search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jayakumar Dhanasingh"

    • ஜெயக்குமார் வழக்கில் போதிய தடயங்கள் கிடைக்காததால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறி வருகின்றனர்.
    • சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் உலக ராணி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூரைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார்.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் பாதி எரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது மர்ம மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுமார் 2 மாதங்களுக்கு பின்னரும் அவரது மரண வழக்கில் போதிய தடயங்கள் கிடைக்காததால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறி வருகின்றனர்.

    இதற்கிடையே அவர் இறப்பதற்கு முன் அவரது கைப்பட எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த நபர்களுக்கு சம்மன் அனுப்பி சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே 2 முறை விசாரித்துவிட்ட நிலையில் தொடர்ந்து பல்வேறு நபர்களிடமும், தொழிலதிபர்களிடமும், அரசியல் கட்சி பிரமுகர்களிடமும் தனித்தனியே நேரில் அழைத்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சியிடம் பாளை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் உலக ராணி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். சுமார் அரைமணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.

    அப்போது அவரிடம் ஜெயக்குமாருக்கும், அவருக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது? எத்தனை வருடங்கள் பழக்கம்? ஜெயக்குமார் தனது கடிதத்தில் முதல் நபராக குறிப்பிட்டிருக்கும் ஆனந்த ராஜாவுக்கும், ஜெயக்குமாருக்கும் எத்தனை வருட பழக்கங்கள் இருந்து வந்தது? அவர்களுக்கு இடம் தொடர்பாக ஏதேனும் பிரச்சனை உள்ளதா? என்பது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

    அவற்றுக்கு உரிய பதில்களை ஜோசப் பெல்சி கூறினார். அதனைத் தொடர்ந்து போலீசார் அடுத்ததாக விசாரணைக்கு அழைக்கும்போது வந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறி திருப்பி அனுப்பி வைத்தனர்.

    • 500 எண்கள் கண்டறியப்பட்டு சந்தேகப்படும்படியாக தற்போது 25 செல்போன் எண்களை கண்டறிந்துள்ளனர்.
    • ஜெயக்குமாரின் மர்மச்சாவு வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    நேற்று ஏடிஜிபி வெங்கட்ராமன், சி.பி.சி.ஐ.டி . ஐ.ஜி. அன்பு, போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நெல்லைக்கு வருகை தந்து ஜெயக்குமார் இறந்து கிடந்த அவரது தோட்டம், அவரது வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு செய்தனர். அவர்களது மகன்கள் கருத்தையா, மார்ட்டின் மற்றும் ஜெயக்குமாரின் மனைவி ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக இந்த விசாரணை நடைபெற்றது. முன்னதாக இன்ஸ்பெக்டர் உலக ராணி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் 'டம்ப் டவர்' மூலமாக ஜெயக்குமார் மரணம் அடைந்த நாளன்று அந்த பகுதியில் அதிகம் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்கள் குறித்த விபரங்களை சேகரித்தனர்.

    இதில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட செல்போன் சிக்னல்கள் காட்டப்பட்ட நிலையில் அதனை நேற்று கவனத்துடன் பகுப்பாய்வு செய்தனர். அதில் 500 எண்கள் கண்டறியப்பட்டு சந்தேகப்படும்படியாக தற்போது 25 செல்போன் எண்களை கண்டறிந்துள்ளனர். அந்த 25 செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அந்த நபர்களிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த எண்கள் அனைத்தும் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்ட நாளுக்கு முந்தைய நாள் மற்றும் கொலை செய்யப்பட்ட நாள் அன்று அந்த பகுதியில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த சந்தேக செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அதன் உரிமையாளர்களிடம் போலீசார் தங்களது பாணியில் விசாரிக்கும் பட்சத்தில் இதில் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது தெரிந்து விடும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் கருதுகின்றனர்.

    இதனால் ஜெயக்குமார் வழக்கு சூடு பிடித்துள்ளது. இதன் மூலமாக ஜெயக்குமாரின் மர்மச்சாவு வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே சிபிசிஐடி போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி இன்று 2-வது நாளாக நெல்லையில் முகாமிட்டு இந்த விசாரணையை துரிதப்படுத்தி வருகிறார்.

    மேலும் அவர் விசாரணை குழுவினருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி அதன்படி விசாரணை நடத்த அறிவுறுத்தி உள்ளார்.

    • ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்ததாக கருதப்படும் நாளன்று 5 மணி நேரம் பயன்பாட்டில் இருந்த செல்போன் எண்கள் விபரம் எடுக்கப்பட்டுள்ளது.
    • இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு கட்ட விசாரணைகளின் விபரங்களை கேட்டறிந்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமரண வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக நேற்று திசையன்விளை அருகே கரைசுத்துபுதூரில் உள்ள ஜெயக்குமார் தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பல ஏக்கர் நிலப்பரப்பை பல கிலோ மீட்டர்களுக்கு துல்லியமாக ஆராய்ந்து முப்பரிமாணத்தில் படம் எடுத்துக் கொடுக்கும் திறன் கொண்ட முப்பரிமாண 3-டி லேசர் ஸ்கேனர்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.

    இந்த கேமராவை பயன்படுத்தி ஜெயக்குமார் தோட்டத்தின் 7 ஏக்கர் நிலப்பரப்பையும் அங்குலம் அங்குலமாக ஆராய்ந்தனர்.

    தொடர்ந்து 'டம்ப் டவர்' மூலமாக சம்பவம் நடந்த நாளன்று ஜெயக்குமாரின் தோட்டத்தை சுற்றிலும் அதிகம் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்களை அறியும் சோதனை நடைபெற்றது. அதில் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்ததாக கருதப்படும் நாளன்று 5 மணி நேரம் பயன்பாட்டில் இருந்த செல்போன் எண்கள் விபரம் எடுக்கப்பட்டுள்ளது.

    அதில் லட்சக்கணக்கான செல்போன் எண்கள் வந்திருப்பதாகவும், சந்தேகப்படும் நபர்களின் எண்களை எடுத்து அவர்களிடம் விசாரிக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி இன்று நெல்லை வந்தார். அவர் பாளை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு நவ்ரோஜ், விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் உலகராணி ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு கட்ட விசாரணைகளின் விபரங்களை கேட்டறிந்துள்ளார். மேலும் அந்த விசாரணை அறிக்கையையும் அவர் படித்து அது தொடர்பான விளக்கங்களை கேட்டார்.

    இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. அன்பு நெல்லைக்கு வர உள்ளதாகவும், அவர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் தியைன்விளை கரைசுத்துபுதூரில் உள்ள ஜெயக்குமாரின் வீடு மற்றும் தோட்டங்களில் ஆய்வு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ×