search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமார் உடலை கொண்டு வந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்- சீமான் அறிக்கை
    X

    குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமார் உடலை கொண்டு வந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்- சீமான் அறிக்கை

    • தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நல அமைச்சகமும் செய்யலற்றத் துறையாகவே உள்ளது.
    • வெளிநாடுகளில் தமிழர்கள் கொல்லப்படும் ஒவ்வொரு முறையும் இந்திய தூதரகத்தின் தொடர் அலட்சியப்போக்கு.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வறுமை காரணமாக வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் நாட்டிற்கு பணிக்கு சென்ற திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடியை சேர்ந்த அன்புத்தம்பி முத்துக்குமார் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூர நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

    இதுகுறித்து முத்துக்குமாரின் பெற்றோர் திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தும், அரசிடம் பல முறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ்வித துரித நடவடிக்கையும் எடுக்கப்படாதது வன்மையான கண்டனத்திற்குரியது.

    மோடி அரசின் கீழ் இயங்கும் இந்தியத் தூதரகம் போலவே, தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நல அமைச்சகமும் செய்யலற்றத் துறையாகவே உள்ளது. தம்பி முத்துக்குமாரின் மரணத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள மேல் நடவடிக்கைகள் குறித்து இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உடனடியாக உரிய விளக்கமளிக்க வேண்டும்.

    வெளிநாடுகளில் தமிழர்கள் கொல்லப்படும் ஒவ்வொரு முறையும் இந்திய தூதரகத்தின் தொடர் அலட்சியப்போக்கு, தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தும் இந்திய ஒன்றிய அரசின் மாற்றாந்தாய் மனப்பான் மையின் மற்றுமொரு வெளிப்பாடேயாகும்.

    ஆகவே, இனியாவது இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜனதா அரசு குவைத் அரசிடம் உடனடியாகத் தொடர்புகொண்டு, தம்பி முத்துக்குமாரின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு, சட்டப்படி கடும் தண்டனை தரப்படு வதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும், அவரது குடும்பத்திற்கு அதிகபட்ச துயர் துடைப்பு நிதியைப் பெற்றுத தர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

    மேலும், குவைத் நாட்டிற்கான இந்தியத் தூதரகத்தின் மூலமாக, விரைந்து தம்பி முத்துக்குமாரின் உடலை தாயகம் கொண்டுவந்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×