search icon
என் மலர்tooltip icon

    இலங்கை

    • அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
    • வாக்குப்பெட்டிகள் ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படும்.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த 2022- ம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவியை விட்டு விலகி நாட்டை விட்டே ஓடினார்.

    அதன் பிறகு இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக்கொண்டார். இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டியதால் இலங்கை மெல்ல , மெல்ல பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறது.

    அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் பதவி காலம் வருகிற நவம்பர் மாதம் 17-ந்தேதி முடிவடைகிறது. இதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை ( 21-ந்தேதி ) நடை பெறுகிறது. நேற்று முன் தினத்துடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. தொடர்ந்து இடைவிடாமல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக மொத்தம் 13,400 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேட்சையாக போட்டியிடுகிறார். 1 கோடியே 70 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

    தேர்தலையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருப்பதற்காகவும், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடத்தும் வகையிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

    இவரை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா களம் இறங்கி உள்ளார்.

    இடது சாரி அமைப்பான ஜனதா விமுக்கு பெரமுனாவின் தலைவர் அனுரா குமாரா திசநாயகே தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். இவர்களை தவிர இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே உள்பட 38 பேர் களத்தில் உள்ளனர்.

    இருந்த போதிலும் ரணில் விக்ரமசிங்கே, அனுர குமார திச நாயகே, சஜித் பிரேம தாசா ஆகிய 3 பேர் இடையே தான் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    இந்த தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    நாளை ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிகள் ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படும். உடனடியாக ஓட்டு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

    • இலங்கை அணி முதல் இன்னிங்சில் 305 ரன்கள் எடுத்தது.
    • கமிந்து மெண்டிஸ் சதமும், குசால் மெண்டிஸ் அரை சதமும் கடந்தனர்.

    கொழும்பு:

    நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 305 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடி சதமடித்த கமிந்து மெண்டிஸ் 114 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 50 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 36 ரன்னிலும், தினேஷ் சண்டிமால் 30 ரன்னிலும் அவுட்டாகினர்.

    நியூசிலாந்து சார்பில் வில்லியம் ரூர்கே 5 விக்கெட்டும், கிளென் பிலிப்ஸ், அஜாஸ் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன டேவன் கான்வே 17 ரன்னில் அவுட்டானார்.

    மற்றொரு தொடக்க ஆட்டகாரர் ஆன டாம் லதாம் அரை சதம் கடந்து 70 ரன்னில் வெளியேறினார். கேன் வில்லியம்சன் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா 39 ரன் எடுத்தார்.

    இதனையடுத்து கை கோர்த்த டேரில் மிட்செல் மற்றும் டான் பிளண்டெல் சிறப்பாக விளையாடி, 2-வது நாளில் மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டனர்.

    இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட்டுக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. டேரில் மிட்செல் 41 ரன்னும், டாம் பிளண்டெல் 18 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். நியூசிலாந்து இன்னும் 50 ரன்கள் பின்தங்கி உள்ளது.

    • சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
    • இலங்கை அதிபர் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார் திசநாயகே.

    கொழும்பு:

    இலங்கையில் அதிபர் தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி சார்பில் சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் அருரா குமார திசநாயகே ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

    நாடு முழுவதும் உள்ள 13,400 வாக்குச்சாவடிகளில் வரும் சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சுமார் 1.7 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்கு செலுத்த உள்ளனர்.

    தேர்தலை முன்னிட்டு விறுவிறுப்பாக நடந்து வந்த பிரசார பணிகள் நேற்றைய தினம் முடிவுக்கு வந்தன.

    இந்நிலையில், அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம் என தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் அருரா குமார திசநாயகே தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் பேசுகையில், நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. தேர்தலில் வெற்றி பெற்று 22-ம் தேதி நாங்கள் ஆட்சி அமைப்போம். வெற்றிக்குப் பிறகு என்.பி.பி. கட்சி முழுமையான நிர்வாகத்தையும், சமூக மாற்றத்தையும் கொண்டு வரும்.

    தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினர் உள்பட அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் முழு ஆதரவைப் பெற்றுள்ளோம். கடுமையான போராட்டங்களின்போது வெறும் கனவாக மட்டுமே இருந்த உண்மையான இலங்கை அரசாங்கம், இனி நம்முடையதாக இருக்கும் என தெரிவித்தார்.

    தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே நேற்று நடந்த பிரசாரத்தில் பேசுகையில், சர்வதேச நாணய நிதியத்தின்கீழ் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார மீட்பு நடவடிக்கை, நமது நாட்டை மற்றொரு பொருளாதார நெருக்கடியில் இருந்து தடுப்பதற்கு மிகவும் முக்கியமாகும். திசநாயகே மற்றும் சஜித் பிரேமதாசாவின் கொள்கைகள் மற்றொரு பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். பொருளாதாரத்தை மீட்டெடுக்க மக்கள் புத்திசாலித்தனமாக வாக்களிக்க வேண்டும் என்றார்.

    மற்றொரு அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசா, சுமார் 20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். செழிப்பான பொருளாதாரத்தின் புதிய சகாப்தத்தை உருவாக்குவோம். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சலுகைகளை வழங்குவோம் என உறுதியளித்துள்ளார்.

    • முதல் நாள் முடிவில் இலங்கை 302 ரன்கள் எடுத்துள்ளது.
    • அந்த அணியின் கமிந்து மெண்டிஸ் சிறப்பாக ஆடி சதமடித்தார்.

    கொழும்பு:

    நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று காலேவில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணரத்னே 2 ரன்னிலும், பதும் நிசங்கா 27 ரன்னிலும், தினேஷ் சண்டிமால் 30 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 36 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கமிந்து மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

    6வது விக்கெட்டுக்கு இணைந்த கமிந்து மெண்டிஸ், குசால் மெண்டிஸ் ஜோடி 103 ரன்கள் சேர்த்தது. குசால் மெண்டிஸ் அரை சதமடித்து அவுட்டானார். அவரை தொடர்ந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கமிந்து மெண்டிஸ் 114 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்துள்ளது.

    நியூசிலாந்து சார்பில் வில்லியம் ரூர்கே 3 விக்கெட்டும், கிளென் பிலிப்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
    • அக்டோபர் 1 முதல் 3 கட்டமாக தடை நீக்கப்படும் என அந்நாட்டு அதிபர் அறிவித்தார்.

    கொழும்பு:

    பொருளாதார நெருக்கடியின்போது இலங்கை அரசு அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்க இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. கொரோனா தொற்று தொடங்கியது முதல் 4 ஆண்டாக இந்தக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடித்து வந்தன. தற்போது பொருளாதாரம் சற்று மீண்டு வருகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே, வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அதிபர் மாளிகை தெரிவித்தது.

    இந்நிலையில், பொருளாதாரத்தில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் அனைத்து வாகனங்களின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்க உள்ளோம் என இலங்கை அரசு தெரிவித்தது.

    சர்வதேச நாணய நிதியத்தின் திட்டப்படி அக்டோபர் 1 முதல் 3 கட்டமாக தடை நீக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.

    முதல்கட்டமாக வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் பொது போக்குவரத்து வாகனங்கள், 2ம் கட்டமாக டிசம்பர் 1 முதல் வணிக வாகனங்கள், 3ம் கட்டமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் தனியார் பயன்பாட்டு கார்களை இறக்குமதி செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

    வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், பொருளாதார செயல்பாடுகள் மேலும் அதிகரிக்கும். அதன் மூலம் அரசின் வரி வருவாய் அதிகரிக்கும் என அரசு கணக்கிட்டுள்ளது.

    • பட்டாம்பூச்சிகளை கொன்று கெமிக்கல் மூலம் பதப்படுத்தி தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தனர்.
    • விசாரணையில் 300-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகளை அவர்கள் கொன்று பதப்படுத்த முயன்றது தெரிய வந்தது.

