search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீட்டு மனை வழங்க மறுப்பு: பண்டிகையை கலெக்டர் அலுவலகத்திலா கொண்டாட முடியும்? அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி
    X

    வீட்டு மனை வழங்க மறுப்பு: பண்டிகையை கலெக்டர் அலுவலகத்திலா கொண்டாட முடியும்? அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

    • விண்ணப்பத்தை பரிசீலித்த மாவட்ட கலெக்டர், மாற்று வீட்டு மனை பெற எனக்கு தகுதி உள்ளது என்று கூறி, எனக்கு மாற்று நிலம் வழங்க தாசில்தாருக்கு கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி உத்தரவிட்டார்.
    • வெளியூரில் இருக்கும் அவருக்கு, மாற்று வீட்டு மனை பெற தகுதியில்லை என்று கூறியிருந்தார்.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், திருவான்மீயூரைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ''எனக்கு சொந்த ஊர் நெய்வேலி அருகே உள்ள உய்யகொண்டரவி கிராமம் ஆகும். தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதால், சென்னையில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். என் தாயார், உடன்பிறந்தவர்கள் மற்றும் உறவினர்கள் எல்லாம் அந்த கிராமத்தில்தான் வசித்து வருகின்றனர். இதற்கிடையில், என்.எல்.சி., விரிவாக்கத்துக்காக எனக்கு சொந்தமான விவசாய நிலம், வீடு இருந்த நிலம் ஆகியவற்றை 2005 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் கையகப்படுத்தப்பட்டது. நிலத்தை கொடுப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு, மாற்று வீட்டு மனை வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது.

    இதற்காக சிறப்பு திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி, எனக்கு மாற்று வீட்டு மனை கேட்டு விண்ணப்பம் செய்தேன். ஆனால், எனக்கு வழங்காததால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி என் விண்ணப்பத்தை பரிசீலித்த மாவட்ட கலெக்டர், மாற்று வீட்டு மனை பெற எனக்கு தகுதி உள்ளது என்று கூறி, எனக்கு மாற்று நிலம் வழங்க தாசில்தாருக்கு கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி உத்தரவிட்டார். இதன்பின்னர், கடலூர் மாவட்ட கலெக்டராக பதவி ஏற்ற கலெக்டர், நான் உள்ளூரில் வசிக்காததால், மாற்று வீட்டு மனை பெற தகுதியில்லை என்று கூறி, வீட்டு மனை வழங்க மறுத்து கடந்த 2014-ம் ஆண்டு உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து, வீட்டு மனை வழங்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் பெயரில் தாக்கல் செய்த பதில் மனுவில், 'தேசிய மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்துதல் சட்டத்தின்படி, உள்ளூரில் வசிப்பவர்களுக்கு மட்டுமே மாற்று வீட்டு மனை வழங்கப்படும், மனுதாரருக்கு உள்ளூரில் நிரந்தர முகவரி இல்லை. வெளியூரில் இருக்கும் அவருக்கு, மாற்று வீட்டு மனை பெற தகுதியில்லை என்று கூறியிருந்தார்.

    மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் கே.சக்திவேல், ''மனுதாரர் சொந்த ஊரை விட்டு, வேலைக்காகத்தான் சென்னை வந்துள்ளார். அதற்காக அவருக்கு உரிமை இல்லை என்று கலெக்டர் கூறுவதை ஏற்க முடியாது'' என்று வாதிட்டார்.

    இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி பி.வேல்முருகன், ''சென்னையில் வேலைக்காக வந்து வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு போகக்கூடாதா? சொந்த ஊரில் உள்ள சொந்தங்கள் வீட்டுக்கு போக மாட்டார்களா? தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்று கொண்டாடாமல், கலெக்டர் அலுவலகத்திலா கொண்டாட முடியும்?'' என்று சரமாரியாக அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, 3 மாதங்களுக்குள் மனுதாரருக்கு மாற்று வீட்டுமனை வழங்க வேண்டும் என்று கடலூர் கலெக்டருக்கு உத்தரவிட்டார்.

    Next Story
    ×