search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    • 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு வடகொரியா அனுப்பியது.
    • நேட்டோ கூட்டமைப்பின் பொறுப்பற்ற செயலுக்கு பதிலடி நடவடிக்கையே இந்த போர் ஆகும்.

    பியாங்யாங்:

    நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அவை ஆயுத உதவி, பொருளாதார உதவிகளை உக்ரைனுக்கு வழங்குகின்றன. அதேபோல் ரஷியாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஆதரவாக உள்ளது. அதன்படி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு வடகொரியா அனுப்பியது.

    இரு நாடுகளுக்கிடையே கடுமையான போர் நிலவுவதாகல், 3ம் உலகப்போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐ.நா. சபை மற்றும் பல நாடுகள் கவலை தெரிவித்தன. இந்தநிலையில் ரஷிய ராணுவ மந்திரி ஆண்ட்ரே பெலோசோவ் தலைமையிலான குழுவினர் வடகொரியா சென்று அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேசினர்.

    அப்போது கிம் ஜாங் அன் கூறியதாவது, நேட்டோ கூட்டமைப்பின் பொறுப்பற்ற செயலுக்கு பதிலடி நடவடிக்கையே இந்த போர் ஆகும். எனவே உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரியா எப்போதும் ரஷியாவுக்கு தனது ஆதரவை அளிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்வதால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    • அணையில் நீர்வரத்து அதிகரிப்பால், மொத்த உயரமான 119 அடியில் முழுவதும் நிரம்பியது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்வதால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, சாத்தனூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பால், மொத்த உயரமான 119 அடியில் முழுவதும் நிரம்பியது.

    இதனால் அணையில் இருந்து சுமார் 1.68 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், தென்பண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
    • பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த மாதத்தில் இருந்து குளிர்காலம் தொடங்கியது. இதனை தொடர்ந்து அங்கு கடுமையான பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக அந்த நாட்டின் மேற்கு மாகாணங்களான வாஷிங்டன், பென்சில்வேனியா உள்ளிட்டவற்றில் வழக்கத்தை விடவும் அதிகமாக குளிர் வீசி பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. பனித்துகள்கள் சாலை மற்றும ரெயில் தண்டவாளங்களை மூடியதால் பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் வாஷிங்டன், ஓகியோ, மிக்சிகன் உள்ளிட்டவற்றில் 61 செ.மீ அளவுக்கு பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது. அதிகப்பட்சமாக பென்சில்வேனியாவில் வடமேற்கு நகரங்களில் 73 செ.மீ வரை பனிப்பொழிவு ஏற்பட்டதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    • போதைப்பொருள் தடுப்பு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கடந்த 3 மாதங்களில் 48 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    புதுடெல்லி:

    டெல்லியில் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தல் அதிகளவில் அரங்கேறி வருகிறது. குறிப்பாக கிரிப்டோ கரன்சி, டார்க் வெப் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் சர்வதேச கடத்தல் கும்பல்கள் இதில் ஈடுபடுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. எனவே இதனை கட்டுப்படுத்த போதைப்பொருள் தடுப்பு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி கடந்த 3 மாதங்களில் 48 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சந்தை மதிப்பு சுமார் ரூ.25 கோடி ஆகும். இதனையடுத்து சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட லோகேஷ் திங்ராவை டெல்லி போலீசார் குருகிராமில் வைத்து கைது செய்தனர்.

    • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
    • வயநாடு, கண்ணூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.

    திருவனந்தபுரம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளாவிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கேரள மாநிலம் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

    • சீனா படையெடுக்கும் பட்சத்தில் தைவானை பாதுகாப்போம் என அமெரிக்கா தெரிவித்திருந்தது.
    • பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க சீனா பதிலடி நடவடிக்கைகளை எடுக்கும்.

    பிஜீங்:

    சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது. அதுமட்டும் இன்றி தேவை ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா கூறி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

    அதேவேளை, தீவு நாடான தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. தைவானுக்கு அதிக அளவில் அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது. சீனா படையெடுக்கும் பட்சத்தில் தைவானை பாதுகாப்போம் என அமெரிக்கா தெரிவித்திருந்தது.

