search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    16-ந்தேதி நடைபெற உள்ள எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டத்துக்கு செங்கல்பட்டில் ஏற்பாடுகள் தீவிரம்
    X

    16-ந்தேதி நடைபெற உள்ள எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டத்துக்கு செங்கல்பட்டில் ஏற்பாடுகள் தீவிரம்

    • ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், மதுராந்தகம், அச்சரப்பாக்கம், செங்கல்பட்டு உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
    • ஆர்ப்பாட்டத்துக்கு வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாகனங்களை நிறுத்த இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் தற்போது மின்சார கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

    இந்தநிலையில் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ள தமிழக அரசை கண்டித்தும், மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும், அ.தி.மு.க. சார்பில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் நாளை மறுநாள் (16-ந்தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் செங்கல்பட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார்.

    செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுகுன்றம் ஆறுமுகம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலைமை கழக நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொள்கிறார்கள்.

    மேலும் ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், மதுராந்தகம், அச்சரப்பாக்கம், செங்கல்பட்டு உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

    ஆர்ப்பாட்டத்துக்கு வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாகனங்களை நிறுத்த இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் உள்ள சாலை வழியாகத்தான் புதிய பஸ் நிலையம், அரசு மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், கோர்ட்டு ஆகிய இடங்களுக்கு வழக்கமாக பொதுமக்கள் சென்று வருகிறார்கள்.

    ஆர்ப்பாட்டம் நடைபெறும் 16-ந்தேதி காலை முதலே அங்கு தொண்டர்கள் திரள்வார்கள் என்பதால் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆர்ப்பாட்டத்துக்கான மேடை அமைக்கும் பணிகள் நாளை தொடங்கப்படுகிறது. மேலும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

    ஆர்ப்பாட்டத்தில் அதிக அளவில் தொண்டர்கள் திரள்வார்கள் என்பதால் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் போலீசார் எடுத்து வருகிறார்கள்.

    Next Story
    ×