search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Edappadi Palaniswami"

    • கள ஆய்வு கூட்டம் நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
    • சில நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    நெல்லை:

    2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் அ.தி.மு.க. பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வு கூட்டம் நடத்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கள ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கள ஆய்வு கூட்டம் நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ., அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அருணாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டு கள ஆய்வு கூட்டத்தை நடத்தினர். இதில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா மற்றும் மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளான எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, அண்ணா தொழிற்சங்கம், வக்கீல் பிரிவு, சிறுபான்மை நலப்பிரிவு, விவசாயப்பிரிவு, மீனவரணி, தகவல் தொழில்நுட்பப்பிரிவு மற்றும் பகுதி, ஒன்றிய, பேரூர், வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து பல்வேறு வியூகங்கள் குறித்து நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். அப்போது ஒரு நிர்வாகி பேசும்பொது, கடந்த பாராளுமன்ற தேர்தலில் நெல்லை மாநகர தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியை விட குறைவான வாக்குகளை பெற்றதாகவும், வாக்காளர் சேர்த்தல், திருத்த முகாம் நடைபெறும்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் இடம் பெறவில்லை எனவும் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து பேசினார்.

     

    கள ஆய்வு கூட்டத்தில் கைகலப்பில் ஈடுபட்டவர்களை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எச்சரித்த காட்சி

    இதனைக்கேட்ட மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜாவின் ஆதரவாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் ஈடுபட்டனர். சில நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இதனைப்பார்த்த எஸ்.பி. வேலுமணி, தகராறு செய்பவர்களுக்கும், கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கு இங்கு இடமில்லை. தவறு செய்தவர்கள் குறித்து கட்சி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும். எனவே அனைவரும் அமைதியாக இருங்கள் என்று கூறினார்.

    தொடர்ந்து முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பனும் நிர்வாகிகளை அமைதிப்படுத்தினார். 

    • அடுத்த நாள் காலையில் சசிகலாவுக்கு 4 வருட சிறை-ன்னு வருது.
    • முதலமைச்சரா இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை ராஜினாமா பண்ண சொல்லி கையெழுத்து வாங்குனது டிடிவி தினகரன்.

    திருவாரூர்:

    திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலின் பேரில் அம்மா முதலமைச்சர் ஆனார். அவருக்கு பிறகு யார் முதலமைச்சர் என்று பார்க்கும் போது சசிகலா அடுத்த முதலமைச்சர் ஆவதற்கு எல்லாம் திட்டம் போட்டுன்னு இருக்காங்க. நாங்க எல்லாம் எம்.எல்.ஏ.வாக இருக்குறோம். நாளை மறுநாள் முதலமைச்சர் ஆகப்போவதாக சசிகலா சொல்றாங்க. அடுத்த நாள் காலையில் சசிகலாவுக்கு 4 வருட சிறை-ன்னு வருது.

    நீங்க பாருங்க.. கடவுள் யாருக்கு அருள் தருகிறார் என்று. அவங்களாவே திட்டம் போட்டு அவங்களாவே முதலமைச்சர் ஆகப்போறேன்னாங்க. அப்போ நாங்க என்னப்பா மறுபடியும் இந்த குடும்பத்துக்கிட்ட மாட்டிக்கிட்டுறது கட்சின்னு பேசிக்கிட்டு இருந்தோம். தெய்வம் இருக்கிறது அன்றைக்கு காட்டியது.

    அப்போ முதலமைச்சரா இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை ராஜினாமா பண்ண சொல்லி கையெழுத்து வாங்குனது டிடிவி தினகரன். நாங்க எல்லாம் உட்கார்ந்துன்னு இருக்கோம். அப்போ பன்னீர்செல்வம் சொல்றாரு, பதவி கொடுத்தவர்களுக்கு துரோகம் செய்து இருக்கீங்க.. உங்களுக்கு தண்டனை உண்டுன்னு சொல்றார். இவருக்கு துரோகம் பண்ணது தினகரன். இவர பதவியில் இருந்து எடுத்தது அந்த குடும்பம். நமக்கு என்ன இருக்கிறது துரோகம். ஒண்ணுமே கிடையாது.

