search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவில் தேர் விபத்தில் சிக்கிய பெண் பலி
    X

    புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவில் தேர் விபத்தில் சிக்கிய பெண் பலி

    • கோவில் பணியாளர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
    • தேர் விபத்து நடந்த கோவிலுக்கு வருகை தந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகர் பகுதியான திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ள திருக்கோகர்ணேஸ்வரர் உடனுறை பிரகதாம்பாள் கோவிலில் கடந்த 31-ந்தேதி ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடிக்க இழுத்தனர். நிலையத்தில் இருந்து நகர்ந்த ஒரு சில விநாடிகளில் தேர் சரிந்தது. இந்த விபத்தில் அரிமளத்தை சேர்ந்த ராஜகுமாரி (வயது 64) மற்றும் 2 பெண்கள் உள்பட 8 பக்தர்கள் காயம் அடைந்தனர்.

    காயம் அடைந்தவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.

    மேலும் தேர் விபத்து நடந்த கோவிலுக்கு வருகை தந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அதிகாரிகள் மற்றும் கோவில் பணியாளர்களிடம் விசாரணை நடத்தினார்.

    அத்துடன் தேர் விபத்து குறித்து விரிவாக விசாரணை நடத்தும் பொருட்டு ஒரு குழுவையும் அமைத்து ஆணை பிறப்பித்தார். இந்த சம்பவம் தொடர்பாக கோவில் பணியாளர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. விசாரணை முடிவில் விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜகுமாரி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தேர் விபத்தில் சிக்கிய அவர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் உயிரிழந்தது பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×