என் மலர்
ஆசிரியர் தேர்வு
- மகாராஷ்டிராவில் மராத்தி தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமல்ல என்பதை மத்திய அரசு ஏற்கிறதா?
- பாஜக ஆளும் மாநிலத்திலேயே இந்தி கட்டாயமில்லை என கூறியிருப்பதால் மத்திய அரசு தன் முடிவை மாற்றிக் கொள்ளுமா?
மகாராஷ்டிர மாநில பாஜக அரசின் முடிவை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து முதலமைசசர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்தியை 3வது மொழியாக திணிக்க முயன்ற மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸூக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கடுமையான எதிர்ப்பு எழுந்த பிறகு மகாராஷ்டிராவில் மராத்தி மொழி கட்டாயம் என பட்னாவிஸ் கூறுகிறார்.
இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப்படுவதற்கு எதிராக எழுந்த கண்டனத்தின் வெளிபாடு தான் இது.
மகாராஷ்டிராவில் மராத்தி தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமல்ல என்பதை மத்திய அரசு ஏற்கிறதா? பாஜக ஆளும் மாநிலத்திலேயே இந்தி கட்டாயமில்லை என கூறியிருப்பதால் மத்திய அரசு தன் முடிவை மாற்றிக் கொள்ளுமா?
தேசிய கல்விக்கொள்கையின்படி 3வது மொழியை கற்பது கட்டாயமல்ல என மத்திய அரசு தெளிவான உத்தரவு பிறப்பிக்குமா ?
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்திற்கு ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
அநீதியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கான ரூ.2,152 கோடியை மத்திய அரசு விடுவிக்குமா?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியல் சாசனம் கூட்டம் பீகாரில் நடைபெற்றது.
- இதில் கார்கே, பீகார் மாநில காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கரை நினைவு கூறும் வகையில் மத்திய, மாநில, மாவடட் அளவில் ஜெய்பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியல் சாசனம் என்ற கோஷத்துடன் பேரணிகள், கூட்டங்களை காங்கிரஸ் கட்சி நடத்தி வருகிறது.
அந்த வகையில் நேற்று பீகார் மாநிலம் புக்சார் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்ட ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியல் சாசனம் (Jai Bapu, Jai Bhim, Jai Samvidhan) கூட்டம் தல்சாகார் மைதானத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் மல்லிகார்ஜூன உரையாற்றினார். அவரது உரையை கேட்க அதிக அளவில் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான அதிக அளவில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால் கார்கே, மாநிலத் தலைவர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட போதிலும் அதிக அளவில் கூட்டம் வரவில்லை. அதிக அளவிலான இருக்கைகள் காலியாக இருந்துள்ளது.
இதனால் புக்சார் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மனோஜ் குமார் பாண்டே, ஒத்துழைப்பு குறைபாடு காரணமாக கட்சியின் அனைத்து விதமான பதவிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த பேரணியில் பீகார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா அலாவாரு, மாநில காங்கிஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங், புக்சார் ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி. சுதாகர் சிங், சாசாராம் காங்கிரஸ் எம்.பி. மனோஜ் குமார் ராம் மற்றும் பல எம்.எல்.ஏ.-க்கள் கலந்து கொண்டனர்.
- போப்பின் உடல் ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் வைக்கப்பட உள்ளது.
- 100 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட உள்ள முதல் போப் இவர் ஆவார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் காலமானார்.
போப்பின் உடல் ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் வைக்கப்பட உள்ளது. போப் பிரான்சிஸ் மறைவுக்கு 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் தன் கல்லறையை அமைக்க போப் பிரான்சிஸ் விரும்பவில்லை என்றும் ரோமில் உள்ள சான்டா மரியா மேகியார் பசிலிகாவில் தனது கல்லறையை அமைக்க போப் பிரான்சிஸ் விரும்பியதாக கூறப்படுகிறது.
ரோமுக்கு செல்லும்போதெல்லாம் சான்டா மரியா மேகியார் பசிலிகாவுக்கு செல்வதை போப் வழக்கமாக வைத்திருந்தார்.