    அம்மாவே அமைச்சர்களின் ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தார். அவர் ஒரு சிறந்த மனிதர் என்பதை அப்போதே நிருபித்தார். அந்த விதி அவர் முதலமைச்சர் ஆவதற்கு என்பது அப்போது தான் தெரிந்தது. அத்தனை பேர் ஒருமனதாக அவரை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தோம். 4 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தார். அவரது ஆட்சியில் விலைவாசி ஏறவில்லை. சட்டம் ஒழுங்கு கெடவில்லை. சூப்பர் ஆட்சி ... ஆட்சியை கவிழ்க்க தினகரன் சதி செய்தார்.

    இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். 

    • தூத்துக்குடியில் நடைபெற்றது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை 13 பேரை சுட்டுக்கொன்றது எடப்பாடி ஆட்சி.
    • தூத்துக்குடி அருகே அரசுப்பள்ளி முன் ஆசிரியை படுகொலை 2019 ஆகஸ்ட் 8-ல் நடந்தது.

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவாலயத்தில் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி சம்பந்தமாக சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விட்டுள்ளார்.

    முதலில் அவர் தான் எடுத்த நடவடிக்கை குறித்து தன்னையே பரிசீலித்து கொள்ள வேண்டும். 2018 -ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்திலே நெடுஞ்சாலை துறையிலே 4800 கோடிக்கு ஊழல் செய்ததற்காக வழக்கு தொடரப்பட்டது. தி.மு.க. சார்பில் நான்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.

    அந்த வழக்கில் நாங்கள் சி.பி.ஐ. விசாரணை கோரவில்லை. ஆனால் நீதிமன்றமே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இவ்வளவு பேசுகிற எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் கள்ளக்குறிச்சி வழக்கை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு தமிழக அரசு, ஸ்டாலின் போகக்கூடாது என்று மனசாட்சியை அடகு வைத்து விட்டு அறிக்கை விட்டுள்ளார்.

    அவர்தான் முதன் முதலில் உச்சநீதிமன்றத்தை நாடி அவர் மீது சி.பி.ஐ. வழக்கு நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்து தடை பெற்றார். அந்த வழக்கு நடைபெற்றது.

    வழக்கு 2022-க்கு பிறகு விசாரணைக்கு வருகிறபோது தி.மு.க. சார்பில் அந்த வழக்கை தொடர்ந்த நானே சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று கேட்டதற்கு, ஆட்சேபனை இல்லை என்று நாங்கள் சொன்னோம். காரணம் என்னவென்றால், சி.பி.ஐ. வேண்டும் என்று நாங்கள் எந்த காலத்திலும் கேட்டது கிடையாது. அதற்கு பல காரணங்கள் உண்டு.

    2016-ம் ஆண்டு தமிழ் நாட்டிலே, திருப்பூர் அருகே தேர்தல் நேரத்தில் 570 கோடி ரூபாய் கண்டெய்னர் லாரிகள் பிடிபட்டது. அப்போது அ.தி.மு.க. தான் ஆட்சியில் இருந்தது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். அந்த 570 கோடி ரூபாய் கட்டு கட்டான நோட்டுகள் தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

    அது எங்கிருந்து வந்தது? கோவை மாவட்டத்தில் இருந்து திருப்பூரில் நடுரோட்டில் கைப்பற்றுகிறார்கள். இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று 2017-2018ல் உத்தரவு போடப்பட்டது. இன்றைக்கு நான் கேட்கி றேன். சி.பி.ஐ. இதுவரையில் அந்த வழக்கு பற்றி ஏதேனும் வழக்கை துலக்கி இருக்கிறதா? விசாரணை நடத்தி இருக்கிறதா? என்பதை கேட்டு நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் சி.பி.ஐ. எப்படிப்பட்ட விசாரணையை செய்யும் என்பதற்கு இதை விட எடுத்துக்காட்டு தேவை இல்லை.

    இதுவரை அந்த ரூ.570 கோடி பணம் யாருக்கு சொந்தம்? யாருடைய பணம் என்று கண்டுபிடித்து நாட்டு மக்களுக்கு சி.பி.ஐ. சொன்னதா? சொல்லவில்லை. அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி கேட்பது போல, உச்சநீதிமன்றத்துக்கு நாங்கள் போக வேண்டியது அவசியம் இல்லை என்றாலும் கூட கள்ளக்குறிச்சி சம்பவத்திலே, உடனடியாக முதலமைச்சர் துரிதமாக நடவடிக்கை எடுத்து ஏறத்தாழ 57 மருத்துவர்களை அங்கு அனுப்பினார். கலெக்டர் மாற்றப்பட்டார். எஸ்.பி. சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டார்கள். இதில் எல்லாவிதமான நடவடிக்கையும் அரசு மேற்கொண்டது.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி யோக்கியர் போல, அப்பீல் போக கூடாது, சி.பி.ஐ. விசாரணைக்கு சென்றார். நான் கேட்கிறேன், இவர் தானே முதன் முதலில் ஒடினார். சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது என்று இன்றைக்கு பேசுகிறார்.

