என் மலர்
நீங்கள் தேடியது "அரசு ஊழியர்"
- அரசுத்துறைகளில் தகுதியற்ற அனைத்து ஊழியர்களையும் விடுவிப்பது நல்லது என கருதுகிறோம்.
- அவர்கள் அரசு வேலைக்கு தகுதியற்றவர்கள். அவர்கள் பணியில் இருந்து வெளியேறுவது நல்லது.
ஐசால்:
மிசோரம் மாநில கல்வித்துறையின் முன்முயற்சிகள் தொடர்பாக ஐசால் நகரில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல் மந்திரி லால்துஹோமா பங்கேற்று பேசியதாவது:
மிசோரம் மாநிலத்தில் ஒழுங்காக வேலை செய்யாத அரசு ஊழியர்களை கண்டறிந்து அவர்களை வேலையில் இருந்து விடுவிக்க அரசு முடிவு செய்துள்ளது.
அரசுத் துறைகளில் தகுதியற்ற அனைத்து ஊழியர்களையும் விடுவிப்பது நல்லது என கருதுகிறோம். அவர்கள் இனி அரசு வேலைக்கு தகுதியற்றவர்கள். உரிய விதிமுறைகளின்படி அவர்கள் பணியில் இருந்து வெளியேறுவது நல்லது.
சிறப்பாக வேலை செய்யும் திறமையான ஊழியர்களை பணியமர்த்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
தகுதிவாய்ந்த மற்றும் திறமையான பணியாளர்கள் இருப்பதை உறுதிசெய்ய முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
மாநில அரசு ஊழியர்களின் பணிக்காலம் மற்றும் அவர்களின் சேவைகளை மறுபரிசீலனை செய்ய அந்தந்தத் துறைகளில் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.
அனைத்துத் திட்டங்களும் முறையாகவும், திறம்படவும் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார்.
- கடந்த தேர்தலில் நமக்கு எதிராக இருந்தவர்கள் அரசு ஊழியர்களும், ஆசிரியப் பெருமக்களும் தான்.
- தாய்மார்கள் பிரசவத்தின்போது குழந்தையை பார்த்து மகிழ்ச்சி அடைவது போல மகிழ்ச்சி அடைந்தேன்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. கள ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:
கடந்த தேர்தலில் நமக்கு எதிராக இருந்தவர்கள் அரசு ஊழியர்களும், ஆசிரியப் பெருமக்களும் தான்.
நான் எம்.எல்.ஏ.வாக திண்டுக்கலில் 22 ஆயிரம் ஓட்டில் வெற்றி பெற்று, கையெழுத்து போடப்போகும்போது துணை தாசில்தார் ஓடி வந்தார்.
தபால் ஓட்டு எண்ணுகிறோம். கொஞ்ச நேரம் இருங்கள். கையெழுத்து போடாதீர்கள் என்று கூறினார்.
சரி வரட்டும். 1000, 2000 ஓட்டுகள் அதிகமாக கிடைக்கும் என்று உட்கார்ந்து இருந்தேன். 5000 ஓட்டு உங்களுக்கு குறைந்து போய் விட்டது என்றார்கள்.
தபால் ஓட்டுகள் திமுகவிற்கு போய் விட்டது. 5000 குறைத்து 17,500 ஓட்டில் நீங்கள் ஜெயித்தீர்கள் என்று கூறினார்கள்.
அதையாவது எனக்கு கொடுங்க... நான் ஜெயித்து விட்டேன்ல. அதுபோதும் என்றேன்.
தாய்மார்கள் பிரசவத்தின்போது குழந்தையை பார்த்து மகிழ்ச்சி அடைவது போல மகிழ்ச்சி அடைந்தேன்.
என் தொகுதியில் 1 தபால் ஓட்டு கூட எங்களுக்கு வரவில்லை. எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் பாருங்கள். அடக்கொலைகாரப் பாவிகளா...
தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் குடும்பத்தினர் ஓட்டு 80 லட்சம் ஓட்டு. விளையாட்டு கிடையாது தோழர்களே என்று அவர் பேசினார்.
- தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க. அரசுக்கு முதலில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை தி.மு.க. அரசு விரைந்து எடுக்க வேண்டும்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும், ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு புதிய வரிகள் மூலம் அரசின் வருமானம் அதிகரிக்கப்பட்ட நிலையிலும், இந்த கோரிக்கையை நிறைவேற்றாது தி.மு.க. அரசு காலத்தைக் கடத்துவதைப் பார்த்தால், இந்த கோரிக்கை நிறைவேறாதோ என்ற அச்சம் தான் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நிலவுகிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க. அரசுக்கு முதலில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல், "வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ" என்பதற்கேற்ப அ.தி.மு.க. ஆட்சியின் மீது பழிபோடாமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை தி.மு.க. அரசு விரைந்து எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அரசு ஊழியர்கள் பக்கம் நிற்பதும், கோரிக்கையை நிறைவேற்றுவதும் திமுகதான் என்பதை அவர்களே அறிவார்கள்.
- மொட்டை காகித அறிக்கை என்றால் அது அதிமுகதான் என்பது உலக வரலாறு
ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்களை ஒடுக்கிய எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு அரசு ஊழியர்களுக்காக அக்கறை நாடகம் நடத்துகிறார். அரசு ஊழியர்கள் திமுக பக்கம்தான் நிற்பார்கள் என்பதை தேர்தல் வரலாறு சொல்லும் என்று நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கை 'மொட்டை'த் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல இருக்கிறது. 'சசிகலா காலில் ஊர்ந்து சென்று முதல்வர் பதவி வாங்க முடியும்' என அரசியலில் புதிய Thesis படைத்து Ph.D. பட்டம் பெற்ற பழனிசாமி 'கபட வேடதாரி' என்றெல்லாம் பேசலாமா?
அரசு ஊழியர் தொடர்பாகத் தி.மு.க. வெளியிட்ட விளக்க அறிக்கையை 'மொட்டைக் காகித அறிக்கை' எனச் சொல்லியிருக்கிறார் திரு. பழனிசாமி. மொட்டைக் காகித அறிக்கை என்றால், அதனை எப்படிப் பத்திரிகைகள் பிரசுரித்திருக்கும்? டிவி சேனல்கள் செய்தி வெளியிட்டிருக்கும்? என்ற அடிப்படைகூட தெரியாமல் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இருப்பாரா?
'மொட்டைக் காகித அறிக்கை' என்றால் அது அ.தி.மு.க. என்பதுதானே உலக வரலாறு! ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளுக்கும் சேர்த்து 'மொட்டையாக' வேட்பாளர் பட்டியல் வெளியானது; 2007-இல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் 'எனக்குத் தெரியாமலேயே என் கட்சி எம்.எல்.ஏ-க்களும் எம்.பி-க்களும் வாக்களிக்கப் போனார்கள்' என ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டது; டான்சி வழக்கில், 'ஆவணத்தில் உள்ளது என் கையெழுத்தே இல்லை' என ஜெயலலிதா சொன்னது எல்லாம் அ.தி.மு.க அடித்த மொட்டைதானே!
அனைத்துப் பிரிவு மக்களையும் அரவணைத்துச் செல்வதுதான் ஒரு அரசின் கடமை. அரசு ஊழியர்கள்கூட குடிமக்கள்தான். ஆனால், அவர்களை அ.தி.மு.க. என்றைக்குமே மதித்ததில்லை. ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும்கட்சியாக இருந்தாலும் அரசு ஊழியர்களைக் கனிவாகவே தி.மு.க. நடத்தும். ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி என யார் ஆட்சியில் இருந்தாலும் அ.தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஒடுக்கப்பட்டனர். அவர்களின் கோரிக்கைகள் உதாசீனப்படுத்தப்பட்டன. உரிமைக்காகப் போராடியவர்கள் மீது வழக்குகளும் துறைரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன என்பதுதான் கடந்தகால வரலாறு.
2001-இல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா 24-7- 2001 அன்று திருவல்லிக்கேணியில் நடைபெற்ற அரசு ஊழியர்கள் சங்கக் கட்டடத் திறப்பு விழாவில் பேசும்போது ''அரசின் வரி வருவாயில் 94 சதவிகிதம் அரசு ஊழியர்களுக்கே செலவாகிறது" என்று சொல்லி அரசு ஊழியர்கள் மீதான வெறுப்பை வெளிக்காட்டினார். அதோடு அரசு ஊழியர்கள் அனுபவித்து வந்த பல சலுகைகளை அதிரடியாகப் பறித்தார்.
