தமிழ்நாடு

திருவள்ளுவர் சிலையில் வல்லுனர் குழுவினர் ஆய்வு செய்த காட்சி.

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையில் வல்லுனர் குழுவினர் ஆய்வு

Published On 2022-12-18 05:02 GMT   |   Update On 2022-12-18 05:02 GMT
  • திருவள்ளுவர் சிலை கடல் உப்புக்காற்றினால் பாதிப்படையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம்.
  • திருவள்ளுவர் சிலையில் படிந்திருந்த உப்புத்தன்மை முழுமையாக அகற்றப்பட்டு விட்டதா? என்பதனை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டு உள்ளது. இந்த சிலை கடல் உப்புக்காற்றினால் பாதிப்படையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம்.

அதன்படி தற்போது ரூ.1 கோடி செலவில் திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடந்த ஜூன்மாதம் முதல் 5 மாதங்களுக்கு திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

சிலையின் ஒவ்வொரு பகுதியில் உள்ள சிமெண்ட் பாய்ண்ட்களில் படிந்திருக்கும் கடல் உப்பு தன்மை அகற்றப்பட்டு கடுக்காய், சுண்ணாம்பு, பனைவெல்லம் ஆகியவை கலந்த சிமெண்ட் கலவை பூசும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக பொது மேலாளர் பாரதி தேவி, தமிழ்நாடு தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம், மத்திய மின் வேதியியல் ஆய்வக தலைமை விஞ்ஞானி டாக்டர் சரஸ்வதி, விஞ்ஞானி டாக்டர் அருண் சந்திரன், சுற்றுலா வளர்ச்சி கழக திட்ட பொறியாளர் பால் ஜெப ஞானதாஸ், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், மண்டல மேலாளர் டேவிட் பிரபாகர், கன்னியாகுமரி சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் உதயகுமார், குமரி மாவட்ட சுற்றுலா அதிகாரி (பொறுப்பு) சதீஷ்குமார், ஒப்பந்தக்காரர் ராஜன் உள்பட தொல்லியல் துறை வல்லுனர்கள் மற்றும் காரைக்குடியை சேர்ந்த கெமிக்கல் நிறுவன வல்லுநர்கள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது திருவள்ளுவர் சிலையில் படிந்திருந்த உப்புத்தன்மை முழுமையாக அகற்றப்பட்டு விட்டதா? என்பதனை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன் பிறகு சோதனை முறையில் திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

பின்னர் வல்லுனர் குழுவினர் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட அனுமதிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இன்னும் 15 நாட்களில் ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்து திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News