    இவருடைய ஆட்சியில் ஒரு வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டார் என்ற சம்பவத்தை வைத்துக்கொண்டு சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது என்கிறார். இவர்கள் ஆட்சியில் நடக்கவில்லையா?

    இதே சென்னையில் ஒரு மத்திய அமைச்சராக இருந்த தலித் எழில்மலையின் மருமகன் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் 2 நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வந்தது. அது யாருடைய ஆட்சியில் நடந்தது. ஆகவே தனிப்பட்ட கொலைகள் நடப்பதற்கும் சட்டம்-ஒழுங்குக்கும் சம்பந்தம் இல்லை என்பதை முதலமைச்சராக இருந்த எடப்பாடி புரிந்து கொள்ள வேண்டும்.

    இப்போது ஓசூரில் வழக்கறிஞர் வெட்டப்பட்டது தனிப்பட்ட விவகாரம், காதல் விவகாரம். உடனடியாக குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூரில் ஆசிரியை கொலை செய்யப்பட்டதை எடப்பாடி குறிப்பிடுகிறார். அதுவும் தனிப்பட்ட தகராறு.

    அதாவது சட்டம்- ஒழுங்கு என்பது என்ன என்பதை முதலில் எடப்பாடி புரிந்து கொள்ள வேண்டும்.

    தூத்துக்குடியில் நடைபெற்றது சட்டம்-ஒழுங்கு பிரச்சனை 13 பேரை சுட்டுக்கொன்றது எடப்பாடி ஆட்சி. அப்போது டி.வி.யில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்னவர்தான் இந்த எடப்பாடி பழனிசாமி.

    அதேபோல் அம்மா, அம்மா என்று மூச்சுக்கு 32 தடவை சொல்கிற இவரது தலைவி, அம்மா கடைசி காலத்தில் வாழ்ந்தது கொட நாட்டில்தான்.

    முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா ஏறத்தாழ 3 ஆண்டு காலம் கொடநாட்டில் இருந்துதான் அரசாங்கத்தை நடத்தினார். இது எல்லோருக்கும் தெரியும். அந்த அம்மையார் வாழ்ந்த கொடநாடு வீட்டில் காவலாளி பொன்பகதூர் கொலை செய்யப்பட்டார். 5 கொலை அங்கு நடந்து உள்ளது.

    பலகோடி ரூபாய் கொள்ளையடித்து கொண்டு போனார்கள். இது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் நடந்தது. இவரால் இதை தடுக்க முடிந்ததா?

    இதெல்லாம் சட்டம்-ஒழுங்கு கெட்டதுக்கு அடையாளம் ஆகும். ஆனால் தனிப்பட்ட முறையில் நடக்கும் கொலை எல்லாம் சட்டம்-ஒழுங்கு என்று பேசுவது நியாயம் அல்ல.

    எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எத்தனை ஆசிரியர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்பதற்கு என்னிடம் சான்று உள்ளது.

    கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஆசிரியை குத்தி கொலை. இது 2018, நவம்பர் 2-ந்தேதி நடந்தது.

    பெரம்பலூர் அருகே பட்டப்பகலில் ஆசிரியை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை. இது 2018 ஆகஸ்ட் 14-ல் நடந்தது.

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியை படுகாலை , கணவன் கைது. இது 2020 டிசம்பர் 23-ல் நடந்தது.

    கோவையில் கல்லூரி ஆசிரியை கழுத்தை அறுத்து தீ வைத்து எரித்து கொலை 2017-ஜூலை 8-ல் நடந்தது.

    சென்னையில் கள்ளக்காதல் விவகாரம் காரை ஏற்றி கொலை செய்தது ஏன்? கைதான காதலன் பரபரப்பான வாக்குமூலம் 2017, மே-9ல் நடந்தது.

