search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோலாகலமாக தொடங்கியது கொடைக்கானலில் 61-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி

    • கோடை விழாவை முன்னிட்டு கடந்த 2 நாட்களாகவே கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
    • 10 நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விதவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா இன்று காலை 8 மணிக்கு கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தொடங்கியது.

    மலர் கண்காட்சியில் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை சுற்றுலா, பண்பாட்டு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசகன் தொடங்கி வைத்தார். வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் அபூர்வா மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சுற்றுலா ஆணையர் சமயமூர்த்தி, தோட்டக்கலை இயக்குனர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    மாவட்ட கலெக்டர் பூங்கொடி, போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், டி.ஐ.ஜி. அபினவ்குமார், கொடைக்கானல் நகர் மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக லட்சக்கணக்கான மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. அதில் பூக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் காண்போரை கவரும் வகையில் இடம் பெற்றிருந்தது. இது தவிர மலர்களால் ஆன மயில், கரடி, விலங்குகளின் உருவம் ஆகியவையும் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

    இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கோடை விழாவை முன்னிட்டு கடந்த 2 நாட்களாகவே கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    10 நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விதவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. குறிப்பாக படகு அலங்கார போட்டி, சைக்கிள் போட்டி, குதிரை சவாரி, வாத்து பிடிக்கும் போட்டி, நாய் கண்காட்சி உள்ளிட்டவை நடைபெற உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

    இது தவிர இந்த ஆண்டு கோடை விழாவில் தினந்தோறும் கலையரங்கில் விதவிதமான கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கலை நிகழ்ச்சிகளை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களை பங்கேற்க வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு அவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்த நாள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


    தமிழர்களின் பாரம்பரிய கலை, பண்பாட்டு, வீரவிளையாட்டு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்கள் தங்கள் திறமையை கொண்டு வர அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே சாரல் மழை பெய்து வரும் நிலையில் அதனையும் பொருட்படுத்தாது சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    சாரல் மழையில் நனைந்து கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை காண பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால் கொடைக்கானலில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகளும், தொழிலாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கொடைக்கானலுக்கு வருபவர்கள் இ-பாஸ் பெற்று செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பெரும்பாலான சுற்றுலா பயணிகள் எவ்வித சிரமமுமின்றி இ-பாஸ் பெற்று வருகின்றனர். ஒருசிலர் இ-பாஸ் இல்லாமல் வந்தாலும் அவர்களுக்கு சோதனைச் சாவடிகளில் உடனுக்குடன் அவர்களது செல்போனிலேயே இ-பாஸ் பெறப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

    கோடை விழாவை முன்னிட்டு கொடைக்கானலில் அனைத்து சுற்றுலா இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    Next Story
    ×