search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய பசுமை தீர்ப்பாயம்"

    • தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள பெரிய விவசாய நிலங்களில் 50% மரங்கள் காணாமல் போயுள்ளது.
    • மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் பல் மரங்கள் காணாமல் போயுள்ளது.

    2019 முதல் 2022 வரையிலான காலகட்டங்களில் மகாராஷ்டிரா, தெலங்கானா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாய நிலங்களில் இருந்த சுமார் 60 லட்சம் மரங்கள் காணாமல் போயிருப்பதாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது

    தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள பெரிய விவசாய நிலங்களில் 50% மரங்கள் காணாமல் போயுள்ளதாகவும், ஒரு சதுர கிலோமீட்டருக்கு 22 மரங்கள் வரை காணாமல் போயுள்ளதாகவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. மேலும், மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் பல் மரங்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் வனத்துறை மற்றும் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகங்கள் பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஜூலை 31-ம் தேதி ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பான மற்றொரு வழக்குடன் இந்த விஷயமும் விசாரிக்கப்படவுள்ளது.

    • சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவில்லை என கேரள அரசு வாதம்.
    • கேரளா அரசுக்கு உத்தரவிட்ட நிலையில், விசாரணை ஜூலை 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

    கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே, கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது.

    இந்த ஆற்று நீர் அமராவதி அணைக்கு வரும் துணை ஆறான தேனாற்றின் ஒரு பகுதி ஆகும்.

    இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொதுமக்களும், விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாக நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கேரளாவின் இந்த செயல், காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை மீறும் செயல் என சமூக ஆவர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், உரிய அனுமதி பெறாமல் சிலந்தி ஆற்றில் மேற்கொள்ளப்படும் தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என கேரளா அரசுக்கு, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    நாளிதழில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

    இதில், சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவில்லை. நீரை தடுத்து உள்ளூர் மக்களுக்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான கலிங்கு தான் அமைப்பட்டு வருகிறது என கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், எந்த கட்டுமானது மேற்கொள்வதாக இருந்தாலும், உரிய அனுமதி பெற்றபின் தான் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்நிலையில், உரிய அனுமதிகள் ஏற்கனவே பெறப்பட்டிருந்தால் அதனை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இல்லை என்றால், சிலந்தி ஆற்றில் மேற்கொள்ளப்படும் தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என கேரளா அரசுக்கு, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

    மேலும், கேரளா அரசுக்கு உத்தரவிட்ட நிலையில், விசாரணை ஜூலை 23ம் தேதிக்கு தள்ளி வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    • கங்கை நதியில் நீராடினால் அனைத்து பாவங்களும் போகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
    • இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி பேர் கங்கை நதியில் நீராடுகிறார்கள்.

    நாட்டின் புனித நதிகளில் ஒன்று கங்கை. இமயமலையில் இந்த நதி உருவாகி பலமாநிலங்கள் வழியாக கடந்து சென்று மேற்கு வங்க மாநிலத்தில் கடலில் கலக்கிறது. கங்கை நதியில் நீராடினால் அனைத்து பாவங்களும் போகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி பேர் கங்கை நதியில் நீராடுகிறார்கள்.

    இந்நிலையில் மேற்கு வங்கத்தில் பாயும் கங்கை ஆறு பொதுமக்கள் குளிக்க தகுதியில்லாத இடமாக மாறியுள்ளதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. மேலும், ஒருநாளைக்கு 258 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்கிறது. இதனால் பாக்டீரியா வைரஸ் பரவல் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் யாரும் கங்கை நதியில் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆலை கழிவுநீரை சுத்திகரிக்காமல் நேரடியாக கங்கை நதியில் கலந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீறினால் மிகப்பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படும் என்றும் ஆலைகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் மேற்குவங்க அதிகாரிகளுக்கும் அபராதம் விதிக்கப்படும் என பசுமை தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது.