    தூத்துக்குடி அருகே அரசுப்பள்ளி முன் ஆசிரியை படுகொலை 2019 ஆகஸ்ட் 8-ல் நடந்தது.

    இப்படி எடப்பாடி ஆட்சியில் இவ்வளவு ஆசிரியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். அதேபோல்தான் தஞ்சையில் நேற்று நடந்துள்ளது. இதை வைத்து கொண்டு சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது என்று பேசுவது எந்த வகையில் நியாயம்.

    எடப்பாடி ஆட்சியில் மட்டும் 1672 கொலைகள் நடந்துள்ளன. ஆனால் தி.மு.க. ஆட்சியில் 792 கொலைகள் நடந்துள்ளது. இன்றைக்கு கொலைகள், குற்றங்கள் குறைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தூத்துக்குடி துப்பாக்கி சூடு என்பது சட்டம் ஒழுங்கு சீர்கேடு.
    • கொடநாடு கொலை கொள்ளை நடந்தது அதிமுக ஆட்சியில் தான்.

    கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றப்பட்டதை வரவேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    * ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றம் சென்ற இபிஎஸ் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அறிக்கை வெளியிடுகிறார்.

    * சிபிஐ விசாரணைக்கு தடை கோரி மேல்முறையீடு செய்யக்கூடாது என யோக்கியனை போன்று பேசுகிறார் இபிஎஸ்.

    * தனக்கு எதிரான வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு இபிஎஸ் போனது ஏன்?

    * கண்டெய்னரில் பணம் கைப்பற்றிய விவகாரத்தில் சிபிஐ இன்னும் விசாரணையை தொடங்கவில்லை.

    * கண்டெய்னரில் 570 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது யாருடையது என்று இன்று வரை தெரியவில்லை.

    * கள்ளக்குறிச்சி வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    * உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து கூற விரும்பவில்லை.

    * தனிப்பட்ட கொலைகளுக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் சம்பந்தமில்லை என்பதை இபிஎஸ் அறிய வேண்டும்.

    * கண்டெய்னரில் பணம் கைப்பற்றிய விவகாரத்தில் சிபிஐ இன்னும் விசாரணையை தொடங்கவில்லை.

    * தூத்துக்குடி துப்பாக்கி சூடு என்பது சட்டம் ஒழுங்கு சீர்கேடு.

    * கொடநாடு கொலை கொள்ளை நடந்தது அதிமுக ஆட்சியில் தான்.

    * தஞ்சையில் நடந்த கொலையை வைத்து கொண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை என பேசுவது நியாயமல்ல.

    * ஆசிரியர் கொலை சம்பவம், காதல் விவகாரம் காரணமாக நடந்துள்ளது, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    * அதிமுக ஆட்சியில் நடந்த ஆசிரியர்கள் கொலைகளை பட்டியலிட்டு அவர் பேசினார். 

    • ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றி சாதனை படைத்து வருவது மக்களுக்கு புரிகிறது.
    • அரசு ஆஸ்பத்திரிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தி.மு.க. ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை, மக்களின் உயிர் காக்கும் துறையா? அல்லது மக்களின் உயிரைப் பறிக்கும் துறையா? என்ற சந்தேகம் எழுந்திருப்பதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆட்சி, மருத்துவ துறையில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றி சாதனை படைத்து வருவது மக்களுக்கு புரிகிறது.

    சிலருக்கு புரிய வேண்டும் என்பதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை சாதனை பட்டியலை மீண்டும் நினைவு கூர்கிறேன். மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48, கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம், இதயம் காப்போம் திட்டம், சிறுநீரகம் பாதுகாப்பு திட்டம், பாதம் பாதுகாப்போம் திட்டம், தொழிலாளர் தேடி மருத்துவம், மக்களைத்தேடி ஆய்வக திட்டம், நடப்போம் நலம் பெறுவோம் திட்டம், கண்ணொளி காப்போம் திட்டம்.

