என் மலர்
தமிழ்நாடு

வேலூர், நெய்வேலியில் இருந்து சென்னைக்கு விமான சேவை- மத்திய மந்திரி

- இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் 4-வது பெரிய விமான நிலையமாக சென்னை உள்ளது.
- சென்னையின் 2-வது விமான நிலையம் பரந்தூரில் அமைய உள்ளது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு மலிவு விலை உணவகமான "உதான் யாத்ரீ கபே" உணவகத்தை மத்திய மந்திரி ராம் மோகன்நாயுடு இன்று தொடங்கி வைத்தார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் 4-வது பெரிய விமான நிலையமாக சென்னை உள்ளது. தமிழ்நாட்டில் கோவை விமான நிலையம் பயணிகள் அதிக அளவு பயன்படுத்தும் விமான நிலையமாக இருக்கிறது. இதனை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். சென்னையின் 2-வது விமான நிலையம் பரந்தூரில் அமைய உள்ளது.
இதற்கான முதற்கட்ட பணியாக இடங்கள் தேர்வு செய்வது முடிவடைந்து உள்ளன. 2-ம் கட்ட பணிகள் தொடர்பாக டெல்லியில் தனி ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அடுத்த 2 வாரத்தில் இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். பரந்தூர் விமான நிலையத்திற்கு இடத்தை தேர்வு செய்து முடிவு செய்தது மாநில அரசுதான். மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால், அது குறித்து மாநில அரசுதான் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் உதான் திட்டத்தில் நெய்வேலி, சேலம், வேலூர், ஆகிய இடங்களில் இருந்து விமான சேவைகள் இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளன. இதில் சேலம்-சென்னை இடையே ஏற்கனவே விமான சேவைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அடுத்ததாக வேலூர்-சென்னை இடையே விமான சேவைகள் தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் நடக்கிறது. விரைவில் வேலூர்-சென்னை இடையே உதான் திட்டத்தில் விமான சேவைகள் செயல்பாட்டிற்கு வரும். இதைப்போல் நெய்வேலியில் இருந்தும் விமான சேவைகள் தொடங்க இருக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.