    ஆயுத விற்பனையில் அடுத்தகட்டமாக, 385 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ஆயுத விற்பனைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அதன்படி போர் விமானங்கள் மற்றும் ரேடார் அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் ஆகியவை அடுத்த ஆண்டு முதல் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:-

    சீனாவின் தைவான் பிராந்தியத்திற்கு அமெரிக்க ஆயுத விற்பனை செய்வது, ஒரே ஒரு சீனா என்ற கொள்கை, சீனா-அமெரிக்க கூட்டறிக்கைகள், சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களை கடுமையாக மீறும் செயலாகும். சர்வதேச சட்டத்தையும் கடுமையாக மீறுவதாகும்.

    ஆயுத விற்பனையானது தைவான் பிரிவினைவாத சக்திகளுக்கு மிகவும் தவறான சிக்னலை அனுப்புகிறது. இதனால் தைவான் ஜலசந்தி முழுவதும் சீனா-அமெரிக்க உறவுகள், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும்.

    தைவானுக்கு ஆயுதம் வழங்குவதையும், தைவானுக்கு சுதந்திரம் கேட்கும் பிரிவினைவாத சக்திகளை தூண்டுவதையும் ஆதரிப்பதையும் அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும். நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க சீனா பதிலடி நடவடிக்கைகளை எடுக்கும்.

    இவ்வாறு சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    தைவானைச் சுற்றி சீனா தனது ராணுவ நடவடிக்கையை அதிகரித்து அச்சுறுத்தி வரும் நிலையில், அமெரிக்காவுடனான தனது ராணுவ உறவுகளை விரிவுபடுத்த தைவான் முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • சோபிதா சிவன்னா மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • நடிகை இறந்த செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    கன்னட நடிகை சோபிதா சிவன்னா கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சக்லேஷ்பூர் பகுதியை சேர்ந்தவர் இவருக்கு வயது 30. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் இவருக்கு திருமணம் ஆனது. திருமணத்திற்கு பிறகு சோபிதா சிவன்னா ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு சோபிதா சிவன்னா மர்மான முறையில் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு காந்தி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    சோபிதா சிவன்னா மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடிகை இறந்த செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • எண்ணெய் லாரில் இருந்த எரிபொருள் சாலையில் சிந்தியுள்ளது.
    • இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை.

    தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள குசைகுடா-நகரம் சாலையில் 25க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சறுக்கி விழுந்ததில் பலர் காயமடைந்தனர்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சாலையில் சென்ற எண்ணெய் லாரில் இருந்த எரிபொருள் சாலையில் சிந்தியுள்ளது. இந்த எரிபொருளால் இருசக்கர வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சறுக்கி விழுந்துள்ளது. இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் பலருக்கு காயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து அந்த சாலையில் மரத்தூள் மற்றும் மணலைத் தெளித்து போக்குவரத்து போலீசார் சாலையை சீர்செய்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து குசைகுடா-நகரம் சாலையில் வாகனங்கள் இயக்கப்பட்டது. 

    • பாறை உருண்டு விழுந்ததில் அங்கிருந்த வீடுகள் அப்படியே பூமிக்குள் புதைந்துள்ளன.
    • வீட்டிற்குள் பெண்கள், குழந்தைகள் என 7 பேர் வரை சிக்கியிருக்கலாம் என தகவல்.

    ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் திருவண்ணாமலையின் மலை அடிவாரத்தின் கீழ் உள்ள வீடுகள் மீது பாறை உருண்டு விழுந்துள்ளது.

    இதில், அங்கிருந்த வீடுகள் அப்படியே பூமிக்குள் புதைந்துள்ளன.