    கொழும்பு:

    இத்தாலியை சேர்ந்த லூகி பெராரி என்பவர் தனது 28 வயது மகனுடன் இலங்கையை சுற்றி பார்க்க வந்தார். தென்கிழக்கு இலங்கையில் உள்ள பிரபல யாலா தேசிய பூங்காவை அவர்கள் சுற்றி பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள பட்டாம்பூச்சிகளை அவர்கள் கண்ணாடி குடுவைக்குள் அடைத்து வந்து சேகரித்தனர்.

    பின்னர் அவற்றை கொன்று கெமிக்கல் மூலம் பதப்படுத்தி தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தனர். அப்போது அங்குள்ள வனகாப்பாளர்களால் கையும், களவுமாக பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதுகுறித்தான வழக்கு கொழும்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. விசாரணையில் 300-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகளை அவர்கள் கொன்று பதப்படுத்த முயன்றது தெரிய வந்தது. இதனையடுத்து தந்தை-மகன் இருவருக்கும் சுமார் ரூ.1½ கோடி அபராதமும் (2 லட்சம் அமெரிக்க டாலர்கள்) கட்டத்தவறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    • மூன்று விசைப்படகுகளில் 14 மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்.
    • காங்கேசன் துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை.

    தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், கடற்கொள்ளையர்கள் அச்சுறுத்துவதும் தொடர்கதையாகவே உள்ளது. மீனவர்கள் கைது தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்கள் ஏராளமான கடிதங்கள் எழுதிய போதிலும், மத்திய அரசு சார்பில் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

    எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில், புதுக்கோட்டையை அடுத்த ஜெகதாப்பட்டினத்தில் இருந்து மூன்று விசைப்படகுகளில் 14 மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்.

    அவர்கள் நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறிதமிழக மீனவர்கள் கைது.
    • தமிழக மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து விசாரணை.

    தமிழக மீனவர்கள் 4 பேர் மற்றும் விசைப்படகை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.

    எல்லைத்தாண்டி வந்து மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 4 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    மேலும், அவர்களது விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.

    கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்த அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வேளியாகியுள்ளது.

    • மீனவர்களுக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை விதிக்க உத்தரவு.
    • கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு 10 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்.

    தூத்துக்குடியை சேர்ந்த 12 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் ரூ. 1.5 கோடி அபராதம் விதித்துள்ளது. அபராத தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் மீனவர்களுக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை விதிக்கவும் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களை வருகிற 10 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

    இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், தமிழக மீனவர்களுக்கு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.

    • தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இரு நாள் பயணமாக கொழும்பு சென்றுள்ளார்.
    • இலங்கை சென்றுள்ள அஜித் தோவல் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்துப் பேசினார்.

    கொழும்பு:

    தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் ஆலோசனைக் கூட்டம் இலங்கையில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார்.

    அஜித் தோவல் இன்று காலை கொழும்பு சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், கொழும்புவில் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை அஜித் தோவல் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது இலங்கையுடன் அரசியல் மற்றும் பொருளாதார விஷயங்கள் குறித்து உரையாடியதாக தெரிகிறது.

    இலங்கையில் செப்டம்பர் 21-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அஜித் தோவலின் இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

    இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனே, அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சகல ரத்நாயக ஆகியோரையும் சந்தித்தார்.

    இந்தியா, இலங்கை, மாலத்தீவுகள் இடையே ஏற்படுத்தப்பட்ட கூட்டமைப்பு தற்போது விரிவிடைந்துள்ளது. இதில் மொரிசியஸ் மற்றும் வங்கதேசம் ஆகியவை உறுப்பினர்களாக சேர்ந்துள்ளன. சீஷெல்ஸ் பார்வையாளராக இணைந்துள்ளது.

    • ஐ.என்.எஸ். மும்பை போர்க்கப்பல் இலங்கைக்கு செல்வது முதல் முறை ஆகும்.
    • விமானத்தை இயக்கும் பைலட்டுகளுக்கு இந்திய கடற்படை பயிற்சி வழங்கி வருகிறது.

