search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalaignar Ulagam"

    • ஒருவர் ஒரு அலைபேசி எண்ணின் மூலம் அதிகபட்சமாக 5 அனுமதிச் சீட்டுகள் வரை பெற்றுக்கொள்ள இயலும்.
    • பொதுமக்கள் தங்களுக்கு வசதியான காட்சி நேரத்தை தேர்வுசெய்து முன்கூட்டியே அனுமதிச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் மிகச் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு, 26-2-2024 அன்று முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

    பல்லாயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதனுடன், கருணாநிதியின் இலக்கிய, அரசியல் வாழ்க்கை வரலாற்றினைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் அந்நினைவிட வளாகத்தில் நிலவறையில் நவீன தொழில்நுட்பங்களுடன் பல்வேறு அரங்கங்களுடன் "கலைஞர் உலகம்" என்னும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.


    இந்த கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தில், கருணாநிதியின் நிழலோவியங்கள், உரிமை வீரர் கலைஞர், கலைஞருடன் ஒரு புகைப்படம், புதிரை வெல் கலைஞர் வழிசெல், அரசியல் கலை அறிஞர் கலைஞர், கலைஞருடன் ஒரு நேர்காணல், நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி, பண்பாட்டுப் பேழை, கலைஞரின் வரலாற்றுச் சுவடுகள், கலைஞரின் மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள், சரித்திர நாயகனின் சாதனைப் பயணம் போன்ற அரங்கங்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்தக் கலைஞர் உலக அருங்காட்சியகத்தினைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு 6-3-2024 புதன்கிழமை முதல் அனுமதிக்கப்படும். இதனை பார்வையிடுவதற்குத் தமிழ்நாடு அரசின் https://www.kalaignarulagam.org/ என்ற இணைய முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய முகவரியில் பொதுமக்கள் பதிவு செய்து அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

    கலைஞர் உலகத்திற்கான அனுமதிச் சீட்டு பெறுவதற்குக் கட்டணம் ஏதுமில்லை. முற்றிலும் இலவசமாக கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் கண்டு களிக்கலாம்.

    ஒருவர் ஒரு அலைபேசி எண்ணின் மூலம் அதிகபட்சமாக 5 அனுமதிச் சீட்டுகள் வரை பெற்றுக்கொள்ள இயலும். இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டுடன் வருபவர்களுக்கு நிலவறையிலுள்ள உலகத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

    மேலும், ஒவ்வொரு நாளும் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 6 காட்சிகளாக நடைபெறும். பொதுமக்கள் தங்களுக்கு வசதியான காட்சி நேரத்தை தேர்வுசெய்து முன்கூட்டியே அனுமதிச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம். அக்காட்சியினைக் காண வரும் பொதுமக்கள், காட்சி நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகைபுரிய வேண்டும். கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பார்வையிட ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் ஆகும்.

    முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிச் சீட்டு ஏதும் தேவையில்லை.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×