    • தனியார் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    • எண்ணூர் எண்ணெய் கழிவு தொடர்பான வழக்கையும் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் திடீரென அமோனியம் வாயு வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இச்சம்பவத்தை தொடர்ந்து தனியார் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், அம்மோனியா கசிவு தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. ஜனவரி 2-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    எண்ணூர் எண்ணெய் கழிவு தொடர்பான வழக்கையும் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

    • நெடுஞ்சாலைத்துறையினர் விரிவான ஆய்வு நடத்தி ஓடையூர் ஏரிப்பகுதி பாதிக்காத வகையில் திட்டத்தில் மாற்றம் செய்து உள்ளனர்.
    • விரிவான அறிக்கையை கடந்த ஜூலை 14 -ந்தேதி பசுமை தீர்ப்பாயத்தில் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்து உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சாலை கூவத்தூர் அடுத்த முகையூர் அருகே உள்ள ஓடையூர் ஏரியை ஒட்டி செல்கிறது. இதற்காக அடையாள கற்கள் நடப்பட்டன. நெடுஞ்சாலை பணியால் ஏரிப்பகுதியில் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் நெஞ்சாலை பணியை தொடர பசுமைத்தீர்ப்பாயம் தடை விதித்தது. மேலும் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் சாலை அமைப்பதற்கான மாற்று முறைகளை பரிசீலிக்க நெஞ்சாலைத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் விரிவான ஆய்வு நடத்தி ஓடையூர் ஏரிப்பகுதி பாதிக்காத வகையில் திட்டத்தில் மாற்றம் செய்து உள்ளனர். சென்னையில் இருந்து வரும்போது வலது புறத்தில் சாலை விரிவாக்கப் பணியை மேற்கொள்ளாமல், இடதுபுறத்தில் மேலும் 3 மீட்டர் முதல் 4 மீட்டர் வரை சாலையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் ஏரி பகுதியை தவிர்க்க புதிய தடுப்பு சுவர் கட்டவும் முடிவு செய்து உள்ளனர். ஆனால் ஏரியின் குறுக்கே புதிய நான்கு வழிப்பாதையில் மேம்பாலம் கட்டுவது தொடர்பான வடிவமைப்பில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இதுதொடர்பான விரிவான அறிக்கையை கடந்த ஜூலை 14 -ந்தேதி பசுமை தீர்ப்பாயத்தில் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்து உள்ளது.

    மேலும் புதிய திட்டத்திற்கான வரைபடத்தை சமர்ப்பிக்குமாறு பசுமை தீர்ப்பாயம் கேட்டுள்ளது. இந்த வழக்கு இன்று(24-ந் தேதி) (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

    • பஞ்சாப் அரசு ஏற்கனவே ரூ.100 கோடியை செலுத்தி இருந்தது.
    • மீதமுள்ள ரூ.2,080 கோடியை 2 மாதங்களுக்குள் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி :

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ேதசிய பசுமை தீர்ப்பாயம் கண்காணித்து வருகிறது.

    இதில் பஞ்சாப் அரசின் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.

    குறிப்பாக கழிவு மேலாண்மையில் அந்த அரசின் தோல்வி காரணமாக கழிவு உற்பத்திக்கும், வெளியேற்றத்துக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. மாநிலத்தில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த விரிவான திட்டம் இல்லாததே இதற்கு காரணம் என கூறப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பஞ்சாப் அரசுக்கு ரூ.2,180 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்து உள்ளது. இதில் பஞ்சாப் அரசு ஏற்கனவே ரூ.100 கோடியை செலுத்தி இருந்தது.

    மீதமுள்ள ரூ.2,080 கோடியை 2 மாதங்களுக்குள் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான தேசிய பசுமை தீர்ப்பாய பிரிவு இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.

    மாசடைந்த 351 நதிகளை தூய்மைப்படுத்தி மாசற்றதாக ஆக்க தேசிய திட்டம் வகுப்பதற்காக மத்திய கண்காணிப்பு குழு ஒன்றை தீர்ப்பாயம் அமைத்தது. #RiverPollution #NGT
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் 351 நதிகள் மிக மோசமாக மாசடைந்து இருப்பதாகவும், தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அவை அச்சுறுத்தலாக இருப்பதாகவும் ஒரு ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது. அதை தேசிய பசுமை தீர்ப்பாயம், தானே முன்வந்து ஒரு வழக்காக எடுத்துக்கொண்டுள்ளது.

