search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dindigul siege"

    சிறுமலை ரேசன் கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் தாழக்கடை, பழையூர், புதூர், அண்ணாநகர், ஊரடி ஆகிய பகுதிகளில் ரேசன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தாழக்கடையில் உள்ள ரேசன் கடைக்கு வரும் பொதுமக்களுக்கு பொருட்கள் முறையாக வழங்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 35 கிலோ இலவச அரிசி வழங்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு 20 கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது. இதே போல 20 கிலோ வழங்க வேண்டிய பயனாளிகளுக்கு அதை விட குறைவாக வழங்கி வந்துள்ளனர்.

    மேலும் புழுங்கல் அரிசிக்கு பதிலாக பச்சரிசி மட்டுமே வழங்கப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் பல முறை கடை விற்பனையாளர்களிடம் விபரம் கேட்டும் அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை.

    இதனால் ஆவேசமடைந்த வேலாம்பண்ணை பகுதி மக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் கடையில் இருந்த எடை தராசு கல்லையும் எடுத்துச் சென்று விட்டனர். இதனால் விற்பனையாளர் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் இந்த ரேசன் கடையை முறையாக திறப்பது கிடையாது. மக்கள் வரும் நேரத்தில் பொருட்கள் வழங்குவது கிடையாது. கூலித் தொழிலாளர்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் நாங்கள் வேலைக்கு சென்ற பிறகு கடையை திறந்து சிறிது நேரத்திலேயே பூட்டி விடுகின்றனர். மண்எண்ணை வினியோகமும் முறையாக இல்லை. வேலாம்பண்ணையில் இருந்து 7 கி.மீ தூரம் நடந்து வந்தாலும் பொருட்கள் இல்லை என கூறி விடுகின்றனர்.

    எனவே சிறுமலையில் செயல்படும் ரேசன் கடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து முறையாக பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    ×