search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ரணில் விக்ரமசிங்கே
    X
    ரணில் விக்ரமசிங்கே

    புதிய நிதி மந்திரியாக பதவியேற்ற ரணில் விக்ரம சிங்கே: பொருளாதார நெருக்கடி சவால்களை சமாளிப்பாரா?

    கிட்டத்தட்ட திவாலான நிலையில் உள்ள இலங்கையின் பொருளாதாரத்தை ரணில் விக்ரம சிங்கே எப்படி தூக்கி நிறுத்தப்போகிறார் என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.
    கொழும்பு:

    அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் தவித்துக்கொண்டிருக்கிறது. அன்னியச்செலாவணி கரைந்து, இறக்குமதி பாதித்து, அத்தியாவசிய பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் கொதித்தெழுந்த மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக்கோரி தொடர் போராட்டத்தில் குதித்தனர்.

    இதில் வன்முறை தாண்டவமாடியது. அதைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்கே (வயது 73) கடந்த 12-ந் தேதி நியமிக்கப்பட்டு பதவி ஏற்றார். புதிய மந்திரிகள் நியமிக்கப்பட்டு பதவி ஏற்றாலும், நிதி மந்திரி நியமிக்கப்படாத நிலை நீடித்தது. இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரம சிங்கேயை நாட்டின் நிதி மந்திரியாக அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று நியமித்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார்.

    கிட்டத்தட்ட திவாலான நிலையில் உள்ள இலங்கையின் பொருளாதாரத்தை ரணில் விக்ரம சிங்கே எப்படி தூக்கி நிறுத்தப்போகிறார் என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது. ஏறத்தாழ 7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.52,500 கோடி) திருப்பி செலுத்த வேண்டிய கடன் தவணையை இலங்கை நிறுத்தி வைத்துள்ளது. நாட்டின் மொத்த கடன் 51 பில்லியன் டாலராக (சுமார் ரூ.3 லட்சத்து 82 ஆயிரத்து 500 கோடி) உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டு வர 5 பில்லியன் டாலர் (ரூ.37,500 கோடி) நிதி தேவைப்படுகிறது.

    இலங்கை போதுமான பெரும்பொருளாதார கொள்கை கட்டமைப்பை ஏற்படுத்தாதவரையில், புதிய நிதி உதவியோ, கடன்களோ வழங்க வாய்ப்பு இல்லை என்று உலக வங்கி கைவிரித்துவிட்டது. இலங்கையில் நிலவுகிற எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கு, எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடம் 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,250 கோடி) கடன் கோருவது என மந்திரிசபை கூட்டத்தில் கடந்த திங்கட்கிழமை முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி இந்தியாவிடம் கடன் கேட்கப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பிரச்சினைகளை நிதி மந்திரி பதவியை ஏற்றுள்ள பிரதமர் ரணில் விக்ரம சிங்கே சமாளிப்பது மிகப்பெரிய சவால்களாக இருக்கும். இதற்கிடையே அதிபருக்கான கட்டுப்பாடற்ற அதிகாரங்களை குறைத்து, நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் 21-வது அரசியல் சாசன திருத்த வரைவு மசோதா, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கிற அரசியல் கட்சி தலைவர்களுக்கு 27-ந் தேதி வழங்கப்படும் என அதை தயாரித்துள்ள நீதித்துறை மந்திரி விஜேதாச ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

    இதையும் படிக்கலாம்...ஜம்மு காஷ்மீரில் கொடூரம் - வீடு புகுந்து டிவி நடிகையை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்
    Next Story
    ×