    மேலும், மருத்துவ கட்டமைப்புகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவ பணி நியமனங்கள் என்று சொன்னால் பட்டியல் நீளும். மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையில் பாராட்டும், விருதும் வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது உலக அளவில் உச்சபட்ச அங்கீகாரம் என்பதை எடப்பாடி பழனிசாமி அறிந்திருப்பாரா? அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட மக்கள் இன்னல்களை பட்டியலிட்டால் ஆயிரம் பக்கம் கொண்ட தனிப் புத்தகமே போடலாம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மருத்துவத்துறை சேவை, தரம் உயர்ந்துள்ளது என்பதற்கு மத்திய அரசு வாரி வழங்கி உள்ள விருதுகளே சாட்சி. தேசிய தர உறுதி நிர்ணய திட்ட விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இதுவரை பெற்ற விருதுகளின் எண்ணிக்கை 614, இதில், தி.மு.க. ஆட்சியில் பொறுப்பேற்ற பிறகு பெற்ற விருதுகளின் எண்ணிக்கை 545.

    அதேபோல் மகப்பேறு துறை, கர்ப்பிணிகளுக்கான அறுவை அரங்கின் தரம் உயர்த்தும் திட்ட சான்றிதழ். இதில், தமிழகம் இதுவரை பெற்ற விருதுகளின் எண்ணிக்கை 84, தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெற்ற விருதுகளின் எண்ணிக்கை 55. இவைதான், மக்கள் விரோத ஆட்சிக்கும், மக்கள் நலன் விரும்பும் ஆட்சிக்கும் உள்ள வேறுபாடு.

    தற்போது, அரசு ஆஸ்பத்திரிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அரசியலுக்காக ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவ சேவையை குறை கூறி குளிர்காய நினைக்காதீர்கள். எதிர்க்கட்சி தலைவர் என்பதை உணராமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியை மட்டுமே மனதில் கொண்டு அறிக்கை வெளியிடுவதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி, எரிச்சல்சாமியாக மக்களுக்கு காட்சியளிக்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.
    • வழக்கறிஞர் கண்ணனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில், பட்டப்பகலில் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் அரிவாளால் கொடுரமாக வெட்டப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்த விடியா திமுக ஆட்சியில் மருத்துவத்துறை, பள்ளிக்கல்வித்துறை, நீதித்துறை என அரசு வளாகங்களிலேயே துறை வாரியாக நடைபெறும் கொலைகள், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லும் சட்டம் ஒழுங்கின் உண்மை நிலையைத் தெளிவாகக் காட்டுகிறது.

    விளம்பரத்தில் மட்டுமே ஆட்சிக்காலத்தை நகர்த்திவிடலாம் என்ற எண்ணத்தில், தன்னுடைய பணிகளை மேற்கொள்ளாமல், தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.

    மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் கண்ணனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    வழக்கம் போல வெற்று விளம்பரங்களால் மடைமாற்ற முயற்சிக்காமல், இத்தொடர் சம்பவங்களுக்கு பிறகாவது சட்டம் ஒழுங்கின் உண்மை நிலை உணர்ந்து செயல்படுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    • பணிபுரியும் அரசுக்கு சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ளது தி.மு.க.
    • முதல்வர் தன்னுடைய முதல் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதில் இனியாவது செலுத்த வலியுறுத்துகிறேன்

    தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

    விடியா திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வ சாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு நிர்வாகத் திறனற்ற திமுக அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளது.

    அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் அரசுக்கு சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    ஆசிரியர் ரமணியின் கொலை வழக்கில் கைதாகியுள்ளவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், விடியா திமுக முதல்வர் வெறும் விளம்பரங்களில் மட்டுமே செலுத்தும் கவனத்தை, தன்னுடைய முதல் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதில் இனியாவது செலுத்த வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கண்டனத்தில் தெரிவித்துள்ளார்.

    • மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து அமைதியின்மை நிலவுவது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.
    • மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே பதற்றம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி இன மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் தங்களுக்கு பழங்குடியின மக்கள் என்ற அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள்.

    இதற்கு மணிப்பூரில் வாழும் பாரம்பரிய குகி பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு இன மக்களுக்கும் சிறு சிறு மோதல்கள் நடந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது.

    இந்த வன்முறையில் 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

    இந்நிலையில் கடந்த 11-ந்தேதி மீண்டும் வன்முறை வெடித்தது. அன்று இரவு குகி பழங்குடியினத்தை சேர்ந்த 10 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

    இதையடுத்து குகி பழங்குடியின மக்கள் ஆத்திரம் அடைந்து தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், மணிப்பூரில் நடைபெறும் இனக்கலவரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து இனக் கலவரம் அதிகரித்து பொது சொத்துக்கள், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் வீடுகளுக்கு தீ வைப்பது, இரு சமூகத்தினருக்கு இடையே பதற்றம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கலவரத்தை கட்டுப்படுத்த நேற்று (18.11.2024) மத்திய அரசு கூடுதலாக 50 கம்பெனிகள் மத்திய படையை அனுப்பியுள்ளது.

