என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தயாரிப்பாளர் வீட்டில் கஸ்தூரி சிக்கியது எப்படி?- வெளியான பரபரப்பு தகவல்
- கஸ்தூரி சமூக வலை தளங்களில் பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டு வருபவர் ஆவார்.
- மதுரையில் போடப்பட்டுள்ள வழக்கிலும் கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்தனர்.
சென்னை எழும்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கு ஆதரவாக கடந்த 3-ந்தேதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் பெண்கள் பற்றி அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து தெலுங்கு அமைப்புகள் சார்பில் கஸ்தூரி மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து எழும்பூர் போலீசார் போயஸ் கார்டனில் உள்ள கஸ்தூரியின் வீட்டுக்கு சம்மன் அளிப்பதற்காக சென்றனர். ஆனால் கஸ்தூரி வீட்டை பூட்டி விட்டு தலைமறைவானார்.
இதற்கிடையே மதுரையிலும் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் கஸ்தூரி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடியானது.
தெலுங்கு பேசும் பெண்கள் பற்றி கஸ்தூரி பேசிய பேச்சை நீதிபதியும் கண்டித்து இருந்தார்.
முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதையடுத்து நடிகை கஸ்தூரியை பிடிப்பதற்காக சென்னை மற்றும் மதுரை போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இதில் கஸ்தூரி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சினிமா தயாரிப்பாளரான அரிகரன் என்பவரது வீட்டில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து எழும்பூர் தனிப்படை போலீசார் கஸ்தூரி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். பப்பலக்குண்டா என்ற இடத்தில் தயாரிப்பாளரின் பங்களா வீட்டில் பதுங்கி இருந்த கஸ்தூரியை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அங்கு வைத்தே அவரிடம் அதிரடி விசாரணை நடத்தினர்.
பின்னர் அவரை சென்னைக்கு காரில் அழைத்து வருகிறார்கள். சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வைத்து கஸ்தூரியிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட உள்ளனர். தெலுங்கு பெண்கள் பற்றி அவதூறான கருத்துக்களை கூறியது தொடர்பாக கஸ்தூரியிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அவர் அளிக்கும் தகவல்களை போலீசார் வாக்கு மூலமாக பதிவு செய்கிறார்கள்
இதைத் தொடர்ந்து கஸ்தூரி எழும்பூர் 5-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று மாலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் நீதிபதியின் வீட்டில் கஸ்தூரியை போலீசார் ஆஜர் படுத்துகிறார்கள். அதன் பிறகு அவர் புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்.
மதுரையில் போடப்பட்டுள்ள வழக்கிலும் கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்தனர். சென்னை போலீசாரின் நடவடிக்கை முடிந்ததும் மதுரை போலீசார் தாங்கள் பதிவு செய்து உள்ள வழக்கில் கஸ்தூரியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் கஸ்தூரி சமூக வலை தளங்களில் பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டு வருபவர் ஆவார். இதற்கு முன்பு பல்வேறு விவகாரங்களிலும் அவர் தலையிட்டு கருத்துக்களை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
அந்த வகையில்தான் தெலுங்கு பெண்கள் பற்றி கஸ்தூரி பேசிய பேச்சுக்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அவர் மீது கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
எழும்பூர் போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாகவே நடிகை கஸ்தூரியை தற்போது இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர். கஸ்தூரி மீது கோயம்பேடு போலீஸ் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஆகியவற்றிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார்கள் மீதும் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தயாரிப்பாளர் அரிகரன் வீட்டில் கஸ்தூரி சிக்கியது எப்படி? என்பது பற்றி பரபரப்பான தகவல்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
தமிழிலில் 'அமைதிப்படை' உள்பட பல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்ற கஸ்தூரி தற்போது பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாமலேயே இருந்து வருகிறார். தெலுங்கில் அவரது நடிப்பில் வெளியான "அன்னமயா" திரைப்படம் மிகவும் பிரபலமான படமாகும். இது தவிர மேலும் பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள கஸ்தூரிக்கு சினிமா தயாரிப்பாளரான அரிகரனுடன் நட்பு ஏற்பட்டு உள்ளது.
இதன் அடிப்படையிலேயே கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சென்னையில் இருந்து தப்பிச் சென்ற கஸ்தூரி ஐதராபாத் அருகே உள்ள பாப்புல குண்டா பகுதியில் தயாரிப்பாளர் அரிகரனின் பங்களா வீட்டுக்கு சென்று அங்கு கஸ்தூரி பதுங்கி இருந்து உள்ளார்.
மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனுவை போட்டிருந்த கஸ்தூரி முன் ஜாமீன் கிடைத்த பிறகு வெளியில் வரலாம் என்று எண்ணியிருந்தார். ஆனால் முன் ஜாமீன் மனு தள்ளுபடியாகி போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதால் அடுத்த கட்டமாக என்ன செய்வது? என்பது பற்றி அவர் வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில்தான் கஸ்தூரியை எழும்பூர் போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்துள்ளனர்.
கஸ்தூரி தலைமறைவானவுடன் சினிமா வட்டாரத்தில் அவரது நெருங்கிய நண்பர்கள் யார்-யார்? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்திய போலீசார் அவர்களது பட்டியலையும் சேகரித்தனர்.
இதன் பிறகே தெலுங்கு சினிமா தயாரிப்பாளரான அரிகரனின் பங்களாவில் கஸ்தூரி இருப்பதை கண்டு பிடித்த போலீசார் ஐதராபாத்துக்கு விரைந்து சென்று கைது நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்