search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதலமைச்சரின் அறிவுரையின் பேரில் நொச்சிக்குப்பம் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது- மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
    X

    முதலமைச்சரின் அறிவுரையின் பேரில் நொச்சிக்குப்பம் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது- மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

    • மீனவ சமுதாய அமைப்பினர் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறு முறையிட்டனர்.
    • மீனவர்களின் வாழ்வாதாரத்தை அரசு பாதுகாக்க வேண்டும் என்று அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார்கள்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள நொச்சிக்குப்பம் முதல் சீனிவாசபுரம் வரையிலான லூப் சாலையின் இருபுறமும் மீன் கடை இருந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு இருப்பதாக கருதி சென்னை உயர்நீதி மன்றம் தாமாகவே முன் வந்து வழக்கை எடுத்தது.

    இதைத்தொடர்ந்து அங்கிருந்த மீன் கடைகளை அகற்றுமாறு கூறி மாநகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாட்களாக அகற்றினார்கள். இதற்கு அப்பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சாலை மறியல் போராட்டமும் நடந்தது.

    மீனவ சமுதாய அமைப்பினர் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறு முறையிட்டனர். மீனவர்களுக்கு ஆதரவாக சட்டசபையில் இன்று எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆர்.பி.உதயகுமார் (அ.தி.மு.க.), ஏ.வ.வேலு (தி.மு.க.), ஜி.கே.மணி (பா.ம.க.), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), சிந்தனை செல்வன் (விடுதலை சிறுத்தைகள்), நாகை மாலி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு) உள்ளிட்ட பல்வேறு எம்.எல்.ஏ.க்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

    மீனவர்களின் வாழ்வாதாரத்தை அரசு பாதுகாக்க வேண்டும் என்று அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார்கள்.

    இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் இறுதியாக பதில் அளித்து பேசினார். அவர் பேசியதாவது:-

    நொச்சிகுப்பம் மீனவர்களின் வாழ்வாதாரம் எந்த நிலையிலும் பாதிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

    தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மீனவ மக்கள் அதிகமாக கடலை நம்பியே தொழில் செய்து வருகிறார்கள்.

    சென்னை வாசிகளுக்கும் பிரஷ்ஷான மீன் வேண்டும் என்றால் நொச்சிக்குப்பம் போகலாம் என்ற எண்ணம் உள்ளது.

    அங்கு மக்கள் போக்குவரத்துக்கு இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டும். அதே நேரத்தில் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்க கூடாது என்பத்றகாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

    நேற்று மீனவர் பிரதிநிதிகளுடன் பேசி தீர்வு காணப்பட்டதால் தான் நேற்று வரை போக்குவரத்தை தடை செய்து வைத்திருந்தவர்கள், இன்று காலை முதல் நொச்சிக்குப்பம் சாலையில் போக்குவரத்தை அவர்களே முறைப்படுத்தி தற்போது சீராக நடந்து கொண்டிருக்கிறது.

    அதையும் கடந்து முதலமைச்சரின் மிக தீவிரமான நடவடிக்கையால் மூத்த வழக்கறிஞர்களை இந்த வழக்கில் வழக்காட செய்து மீனவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும்.

    அவர்கள் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன்று காலை நீதிமன்றத்தில் வழக்கு வந்திருக்கிறது. வலுவான வாதங்களை முன் வைத்துள்ளது.

    மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் கிழக்கிலும் மேற்கிலும் கடை வைத்து கொள்ள மூத்த வழக்கறிஞர்கள் வாதத்தை பதிவு செய்திருக்கிறார்கள். எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் தங்கு தடையின்றி வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.போக்குவரத்திற்கு எந்த வித இடையூறும் இருக்காது எனவும் வாதத்தை முன் வைத்துள்ளனர்.

    சென்னை மாநகராட்சியின் ஆணையரும் உயர்நீதி மன்றத்தில் அதற்கான உத்தரவாதத்தையும் எழுதி தந்துள்ளார். போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் இரு பக்கமும் மீனவர்கள் வியாபாரம் செய்யவதை உறுதிப்படுத்துவோம் என மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதனால் வழக்கு 19.6.2023-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.எனவே இந்த பிரச்சினை காலையோடு முடிவுக்கு வந்துவிட்டது.

    இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

    Next Story
    ×