என் மலர்
கன்னியாகுமரி
- திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறையில் இருந்து கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று பார்வையிட்டனர்.
- சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைகின்றனர்.
கன்னியாகுமரி:
சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமையான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டிருந்தனர். அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
அதேபோல விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு விட்டு திரும்பினர்.
அதேபோல் திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறையில் இருந்து கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று பார்வையிட்டனர். மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
தற்போது கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்துவதால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைகின்றனர். மேலும் மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுவதால் வெயில் வெப்பத்தை தணிக்கும் வகையில் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிக ரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
- முட்டை வழங்குவது தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
- அரை மணிநேர தாமத்திற்கு பிறகு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு பல்வேறு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களில் பயணிகளின் வசதிக்காக உணவு தயாரித்து வழங்கும் பெட்டிகள் (பேண்டரி கார்) இணைக்கப்பட்டு இருக்கும்.
இந்த பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள், ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளிடம் ஆர்டர் பெற்று உணவு தயாரித்து வழங்கி வருகின்றனர்.
இதேபோல் ரெயில்களில் ஏ.சி. பெட்டியில் பயணம் செய்பவர்களுக்கு உதவ ஊழியர்களும் பணியில் உள்ளனர். இவர்கள் கம்பளி, போர்வை ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.
நேற்று கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகருக்கு மாலை 5.25 மணிக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதில் பணியில் இருந்த உணவக ஊழியர் ஒருவருக்கும், ஏ.சி. பெட்டியில் பணியாற்றும் ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அவர்கள் பயணிகளை பற்றி கவலைப்படாமல் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் ரெயில் 5.40 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கும் சில பயணிகள் ரெயிலில் ஏறினர். அப்போதும் ஊழி யர்கள் மோதல் நின்ற பாடில்லை. இதனை மற்ற ரெயில்வே பணியாளர்கள் யாரும் கண்டு கொள்ள வில்லை.
தொடர்ந்து நாகர்கோவில் சந்திப்பு நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்டது. ஆனால் சில வினாடிகளில் அந்த ரெயில் நடுவழியில் நின்றது. சந்திப்பு ரெயில் நிலையத்துக்கும், ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட் பகுதிக்கும் இடையே ரெயில் நின்றதால், ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினரும், ரெயில்வே போலீசாரும் விரைந்து சென்று ரெயில் நின்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது ஓடும் ரெயிலில் மோதலில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ஆதரவாக அவர்கள் பணிபுரியும் பிரிவைச் சேர்ந்த மேலும் 2 பேர் வந்ததும், அவர்கள் ஒருவருக்கொருவர் கை கலப்பில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டதாலும் ரெயிலில் பயணம் செய்தவர்களில் சிலர், அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் ரெயில் நின்றது தெரியவந்தது.
இது தொடர்பாக மோதலில் ஈடுபட்ட ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முட்டை வழங்குவது தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஏ.சி. பெட்டியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் திப்ரூ கரை சேர்ந்த தீப் கோகாய் (வயது28), அயன் கோகாய் (28) மற்றும் உணவக பிரிவில் பணியாற்றும் மேற்கு வஙகாளத்தை சேர்ந்த தபான் மொண்டல் (30), பீகாரை சேர்ந்த கைப் (20) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் பின்னர் கைதான 4 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.
இந்த சம்பவம் காரணமாக சுமார் அரை மணிநேர தாமத்திற்கு பிறகு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது. ரெயிலில் பணி யாற்றிய ஊழியர்கள் மோதல் காரணமாக நடு வழியில் ரெயில் நிறுத்தப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார், இரணியலில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
- நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளிலும் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்:
தமிழகத்தில் எத்தனையோ தீர்க்கப்படாத பிரச்சனைகள் உள்ள நிலையில் பாராளுமன்ற தொகுதி மறு வரையறை கூட்டம் நடத்தப்படுவது தேவையற்றது என பா.ஜ.க. குறை கூறி வருகிறது. இந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் இன்று பா.ஜ.க. சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடைபெறும் என்று மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார்.
அதன்படி இன்று (சனிக்கிழமை) தமிழகத்தில் பா.ஜ.க.வினர் தங்கள் வீட்டு முன்பு கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து கருப்புகொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார், இரணியலில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் அவரது வீட்டின் முன்பும், மாநில செயலாளர் மீனாதேவ் நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே உள்ள தனது வீட்டின் முன்பும் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட துணை தலைவர் தேவ் மற்றும் பலர் கருப்புக்கொடியுடன் பங்கேற்றனர்.
மாவட்ட பொருளாளர் முத்துராமன், வெள்ளாடிச்சி விளை வீட்டு முன்பு கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார். இதேபோல் நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளிலும் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.