பொதுவாக போப்பாக உள்ளவர்கள் சைப்ரஸ், ஈயம் மற்றும் கருவாலி மரத்தால் ஆன பேழையில் அடக்கம் செய்யப்படுவார்கள்.
ஆனால், போப் பிரான்சிஸ் ஜிங்க-ஆல் பூசப்பட்ட சவப்பெட்டியில் தன்னை அடக்கம் செய்ய விரும்பியதாக கூறப்படுகிறது.
100 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட உள்ள முதல் போப் இவர் ஆவார்.
மேலும், போப்பின் இறுதிச் சடங்கிற்கு 2 அல்லது 3 வாரங்களுக்குப் பிறகு புதிய போப்பை தேர்தந்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய போப்பை தேர்ந்தெடுக்க கார்டினல்கள் சிஸ்டைன் ஆலயத்தில் கூடுவார்கள். ரகசிய பரிமாணம் செய்து ரகசிய வாக்குச் சீட்டு மூலம் வாக்களிப்பார்கள்.
80 வயதிற்குட்பட்ட கார்டினல்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை உள்ளது.
புதிய போப்பை தேர்ந்தெடுக்க மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை தேவை. ஒவ்வொரு வாக்கெடுப்புக்குப் பிறகும், வாக்குச் சீட்டுகள் எரிக்கப்படும்.
பின்னர் பெரும்பான்மையை பொருத்து புதிய போப் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த வருடம் சிஎஸ்கே நிர்வாகம் சரியாக ஏலம் எடுக்கவில்லை என நான் நினைக்கிறேன்.
- சிஎஸ்கே-வின் கைகளில் நிறைய பணமும் இருந்தது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய 38-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணிக்கு இது 6-வது தோல்வியாகும். சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் வருகிற 25-ந்தேதி சன்ரைசர்சுடன் மோதுகிறது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த நிலைமைக்கு தலைமை பயிற்சியாளர் மற்றும் நிர்வாகம்தான் காரணம் என்று சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து கூறியதாவது:-
இந்த வருடம் சிஎஸ்கே நிர்வாகம் சரியாக ஏலம் எடுக்கவில்லை என நான் நினைக்கிறேன். ப்ரியன்ஷ் ஆர்யா போன்ற நிறைய இளம் மற்றும் திறமையான வீரர்கள் ஏலத்தில் இருந்தனர். சிஎஸ்கே-வின் கைகளில் நிறைய பணமும் இருந்தது. அப்படி இருந்தும் ஷ்ரேயஸ், ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் போன்ற மூத்த வீரர்களையும் நீங்கள் எடுக்கவில்லை. சிஎஸ்கே அணி இந்த அளவிற்கு தடுமாறி நான் பார்த்ததே இல்லை.
தலைமை பயிற்சியாளர் உட்பட அணி நிர்வாகம் நல்ல வீரர்களைத் தேடவில்லை. இது சிஎஸ்கே அணியின் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம். மற்ற அணிகள் விளையாடுவதைப் பார்க்கும்போது, அவர்கள் மிகவும் அதிரடியாக விளையாடுகிறார்கள்.
என்று ரெய்னா கூறினார்.
- குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலாக 30 கோடி ரூபாயை கடந்தது.
- உலக அளவில் இந்தப் படம் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' உலகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்
திரைப்படத்தில் அஜித்தின் பழைய படங்களின் ரெஃபெரன்ஸ் காட்சிகள் மற்றும் பாடல்கள் இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. சிம்ரன் பங்கு பெறும் காட்சி திரையரங்கில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலாக 30 கோடி ரூபாயை கடந்தது. திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலை கடந்துள்ளதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.
உலக அளவில் இந்தப் படம் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தின் OG SAMBAVAM வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
- 34 கோடி ரூபாய் செலவில் 4 தளங்களுடன் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
- ஓராண்டில் இந்த மினி டைடல் பூங்காவின் கட்டுமான பணிகளை முடிக்க தமிழ்நாடு அரசின் தொழில்துறை திட்டமிட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசின் தொழில்துறை டெண்டர் கோரியுள்ளது.
