என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சீனா
- அமெரிக்காவை தவிர, சீனாவிலும் ஜெர்மனியிலும் டெஸ்லா உற்பத்தி செய்து வருகிறது
- தொடக்கத்தில் பிஒய்டி, பேட்டரி தயாரிப்பில் மட்டுமே ஈடுபட்டு வந்தது
கடந்த 2003ல், அமெரிக்காவை சேர்ந்த உலகின் நம்பர் 1 கோடீசுவரரான எலான் மஸ்க் (Elon Musk), தொடங்கிய பேட்டரி கார் நிறுவனம், டெஸ்லா (Tesla).
அமெரிக்காவில் பெருமளவு உற்பத்தி ஆனாலும், பெருகி வரும் வாடிக்கையாளர்களின் தேவைக்காக, இந்நிறுவனம் கார் உற்பத்தியை சீனாவிலும், ஜெர்மனியிலும் நடத்தி வருகிறது.
2023 வருட மூன்றாம் காலாண்டில் மட்டும் 4,30,488 மின்னணு கார்களை உற்பத்தி செய்தது.
கார்கள் விற்பனை மூலம் 2022-ஆம் வருட வருமானமாக டெஸ்லா, $81,462 பில்லியன் அமெரிக்க டாலர் ஈட்டியது.
இந்நிலையில், சீனாவின் ஷென்சன் (Shenzen) பகுதியை சேர்ந்த மற்றொரு முன்னணி மின்னணு கார் தயாரிப்பு நிறுவனமான பிஒய்டி (BYD), உலகளவில் முதல் இடத்தை பிடிக்க உள்ளது.
பிஒய்டி, 2023-ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் 5,26,000 கார்களை தயாரித்துள்ளது. 2023 முழு ஆண்டில் 3 மில்லியன் கார்களுக்கு மேல் உற்பத்தி செய்துள்ளது.
1995ல் சீனாவின் ஷென்சன் பகுதியில் வேங் சுவான் ஃபு (Wang Chuanfu) என்பவர் தொடங்கிய பிஒய்டி, முதலில் ஸ்மார்ட்போன், மடிக்கணினி உட்பட பல மின்னணு சாதனங்களுக்கு பேட்டரி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தது. விலை உயர்ந்த ஜப்பானிய பேட்டரிகளை விற்பனையில் முந்திய பிஒய்டி பிறகு கார் தயாரிப்பிலும் கால் பதித்தது.
ஒரு மின்னணு கார் அல்லது இரு சக்கர வாகனத்திற்கு முக்கிய பாகமாக கருதப்படுவது அதனை இயக்கும் பேட்டரிதான். பேட்டரி தயாரிக்கும் தொழிலில் மிகுந்த அனுபவம் உள்ள நிறுவனம் என்பதாலும், தங்கள் பேட்டரியை வைத்தே தங்கள் கார்களை தயாரிப்பதால் பெருமளவு செலவினங்கள் குறைவதால், விலை குறைவான கார்களை பிஒய்டி-யால் தயாரிக்க முடிகிறது. குறைந்த செலவில் லாபம் ஈட்டி, அதிவேகமாக கார்களை பிஒய்டி தயாரிக்க இது முக்கிய காரணம் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பல வருடங்களாக பேட்டரி கார் தயாரிப்பில் முதல் இடத்தை தக்க வைத்து கொண்டுள்ள டெஸ்லா, போட்டியை எவ்வாறு சமாளிக்க போகிறது என பொருளாதார நிபுணர்கள் கவனித்து வருகின்றனர்.
- இரு நாட்டு மக்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என 2023ல் தெரிவித்திருந்தார்
- மக்களின் உணர்வை பொறுத்தே சீன உறவு நிர்ணயிக்கப்படும் என ட்சாய் இங்-வென் தெரிவித்தார்
சுமார் 23 மில்லியன் மக்கள் தொகை கொண்ட தீவு நாடான தைவான், சுயாட்சி பெற்ற தனி நாடாக தன்னை அறிவித்து கொண்டாலும், அதை பல வருடங்களாக ஏற்று கொள்ளாமல் சீனா அந்நாட்டின் மீது உரிமை கொண்டாடி வருகிறது.
2024 புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, சீன அதிபர் ஜி ஜின்பிங், தனது நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார். ஜி ஜின்பிங், தனது உரையில், "தைவான், சீனாவுடன் இணைக்கப்படும்" என திட்டவட்டமாக தெரிவித்தார்.
