என் மலர்tooltip icon

    டெல்லி

    • இதற்கு எதிராக அலகாபாத் நீதிமன்ற வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்தனர்.
    • யஸ்வந்த் வர்மா மீது எப்ஐஆர் பதவு செய்யகோரிய பொதுநல மனுவை இன்று விசாரணையின்போது உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

    டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அவருடைய வீட்டிற்குச் சென்று தீயை அணைக்கும்போது கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் 10 கோடி ரூபாய்க்கு அதிகமாக பணம் தீயில் எரிந்து சாம்பல் ஆனதாக கூறப்படுகிறது.

    உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் உள்விசாரணை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது.

    இதற்கு எதிராக அலகாபாத் நீதிமன்ற வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்தனர். இந்நிலையில் கொலிஜியம் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுள்ளது.

     

    இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையுடன், குடியரசுத் தலைவர், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவை, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்ய உத்தரவிடுவதாகவும், யஷ்வந்த் வர்மா நேரடியாக அலகாபாத் உயர் நீதிமன்றம் சென்று தனது பணியை ஏற்றுக்கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே யஷ்வந்த் வர்மா மீது எப்ஐஆர் பதவு செய்யகோரிய பொதுநல மனுவை இன்று விசாரணையின்போது உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

    ஏற்கனேவே உள்ளக விசாரணை நடந்து வருவதாகவும், விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிடுவது அல்லது இந்த விஷயத்தை பாராளுமன்றத்துக்கு பரிந்துரைப்பது உள்ளிட்டவை குறித்து பரிசீலிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

    • பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
    • மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 53% இலிருந்து 55% ஆக உயர்த்தப்படும்.

    டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மத்திய ஊழியர்களின் அகவிலைப்படியை 2% அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இதன் மூலம் அகவிலைப்படி 53% இலிருந்து 55% ஆக உயர்த்தப்படும். எனினும் இந்த அதிகரிப்பானது கடந்த 78 மாதங்களில் மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படியில் மிகக் குறைந்த அதிகரிப்பு என கருதப்படுகிறது.

    மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி என்பது வழங்கப்பட்டு வருகிறது. இதனை சுருக்கமாக டிஏ (Dearness Allowance) என்பார்கள்.

    மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை உயர்த்தி வழங்கப்படும்.

    அதாவது நாட்டில் நிலவும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அகவிலைப்படி என்பது மாற்றி அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த அரசாங்க ஆதரவு சேவை மூலம் அனைத்து வருமானமும் ஓட்டுநருக்கே செல்லும்.
    • ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மற்றும் ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

    ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மற்றும் ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகள் பெருநகரங்களில் மக்களால் தினந்தோறும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இவற்றுக்கு போட்டியாக பைக், கார் மற்றும் ஆட்டோ சேவைகளை வழங்கும் "சஹ்கார் டாக்ஸி" (Sahkar Taxi) என்ற புதிய கூட்டுறவு அடிப்படையிலான டாக்சி சேவையை தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    தனியார் நிறுவனங்களைப் போலல்லாமல், இந்த அரசாங்க ஆதரவு சேவை மூலம் அனைத்து வருமானமும் ஓட்டுநருக்கே செல்லும்.

     பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா பேசியதாவது, "சஹ்கார் டாக்சி சேவை வரும் மாதங்களில் தொடங்கப்படும்.

    சஹ்கார் டாக்சியின்கீழ் நாடு முழுவதும் பைக் டாக்சிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் கார் டாக்சிகளைப் பதிவு செய்யப்படும். இந்த சேவையின் லாபம் எந்த பெரிய தொழிலதிபருக்கும் செல்லாது. மாறாக வாகன ஓட்டுநர்களுக்கு மட்டுமே செல்லும் என்று தெரிவித்தார். 

    • தாய்லாந்து, மியான்மரில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • மிகப்பெரிய அளவில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.

