search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏரல் ஆற்றுப்பாலம்"

    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • ஏரல்-குரும்பூர் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல்-குரும்பூர் இடையே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தரைமட்ட தாம்போதி பாலம் உள்ளது. இந்த பாலமானது மழைக்காலத்தில் தாமிரபரணி ஆற்றில் சிறிதளவு வெள்ளம் வந்தாலும் மூழ்கடிக்கப்பட்டுவிடும். இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.

    எனவே, அங்கு புதிய உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இதனால் ஏரலில் இருந்து பொதுமக்கள் எளிதாக குரும்பூர், குரங்கணி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தனர்.

    இந்த நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான கன அடி தண்ணீர் ஓடியது.

    ஆற்றின் இருபுறமும் கரையை தாண்டி தண்ணீர் சென்றதால் பல்வேறு ஊர்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. ஏரல் தரைமட்ட பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் சென்ற நிலையில், புதிய பாலத்தையும் மூழ்கடிக்கும் அளவுக்கு தண்ணீர் சென்றது. இந்த நிலையில் ஏரல் புதிய பாலத்தின் வடபுற நுழைவுவாயில் பகுதியில் சுமார் 15 அடி அகலத்துக்கு பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அங்குள்ள கூட்டுகுடிநீர் திட்ட குழாயும் உடைந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வீணாக கலக்கிறது.

    இதனால் ஏரல்-குரும்பூர் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஏரல் பகுதியில் மின்சாரமும், தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டு இருந்த நிலையில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

    ஏரல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கும் தொலைத்தொடர்பு வசதி கிடைக்காததால், அவர்களை உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் வெளியூர்களில் வசிக்கும் ஏரல் பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் ஏரல் மக்களை தொடர்பு கொள்ள முடியாமல் பரிதவித்து வருகிறார்கள். 

    ×