    புதிய அரசு பதவியேற்றப் பிறகும் மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து அமைதியின்மை நிலவுவது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இரு பிரிவினருக்கு இடையே தொடர்ந்து கலவரம் நடப்பதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் உயிரும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

    2008-2009ம் ஆண்டுகளில் இலங்கையில் நமது தொப்புள்கொடி உறவான தமிழர்கள் மீது இனப்படுகொலை தாக்குதல் நடத்தப்பட்டபோது, அப்போதைய மத்திய, மாநில அரசுகள் அமைதியாக வேடிக்கைப் பார்த்தது. அதுபோல் இல்லாமல், தற்போது மணிப்பூரில் நடைபெறும் இனக்கலவரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை இனியும் காலம் தாழ்த்தாமல் எடுத்து மக்களையும், ஜனநாயகத்தையும் காப்பற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • எங்கு, எதில் எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது.
    • பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒற்றைத்தன்மையை திணிப்பது நாட்டின் சமநிலையை பாதிக்கும் செயல்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பொதுத்துறை நிறுவனமான LIC இந்தியாவின் இணையதளத்தில் இயல்பு நிலை மொழியாக (Default Language) இந்தி மாற்றப்பட்டிருக்கிறது.

    இந்தி மொழி தெரியாத மக்களுக்கு தற்போது LIC-யின் இணையதளம் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. இணையதளத்தின் மொழி மாற்றும் விருப்பமும் இந்தி மொழியிலேயே இருப்பதால் அதனை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது.

    எங்கு, எதில் எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது.

    மொழி, பண்பாடு, அமைப்பு, அரசியல் என எல்லாவற்றிலும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒற்றைத்தன்மையை திணிப்பது நாட்டின் சமநிலையை பாதிக்கும் செயல். அது ஏற்புடையதல்ல.

    அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் இணையதளத்தின் இயல்புநிலை மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றவும், இந்தி மொழியைத் திணிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார். 

    • நெடுஞ்சாலைத்துறையில் ரூ.680 கோடி ஊழல் செய்ததாக எடப்பாடி பழனிசாமி மீது அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியிருந்தது.
    • அறப்போர் இயக்கம் மீது எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    அறப்போர் இயக்கத்தின் மீது தொடரப்பட்ட மானநஷ்ட ஈடு வழக்கு விசாரணைக்காக உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆஜரானார்.

    கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த போது நெடுஞ்சாலைத்துறையில் ரூ.680 கோடி ஊழல் செய்ததாக எடப்பாடி பழனிசாமி மீது அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியிருந்தது.

    இதனை தொடர்ந்து தன்னைப்பற்றிய அவதூறு பேச்சுக்கு தடை கோரியும், ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கேட்டும் அறப்போர் இயக்கம் மீது எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற உள்ள வழக்கு விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்காக உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜராகி உள்ளார். 




    • தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது.
    • தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்.

    தமிழக வெற்றிக்கழகம் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கழகத் தலைவர் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.

    கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.

    இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆடசி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது.

    ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இதுபோன்ற உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இத்தகையப் பொய்யானச் செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புபவர்களுக்கு நினைவூட்டுகிறேன்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கழகத் தலைவர் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்.

    எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதல் பெற்று இச்செய்திக் குறிப்பு வெளியிடப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

    • 'நன்றி' என்றால் என்னவென்றே தெரியாத எதிர்க்கட்சித் தலைவருக்கு இது புரியாது.
    • நம்முடைய திராவிட மாடல் அரசையும், முதலமைச்சரையும் இன்றைக்கு உலகமே புகழ்கிறது.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    அரசுத்திட்டங்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞருடைய பெயரை ஏன் வைக்கிறீர்கள் என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டிருந்தார்.

    அதற்கான பதிலை திருமண நிகழ்ச்சி ஒன்றில் நான் கூறியிருந்தேன். அதிலும் சமாதானம் அடையாத எதிர்க்கட்சித் தலைவர், ஏதேதோ கேள்விகளை மீண்டும் அடுக்கியுள்ளார்.

