search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசியல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த விஜய் திட்டம்
    X

    அரசியல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த விஜய் திட்டம்

    • தேர்தல் முடிவுகளை தேசிய கட்சிகளும் மாநில கட்சிகளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
    • மாநாட்டில் கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்கிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து அடுத்த மாதம் 4-ந்தேதி தேர்தல் முடிவுகள் வர இருக்கின்றன.

    தேர்தல் முடிவுகளை தேசிய கட்சிகளும் மாநில கட்சிகளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை மையமாக கொண்டு தனது அரசியல் பணியை வேகப்படுத்த தொடங்கியுள்ளார்.

    கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கை 80 லட்சத்தை தாண்டிய நிலையில் 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் புதிதாக சேர்க்கும் நடவடிக்கையில் விஜய் ஆலோசனையின் பேரில் தொண்டர்களை பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் ஊக்கப்படுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். மதுரை அல்லது திருச்சியில் மாநாடு நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான ஏற்பாடு பணிகளில் நிர்வாகிகள் தீவிர மாக செயல்பட்டு வருகின்றனர். மாநாட்டில் கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்கிறார்.

    மேலும் கட்சி கொள்கைகள் அடங்கிய பிரசார பாடல்கள் வெளியிடப்பட உள்ளது. மாநாட்டில் மாற்றுக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கட்சியில் இணைய இருக்கின்றனர்.

    இதுபற்றி தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர் கூறும்போது, "விஜய் கட்சி தொடங்கியதில் இருந்தே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காக தி.மு.க., அ.தி.மு.க., பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் தொடர்பு கொண்டு வருகின்றனர்.

    தி.மு.க., அ.தி.மு.க.வில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் கட்சியில் இணைவதற்கு தயாராகி வருகின்றனர். முக்கியமாக ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள பல நிர்வாகிகள், முன்னாள் மேயர்கள், திரையுலக பிரபலங்கள் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

    தமிழகம் முழுவதும் இருந்து முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் தொடர்பு கொண்டு வருகின்றனர். அடுத்த மாதம் விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ந்தேதி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    புதிதாக கட்சியில் சேர இருப்பவர்கள் கட்சி தலைவர் விஜய் முன்னிலையில் இணைய இருக்கின்றனர். மாநாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இருந்தும் லட்சக்கணக்கானோர் விஜய் கட்சியில் உறுப்பினர்களாக சேர இருக்கின்றனர்.

    இதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. கட்சியில் சேருவோரின் பின்னணி, குறித்த அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு அதன் பின்னரே கட்சியில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குற்றப்பின்னணி இல்லாதவர்கள் கட்சியில் சேருவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் மற்றும் மாற்றுக் கட்சியை சேர்ந்த பலர் கட்சியில் இணைய இருப்பது முன்னணி அரசியல் கட்சிகளின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    Next Story
    ×