search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Banashankari temple"

    • பனசங்கரி அம்மன் கோவில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நடந்தது.
    • பக்தர்களின் வித்தியாசமான வேண்டுதல் கடிதங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பெங்களூரு:

    பெங்களூருவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் பனசங்கரி அம்மன் கோவிலும் ஒன்று. அங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் உண்டியல்களில் காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை செலுத்துவது வழக்கம்.

    அதுபோல் இந்த கோவில் உண்டியலில் பக்தர்கள் தங்களது வேண்டுதலை கடிதமாக எழுதிப்போட்டால், நினைத்த காரியம் நிறைவேற அம்மன் அருள்கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இதனால் பக்தர்கள் காணிக்கையுடன், கோரிக்கை கடிதமும் போட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் பனசங்கரி அம்மன் கோவில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நடந்தது. அப்போது பக்தர்களின் வேண்டுதல் கடிதங்களும் கிடைத்தன. அதில் சில வேண்டுதல் நூதனமாகவும், விசித்திரமாகவும் இருந்தன. அந்த கடிதங்கள் பற்றிய விவரம் பின்வருமாறு:-


    ஒரு இளம்பெண் எழுதியிருந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- "அம்மா... என் தவறுக்கு வருந்துகிறேன். நான் முன்பு கோபிநாத்தை தவிர வேறு யாரையும் திருமணம் செய்யக்கூடாது என விரும்பினேன். எனக்கு அவன் இப்போது வேண்டாம்.

    எனக்கு அடுத்த ஆண்டில் திருமணம் நடக்க வேண்டும். எனக்கு கிடைக்கும் மாப்பிள்ளை நல்ல புகழ், நல்ல குணம் பெற்றவராகவும், பணக்காரராகவும் இருக்க வேண்டும். ஐ.ஏ.எஸ். மாப்பிள்ளையை எனக்கு திருமணம் செய்து வையுங்கள்.

    வேறு பெண்களை ஏறெடுத்து பார்க்காதவர் எனது கணவராக வர வேண்டும். என்னை மட்டும் அதிகமாக நேசிப்பவராக இருக்க வேண்டும். நான் குழந்தைகள், பேரக்குழந்தைகளுடன் நன்றாக வாழ வேண்டும். இத்தனை வருடங்கள் காத்திருந்ததற்கு எனக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும். ஒரு மகனையும் கொடு தாயே."

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மற்றொரு பக்தர், அம்மனுக்கு எழுதிய கடிதத்தில், "எனது தாய் வீட்டில் இருந்து எனக்கு கிடைக்க வேண்டிய சொத்துக்கள் தடையின்றி வந்து சேர வேண்டும். எனக்கு அருள்புரிவாய் அம்மா" என குறிப்பிட்டுள்ளார்.

    இன்னொரு பக்தரின் வேண்டுதல் கடிதத்தில், அம்மா தாயே... ரம்யா, அவரது கணவர் உமேசையும் பிரித்து வைக்க வேண்டும். உமேஷ் செய்த தவறுக்காக அவரை அவரது மனைவியிடம் இருந்து பிரித்து தண்டனை கொடுங்கள் என கூறப்பட்டுள்ளது.

    பக்தர்களின் வித்தியாசமான வேண்டுதல் கடிதங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×