அதனை எதிர்த்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்கள் 2003 ஜூலை 2-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா அடக்குமுறையைப் பிரயோகித்து ஒடுக்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை விசாரணை நடத்தாமல் டிஸ்மிஸ் செய்யும் எஸ்மா சட்டத்தை 04-07-2003-இல் பிறப்பித்தார் ஜெயலலிதா. அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை எல்லாம் நள்ளிரவில் வீடு தேடிப் போய்க் கைது செய்து சிறையில் அடைத்தனர். 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்தனர். ஒன்றரை இலட்சம் அரசு ஊழியர்களை ஒரே கையெழுத்தில் டிஸ்மிஸ் செய்தனர். 'ஸ்டிரைக் செய்ய மாட்டோம்' என்ற உறுதிமொழியுடன் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிப் பலரை மீண்டும் வேலைக்குச் சேர்த்தார்கள். ''கடமையைச் செய்யக் காத்திருக்கிறோம் அரசு ஊழியர்களுக்கு மறுவாழ்வு தாருங்கள்'' என முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தலைமைச் செயலக ஊழியர் சங்கத் தலைவர் பாண்டுரங்கன் விடுத்த கோரிக்கையை எல்லாம் ஜெயலலிதா புறந்தள்ளினார்.
ஜெயலலிதாவுக்குக் கொஞ்சமும் சளைத்தவர் அல்ல பழனிசாமி. ஜெயலலிதாவின் வழித்தோன்றலான பழனிசாமிதான் முதலமைச்சராக இருந்தபோது தொடக்கப் பள்ளி ஆசிரியர் வாங்கும் சம்பளத்தைக் குறிப்பிட்டு ''இவ்வளவு சம்பளமா?'' என இழிவுபடுத்தினார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய அரசு ஊழியர்களையும் , ஆசிரியர்களையும் பார்த்து ''அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் போராடலாமா?'' என தனது வெறுப்பை வெளிப்படுத்தினார்.
பழனிசாமி ஆட்சியில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்ய வேண்டும், 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ 2019 ஜனவரியில் போராட்டத்தை நடத்தியது. அன்றைக்கு பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறைக்கு பொறுப்பு வகித்த அமைச்சர் ஜெயக்குமார் தனது வழக்கமான கேலி கிண்டல் பத்திரிகையாளர் சந்திப்பைப் போலவே அந்தப் போராட்டத்தையும் டீல் செய்தார். ''கோரிக்கையை ஏற்க முடியாது. பணிக்குத் திரும்பாவிட்டால் நடவடிக்கை பாயும்'' என்றெல்லாம் மிரட்டல் விடுத்தார். ''அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தர, மக்களிடம் கூடுதல் வரி விதிக்க வேண்டி வரும்'' எனக் காட்டமாகச் சொன்னார்.
அரசு ஊழியர் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது 2019 ஜனவரி 27-ஆம் தேதி அனைத்து நாளிதழ்களிலும் முக்கால் பக்கத்துக்கு அமைச்சர் ஜெயக்குமாரின் பெயரில் விளம்பரம் வெளியிட்டது பழனிசாமி அரசு. `பிற தனியார் நிறுவனத்தைக் காட்டிலும் அதிகச் சம்பளத்தை அரசு ஊழியர்கள் பெறுகின்றனர்' எனச் சொல்லி அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தையும் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டு அரசு ஊழியர்களை அவமானப்படுத்தியது யார்? 'தனியாரைவிட அரசு ஊழியர்கள் அதிகச் சம்பளம் வாங்குகிறார்கள் அவர்களுக்கு எதற்குப் போராட்டம்?' என அந்த விளம்பரத்தில் கேள்வி எழுப்பியது எல்லாம் பச்சைப் பொய் பழனிசாமிக்கு மறந்துவிட்டதா? இந்த விளம்பரத்தை அனைத்து நாளிதழ்களிலும் அனைத்துப் பதிப்புகளிலும் அந்த விளம்பரத்தை வெளியிடுவதற்காக 50 லட்சம் ரூபாயைச் செலவழித்தனர்.
இதேபோலதான் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தையும் ஒடுக்கியது பழனிசாமி அரசு. ஜாக்டோ-ஜியோ போராட்டத்தைப் போலவே பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டது பழனிசாமி அரசு. அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 13-ஆவது ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட ஊதிய உயர்வு விவரங்களைத் தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடுவதற்காக அன்றைக்கு 46,54,361 ரூபாய் செலவிட்டனர்.
பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது செப்டம்பர் 7,2017-ஆம் தேதி முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து, 7-வது ஊதியக் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் 9 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். அவர்களின் போராட்டத்தையும் கோரிக்கைகளையும் சிறிதும் மதிக்காமல் 85 ஆயிரம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்த அரசுதான் அ.தி.மு.க. அரசு. இப்போராட்டங்களுக்குப் பிறகுதான் அன்றைய அ.தி.மு.க. அரசு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியது. இன்று அதனைத் தனது சாதனையாக குறிப்பிடும் பழனிசாமி அவர்களின் உள்ளத்தில் உண்மை இருந்தால் அதைச் சொல்வதற்குக் கூசியிருக்க வேண்டும்.
அனைத்திற்கும் மேலாக 2016, 2017, 2019 ஆண்டுகளில் பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராடிய அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பழிவாங்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மீது குற்றக் குறிப்பாணைகள் (17B), இடமாற்றம், பணியிடைநீக்கம், வழக்கு போன்ற ஒடுக்கு முறைகளை ஏவிய பழனிசாமி "எங்களது ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்த முடியும்" எனக் கூறுவது பச்சைப் பொய்யாகும். "கெட்டிக் காரன் புளுகு எட்டு நாளைக்கு" என்பார்கள் ஆனால் பழனிசாமி அடித்து விடுகின்ற பொய்கள் எட்டு நிமிடத்திற்குக் கூட தாங்காது.
ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்களை ஒடுக்கிய பழனிசாமி இன்றைக்கு அரசு ஊழியர்களுக்காக அக்கறை நாடகம் நடத்துகிறார். ''பிரதான எதிர்க்கட்சி என்பது ஒரு நிழல் அரசைப் போன்றது. அது சுட்டிக்காட்டும் குறைகளை, நேர்மையான ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள்' எனச் சொல்லியிருக்கிறார் பழனிசாமி. ஆட்சியில் இருந்தபோது Sadist Government போல ஆட்சி நடத்தி அரசு ஊழியர்களை ஒடுக்கியவர்கள் இப்போது நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.
அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாரால், எப்போது திரும்பப் பெறப்பட்டது என்பதை அரசு ஊழியர்கள் அறியாதவர்கள் இல்லை. 2021-ஆம் ஆண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பதவியேற்றவுடன் 13.10.2021 அன்று வெளியிட்ட அரசாணையில் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் திரும்பப் பெறப்பட்டன.
அ.தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறைகளை நீக்கிய அரசு திராவிட மாடல் அரசு. மேலும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வழியில் செயல்படும் இந்த அரசு அரசு ஊழியர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் கடமையை என்றும் கைவிட்டதில்லை. அரசு ஊழியர்களுக்கும் தி.மு.க.விற்கும் இடையிலான உறவு மிகவும் வலிமையானதாகும். அதில் பிளவு ஏற்படுத்தலாம் என பகற்கனவு காணும் பழனிசாமியின் மீது அனுதாபம் கொள்ளலாமே தவிர வேறெதுவும் சொல்வதற்கில்லை.
தொடர்ந்து அரசு வேலைவாய்ப்புகளை அதிகமாக உருவாக்கி இளைஞர்களுக்கு வழிகாட்டும் அரசாக விளங்கும் இந்த அரசு, அரசு ஊழியர்களின் நலனைப் பாதுகாத்தும் அவர்கள் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து நடைமுறைப்படுத்தியும் வருகின்றது. அதற்குச் சாட்சியமாய் விளங்குவதுதான் தொடர்ந்து தேர்தல்களில் மக்கள் தி.மு.க.விற்கு அளித்து வரும் வெற்றிகள்.