மாநகராட்சி கவுன்சிலர்கள் ரோசிட்டா திருமால், ரமேஷ் உள்ளிட்ட பலரும் கருப்புக் கொடி போராட்டத்தில் பங்கேற்றனர். குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகளும் ராஜாக்கமங்கலம், அகஸ்தீசுவரம், தோவாளை உள்ளிட்ட பல பகுதிகளிலும் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
- குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் மழை பெய்தது.
- விட்டு விட்டு பெய்த இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து காணப்பட்டது
நாகர்கோவில்:
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக குமரி உள்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று சில இடங்களில் மழை பெய்தது.
குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் மழை பெய்தது. திற்பரப்பு, கோதையாறு, தடிக்காரண்கோணம், கீரிப்பாறை, கொட்டாரம், மயிலாடி உள்பட பல பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு பகுதியில் 36.8 மில்லி மீட்டர் மழை பெய்தது. கொட்டாரத்தில் 3.4, சிற்றாறு-1 பகுதியில் 1.8 மில்லி மீட்டர், சிற்றாறு-2 பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.
இந்த மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது. அதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக நீராடி மகிழ்ந்தனர். நாகர்கோவில் மாநகர் பகுதியில் இன்று காலை வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. சிறிது நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. விட்டு விட்டு பெய்த இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து காணப்பட்டது.
காலை நேரத்தில் பெய்த மழையின் காரணமாக பள்ளி சென்ற மாணவ-மாணவிகளும், வேலைக்குச் சென்று ஆண்-பெண் என அனைவரும் அவதிக்குள்ளானார்கள். அவர்கள் மழையில் நனைந்தபடியே சென்றனர்.
- அரைமணி நேரம் ரெயில் தாமதமாக புறப்பட்டது.
- ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து ரெயிலை கவிழ்க்க தீட்டப்பட்ட சதி முறியடிக்கப்பட்டுள்ளது.
மங்களூர் செல்லும் பரசுராமன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை குமரியில் இருந்து புறப்பட்டது. இரணியல் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்த லோகோ பைலட் ரெயிலை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதன்பின் தண்டவாளத்தில் இருந்த கற்களை அகற்றிய பின்னர் அரைமணி நேரம் ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இதையடுத்து தண்டவாளத்தில் கற்களை வைத்தது யார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லட்சகணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
- பட்டம் பெறும் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இன்றி திணறி வருகின்றனர்.
பாராளுமன்றத்தில் வேலைவாய்ப்பின்மையால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் குறித்து விவாதிக்க விஜய் வசந்த் எம்பி ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். அதில் கூறியிருப்பதாவது:-
வேலையின்மை காரணமாக லட்சகணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இளைஞர்கள், பெண்கள், பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் என, இதன் பாதிப்புக்கு உள்ளாகி திணறும் மக்கள் ஏராளம்.
குறிப்பாக கிராமப்புறங்களில் வேலையின்மை மிக அதிகமாக ஏற்பட்டு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஏற்ற தாழ்வை சரி செய்ய அரசு உரிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை.
மேலும் படித்து பட்டம் பெறும் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இன்றி திணறி வருகின்றனர். மத்திய அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு முன்வரவில்லை.
இந்தியாவின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ள இளைஞர்கள் வேலையின்றி அலைவது இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. மேலும் வேலை வாய்ப்புகள் இல்லாதது பல சமூக சீர்கேடுகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.
இந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அமையும் வண்ணம் அவர்களது திறனை மேம்படுத்த பயிற்சிகள் அளிக்க வேண்டியது அரசின் கடமை.
மேலும் தொழில் முனைவோர்களையும் ஊக்கபடுத்தி அவர்கள் தொழில்கள் தொடங்கவும் அவர்கள் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் அரசு ஆவன செய்ய வேண்டியது கட்டாயம்.
நாட்டில் இன்று நிலவி வரும் இந்த மிக முக்கியமான மக்கள் பிரச்சனையை குறித்து பாராளுமன்றத்தை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பிணமாக கிடந்த சஜின் உடலில் காயங்கள் இருந்தன.
- சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறினார்கள்.
நாகர்கோவில்:
கருங்கல் அருகே உள்ள மாங்கரை தோப்புவிளை பகுதியை சேர்ந்தவர் சஜின் (வயது 24), எலக்ட்ரீசியன். இவர் கடந்த 16-ந்தேதி வேலைக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அங்குள்ள காட்டாற்று குளத்தில் சஜின் பிணமாக கிடந்தார்.
அவரது உடலை போலீ சார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்த சஜின் உடலில் காயங்கள் இருந்தன. எனவே அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறினார்கள்.
