என் மலர்
உள்ளூர் செய்திகள்

தே.மு.தி.க. பொதுக்குழு-செயற்குழு விரைவில் கூடுகிறது: பிரேமலதா

- தே.மு.தி.க. என்ன நோக்கத்துக்காக தொடங்கப்பட்டதோ அந்த இலக்கை அடைந்தே தீரும்.
- தற்போது உள்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. கட்சி வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை:
தே.மு.தி.க. 18-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இன்று கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் விழா நடைபெற்றது. தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா இதில் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் தே.மு.தி.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளையும் அவர் வழங்கினார். பெண்களுக்கு சேலை, குடம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.
ஆட்டோ டிரைவர்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்துக் கொடுக்கப்பட்டது. பின்னர் பிரேமலதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தே.மு.தி.க. என்ன நோக்கத்துக்காக தொடங்கப்பட்டதோ அந்த இலக்கை அடைந்தே தீரும். தற்போது உள்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. கட்சி வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உள்கட்சி தேர்தல் முடிவடைந்ததும் தே.மு.தி.க. பொதுக்குழு-செயற்குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து மண்டல, மாநில அளவிலான மாநாட்டு ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் பிரேமலதாவிடம், தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தில் ஏற்கனவே இருந்த கட்சிகள் (தே.மு.தி.க. உள்பட) நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அவர் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. அதனால் இப்போது அது பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை என்றார்.
தி.மு.க. எம்.பி. ஆ.ராசா இந்துக்கள் பற்றி அவதூறாக பேசியது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா தே.மு.தி.க., சாதி மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி என்று கூறினார்.