'கபட வேடதாரி' பழனிசாமியையும் அ.தி.மு.க.வையும் அரசு ஊழியர்கள் நம்ப மாட்டார்கள். அரசு ஊழியர்கள் பக்கம் நிற்பதும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தி.மு.க.தான் என்பதை அரசு ஊழியர்கள் அறிவார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வெறுப்பு அ.தி.மு.க.வின் உதிரத்திலேயே ஊறியிருக்கிறது என்பதை அரசு ஊழியர்கள் அறியாதவர்கள் அல்லர். இந்த உண்மைகளை மறைத்து விட்டுப் பழனிசாமி இன்று வடிக்கும் முதலைக்கண்ணீரைப் பார்த்தால் முதலையே தோற்றுவிடும் போலிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
- பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
- அரசு ஊழியர்களுக்கு இதைவிடக் கொடுமையான துரோகத்தை எவராலும் செய்ய முடியாது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் 309-ம் வாக்குறுதியாக, ''புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்'' என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், பள்ளிக்கல்வித்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் ஆசிரியர்களின் நிதி சாராத கோரிக்கைகளை மட்டும் ஆய்வு செய்ய ஆணையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதி சார்ந்த எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாது என்று கூறிவிட்டதாக தெரிகிறது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளும் இதை உறுதி செய்துள்ளனர். தங்களின் வாழ்நாள் முழுவதும் தி.மு.க.வை ஆதரித்து வந்த அரசு ஊழியர்களுக்கு இதைவிடக் கொடுமையான துரோகத்தை எவராலும் செய்ய முடியாது.
சிலரை சில முறை ஏமாற்றலாம், பலரை பலமுறை ஏமாற்றலாம். ஆனால், அனைவரையும் அனைத்து முறையும் ஏமாற்ற முடியாது. தி.மு.க.விடம் தொடர்ந்து ஏமாறுவதற்கு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் ஏமாளிகள் அல்ல. தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோத செயல்பாடுகளுக்கு பழி தீர்க்கும் வகையில் 2026 தேர்தலில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சரியான பாடம் புகட்டுவார்கள்.
2026-ம் ஆண்டில் அமையவிருக்கும் பா.ம.க. அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சியில் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் சார்பில் அளித்த புகாரில், 6 பிரிவுகளில் திருநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- நடிகை கஸ்தூரி மீது திருச்சி குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில், நடிகை கஸ்தூரி மீது மதுரையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் சார்பில் அளித்த புகாரில், 6 பிரிவுகளில் திருநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், நடிகை கஸ்தூரி மீது திருச்சி குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது நேற்று 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில், அரசு ஊழியர்கள் குறித்த நடிகை கஸ்தூரியின் சர்ச்சை பேச்சுக்கு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்களின் குறிப்பிட்ட பிரிவினர் அதிக லஞ்சம் பெறுவதாக பேசிய நடிகை கஸ்தூரியின் தரம் தாழ்ந்த பேச்சிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் நிகழ்வுகளை வைத்து, குறிப்பிட்ட பிரிவுகளை சார்ந்த ஊழியர்களை கொச்சைப்படுத்துவதா ? என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறிப்பிட்ட பிரிவினர் மீது தவறான பிம்பம் ஏற்படும் வகையில் விதமாக பேசிய நடிகை கஸ்தூரி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
- அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ந்தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்.
- அரசுக்கு ரூ.16 கோடி கூடுதலாக செலவாகும்.
புதுச்சேரி:
தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதுபோல் தமிழக அரசும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியது.
இந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவை பின்பற்றி, புதுச்சேரியில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு மேலும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதி துறை சார்பு செயலர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவு அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இதன் மூலம் புதுவை அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.580 முதல் ரூ.6 ஆயிரத்து 800 வரை கிடைக்கும்.
இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ந்தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். இதன் மூலம் 20 ஆயிரம் புதுவை அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூ.16 கோடி கூடுதலாக செலவாகும்.
- 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
- ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் பல முன்னோடி நலத்திட்டங்களை மக்கள் நலன் கருதி சிறப்புற நடைமுறைப்படுத்துவதில் பெரும் பங்காற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு கருத்தில் கொண்டு, அவர்களது நலன் காக்கும் வகையில் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த வகையில் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு 01.07.2024 முதல் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 53 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் முதல்-அமைச்சர் இதனை கனிவுடன் பரிசீலித்து 01.07.2024 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார்.
இதனால் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்து 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய் 1,931 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள். ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்."
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு.
- மனித வள மேலாண்மைத் துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு அலுவலர்கள் அலுவலக நேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தவறாமல் அணிய, துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் வலியுறுத்த வேண்டும் என்று மனித வள மேலாண்மைத் துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளது.
புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணியாத அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
- சீனர்களின் சராசரி ஆயுள் தற்போது 78 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
- உடல் உழைப்பு தொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு ஓய்வு பெறும் வயது 50-ல் இருந்து 55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பீஜிங்:
சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை சரிந்து வருகிறது. அதே வேளையில் அங்கு வயதானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு 5-ல் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராக உள்ளார்.
கடந்த 1949-ல் 36 ஆண்டுகளாக இருந்த சீனர்களின் சராசரி ஆயுள் தற்போது 78 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த 75 ஆண்டுகளில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது ஆண்களுக்கு 60, பெண்களுக்கு 55 (உடல் உழைப்பு தொழில்களுக்கு 50) என்ற நிலையில் மாற்றமில்லை.
இதனால் அங்கு ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இது அந்த நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது.
இந்த நிலையில் ஓய்வு பெறும் வயது வரம்பை சீன அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி ஆண்களுக்கு ஓய்வு பெறும் வயது 60-ல் இருந்து 63 ஆகவும், பெண்களுக்கு 55-ல் இருந்து 58 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போல் உடல் உழைப்பு தொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு ஓய்வு பெறும் வயது 50-ல் இருந்து 55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த புதிய கொள்கை அடுத்த ஆண்டு (2025) ஜனவரி முதல் அமலுக்கு வரும் எனவும், அடுத்த 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட பின்பு ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு முதன்முறையாக தடை விதிக்கப்பட்டது.
- சில வருடங்களுக்கு பிறகு நன்னடத்தை பேரில் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
1948 ஆம் ஆண்டு தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக முதல் முறையாக தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சர்தார் வல்லபாய் படேல் தடை விதித்தார்.
சில காலங்களுக்கு பிறகு நன்னடத்தை பேரில் அந்த தடை நீக்கப்பட்டது. பின்னர், 1966 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேரவும், அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை விதித்தார்.
அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்வதற்கும் அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் 58 ஆண்டு காலமாக இருந்து வந்த தடையை மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு அண்மையில் நீக்கியது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்க, 1972ம் ஆண்டில் விதிக்கப்பட்ட தடையை, 52 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தான் மாநில பாஜக அரசு நீக்கியுள்ளது.
ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநில அரசுகள், அரசு ஊழியர்களை ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைக்கும் கட்டுப்பாடுகளை ஏற்கனவே நீக்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- வெறும் 26 சதவீத ஊழியர்கள் மட்டுமே இதுவரை இந்த உத்தரவை நிறைவேற்றியுள்ளனர்
- உத்தரப் பிரதேசத்தில் சுமார் 17 லட்சத்து 88 ஆயிரத்து 429 அரசு ஊழியர்கள் உள்ளனர்.
உத்தரப் பிரதேச யோகி ஆதித்தநாத் அரசின் உத்தரவால் அம்மாநிலத்தில் சுமார் 13 லட்சம் அரசு ஊழியர்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் தங்களின் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களை அரசின் மாநவ் சம்பதா [Manav Sampada] இணையத்தில் கட்டாயமாகப் பதிவேற்ற வேண்டும் என்பதே அந்த உத்தரவு.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவில் சொத்து விவரங்களைப் பதிவேற்றம் செய்ய கடைசி தேதியாகக் கடந்த வருட டிசம்பர் 31 ஆம் தேதியை நிர்ணயித்திருந்தது அரசு. பின் அதை ஜூன் 30 வரையும், அதன்பின் ஜூலை 31 வரையும் நீட்டித்திருந்து. ஆனால் வெறும் 26 சதவீத ஊழியர்கள் மட்டுமே இதுவரை தங்களின் சொத்து விவரங்களை அரசின் இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.
எனவே ஆகஸ்ட் 31 வரை கடைசி தேதியை மீண்டும் அரசு நீட்டித்திருந்தது. இந்நிலையில் இந்த மாதம் முடிய இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் தங்களின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்காத ஊழியர்களுக்கு இந்த மாதத்திற்கான சம்பளம் கிடையாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் சுமார் 17 லட்சத்து 88 ஆயிரத்து 429 அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 26 சதவீதம் பேர உத்தரவை நிறைவேற்றியுள்ள நிலையில், மீதம் இருக்கும் 13 லட்சம் பேர் தங்களின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்காத பட்சத்தில் தங்களின் சம்பளத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.