    இந்திய நேரப்படி இன்று மதியம் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7 புள்ளிகளுக்கு மேல் பதிவானதாக கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கும் என அஞ்சப்படுகிறது. கட்டிடங்கள் சிட்டுக்கட்டு போல் சரிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. முதற்கட்ட தகவலில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகளும் மிகப்பெரிய அளவில் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதத்தை எதிர்கொள்ள இருக்கிறது.

    இந்த நிழைலயில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர், தாய்லாந்து மக்களுக்கு இக்கட்டான சூழலில் இந்தியா துணை நிற்கும் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து கவலை கொள்கிறேன். அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன்.

    இந்தியா சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது. இது சம்பந்தமாக, எங்கள் அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுடன் தொடர்பில் இருக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்தைக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே தாய்லாந்தில் உள்ள இந்தியர்களுக்காக இந்திய தூதரகம் உதவி எண்களை அறிவித்துள்ளது. +66618819218 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பாங்காக்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

    • விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்.
    • மருத்துவ உதவிகள் வழங்க உச்சநீதிமன்றம் பஞ்சாப் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

    பஞ்சாப் மாநிலத்தில விவசாயிகளின் தலைவர் ஜெக்ஜித சிங் தல்லேவால், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கினார். இந்த நிலையில் இன்று தண்ணீர் உட்கொண்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக பஞ்சாப் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் என். கோட்டீஸ்வர் சிங் தலைமையிலான பெஞ்ச் முன்பு, பஞ்சாப் மாநில அட்வகேட் ஜெனரல் புர்மிந்தர் சிங், பஞ்சாப் அரசு கனௌரி மற்றும் ஷம்பு எல்லைகளில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்தியுள்ளோம். தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் திறக்கப்பட்டுள்ள எனத் தெரிவித்தார்.

    அப்போது நீதிபதிகள், தல்லேவால் முயற்சிகளை வெகுவாக பாராட்டினர். மேலும், அரசியல் நோக்கம் இல்லாத ஒரு உண்மையான விவசாயிகளின் தலைவர் எனத் தெரிவித்தனர்.

    அத்துடன் "விவசாயிகளின் குறைகளை தீர்க்க சிலர் விரும்பவில்லை என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் ஐவரி டவர் மீது உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை. எல்லாம் எங்களுக்கு தெரியும்" என்றனர்.

    மேலும், "களத்தில் நிலவும் நிலைமை குறித்து பஞ்சாப் மற்றும் அரியானா மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விவசாயிகள் குறைகளை கவனிக்க குழு அமைக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

    தல்லேவாலுக்கு மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பஞ்சாப் மாநில தலைமை செயலாளர் மற்றும் டிஜபி ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவதிப்பு நடவடிக்கையை நீதிமன்றம் கைவிட்டது.

    கடந்த 19-ந்தேதி மத்திய அரசு குழுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பிய சர்வான் சிங் பந்தேர், தல்லேவால் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் தலைவர்களை மொகாலியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அத்துடன் ஷம்பு மற்றும் கனௌரி போராட்டப் பகுதியில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்தினர்.

    டெல்லியை நோக்கி விவசாயிகள் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் பேரணி செல்ல முடிவு செய்தனர். ஆனால் பாதுகாப்புப்படையினர் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் ஷம்பு மற்றும் கனௌரி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது.
    • இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

    டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் திடீரென தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் அவருடைய வீட்டிற்குச் சென்று தீயை அணைக்கும்போது கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் 10 கோடி ரூபாய்க்கு அதிகமாக பணம் தீயில் எரிந்து சாம்பல் ஆனதாக கூறப்படுகிறது.

    உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் உள்விசாரணை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

    இந்த நிலையில் நீதிபதி வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக டெல்லி காவல் நிலையம் வழக்குப்பதிவு (FIR) செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நீதிபதிகள் அபய் எஜ். ஓஹா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக தற்போது உத்தரவிட முடியாது. உள்-விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் தலையிட முடியாது. தற்போது உத்தரவிட்டால் முன்னதாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

    மேலும், உள்விசாரணை முடிவடைந்ததும், அனைத்து தகவல்களும் வெளியாகும். தேவைப்பட்டால் தலைமை நீதிபதி வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியும். இந்த முடிவுக்கு நாம் ஏன் இப்போதே செல்ல வேண்டும்? என நீதிபகள் தெரிவித்தனர்.

    • நேரு பிரதமராக இருந்தபோது ஒரேயொரு எய்ம்ஸ் மருத்துவமனை.
    • வாஜ்பாய் பிரதமராக இருந்துபோது 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன.

    மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா இன்று மக்களவையில் பேசும்போது கூறியதாவது:-

    மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (AB-PMJAY) திட்டத்தின்கீழ் வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் காப்பீடு பெறும் மக்களின் எண்ணிக்கை 62 கோடியாக உள்ளது.

    எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அதிகப்படியான மக்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள். என்றாலும், எய்ம்ஸ் மருத்துவமனையில் தரனமான சுகாதாரம் சேவை வழங்குவதில் எந்த சமரசமும் கிடையாது.

    நேரு பிரதமராக இருந்தபோது ஒரேயொரு எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கினார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 6 எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட்டது. தற்போது பிரதம்ர மோடி 22 எய்ம்ஸ் மருத்துவமனையை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடங்கிவைத்துள்ளார்.

    இந்த திட்டம் பயனாளி அடிப்படையில் விரிவடைந்து கொண்டே வருகிறது. தொடக்கத்தில் ஏழை மற்றும் பாதிக்கப்பட்ட என்ற அடிப்படையில் 10.74 கோடி குடும்பங்கள் சேர்க்கப்பட்டனர். பின்னர் 10.74 கோடி குடும்பத்தில் இருந்து 12 கோடி குடும்பமாக உயர்த்தப்பட்டது.

    தற்போது இந்த திட்டம் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் ஆஷா ஊழியர்கள் 37 லட்சம் பேர் பயனடையும் வகையில் விரிவடைந்துள்ளது.

    இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

    • மாநில நிர்வாகிகள் தேர்வு தாமதமானதால் பா.ஜ.க. தேசிய தலைவரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
    • ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார் என்று தெரியவந்துள்ளது.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. தேசிய தலைவராக இருக்கும் ஜே.பி.நட்டாவின் பதவி காலம் ஏற்கனவே நிறைவு பெற்று விட்டது. இதற்கிடையே அவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தேர்வாகி மத்திய மந்திரியாகவும் பதவி வகித்து வருகிறார்.

    இதன் காரணமாக பா.ஜ.க.வுக்கு புதிய தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

    நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வாகி வருகிறார்கள். சில மாநிலங்களுக்கு மட்டும் மாநில தலைவர்கள் அறிவிக்கப்படாமல் உள்ளனர். புதிய மாநில நிர்வாகிகள் மூலம் தேசிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

    மாநில நிர்வாகிகள் தேர்வு தாமதமானதால் பா.ஜ.க. தேசிய தலைவரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஏப்ரல் 2-வது வாரத்துக்குள் பா.ஜ.க.வுக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

