காலனி வீட்டில் சுமார் 2 மணி நேரம் மட்டுமே சோதனை நடத்தப்பட்ட நிலையில், விஜயநாராயணம் பண்ணை வீட்டில் இன்று காலை வரையிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சோதனையானது சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக இன்று காலையும் தொடர்ந்து வருகிறது. சோதனையில் கிடைத்த சில ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பெருமாள்புரம் அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு 11 மணி வரையிலும் சோதனை நடத்தப்பட்ட நிலையில் அதன் பின்னர் வருமான வரித்துறையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அதே நேரத்தில் அந்த அலுவலகத்தை வருமான வரித்துறையினர் தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளனர்.

    அங்கு அதிகாரி ஒருவர் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேறு யாரும் அந்த அலுவலகத்திற்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் தி.மு.க. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் தற்போது அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×