கடந்த வருடம் ஜி ஜின்பிங் ஆற்றிய புத்தாண்டு உரையில், "தைவான் தீபகற்பத்தின் இரு பக்கமும் உள்ள மக்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்" என அறிவித்திருந்தார்.
ஆனால், இவ்வருடம் திட்டவட்டமாக இணைப்பை குறித்து அவர் பேசியிருப்பது புதிய சச்சரவிற்கு வழிவகுக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கடந்த 8 வருடங்களாக தைவான் நாட்டை ஆண்டு வரும் ஜனநாயக வளர்ச்சி கட்சியை (Democratic Progressive Party) சேர்ந்த அதிபர் ட்சாய் இங்-வென் (Tsai Ing-wen) தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில், "மக்களின் உணர்வை பொறுத்தே சீனாவுடனான உறவு நிர்ணயிக்கப்படும்" என அறிவித்தார். தைவானின் மற்றொரு முக்கிய கட்சியான குவோமிண்டாங் கட்சி (KMT) சீனாவுடன் நட்பு ரீதியான உறவை மேற்கொள்ள வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ராணுவ நடவடிக்கை மூலம் தைவானை தன் நாட்டுடன் இணைக்க சீனா முயலுமா என்பதும் அவ்வாறு நடந்தால் அமெரிக்கா தலையிடுமா என்பதும் வரும் மாதங்களில் தெரிய வரும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
- ஆஸ்திரேலியாவில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.
- புத்தாண்டடை முன்னிட்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் புத்தாண்டு உரை.
உலகிலேயே முதலில் பசிபிக் கடலில் உள்ள கிறிஸ்துமஸ் தீவு என்ற கிரிபேட்டியில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.
கிரிபேட்டியை தொடர்ந்து முதலாவது நாடாக நியூசிலாந்தில் 2024வது ஆண்டில் ஆங்கில புத்தாண்டு இந்திய நேரப்படி சரியாக 4.30 மணிக்கு பிறந்தது.
கிரிபேட்டி, நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.
வாண வேடிக்கையுடன் ஆஸ்திரேலிய மக்கள் புத்தாண்டை வரவேற்று, பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும், ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்.
இந்நிலையில், சீனா, வட மற்றும தென் கொரியாவில் இந்திய நேரப்படி சரியாக 8.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.
புத்தாண்டடை முன்னிட்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் புத்தாண்டு உரை நிகழ்த்தினார்.
ஜி ஜின் பிங் தனது உரையில், " பிரதமர் தைவானுடன் மீண்டும் ஒன்றிணைவது தவிர்க்க முடியாதது" என்று குறிப்பிட்டுள்ளார்.
- கடந்த 27-ந்தேதி விண்வெளி தொழில்நுட்ப சோதனைகளை மேற்கொள்ள செயற்கைக்கோள்களை லாங் மார்ச்-11 மூலம் ஏவியது.
- ராக்கெட்டின் பூஸ்டர்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து வெடித்து சிதறியது.
விண்வெளி தொழில்நுட்பத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இணையாக சீனாவும் கடும் போட்டியிட்டு வருகிறது. அடிக்கடி செயற்கைக்கோள்களை ஏவி சோதனை நடத்தி வருகிறது.
அந்த வகையில் இன்று செயற்கைக்கோள் இணைய தொழில்நுட்பம் தொடர்பாக சோதனை செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. இது வெற்றிகரமான நிர்ணயிக்க சுற்றுவட்ட பாதையை அடைந்ததாக சீனா தெரிவித்துள்ளது. இந்த செயற்கைக்கோள் லாங் மார்ச்-2சி கேரியர் ராக்கெட் மூலம் இன்று காலை உள்ளூர் நேரப்படி செலுத்தப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் இணைய தொழில்நுட்பம் சோதனை வெற்றி பெற்றால், செயற்கைக்கொள் மூலம் தகவல் தொடர்புக்கான இணையதள வசதியை வழங்க முடியும். தற்போது எலான் மஸ்க் நிறுவனம செயற்கைக்கோள் மூலம் இணையதளம் வழங்கும் வசதியை கொண்டுள்ளது.