    குறிப்பாக, மக்கள் பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரை ஏன் சூட்ட வேண்டும் என்கிறார். 94 வயது வரை தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்த கலைஞரின், பெயரை அரசுத் திட்டங்களுக்கு சூட்டுவதில் என்ன தவறு இருக்கிறது.

    கடந்த காலங்களில், அதிமுக ஆட்சியில், அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு என்றெல்லாம் அரசுத்திட்டங்களுக்கு பெயர்களை சூட்டியது யார்?

    கை ரிக்ஷாவை ஒழித்தது முதல் கம்ப்யூட்டர் கல்வியை தந்தது வரை நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய நம் கலைஞர் பெயரை அரசுத் திட்டங்களுக்குச் சூட்டுவதும், சிலைகள் எழுப்புவதும் கலைஞருக்கு நாம் செலுத்துகிற நன்றியின் வெளிப்பாடு.

    'நன்றி' என்றால் என்னவென்றே தெரியாத எதிர்க்கட்சித் தலைவருக்கு இது புரியாது. யார் காலைப் பிடித்து முதலமைச்சர் ஆனாரோ, அவரின் காலையே வாரிவிட்ட அவர், நன்றி உணர்ச்சி பற்றி தெரியாத காரணத்தால் இப்படியெல்லாம் பேசுகிறார்.

    அவர் வேண்டுமானால், தான் ஊர்ந்து போன டேபிள் - சேருக்கு சிலை வைத்துக் கொள்ளட்டும். நாம் நம்மை ஆளாக்கிய கலைஞருக்கு சிலை வைப்போம்.

    அடுத்தது, அப்பா, மகனை பாராட்டுகிறார்; மகன், அப்பாவை புகழ்கிறார் என்று எதிர்க்கட்சித்தலைவர் வேதனைப்பட்டுள்ளார். அமைச்சர்கள் நாங்கள் மட்டுமல்ல, நம்முடைய திராவிட மாடல் அரசையும், முதலமைச்சரையும் இன்றைக்கு உலகமே புகழ்கிறது. போற்றுகிறது!

    நம் முதலமைச்சர் என்னை மட்டுமல்ல, எந்தத் துறையின் நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், அந்தத்துறையின் அமைச்சரின் செயல்பாட்டினை பாராட்டி ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.

    'தன்னை புகழ யாருமே இல்லையே' என்ற விரக்தியும், 'தான் பாராட்ட அ.தி.மு.க.வில் ஆளேதும் இல்லையே' என்ற ஏமாற்றமுமே எதிர்க்கட்சித்தலைவர் வார்த்தைகளில் வெளிப்படுகிறது.

    'நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான்' என்று என்னை விமர்சனம் செய்திருக்கிறார். ஊர்ந்து போய் பதவி பிடித்த சில கரப்பான் பூச்சிகளுக்கும், விஷ ஜந்துகளுக்கும், என்றைக்கும் நாங்கள் விஷக்காளான்கள் தான்.

    சமூக நீதிக்கொள்கையால் பண்படுத்தப்பட்டு, திராவிட இயக்கத் தலைவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட பயிர்கள் நாங்கள். எங்களைப் பார்த்தால், ஆரியத்தின் அடிவருடிகளுக்கும், அகற்றி வீசப்பட்ட களைகளுக்கும் ஆத்திரம் வருவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

    'எதற்கெடுத்தாலும் நான் அனுபவமிக்கவன் - நான் கடந்து வந்த பாதை யாருக்கும் காணக் கிடைக்காது' என்று தனக்குத்தானே Experience Certificate கொடுத்துக் கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவரே,

    நீங்கள் படித்து முடித்து வீட்டில் பத்திரமாக வைத்துள்ள புத்தகங்களின் பட்டியலை எப்போது சொல்வீர்கள்?

    நீங்கள் சொன்ன அந்த 'சேக்கிழ' ராமாயணத்தை எப்போது தருவீர்கள்?

    உங்கள் கட்சிப் பெயரில் உள்ள 'திராவிடம்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் அறிய அறிஞர்களை கண்டுபிடித்துவிட்டீர்களா?

    இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு எங்களை விமர்சிக்க வாருங்கள். உங்கள் வெற்று வார்த்தைகளும், வீண் சவடால்களும் மக்கள் நலனுக்கான எங்கள் பயணத்தை ஒரு போதும் தடுத்திடாது! என்று தெரிவித்துள்ளார்.

    ×