search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சீமானின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் விசாரணை
    X

    சீமானின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் விசாரணை

    • விஜயலட்சுமி நேற்று வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி சீமானுக்கு எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்துள்ளார்.
    • ஆவணங்களை சீமானுக்கு எதிராக முக்கிய சாட்சியங்களாக சேர்ப்பதற்கு போலீசார் முடிவு செய்து குற்றப்பத்திரிகையை தயாரித்து வருகிறார்கள்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் சீமான் மீது சினிமா நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் அவர் மீது கடந்த 2011-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் உறவில் ஈடுபட்டதாக விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில், சீமான் மீது அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக விஜயலட்சுமி 2012-ம் ஆண்டு தெரிவித்தார். இருப்பினும் வழக்கு விசாரணையிலேயே இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தன் மீதான கற்பழிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சீமான் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடித்து 12 வாரத்துக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

    பாதிப்புக்குள்ளாகி இருக்கும் பெண் 7 முறை கருக்கலைப்பு செய்து இருப்பதாக குற்றம் சாட்டியிருப்பதாலும் பாலியல் வழக்கு என்பதாலும் இதனை போலீசார் முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து வளசரவாக்கம் போலீசார் சீமான் மீதான விசாரணையை விரைந்து முடித்து 12 வாரத்துக்குள் குற்ற பத்திரிகையை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதற்காக நடிகை விஜயலட்சுமி நேற்று வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி சீமானுக்கு எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்துள்ளார். இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் மருத்துவ ஆதாரங்களையும் அவர் போலீஸ் நிலையத்தில் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த ஆவணங்களை சீமானுக்கு எதிராக முக்கிய சாட்சியங்களாக சேர்ப்பதற்கு போலீசார் முடிவு செய்து குற்றப்பத்திரிகையை தயாரித்து வருகிறார்கள். ஐகோர்ட் அறிவுறுத்தியபடி விரைவில் கோர்ட்டில் அதனை தாக்கல் செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தன் மீதான கற்பழிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீமான் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனு மீது அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்த வாய்ப்பு இருப்பதாக நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விசாரணையின் போது சீமான் மீதான கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிடுமா? இல்லை ஐகோர்ட் உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த சொல்லுமா? என்பது தெரியவில்லை.

    திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவு கொள்வது கற்பழிப்பு குற்றமாகவே கருதப்படும் என்று சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே ஒரு உத்தரவில் தெரிவித்துள்ளது. இது போன்ற சூழலில் தான் சீமானின் மனு மீது சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதனால் சீமான் மீதான வழக்கில் சுப்ரீம் கோர்ட் எந்த மாதிரியான உத்தரவை பிறப்பிக்க போகிறது என்பது நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் அரங்கிலும் இந்த விவகாரம் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

    Next Story
    ×