search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாணார்பட்டி பகுதி"

    சாணார்பட்டி பகுதியில் மாங்காய் விளைச்சல் குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே வேம்பார்பட்டியில் தமிழகத்தில் 2-வது பெரிய மாம்பழ சந்தை உள்ளது. கிருஷ்ணகிரிக்கு அடுத்த படியாக வேம்பார்பட்டி சந்தைக்கு தேனி, திண்டுக்கல், திருச்சி, ஆயக்குடி, சாணார்பட்டி, கோபால்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மாங்காய்கள் கொண்டு வரப்படுகிறது.

    குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கும், மலேசியா, துபாய், அபுதாபி உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் பூ பூக்க தொடங்கி ஏப்ரல் முதல் ஜூன்வரை மாங்காய் விளைச்சல் இருக்கும். பருவமழை சமயத்தில் மழை பெய்யாததால் மாங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் சந்தைக்கும் மாங்காய் வரத்து குறைந்த அளவே வந்துள்ளது. மேலும் விலையும் குறைத்து கேட்கப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கடந்த ஆண்டு கல்லாமாங்காய் ரூ.14-ல் இருந்து ரூ.18 வரை விலை கேட்கப்பட்டது. இந்த வருடம் ரூ. 10 முதல் ரூ.15 வரையே விலை கேட்கப்படுகிறது. இதேபோல் இமாம்பாசாத் கடந்த ஆண்டு ரூ.80 முதல் ரூ.90 வரையும் இந்த ஆண்டு ரூ. 60 முதல் ரூ.70 வரையும் விலை கேட்கப்பட்டது. செந்தூரம் கடந்த ஆண்டு ரூ.20 முதல் ரூ.25 வரையும், இந்த ஆண்டு ரூ.12 முதல் ரூ.16 வரையும் விலை கேட்கப்படுகிறது. மொத்தம் 150 வகையான மாங்காய்கள் சந்தைக்கு வந்துள்ளது.

    இது குறித்து மா, புளி, தென்னை விவசாயிகள் சங்க தலைவர் வேம்பார்பட்டி கண்ணுமுகமது கூறுகையில், சரியான நேரத்தில் பருவமழை பெய்யாததால் விளைச்சல் குறைந்துள்ளது. மற்ற மாவட்டங்களில் ஓரளவு பருவமழை கைகொடுத்ததால் விளைச்சல் உள்ளது.

    எனவே வேம்பார்பட்டி சந்தைக்கு மாங்காய் வருகை குறையத் தொடங்கி உள்ளது. எனவே அரசு மானிய விலையில் விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்க வேண்டும், சொட்டு நீர் பாசனம் அமைத்து தர வேண்டும் என்றார்.

    ×