    அந்த வீட்டிற்குள் பெண்கள், குழந்தைகள் என 7 பேர் வரை சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    இதையடுத்து, சம்பவ இடத்திற்கு ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன், மாவட்ட எஸ்பி சுதாகர் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

    மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையினா அங்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    புதைந்த வீடுகளுக்கு மேல் பெரிய பாறை ஒன்று இருப்பதால், மீட்புப் பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    • அல் கொய்தா உடன் நெருங்கிய உறவை ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் அமைப்பு பேணி வந்துள்ளது.
    • அலெப்போ நகர் வரலாற்றுக் காலம் தொட்டே சிரியாவில் முக்கிய நகரமாக விளங்கி வருகிறது.

    மத்திய கிழக்கு நாடான சிரியாவில் மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. சிரியா அதிபராக பஷர் அல் அசாத் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு சிரியாவில் வேலைவாய்ப்பு பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் அதிபர் பஷர் ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்கள் உள்நாட்டுப் போராக வெடித்தது.

    பஷரை ஆதரிப்போர் மற்றும் எதிர்ப்போர் என இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் கொல்லப்பட்டனர். ரஷிய அதிபர் புதின் தலையீட்டால் பஷர் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார். போராட்டக்காரர்களை ஒடுக்க ரஷியா பஷருக்கு பேருதவி செய்தது.

    2012 ஆம் ஆண்டுமுதல் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு அலெப்போ நகரை ரஷியா தனது விமானப்படை மூலம் மீட்டு 2016 ஆம் ஆண்டில் அதிபர் பஷர் அல் அசாத்திடம் மீண்டும் ஒப்படைத்தது. அதன் பிறகான காலத்தில் சிறிய அளவிலான எதிர்ப்பு ஆங்காங்கே போராட்டங்கள் என்ற அளவில் மட்டுமே இருந்த நிலையில் தற்போது மீண்டும் உள்நாட்டுப் போராக மாறியுள்ளது.

    முந்தைய போராட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்ட ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் கிளர்ச்சி அமைப்பினர் திடீரென மீண்டும் ராணுவத்துடன் சண்டையைத் தொடங்கியுள்ளனர். அமரிக்கா மற்றும் ஐநா சபையால் பயங்கரவாத அமைப்பாக வரையறுக்கப்பட்ட இதன் தலைவராக அபு முகமது அல்-கோலானி உள்ளார். முந்திய காலங்களில் அல் கொய்தா உடன் நெருங்கிய உறவை இவ்வமைப்பு பேணி வந்துள்ளது

    இந்நிலையில் தற்போது வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் டசன் கணக்கான படையினர் கொல்லப்பட்டதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் கிளர்ச்சியாளர்கள் அலெப்போ நகரின் பெரும்பகுதியைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதனையடுத்து அலெப்போவில் மையம் கொண்டுள்ள கிளர்ச்சியாளர்கள் மீது ரஷிய ராணுவம் தொடர்ந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 300க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் -இல் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் உள்ள அலெப்போ நகர் வரலாற்றுக் காலம் தொட்டே சிரியாவில் முக்கிய நகரமாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

    • புயல் கரையை கடந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
    • அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவக்கூடும்.

    ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.

    இது, அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    அதன்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.

    இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வட உள் தமிழ்நாட்டில் நிலவக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நிகழ்ச்சி தொடங்கியதும், மாணவ- மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.
    • தடுத்து நிறுத்தி, தேசிய கீதத்தை பாட வைக்கப்பட்டுள்ளனர்.

    மதுரையில் 'யங் இந்தியன்ஸ்' அமைப்பு சார்பில் இன்று நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆளுநர் ரவி கலந்து கொண்டார். நிகழ்ச்சி தொடங்கியதும், மாணவ- மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.

    அப்போது, திடீரென அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். பின்னர், தேசிய கீதத்தை பாட வைக்கப்பட்டுள்ளனர்.

    அதன் பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஏற்கனவே, ஆளுநர் ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தில் 'திராவிடம்' என்ற வார்த்தை விடுபட்டது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

    தற்போது மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாதியில் நிறுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.


    ×