கடந்த 27-ந்தேதி விண்வெளி தொழில்நுட்ப சோதனைகளை மேற்கொள்ள செயற்கைக்கோள்களை லாங் மார்ச்-11 மூலம் ஏவியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் திசைமாறி விண்ணில் இருந்து பூமியை நோக்கி வந்தது. ராக்கெட்டின் பூஸ்டர்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து வெடித்து சிதறியது.
- விண்ணில் சீறிபாய்ந்து சென்ற லாங் மார்ச்-11 கேரியர் ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
- அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து வெடித்து சிதறியது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-11 கேரியர் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
விண்வெளி தொழில்நுட்ப சோதனைகளை மேற்கொள்ள செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டன. லாங் மார்ச்-11 ராக்கெட் 20.8 மீட்டர் நீளமும், 2 மீட்டர் விட்டமும், 58 மெட்ரிக் டன் எடையும் கொண்டது.
இது குறைந்த புவி சுற்றுப்பாதை அல்லது சூரிய-ஒத்திசைவு சுற்றுப் பாதைக்கு செயற்கைக் கோள்களை கொண்டு செல்லும் திறன் கொண்டது.
விண்ணில் சீறிபாய்ந்து சென்ற லாங் மார்ச்-11 கேரியர் ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. ராக்கெட் திசை மாறி விண்ணில் இருந்து பூமியை நோக்கி வந்தது. ராக்கெட்டின் பூஸ்டர்கள், அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து வெடித்து சிதறியது. இதனால் அங்கு தீ பிழம்பு ஏற்பட்டது. இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- விவோ மீது 62 ஆயிரம் கோடி சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு பதிவாகி உள்ளது
- தூதரக வழி உதவிகள் கிடைக்க நாங்கள் துணை நிற்போம் என சீனா தெரிவித்தது
இந்தியாவில் செயல்படும் சீன நிறுவனங்கள் நிதி முறைகேட்டில் ஈடுபடுவதாக எழுந்த புகாரில் அவற்றை சில ஆண்டுகளாக இந்தியா கண்காணித்து வருகிறது.
இந்தியாவில் மொபைல் போன் விற்பனையில் முன்னணியில் உள்ள பிராண்டுகளில் ஒன்று, விவோ (Vivo). இந்நிறுவனம், சீனாவை மையமாக கொண்டு இயங்குகிறது.
நேற்று முன் தினம், விவோ இந்தியாவின் அதிகாரிகளில் சீனாவை சேர்ந்த தற்காலிக தலைமை செயல் அதிகாரி ஹாங் சுகுவான் (Hong Xuquan), தலைமை நிதி அதிகாரி ஹரிந்தர் தஹியா மற்றும் ஆலோசகர் ஹேமந்த் முஞ்சால் ஆகிய மூவரை பண மோசடி தடுப்பு சட்டத்தில் (PMLA) அமலாக்க துறை கைது செய்தது.
வரி ஏய்ப்பு செய்யும் நோக்கில் இந்தியாவிலிருந்து ரூ. 62,476 கோடி சட்டவிரோதமாக சீனாவிற்கு விவோ பரிமாற்றம் செய்ததாக கூறப்படும் இவ்வழக்கில் முன்னரே 4 பேர் கைது செய்யப்பட்டது குறிப்படத்தக்கது. இந்திய பொருளாதார இறையாண்மையை குலைக்கும் வகையில் சட்டவிரோதமாக லாபம் ஈட்டியதாக இவர்கள் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் தனது நாட்டு நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு இந்தியாவில் தூதரக வழி பாதுகாப்பை வழங்க போவதாக சீனா தெரிவித்துள்ளது.
மேலும், இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் (Mao Ning), "நாங்கள் நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம். சீன நிறுவனங்களின் சட்டபூர்வமான உரிமைகளையும் நலனையும் உறுதிப்படுத்த சீனா ஆதரவளிக்கும். ஆனால், ஒருதலை பட்சமாக சீன நிறுவனங்களின் மீது மட்டும் நடவடிக்கைகள் எடுக்கும் போக்கை இந்தியா கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என தெரிவித்தார்.
- 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டடங்கள் இடிந்து சேதம் அடைந்தன.
- 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.
வடமேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 111 பேர் உயிரிழந்துள்ளனர். ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 6.2 ஆக பதிவாகியுள்ளது. கான்சு மாகாணத்தில் 100 பேர் உயிரிழந்ததாகவும், கிங்காய் மாகாணத்தில் 11 பேரும் உயிரிழந்ததாக சீனாவின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கான்சு மாகாணத்தில் 96 பேரும், கிங்காய் மாகாணத்தில் 124 பேரும் காயம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு கட்டமைப்புகள் சேதமடைந்தன.
இந்த நிலநடுக்கம் கான்சு மாகாணத்தின் ஜிஷிஷான் கவுன்ட்டியில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் கிங்காய் மாகாணத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது. இதனால் கிங்காய் மாகாணமும் பாதிக்கப்பட்டுள்ளது.
- 500க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
- விபத்தில் உயிரிழப்புகள் இல்லை என்றாலும் ரெயிலில் பயணித்தவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் சுரங்கப்பாதையில் நின்று கொண்டிருந்த மெட்ரோ ரெயில் மீது மற்றொரு ரெயில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 102 பயணிகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும், 500க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
ரெயில் விபத்து தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், தண்டவாளத்தில் பனி படர்ந்திருந்ததால் ரெயில் பாதியில் நிறுத்தப்பட்டது. அப்போது, அதே வழியில் வந்த மற்றொரு ரெயில், பிரேக் பிடித்தும் நிற்காமல் சறுக்கிக் கொண்டே சென்று, நின்று கொண்டிருந்த ரெயில் மீது மோதியது தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழப்புகள் இல்லை என்றாலும் ரெயிலில் பயணித்தவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
- வலது கண்ணில் இருந்து 40க்கும் மேற்பட்ட புழுக்களையும் இடது கண்ணில் இருந்து 10க்கும் மேற்பட்ட புழுக்கள் அகற்றம்.
- ஈ கடித்தால் பரவும் ஃபிலாரியோடியா வகையைச் சேர்ந்த வட்டப்புழுக்கள்.
சீனாவில் மிரர் என்ற பெண்ணின் கண்களில் இருந்து சுமார் 60 உயிருள்ள புழுக்களை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆனால், இது வினோதமான அறுவை சிகிச்சை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கண்களில் அடிக்கடி அரிப்பு ஏற்பட்டுள்ளது. பிறகு, கூச்ச உணர்வைப் போக்க அவர் கண்களைத் தேய்த்தபோது கண்ணில் இருந்து ஒரு ஒட்டுண்ணிப் புழு வெளியே வந்து விழுந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சிடையந்த அந்த பெண் பயந்துபோய் உடனடியாக சீனாவின் குன்மிங்கில் உள்ள மருத்துவமனையை அணுகியுள்ளார்.
ஆனால், அந்த பெண்ணை சோதனை செய்த மருத்துவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. பெண்ணின் கண்களை சோதனை செய்தபோது, இரு கண்களிலும் கருவிழியில் உயிருள்ள புழுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில், அவரது வலது கண்ணில் இருந்து 40க்கும் மேற்பட்ட புழுக்களையும் இடது கண்ணில் இருந்து 10க்கும் மேற்பட்ட புழுக்களையும் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினர். மொத்தத்தில், மருத்துவர்கள் அந்த பெண்ணின் கண்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட ஒட்டுண்ணிகளை அகற்றியதாக பெண் மிரர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக ஈ கடித்தால் பரவும் ஃபிலாரியோடியா வகையைச் சேர்ந்த வட்டப்புழுக்களால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் நம்புகிறார்கள்.
இருப்பினும், நாய்கள் மற்றும் பூனைகளிடமிருந்து புழுக்களை தொற்றியிருக்க வாய்ப்புள்ளதாக அந்த பெண் கருதுகிறார். அவற்றின் உடலில் தொற்று லார்வாக்கள் இருக்க வாய்ப்புள்ளது. விலங்குகளைத் தொடுவதும், கண்களைத் தேய்ப்பதும் தொற்றுக்கு வழிவகுத்திருக்கலாம் என்று மிரர் கூறினார்.
எஞ்சியிருக்கும் லார்வாக்களின் சாத்தியக்கூறுகளை கண்காணிக்க அடிக்கடி பரிசோதனைக்கு உட்படுத்தும்படி மருத்துவர்கள் அந்தப் பெண்ணை வலியுறுத்தியுள்ளனர்.