    இதை உறுதிப்படுத்தும் வகையில் பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் 10-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு பா.ஜ.க. முதல்-மந்திரிகள், மாநில பா.ஜ.க. தலைவர்கள், மாநில பொதுச்செயலாளர்கள் உள்பட நிர்வாகிகள் டெல்லிக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் என்னென்ன விஷயங்கள் ஆலோசிக்கப்படும் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. என்றாலும் பா.ஜ.க.வுக்கு புதிய தேசிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக அந்த கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே பிரதமர் மோடி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூருக்கு செல்ல இருக்கிறார். அங்குள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கு அவர் செல்கிறார். அப்போது புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    மேலும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார் என்று தெரியவந்துள்ளது. அந்த கூட்டத்தில் பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக யாரை தேர்வு செய்யலாம் என்பது பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பிரதமர் மோடி விவாதித்து முக்கிய முடிவுகள் எடுப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • 2021-22-ல் 103.4 சதவீதமாக இருந்த மொத்த மாணவர் சேர்க்கை விகிதம், 2023-24-ல் 97.1 ஆக சரிந்திருப்பதாக தெரிவித்தார்.
    • அனைத்து பிரிவு மாணவர் சேர்க்கை 57.56-ல் இருந்து 56.2 ஆகவும் சரிந்திருக்கிறது.

    புதுடெல்லி:

    மக்களவையில் நேற்று பழங்குடியின மக்களின் வாழ்க்கைத்தரம் குறித்த கேள்விகளுக்கு மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி துர்காதாஸ் உய்கி பதிலளித்தார். அப்போது தொடக்கப்பள்ளிகளில் பழங்குடியின மாணவர்களின் சேர்க்கை விகிதம் கடந்த 2023-24-ம் கல்வி ஆண்டில் குறைந்திருப்பதாக கூறினார்.

    குறிப்பாக 2021-22-ல் 103.4 சதவீதமாக இருந்த மொத்த சேர்க்கை விகிதம், 2023-24-ல் 97.1 ஆக சரிந்திருப்பதாக தெரிவித்தார். அதேநேரம் ஒப்பீட்டளவில் அனைத்து சமூக மாணவர்களும் தொடக்கப்பள்ளிகளில் சேரும் விகிதம் 100.13 சதவீதத்தில் (2021-22) இருந்து 91.7 (2023-24) ஆக குறைந்திருக்கிறது.

    உயர்நிலைப்பள்ளிகளில் பழங்குடியின மாணவர் சேர்க்கை 78.1 சதவீதத்தில் இருந்து 76.9 ஆகவும், அனைத்து பிரிவினரின் விகிதம் 79.56-ல் இருந்து 77.4 ஆக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. மேல்நிலைப்பள்ளிகளில் பழங்குடியினர் மாணவர் சேர்க்கை விகிதம் 52-ல் இருந்து 48.7 ஆகவும், அனைத்து பிரிவு மாணவர் சேர்க்கை 57.56-ல் இருந்து 56.2 ஆகவும் சரிந்திருக்கிறது.

    முன்னதாக பள்ளிகளில் சமீபத்திய ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை குறைந்திருப்பதாக நேற்று முன்தினம் காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி மக்களவையில் குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக மோடி அரசை குறை கூறியிருந்த அவர், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இறுதித்தேர்வு இனி ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • ஆண்டுக்கு 2 முறை நடத்தப்பட்டு வந்த சி.ஏ., தேர்வு இனி ஜனவரி, மே, மற்றும் செப்டம்பர் ஆகிய 3 மாதங்களில் நடத்தப்படும்.

    மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பை இந்திய தணிக்கை துறை அறிவித்துள்ளது.

    அதன்படி சி.ஏ., தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இறுதித்தேர்வு இனி ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆண்டுக்கு 2 முறை நடத்தப்பட்டு வந்த சி.ஏ., தேர்வு இனி ஜனவரி, மே, மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் நடத்தப்படும்.

    ஜூன் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் 2 முறை நடத்தப்படும் இன்பர்மேஷன் சிஸ்டம் ஆடிட் என்ற தேர்வு இனி பிப்ரவரி, ஜூன், அக்டோபர் மாதங்கள் என ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கும் வகையில் 26-வது கவுன்சில் கூட்டத்தில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக இந்திய தணிக்கை துறை நிறுவனம் அறிவித்துள்ளது.

    • வேறு சில மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.
    • தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தொகுதிகளை மறு சீரமைப்பு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு (2026) இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு செய்யப்பட்டால் தமிழ் நாட்டில் 8 எம்.பி. இடங்கள் வரை குறையும் அபாயம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதேபோன்று வேறு சில மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.