இது தொடர்பாக கருங்கல் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்ற னர். இந்த நிலையில் சஜினின் உறவினர்கள் இன்று காலை கருங்கல்-தொலையா வட்டம் சாலையில் மாங்கரை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அப்போது தான் உடலை வாங்குவோம் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் கருங்கல் போலீசார் சம்பவ இடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
- சாதாரண மக்களின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் மருந்துகளின் விலை அதிகரித்து வருகிறது.
- கடந்த 5 ஆண்டில் 800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி எம்.பி.யான விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
அதிகரித்து வருகின்ற அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் விலையினைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை வேண்டும் எனவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளேன்.
சாதாரண மக்களின் அன்றாட பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 800-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
உயிர் காக்கும் மருந்துகளின் விலையும் கடந்த ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது. புற்றுநோய்க்கான மருந்துகள் கடந்த 5 ஆண்டுகளில் 50 சதவீதம், நீரிழிவு நோய்க்கான மருந்துகள் கடந்த 3 ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
ஜெனரிக் மருந்துகள் நகர் மற்றும் கிராமப்புற மக்களைச் சென்றடைவதில் பல தடைகள் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு மருந்து நிறுவனங்களைக் கட்டுப்படுத்த தவறிய அரசின் செயல்கள் இந்த விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது.
உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் போதிய மருந்துகளைத் தயாரித்து விநியோகம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் ஒரு முக்கிய காரணமாகும்.
ஆகவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு புற்றுநோய், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளின் விலையினைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களை ஊக்குவித்து அத்தியாவசிய மருந்துகளை இந்தியாவிலே தயாரிப்பதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களின் விலையுயர்ந்த மருந்துகளுக்கு மாற்றாக அமையும்.
மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்வதைத் தடுக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும்.
ஜெனரிக் மருத்துகள் இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். விலை நிர்ணயம் செய்வதின் காரணங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுவதன் மூலம் மக்களும் விழிப்படைவார்கள். இதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- டாஸ்மாக் ஊழலை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக தமிழக பா.ஜ.க. அறிவித்திருந்தது.
- போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.
நாகர்கோவில்:
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் குடோன் மற்றும் பல்வேறு மதுபான தொழிற்சாலைகளில் அமலாக்கத்துறை கடந்த 6-ந்தேதி சோதனை நடத்தியது. சோதனையில் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இதையடுத்து டாஸ்மாக் ஊழலை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக தமிழக பா.ஜ.க. அறிவித்திருந்தது.
அதன்படி போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தர்ராஜன், எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார் தலைமையில் பாரதிய ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் முத்துராமன், முன்னாள் தலைவர் கணேசன், மாநில மகளிர் அணி செயலாளர் மீனாதேவ், மேற்கு மாநகர தலைவர் சதீஷ் உள்பட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் இரவு விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கோபகுமார், முத்துராமன், கணேசன், சதீஷ், மீனாதேவ் உள்பட 160 பேர் மீது நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல் மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன்பு மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் உள்பட 140 பேர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- ஒரு சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டும் என்ற ஊர் மக்கள் கோரிக்கை வைத்தனர்.
- பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு.
நாகர்கோவில் பெருவிளை பகுதியில் ஒரு சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டும் என்ற ஊர் மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டு அடிக்கல் நாட்டினர்.
இதுதொடர்பாக விஜய் வசந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
- சி.ஐ.எஸ்.எப். உருவான தினத்தை முன்னிட்டு கடற்கரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி கடந்த 7-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- பேரணியை வருகிற 31-ந்தேதி கன்னியாகுமரியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நிறைவு செய்து வைக்கிறார்.
கன்னியாகுமரி:
மத்திய தொழில் பாதுகாப்புப்படையான சி.ஐ.எஸ்.எப். உருவான தினத்தை முன்னிட்டு கடற்கரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி கடந்த 7-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 125 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள ராஜா ஆதித்ய சோழன் ஆர்.டி.சி.மையத்தில் இருந்து கடந்த 7-ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்த பேரணியை தொடங்கி வைத்தார்.
"சுரக்ஷித் தட் சம்ருத் பாரத்" எனப்படும் பாதுகாப்பான கடல் வளம் செழிப்பான இந்தியா என்ற கருப்பொருளுடன் நடத்தப்படும் இந்த சைக்கிள் பேரணி ஒரு விளையாட்டு நிகழ்வாக மட்டுமின்றி தேசப்பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இந்தியாவின் கடற்பாதி பகுதிகளில் நடக்கும் சட்ட விரோத கடத்தல், போதைப்பொருள் வர்த்தகம், ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டு கடத்தல் போன்ற அபாயங்களை மக்களுக்கு எடுத்துக்காட்டுவது இதன் முக்கிய நோக்கம். வடக்கு, தெற்கு 2 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பேரணி நடந்து வருகிறது. 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை கடந்து மொத்தம் உள்ள 6 ஆயிரத்து 553 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவிடத்தில் வருகிற 31-ந்தேதி நிறைவு செய்கின்றனர்.

