search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய டாக்டர்"

    • அபுதாபியில் உள்ள பிரதான சாலைக்கு இந்திய டாக்டர் மேத்யூவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
    • அபுதாபி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய முதல் இந்திய டாக்டர் என்ற பெயரை பெற்றார்.

    அபுதாபி:

    இந்தியாவின் கேரள மாநிலத்தில் பிறந்தவர் டாக்டர் ஜார்ஜ் மேத்யூ (84). இவர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். இவருக்கு திருமணமாகி வல்சா என்ற மனைவியும், மர்யம் என்ற மகளும் உள்ளனர்.

    கடந்த 1967-ம் ஆண்டு தனது 27-வது வயதில் முதல் முறையாக நாடு ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன் அமீரகத்துக்கு டாக்டர் மேத்யூ குடும்பத்துடன் வருகை புரிந்தார். அமீரகத்தில் உள்ள அல் அய்ன் பகுதியில் குடியேறினார். அதன்பின், அங்குள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றிய முதல் இந்திய டாக்டர் என்ற பெயரை பெற்றார்.

    தொடர்ந்து, அமீரகத்தில் மருத்துவத் துறையில் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றிய அவர் கடந்த 1972-வது ஆண்டில் அல் அய்ன் பகுதியின் மருத்துவ இயக்குனராக பணியாற்றினார்.

    மருத்துவ பணியில் இவர் ஆற்றிய சேவைகளைப் பாராட்டும் விதமாக கடந்த 2004-ம் ஆண்டு இவரது குடும்பத்துக்கு அமீரக அரசு குடியுரிமை வழங்கியது. இதையடுத்து, அபுதாபி விருதை கடந்த 2018-ம் ஆண்டு பெற்றார்.

    இந்நிலையில், அமீரகத்துக்கு டாக்டர் மேத்யூ அளித்த பங்களிப்பை நினைவுகூரும் வகையில் அபுதாபி மாநகராட்சி மற்றும் போக்குவரத்துத் துறை சார்பில் அல் மப்ரக் பகுதியில் ஷேக் ஷேக்கபுத் மருத்துவ நகரம் அருகில் உள்ள சாலைக்கு டாக்டர் ஜார்ஜ் மேத்யூ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக டாக்டர் மேத்யூ செய்தியாளர்களிடம் கூறுகையில், எனது முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைத்தது பெருமையடைய வைத்துள்ளது. எனது சேவைகளுக்காக அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானிடம் விருது பெற்றேன். நான் வாழும் வரை அமீரகத்திற்காகவும், அதன் குடிமக்களுக்காகவும் என்னால் முடிந்த அனைத்து மருத்துவ சேவைகளையும் செய்ய தயாராக இருக்கிறேன். இறைவன் எனக்கு சேவை செய்ய அதிக நேரத்தை கொடுக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என தெரிவித்தார்.

    ×