திருவண்ணாமலையில் 34 கோடி ரூபாய் செலவில் 4 தளங்களுடன் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. ஓராண்டில் இந்த மினி டைடல் பூங்காவின் கட்டுமான பணிகளை முடிக்க தமிழ்நாடு அரசின் தொழில்துறை திட்டமிட்டுள்ளது.
2-ம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
- ஓம் பிரகாஷ் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.
- ஓம் பிரகாஷுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சொத்து பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஓம் பிரகாஷ் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். ஓம் பிரகாஷுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சொத்து பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஓம் பிரகாஷின் மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் 10 முறை கத்தியால் அவரது மனைவி பல்லவி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஓம் பிரகாஷின் மனைவியையும் கொலை செய்ததற்கு உதவியாக இருந்ததாக அவரது மகளையும் கைது செய்தனர்.
- பேட்டிங்கில் சூப்பர் பார்மில் உள்ள குஜராத் அணி நடப்பு தொடரில் 5 முறை 180 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது.
- நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 ஆட்டங்களில் ஆடி 3-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. இரு தோல்வி கூட (பஞ்சாப், லக்னோவுக்கு எதிராக) நெருங்கி வந்து தான் தோற்றது.
பேட்டிங்கில் சூப்பர் பார்மில் உள்ள குஜராத் அணி நடப்பு தொடரில் 5 முறை 180 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. சாய் சுதர்சன் (4 அரைசதத்துடன் 365 ரன்), ஜோஸ் பட்லர் (3 அரைசதத்துடன் 315 ரன்), கேப்டன் சுப்மன் கில் (215 ரன்), ரூதர்போர்டு (201 ரன்) ஆகிய 4 பேரும் தான் அந்த அணியின் பேட்டிங் தூண்கள். பெரும்பாலும் இவர்களில் யாராவது ஒருவர் கைகொடுத்து விடுகிறார்கள். பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா (14 விக்கெட்), சாய் கிஷோர் (11 விக்கெட்), முகமது சிராஜ் (11 விக்கெட்) கலக்குகிறார்கள். முந்தைய ஆட்டத்தில் 204 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து டெல்லியை பதம் பார்த்த குஜராத் அணி வெற்றிப்பயணத்தை தொடரும் உத்வேகத்துடன் உள்ளது.
நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 ஆட்டங்களில் ஆடி 3-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது. அந்த அணியின் பேட்டிங், பந்து வீச்சு சீராக இல்லை. ஒன்றில் வெற்றி பெற்றால் அடுத்த ஆட்டத்தில் உடனே தோற்று விடுகிறார்கள். இதுவரை அப்படி தான் நடந்துள்ளது. பஞ்சாப்புக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 112 ரன் இலக்கை கூட தொட முடியாமல் வெறும் 95 ரன்னில் சுருண்டு மோசமாக தோற்றது. பின்வரிசையில் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல் (7 ஆட்டத்தில் 34 ரன்), ரமன்தீப்சிங் (29 ரன்) முக்கியமான தருணங்களில் சோபிக்காதது பலவீனமாக உள்ளது. கேப்டன் ரஹானே (221 ரன்) தவிர வேறு யாரும் அந்த அணியில் 200 ரன்களை தாண்டவில்லை. பேட்டிங், பந்து வீச்சில் நட்சத்திர வீரர்கள் நிறைய பேர் இருந்தாலும், ஒருங்கிணைந்து முழு திறமையை காட்டினால் மட்டுமே குஜராத்தின் சவாலை சமாளிக்க முடியும். இல்லாவிட்டால் சிக்கல் தான்.
- சென்னை அணியில் அறிமுகமான மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை ஆயுஷ் மாத்ரே படைத்தார்.
- ஆயுஷ் மாத்ரே தனது அறிமுக போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்து கவனம் ஈர்த்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 8-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்கஸ் அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் வித்தியாசத்தில் 176 ரன்களை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஜடேஜா 53 ரன்கள், ஷிவம் துபே 50 ரன்கள், ஆயுஷ் மாத்ரே 32 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவரில் 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சென்னை அணியின் 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். இதன் மூலம் சென்னை அணியில் அறிமுகமான மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
14 வயது வைபவ் சூர்யவன்ஷியை போலவே ஆயுஷ் மாத்ரேவும் தனது அறிமுக போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்து கவனம் ஈர்த்தார்.