இந்த பேரணியை வருகிற 31-ந்தேதி கன்னியாகுமரியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நிறைவு செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி அமித்ஷா 31-ந்தேதி கன்னியாகுமரி வருகிறார். இதைத்தொடர்ந்து இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி நடக்கும் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) தென் மண்டல ஐ.ஜி. சரவணன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது கூடங்குளம் அணுமின் நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டர் மாங்கா சவுத்ரி, உதவி கமாண்டர் அசீம் பரத்வாஜ், ஆய்வாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் வன விலங்குகள் அடிக்கடி புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. இவற்றை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினாலும், குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக அவை தொடர்ந்து குடியிருப்புகளுக்குள் வருவது தொடர் கதையாக உள்ளது.
இப்படி வரும் விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் மட்டுமின்றி சில நேரங்களில் மனிதர்களையும் பதம் பார்த்து விடுகிறது. இதில் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இது போன்ற பயமுறுத்தும் சம்பவம் நாகர்கோவில் பள்ளி விளையில் நடந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
நாகர்கோவில் பள்ளி விளை குடோனின் எதிர்புறம் உள்ளது பால்பண்ணை தெரு. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் இன்று காலை வழக்கம் போல் தங்கள் பணிகளுக்காக அங்கும் இங்கும் அலைந்தபோது அவர்களுக்கு போட்டியாக காட்டு மிளா அங்கு வந்தது. அதனை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர்.
காட்டில் ஜாலியாக திரிந்த மிளா, இங்கு மக்களை கண்டதும் மிரள தொடங்கியது. ஆபத்து என கருதி அந்த மிளா சாலையில் அங்கும் இங்குமாக ஓடியது. இதற்கிடையில் மிளாவின் நடவடிக்கையை கண்டு, பயந்து போன மக்கள் பாதுகாப்பான இடத்தை தேடி அலைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சாலையில் ஓடிய மிளா அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடிக்கு செல்லும் வழியில் படிக்கட்டில் ஏறி நின்றது. இதனால் அந்த வீட்டில் இருந்தவர்கள் பயத்தில் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். அந்த வீட்டின் குழந்தைகளும் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது மழையும் பெய்ததால் மிளா இடத்தை விட்டு நகராமல் நின்று கொண்டிருந்தது.
இதற்கிடையில் மிளா ஊருக்குள் புகுந்தது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வருவதில் சற்று தாமதம் ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் மிளாவை பார்த்து அச்சத்தில் இருந்தனர். தொடர்ந்து சம்பவ இடம் வந்த வனத்துறையினர் மிளாவை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் வந்து மிளாவை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். மிளா நின்ற வீட்டின் மாடிக்குச் சென்று அங்கிருந்து கயிற்றை வீசி மிளாவை பிடிக்க முயன்றனர். வீசப்பட்ட கயிறு மிளாவின் கழுத்தில் விழுந்தாலும், அதனை லாவகமாக மிளா கழற்றி விட்டு விட்டது.
இதனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இதற்கிடையில் மிளாவும் அங்கிருந்து நகர்ந்து சாலைக்கு வந்தது. அங்கு திரண்டிருந்த மக்களை பார்த்து அது ஓட்டம் எடுக்க, தங்களை முட்டி தாக்கி விடுமோ என்ற பயத்தில் மக்களும் அலறி யடித்து ஓட அந்த பகுதி பதட்டத்திற்குள்ளானது. சாலையில் ஓடிய மிளா, அங்குள்ள மத்திய அரிசி கிட்டங்கியின் முன்பு சென்று ஓய்வெடுத்தது.
அதனை பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள் வலையை வீசி மிளாவை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களது வலையில் சிக்காமல் மிளா போக்கு காட்டியது. இருப்பினும் முயற்சியை கைவிடாத தீயணைப்பு வீரர்கள், சுற்றி வளைத்து வலைக்குள் மிளாவை சிக்க வைத்தனர். பின்னர் அதனை வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.
அவர்கள் வனப்பகுதிக்கு கொண்டு சென்று மிளாவை விட்டனர். இந்த மிளா ஆலம்பாறை மலைப்பகுதியில் இருந்து ஊருக்குள் வந்திருக்கலாம் என்று தெரிகிறது. சுமார் 3 மணி நேரம் பரபரப்பை ஏற்படுத்திய மிளா பிடிபட்டதும் அந்தப் பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
குமரி மாவட்டத்தில் ஏற்கனவே பல்வேறு இடங்களில் மிளாக்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. தோட்ட பயிர்களை மிளா தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பொற்றையடி, தக்கலை உட்பட பல்வேறு பகுதிகளிலும் தோட்ட பயிர்களை மிளா சேதப்படுத்தி வருகிறது. மிளாவை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.