    கொழும்பு:

    இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐ.என்.எஸ். மும்பை இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்கு நேற்று சென்றடைந்தது. 3 நாள் பயணமாக சென்றுள்ள அக்கப்பலில் 410 ஊழியர்கள் உள்ளனர். 163 மீட்டர் நீளம் கொண்ட இந்திய போர்க்கப்பலுக்கு இலங்கை கடற்படை வரவேற்பு அளித்தது.

    ஐ.என்.எஸ். மும்பை போர்க்கப்பல் இலங்கைக்கு செல்வது முதல் முறை ஆகும். இந்த ஆண்டு இலங்கை துறைமுகத்துக்கு இந்திய கப்பல் செல்வது இது 8-வது தடவை ஆகும்.

    இலங்கை கடற்படையுடன் சேர்ந்து, யோகா, கடற்கரையை சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளை இந்திய போர்க்கப்பல் ஊழியர்கள் செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இலங்கை விமானப் படையினரால் இயக்கப்படும் டோனியர் கடல் ரோந்து விமானத்திற்கு தேவையான அத்தியாவசிய உதிரிப்பாகங்கள் ஐ.என்.எஸ். மும்பை போர்க்கப்பலில் கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

    இந்த விமானத்தை இயக்கும் பைலட்டுகளுக்கு இந்திய கடற்படை பயிற்சி வழங்கி வருகிறது. இதுதவிர விமானத்தின் மேலாண்மையை இந்திய தொழில் நுட்பக்குழு மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய போர்க் கப்பல் தனது பயணத்தை முடித்துக்கொண்டு 29-ந்தேதி இலங்கையில் இருந்து புறப்படுகிறது.

    அதேபோல் சீனாவைச் சேர்ந்த 3 போர்க்கப்பல்களும் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன. ஹெபெய், இவுசிசான், க்ய்லியான்சான் ஆகிய போர்க்கப்பல்கள் கொழும்பில் நங்கூர மிட்டுள்ளன. இதில் மொத்தம் 1473 ஊழியர்கள் உள்ளனர்.

    இதற்கிடையே இந்திய அதிகாரி ஒருவர் கூறும் போது, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் விரிவடைந்து வரும் சீன கடற்படை இருப்பு இந்தியாவிற்கு ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது.

    சீன போர்க்கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் முன்பை விட நீண்ட காலம் சுற்றி வருகின்றன. இதை இந்தியா தீவிரமாக கண்காணித்து வருகிறது என்றார். இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வரும்வேளையில் இந்தியா, சீனா போர்க்கப்பல்கள் ஒரே நேரத்தில் கொழும்பு துறை முகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த காலங்களில் சீனாவின் போர்க்கப்பல்கள், உளவுக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களை இலங்கைத் துறைமுகங்களில் நிறுத்துவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி 6 நாட்கள் கொண்ட போட்டியாக நடைபெறுகிறது.

    கொழும்பு:

    நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது.

    அதன்படி, நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டி 6 நாட்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் கண்டிப்பாக ஓய்வு நாள் ஒன்று உண்டு. இதனால் டெஸ்ட் போட்டி 6 நாட்கள் நடைபெற்று வந்தது.

    சமீபத்தில் 2008-ம் ஆண்டு டாக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 6 நாட்கள் விளையாடியது. அவர்கள் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதால் அந்த குறிப்பிட்ட நாள் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டது.

    23 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் இதுபோன்ற அரிய நிகழ்வு நடைபெற உள்ளது.

    இலங்கை அணி கடந்த 2001-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 6 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடியது.

    இந்நிலையில், நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் செப்டம்பர் 18 முதல் 23-ம் தேதி வரை என 6 நாட்கள் நடக்கிறது.

    செப்டம்பர் 21-ம் தேதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடப்பதால் அந்த நாள் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இரண்டாவது டெஸ்ட் போட்டி அதே மைதானத்தில் செப்டம்பர் 26-30 வரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    ×