search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pudukottai Tea Shop Owner"

    இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க தேனீர் கடையில் மொய் விருந்து நடத்திய உரிமையாளர் ரூ.16 ஆயிரம் வசூல் செய்தார்.
    புதுக்கோட்டை:

    மொய் விருந்து என்றவுடன் அனைவரின் ஞாபகத்திற்கும் வருவது புதுக்கோட்டை மாவட்டம் தான். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் ஆலங்குடி, கறம்பக்குடி, திருவரங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் மொய் விருந்து நடத்தப்படுவது வழக்கம். கடன், தொழில் நஷ்டத்தால் தவிப்பவர்களை கைதூக்கி விடும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    காலப்போக்கில் அதுவே பிரபலமாகி கோடிக்கணக்கில் வசூலாகி சாதனை படைத்து வருகிறது. தங்களின் தகுதிக்கேற்ப சாப்பிட்டுவிட்டு மொய் வைப்பதன் மூலம் விருந்து வைத்த குடும்பத்தினர் மீண்டெழுந்த வரலாறும் உண்டு. அந்த வகையில் தன்னலம் கருதாமல் இலங்கை தமிழர்களின் நலன் கருதி டீக்கடைக்காரர் ஒருவர் மொய் விருந்து வைத்து அசத்தியுள்ளார். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    இலங்கையில் தற்கபோது கடும் பொருளாதார நெருக்கடியில் வாழும் அங்குள்ள மக்களுக்கு இந்திய அரசு, தமிழக அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் பொதுமக்களும், தன்னார்வலர்களும் நிதி, நிவாரண உதவி வழங்க தமிழக அரசு கேட்டு கொண்டுள்ளது.

    இந்தநிலையில், புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டி இந்திரா நகரில் டீக்கடை நடத்தி வரும் சிவக்குமார் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக தனது கடையில், தேனீர் மொய் விருந்து நடத்தினார். இதில் வாடிக்கையாளர்கள் டீ அருந்தி விட்டு அந்த டீக்கு உரிய பணம் அல்லது தங்களால் முடிந்த நிதியை அங்கு வைத்திருந்த அண்டா வடிவிலான உண்டியலில் செலுத்தினர்.

    காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் அந்த டீக்கடைக்கு வந்து தங்களால் முடிந்த நிதிகளை உண்டியலில் செலுத்தினர்.

    இதுகுறித்து டீக்கடை உரிமையாளர் சிவக்குமார் கூறுகையில், காலையில் இருந்து மாலை வரை 44 லிட்டர் பாலில் டீ வினியோகம் செய்யப்பட்டது. இந்த மொய் விருந்தில் மொத்தம் ரூ.16 ஆயிரத்து 202-ஐ நிதியுதவி அளித்துள்ளனர். இந்த நிதியை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்து தமிழக அரசு மூலம் இலங்கைக்கு அனுப்பப்படும்.

    தனக்கு வாய்ப்பு கிடைத்தால் தமிழக முதல்வரை சந்தித்து அளிக்கவும் ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.

    இவர் கடந்த 2018-ம் ஆண்டில் கஜா புயலால் இந்தப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டபோது, தனது கடையில் பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்கள் கடன் பாக்கி வைத்திருந்த ரூ.28 ஆயிரத்தை தள்ளுபடி செய்தார்.

    அதன்பிறகு கொரோனா பரவல் தொடக்கத்தில் மக்களுக்கு உதவி செய்வதற்காக தனது டீ கடையில் மொய் விருந்து நடத்தி சேகரித்த ரூ.14,452 மற்றும் அவரது வங்கிக் கணக்கிற்கு வந்த ரூ.5 ஆயிரத்தை சேர்த்து கலெக்டர் வழியாக அரசுக்கு அனுப்பிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×