    இந்த வழக்கு, தீர்ப்பாய தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாசடைந்த 351 நதிகளை தூய்மைப்படுத்தி மாசற்றதாக ஆக்க தேசிய திட்டம் வகுப்பதற்காக மத்திய கண்காணிப்பு குழு ஒன்றை தீர்ப்பாயம் அமைத்தது.

    அதில், நிதி ஆயோக் பிரதிநிதி, மத்திய அமைச்சக செயலாளர்கள், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் என்று தீர்ப்பாயம் கூறியது. இக்குழுவின் முதல் கூட்டம் ஜூன் 30-ந்தேதி நடத்தப்பட வேண்டும் என்றும், ஜூலை 31-ந்தேதிக்குள் தங்களிடம் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #RiverPollution #NGT
    சென்னையில் ஓடும் கூவம், அடையாறு உள்ளிட்ட ஆறுகளை பராமரிக்க தவறிய தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத்திற்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது. #HC #NGT #TNGovt
    சென்னை:

    சென்னை மாநகரில் ஓடும் கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவை மாசடைந்து விட்டதாகவும், அதை தமிழக அரசு தடுக்க தவறியதாகவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஜவகர் சண்முகம் என்பவர் உள்பட சிலர் மனு தாக்கல் செய்தனர்.

    இதுபற்றிய விசாரணையின் முடிவில் வெளியான 19 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகிய நீர்நிலைகள், தங்குதடையின்றி மாசடைந்து வருகின்றன. அவை சாக்கடையாகவே மாறிவிட்டன. இதை தடுக்க தவறிய மாநில அரசின் தோல்வியையே இந்நிகழ்வு காட்டுகிறது.

    நீர்நிலைகளை மாசடைய செய்தவர்களுக்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தயாரித்த 351 மாசடைந்த ஆறுகள் பட்டியலில் மேற்கண்ட 3 நீர்நிலைகளும் இல்லை. இருப்பினும், இவை மாசடைந்து விட்டது என்பதிலோ, அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை போதுமானது அல்ல என்பதிலோ மாற்றுக்கருத்து இல்லை.

    கூவம், அடையாறு ஆறுகளை சீரமைக்க ரூ.104 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகாரிகள் இந்த நீர்நிலைகளை பாதுகாக்கும் கடமையில் மெத்தனமாக செயல்பட்டுள்ளனர். ஆகவே, எங்கள் அதிருப்தியை பதிவு செய்கிறோம்.

    மாநில அரசின் தோல்வியை கருத்திற்கொண்டு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழக அரசு ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறோம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்காக இந்த அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை, சுற்றுச்சூழலை மேம்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இருப்பினும், இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக, ஒரு நிபுணர் குழுவை அமைக்கிறோம். அதில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், பெங்களூரு இந்திய அறிவியல் நிலையம், ‘நீரி’ ஆகியவற்றை சேர்ந்த பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள். இக்குழு, சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பின் அளவை மதிப்பிடுவதுடன், சுற்றுச்சூழலை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை சிபாரிசு செய்யும். இக்குழு 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

    உரிய காலத்துக்குள் சீரமைப்பு பணிகளை முடிப்பதாக தமிழக அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையுடன் தமிழக அரசின் தலைமை செயலாளர், ஏப்ரல் 23-ம் தேதி, தீர்ப்பாயத்தில் ஆஜராக வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்புக்கு எதிராக தமிழக பொதுப்பணித்துறை சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது.

    இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையில், சென்னையில் ஓடும் ஆறுகளை பராமரிக்க தவறிய தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத்திற்கு தடை விதித்து ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர். #HC #NGT #TNGovt
    ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். #ThoothukudiCollector #sterliteplant #SupremeCourt

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதல்-அமைச்சர் ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது என உறுதிபட கூறினார். தமிழக அரசு வக்கீல்கள் சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து உச்சநீதி மன்றத்தில் திறமையாக வாதாடினார்கள்.

    தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அரசு முடிவு செய்யும். மக்கள் அச்சப்பட தேவையில்லை. போராட்டம் நடத்தவும் அவசியமில்லை. ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசு தெளிவாக உள்ளது.

    தீர்ப்பு வருவதையொட்டி தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் படிப் படியாக போலீஸ் எண்ணிக்கை குறைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiCollector #sterliteplant #SupremeCourt

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்று வைகோ தெரிவித்துள்ளார். #vaiko #sterliteplant #supremecourt

    தஞ்சாவூர்:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து நான் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தேன். இந்த வழக்கை நீதிபதிகள் நவீன், நாரிமன் ஆகியோர் விசாரித்தனர்.

    ஸ்டெர்லைட் ஆலையை எதற்காக மூட வேண்டும் என்று என்னிடம் கேட்டனர். அதற்கு நான், தூத்துக்குடி ஸ்டெர் லைட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகை, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை உருவாக்க கூடியது. இந்த ஆலை அருகில் வசிக்கும் பொதுமக்கள் நச்சுபுகையால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுற்றுச்சூழல் கடுமையாக மாசு அடைந்து வருகிறது. ஆலையில் இருந்து நச்சுபுகை வெளியேற 4 புகைபோக்கி குழாய்கள் இருக்க வேண்டும். ஆனால் ஒரே ஒரு புகைபோக்கி குழாய் தான் உள்ளது. இதற்கு மேல் என்ன காரணம் வேண்டும் என்று வாதாடினேன்.

    இதற்கு நீதிபதிகள், இன்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்ட தீர்ப்பை ரத்து செய்து உள்ளனர். இது தூத்துக்குடி மட்டுமல்ல தமிழக மக்களுக்கே கிடைத்த வெற்றி ஆகும். இன்று தான் என் வாழ்க்கையிலேயே மகிழ்ச்சியான நாள் ஆகும்.

    உண்மையான தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கு நான் தலைவணங்குகிறேன். நீதி வென்றது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், தீர்ப்புக்கு முன் மண்டியிட்டு உள்ளது.

    அ.தி.மு.க. அரசின் இரட்டை வேடம் வெளிச்சத்துக்கு வந்தது. ஏனென்றால் ஸ்டெர்லைட் ஆலையின் கைக்கூலியாக அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வந்தது. ஸ்டெர்லைட் ஆலை மீது போடப்பட்ட வழக்கை அ.தி.மு.க. அரசு மூடி மறைத்தது. மேலும் துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் சிந்திய ரத்தம், இந்த ஆலையை மூட வைத்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா குழுமம் வேறு எந்த கோர்ட்டுக்கு சென்றாலும் நாங்கள் விடமாட்டோம். தொடர்ந்து போராடி வெற்றி பெறுவோம்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம். அ.தி.மு.க. அரசு, காவல்துறையை ஏவி இந்த செயலில் ஈடுபட வைத்தது. பலியான 13 பேருக்கும் நெற்றிலும், மார்பிலும் குண்டுகள் துளைத்துள்ளது. இது கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனே துப்பாக்கி சூடு நடந்துள்ளது.


    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100 நாள் போராட்டத்தின் போது கலெக்டர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள், வருவதற்கு முன்னரே போலீசாரால் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஆனால் போராட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் தான் வன்முறையில் ஈடுபட்டனர் என கூறி திசை திருப்பப்பட்டது. மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான வீடியோ காட்சிகள் அழிக்கப்பட்டன. துப்பாக்கி சூடு நடந்த அன்று இரவே நான் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்தேன். வேறு யாரும் அங்கு வரவில்லை. பொது மக்களுக்கு நான் தொடர்ந்து பாதுகாவலனாக இருப்பேன்.