மும்பையைச் சேர்ந்த ஆயுஷ் மாத்ரே, 15 பந்துகளில் இரண்டு சிக்சர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்தார்.
ஆயுஷ் மத்ரேவின் துணிச்சலான ஆட்டத்தை டிரஸ்ஸிங் ரூமில் நின்றிருந்த சி.எஸ்.கே கேப்டன் எம்.எஸ். தோனி புன்னகையுடன் ரசித்து பார்த்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது.
- அதிபர் டிரம்பின் நடவடிக்கை ஜனநாயகத்துக்கு எதிராக இருக்கிறது.
- அவரது நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின் பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார்.
அதில் வெளிநாட்டவர் வலுக்கட்டாய வெளியேற்றம், அரசு ஊழியர்கள் பணிநீக்கம், கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தம் ஆகியவை மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தின
இவரது இந்த நடவடிக்கை ஜனநாயகத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்நிலையில், நியூயார்க், வாஷிங்டன் ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக சென்றனர்.
அப்போது அதிபர் டிரம்புக்கு எதிரான பதாகைகளை ஏந்திக் கொண்டு சென்ற அவர்கள் வெள்ளை மாளிகையையும் முற்றுகையிட முயன்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. எனவே அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
- கோலி – தேவ்தத் படிக்கல் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி நகர்த்தியது.
- தேவ்தத் படிக்கல் 4 சிக்சர் 5 பவுண்டரியுடன் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இன் 37வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மீண்டும் மோதின.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மோதல் இன்று பஞ்சாபின் முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்து. இதனையடுத்து 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு களமிறங்கியது. பிலிப் சால்ட் 1 ரன் எடுத்திருந்தபோது அர்ஷ்தீப் சிங் வேகத்தில் ஜோஷ் இங்லீஷிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய விராட் கோலி – தேவ்தத் படிக்கல் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி நகர்த்தியது. இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
தேவ்தத் படிக்கல் 4 சிக்சர் 5 பவுண்டரியுடன் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அரைச்சதம் கடந்த கோலி 73 ரன்கள் சேர்த்தார். ரஜத் பட்டிதார் 12 ரன்களும், ஜிதேஷ் சர்மா 11 ரன்களும் எடுத்தனர். முடிவில் ஆர்சிபி 18.5 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
- காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 51,000 த்தை தாண்டியுள்ளது.
- அனைத்து பயணக்கைதிகளையும் ஒப்படைக்க தயார் என ஹமாஸ் தெரிவித்திருந்தது.
இஸ்ரேல்-காசா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
இதனால் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 51,000 த்தை தாண்டியுள்ளது. மக்கள் வசிக்கும் முகாம்கள், தற்காலிக கூடாரங்களை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருவது சர்வதேச அளவில் கண்டனங்களை குவித்து வருகிறது.
இந்நிலையில் போரிடுவதைத் தவிர வேறு வழியில்லை என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, காசாவில் போரிடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஹமாஸ் அழிக்கப்பட்டு, பணயக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை போரை முடிவுக்குக் கொண்டுவர இயலாது.
அவ்வாறு போரிட்டால்தான், இஸ்ரேலுக்கு ஹமாஸ் படையினரால் அச்சுறுத்தல் இருக்காது. போரைத்தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை என்று தெரிவித்தார்.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த 2023, அக்டோபர் 7 இல் ஹமாஸ் இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் 1,200 பேர் வரை இறந்தனர்.
200 பேர் வரை பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். பலர் இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் வைத்து கொல்லப்பட்டனர்.
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை நீடித்த போர் நிறுத்தத்தின்போது இஸ்ரேலிடம் ஹமாஸ் ஒப்படைத்தது. இதற்கிடையே மீதமிருக்கும் அனைத்து பயணக்கைதிகளையும் ஒப்படைக்க தயார் என ஹமாஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.