என் மலர்
நீங்கள் தேடியது "Carl Hopkinson"
- 7 ஆண்டுகளாக ஃபீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஜேம்ஸ் பம்மெண்ட் நீக்கப்பட்டார்.
- அவருக்கு பதிலாக இங்கிலாந்து முன்னாள் வீரரை நியமித்தது மும்பை இந்தியன்ஸ்.
மும்பை:
மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் கார்ல் ஹாப்கின்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் 7 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றி வந்த ஃபீல்டிங் பயிற்சியாளரான ஜேம்ஸ் பம்மெண்ட் நீக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 2020-ம் ஆண்டுக்கு பிறகு கோப்பையை வெல்ல முடியாமல் மும்பை இந்தியன்ஸ் அணி திண்டாடி வருகிறது. அதில் கடந்த 4 சீசனில் ஒரேயொரு முறை மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இதனால் கடந்த சீசனிலேயே திடீரென குஜராத் அணியிடம் இருந்து ட்ரேட் மூலமாக ஹர்திக் பாண்ட்யா கொண்டு வரப்பட்டு கேப்டனாக்கப்பட்டார். இருந்தாலும் அந்த சீசனிலும் கடைசி இடத்தில் தான் மும்பை அணி நிறைவு செய்தது.
இதனால் அணியில் நிறைய மாற்றங்களை அந்த அணி நிர்வாகம் செய்துள்ளது. அந்த வகையில் தலைமைப் பயிற்சியாளராக இருந்த மார்க் பவுச்சரை நீக்கிய மும்பை அணி, மீண்டும் தலைமைப் பயிற்சியாளராக மஹேலா ஜெயவர்தனேவை நியமித்தது.
இந்த நிலையில் தற்போது 7 ஆண்டுகளாக ஃபீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஜேம்ஸ் பம்மெண்ட் நீக்கப்படுவடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக 43 வயதாகும் இங்கிலாந்து முன்னாள் வீரரும், ஃபீல்டிங் பயிற்சியாளருமான கார்ல் ஹாப்கின்சன் ஒப்பந்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2019 உலகக்கோப்பை, 2022 டி20 உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியுடன் பணியாற்றியவர் கார்ல் ஹாப்கின்சன். இதனால் அவரின் இணைப்பு மும்பை அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என்று பார்க்கப்படுகிறது.