    இதையடுத்து தொகுதி மறு சீரமைப்பை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் சென்னையில் 24 கட்சிகள், அமைப்புகள் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கைகளை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டாலும் இது தொடர்பாக தீவிரமாக ஆய்வு செய்ய காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியில் குழு ஒன்று அமைக்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. காங்கிரஸ் தேசிய கட்சி என்பதால் இது தொடர்பான கருத்துக்களை ஆய்வு செய்ய குழு அமைக்க முடிவு செய்துள்ளோம்.

    இந்த விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை தெளிவான தகவல்களை வெளியிடவில்லை. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக வெளியாகும் யூகத்தின் அடிப்படையிலான தகவல்களுக்கு மத்திய அரசு உரிய விளக்கங்களை தர வேண்டும்' என்று கூறியுள்ளார்.

    தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையை மக்கள் தொகை பற்றிய புதிய கணக்கெடுப்பு நடத்தும் வரை மேற்கொள்ளக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • இது மீண்டும் ஒரு சார்புடைய மற்றும் அரசியல் நோக்கம் கொண்ட அறிக்கை.
    • இந்தியாவின் நிலையை குறை கூறும் அமெரிக்க அமைப்பின் முயற்சிகள் வெற்றி பெறாது என்றார்.

    புதுடெல்லி:

    சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப்) என்பது 1998-ம் ஆண்டு சர்வதேச மத சுதந்திர சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.

    இந்த அமைப்பின் ஆணையர்கள் அதிபராலும் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் இரு அரசியல் கட்சிகளின் தலைமையாலும் நியமிக்கப்படுகின்றனர்.

    சர்வதேச அளவில் மத சுதந்திர மீறல்கள் குறித்து இந்த அமைப்பு ஆண்டுதோறும் அறிக்கை வெளியிடும். ஒவ்வொரு ஆண்டும், இந்த அமைப்பு இந்தியாவில் நடக்கும் சம்பவங்களைப் பட்டியலிட்டு, இந்தியாவில் மத சுதந்திரம் பற்றி விமர்சனங்களை முன் வைக்கும். அதேபோல இந்தாண்டும் குறை கூறி அறிக்கை வெளியிட்டுள்ளது.

    மக்களவை தேர்தலின்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக பா.ஜ.க. வெறுப்பு பிரசாரம் செய்தது என்றும், சீக்கிய பயங்கரவாதி பன்னூனை கொலை செய்ய சதி செய்த இந்திய உளவு அமைப்பை தடைசெய்ய வேண்டும் என பரிந்துரை செய்தும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த அறிக்கையை நிராகரித்த மத்திய அரசு, அமெரிக்க அமைப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:

    சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட 2025-ம் ஆண்டு அறிக்கையை நாங்கள் பார்த்தோம். இது மீண்டும் ஒரு சார்புடைய மற்றும் அரசியல் நோக்கம் கொண்ட அறிக்கை.

    இந்தியாவின் துடிப்பான பன்முக கலாசார சமூகத்தின்மீது அவதூறுகளை சுமத்தும் யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப்.பின் தொடர்ச்சியான முயற்சிகள் கண்டிக்கப்பட வேண்டியவை.

    அந்த அறிக்கையில் மத சுதந்திரத்திற்கான உண்மையான அக்கறையை விட , திட்டமிட்ட உள்நோக்கமே அதில் வெளிப்படையாக தெரிகிறது.

    ஜனநாயகம் மற்றும் சகிப்புத்தன்மையின் கலங்கரை விளக்கமாக இருக்கும் இந்தியாவின் நிலையை குறைகூறும் இத்தகைய முயற்சிகள் வெற்றிபெறாது. உண்மையில் யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப். அமைப்பு தான் சர்ச்சைக்குரிய அமைப்பாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    ×