search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    தொடர்ந்து தீவிர தாக்குதல்: இஸ்ரேல்-ஹமாஸ் போர் 100-வது நாளை தாண்டியது
    X

    தொடர்ந்து தீவிர தாக்குதல்: இஸ்ரேல்-ஹமாஸ் போர் 100-வது நாளை தாண்டியது

    • போரில், காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 24 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
    • போர் தாக்குதலில் வடக்கு காசா முழுவதும் நிர்மூலமாகிவிட்டது.

    காசா:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி தாக்குதல் நடத்தினர். இதை யடுத்து போர் பிரகடனத்தை அறிவித்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் நிர்வகித்து வரும் காசா முனை பகுதி மீது தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஏவுகணை, குண்டுகள் தொடர்ந்து வீசப்படு கின்றன. மேலும் தரை வழிதாக்குதல் நடந்து வருகிறது. இந்த போரில், காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 24 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள், பெண்கள் ஆவார்கள்.

    போரை உடனே நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேலுக்கு ஐ.நா. சபை மற்றும் பல்வேறு நாடுகள் வேண்டுகோள் விடுத்தன. ஆனால் அதை ஏற்க மறுத்துள்ள இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும் என்று தெரிவித்தது.

    இந்நிலையில் காசா மீது இஸ்ரேல் தொடங்கிய போர் 100-வது நாளை தாண்டி உள்ளது. இந்த போர் தாக்குதலில் வடக்கு காசா முழுவதும் நிர்மூலமாகிவிட்டது. அந்த பகுதி, இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது மத்திய, தெற்கு காசாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது.

    இதனால் காசாவில் மக்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்காமல் அவதியடைந்து உள்ளனர்.

    காசாவுக்குள் நிவாரண பொருட்கள் செல்ல அனுமதிக்காவிட்டால் அங்கு கடுமையான பஞ்சம் ஏற்படும் என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறும்போது, "எகிப்துக்கும் காசாவுக்கும் இடையிலான எல்லையை மூடும் வரை ஹமாசுக்கு எதிரான போர் முடிந்து விட்டதாக இஸ்ரேல் கருதாது. தெற்கு காசாவில் உள்ள எல்லை வழியாக ராணுவ உபகரணங்களும் பிற கொடிய ஆயுதங்களும் தொடர்ந்து நுழைகிறது.எனவே அதை நிச்சயமாக நாங்கள் மூட வேண்டும்" என்றார்.

    எகிப்துடனான எல்லை பகுதியான ரபா நகரத்தில் உள்ள ஒரு சிறிய பகுதி, இஸ்ரேலால் கட்டுப் படுத்தப்படாத பகுதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×