    சமூக போராளி முகிலன், கடந்த 15-ந் தேதி சென்னையில் இருந்து மதுரை ரெயிலில் ஏறினார். இரவு 1 மணி வரை அவரது செல்போன் உபயோகத்தில் இருந்தது. அதன்பின்னர் அவரது செல்போன் சுவிட்சு ஆப் ஆகி உள்ளது. தற்போது எங்கே இருக்கிறார்? என்று தெரிய வில்லை. ஒன்று அவர் சுட்டு கொல்லப்பட்டு இருப்பார். இல்லையென்றால் கடத்தப்பட்டு இருப்பார். இதற்கு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும், போலீசாரும் தான் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்கிய தீர்ப்பை வரவேற்கும் வகையில் வைகோ, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். #vaiko #sterliteplant #supremecourt

    ஸ்டெர்லைட் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆலையை திறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. #SterliteCase #SterliteIssue #SupremeCourt
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நோய் பரப்புவதாக கூறி அந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி பொது மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள்.

    அப்போது போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியானார்கள்.

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் அந்த ஆலையை உடனே மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி மே மாதம் 28-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டன.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி தருண்அகர்வால் தலைமையில் குழு ஒன்றை நியமித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையில் நேரடி ஆய்வு செய்தது.

    ஆய்வு செய்த அதிகாரிகள் அதன் அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதி தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது.

    அதில், “ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரியவந்துள்ளது. ஆலை நிர்வாகத்தால் வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிப்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும். 15 நாட்களுக்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதால் தூத்துக்குடி பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

    இதையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தனது மனுவில் கூறி இருந்தது.

    இதற்கிடையே வேதாந்தா நிறுவனமும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும். தமிழக அரசின் உத்தரவை ஏற்கக் கூடாது என்று அந்த நிறுவனம் சுப்ரீம்கோர்ட்டில் முறையிட்டது.

    கடந்த சில மாதங்களாக இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வந்தது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் ஏற்கனவே நிலுவையில் இருந்த வழக்குகளும் இந்த மேல்முறையீட்டு வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்பட்டது.

    கடந்த 7-ந்தேதி இந்த வழக்கில் வக்கீல்கள் வாதம் அனைத்தும் முடிவடைந்தது. இதையடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    நீதிபதிகள் ஆர்.பாலிநாரிமன், நவீன்சின்கா ஆகிய இருவரும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தீர்ப்பை வெளியிட்டனர். அவர்கள் தீர்ப்பு விவரம் வருமாறு:-



    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க இயலாது. அந்த ஆலையை திறக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு அடுத்தடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ள உரிமை உள்ளது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடும் அதிகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு கிடையாது. எனவே தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது.

    தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் அனுமதி பெற்றதை ஏற்க இயலாது. இந்த விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டை அணுகலாம்.

    இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. கபில்குமார், நெல்லை மாநகர இணை கமி‌ஷனர் சுகுணாசிங், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் முரளி, ராம்பா (தூத்துக்குடி), அருண்சக்திகுமார் (நெல்லை) ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    நெல்லை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து சுமார் 1,600 போலீசார் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டு இருந்தனர். இன்று காலை அவர்கள் அனைவரும் தூத்துக்குடியின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். #SterliteCase #SterliteIssue #SupremeCourt
    ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #SterliteCase #SupremeCourt
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் காரணமாக ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அரசு தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசின்  உத்தரவை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் தான் வேதாந்தா நிறுவனம் வழக்குத் தொடர முடியும் எனவும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர முடியாது எனவும் தெரிவித்துள்ளது. எனவே, ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனமும் மேல்முறையீடு செய்திருந்தது.



    இவ்வழக்குகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேதாந்தா தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார்.

    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆலைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜராகி வாதாடினார். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் பல நோய்கள் ஏற்படுவதாக வைகோ மீண்டும் குறிப்பிட்டார்.

    இன்று பிற்பகல் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மேலும், அனைத்து தரப்பினரும் திங்கட்கிழமைக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். #SterliteCase #SupremeCourt

    ×