- இலங்கை உள்பட சில நாடுகள் விசா இல்லாமல் சுற்றுலா பயணிகள் வரலாம் என அறிவித்துள்ளது.
- 5 ஐரோப்பிய நாடுகள், மலேசியாவைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் நுழைய சீனா அனுமதி அளித்தது.
பீஜிங்:
சீனாவில் இருந்து 2019-ம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் அடுத்த சில ஆண்டுகள் உலக நாடுகளையும் அவற்றின் பொருளாதாரத்தையும் ஆட்டம் காண வைத்தது. இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் சரிவை சந்தித்தது.
இதற்கிடையே சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளைக் கவரவும் சீனா பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.
இந்நிலையில் வரும் டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாட்டு மக்கள் விசா இல்லாமல் சீனாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இலங்கை உள்பட சில நாடுகள் விசா இல்லாமல் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வரலாம் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷின்சென் நகரில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
ஷின்சென்:
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷின்சென் நகரில் நடந்து வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஜோடி இந்தோனேசிய ஜோடியை எதிர்கொண்டது.
இதில் சாத்விக்-சிராக் ஜோடி 21-15, 21-16 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதியில் இந்திய ஜோடி சீன ஜோடியை எதிர்கொள்கிறது.
- கோவிட்-19 பெருந்தொற்றால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்
- உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் விளக்கம் கேட்டது
கடந்த 2019 டிசம்பர் மாதம், சீனாவின் வூஹான் (Wuhan) மாகாணத்தில் தோன்றியதாக சொல்லப்படும் கொரோனா (Corona) எனும் வைரஸ் வகை நுண்கிருமியால், நுரையீரல் தொற்று நோய் ஏற்பட்டு, மக்கள் உயிரிழந்தனர். 2020 மார்ச் மாதம் இந்த பெருந்தொற்று இந்தியாவிற்கும் பரவியது.
கோவிட்-19 பெருந்தொற்றை தடுக்கும் விதமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகள், பல மாதங்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டிருந்தன. இந்த பெருந்தொற்றால் இந்தியா உட்பட பல உலக நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நோய் பரவலை தடுக்க, உயிரிழந்தவர்களின் உடலை கூட சுகாதார துறையினர், உறவினர்களிடம் காட்ட மறுத்த சோகம் நிலவியது.
மேலும், ஊரடங்கால் அலுவலகங்களும், தொழிற்சாலைகளும் பல மாதங்கள் மூடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து, சீனாவின் வடக்கு பகுதியில் குழந்தைகளுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட நுரையீரல் நோய்க்கான அறிகுறிகள் தோன்றி, பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்தன. இச்செய்தி உலக நாடுகளை கவலை கொள்ள செய்தது.
உலக சுகாதார அமைப்பு (World Health Organization), இது குறித்து சீனாவிடம் விளக்கம் கேட்டிருந்தது.
சீனாவின் பதில் குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் அந்த அமைப்பு தெரிவித்திருப்பதாவது:
புதிய நோய் தொற்று கிருமி எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் புதிய நோய்க்கான அறிகுறிகள் இதுவரை நோயாளிகளிடம் காணப்படவில்லை என்றும் தற்போது அதிகரித்துள்ள சுவாச கோளாறுகளுக்கு காரணம், மருத்துவ துறையினர் முன்னரே அறிந்துள்ள நோய் கிருமிகளால் ஏற்படும் வழக்கமான நிமோனியா தாக்குதல்தான் என சீனா பதிலளித்துள்ளது. மேலும், மருத்துவமனைகளின் கொள்ளளவிற்கு உட்பட்ட அளவில்தான் நோயாளிகளின் எண்ணிக்கை உள்ளதாகவும், நோயாளிகளின் எண்ணிக்கையில் ஏதும் அபாயகரமான அதிகரிப்பு இல்லை என்றும் சீனா திட்டவட்டமாக தெரிவித்தது.
இவ்வாறு உலக சுகாதார அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
இதையடுத்து, கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தின் கட்டுப்பாடுகளை மீண்டும் சீன மக்கள் கடைபிடிக்க அந்நாட்டை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதல் நடந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த வைரஸ் தோன்றிய காரணங்கள் குறித்து கண்டறிய சீனா சரிவர ஒத்துழைக்கவில்லை என பல நாடுகள் குற்றஞ்சாட்டி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்