என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில்,
கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த எழுத்தூர் என்ற இடத்தில் திருச்சியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த அரசு விரைவு பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து சாலைத் தடுப்பை உடைத்து கொண்டு எதிர் திசையில் வந்து கொண்டிருந்த 2 மகிழுந்துகள் மீது மோதியதில் மகிழுந்துகளில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு விரைவுப் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது தான் விபத்துக்கு காரணம் ஆகும். அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பேருந்துகளின் டயர்கள் வெடிக்கும் நிலையில் உள்ளன என்றால் எந்த அளவுக்கு மோசமான நிலையில் அரசுப் பேருந்துகள் பராமரிக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். பேருந்துகளை முறையாக பராமரிக்காத திமுக அரசு தான் இந்த விபத்துக்கும், உயிரிழப்புகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இன்று முதல் சுற்றுலா பயணிகள் அங்கு குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
- சுமார் 37 நாட்கள் தடைக்கு பின்னர் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இங்கு ஆண்டின் அனைத்து மாதத்திலும் தண்ணீர் விழும். இந்த அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்வது வழக்கம்.
இதனிடையே வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து எஸ்டேட் பகுதிகளில் மழை பெய்து வந்ததன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த நவம்பர் மாதம் 18-ந்தேதி சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை சார்பில் அங்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் புறநகர் பகுதிகளில் மலை ஓய்ந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்ததால் மணிமுத்தாறு அருவியில் தொடர்ந்து நீர்வரத்து குறையாமல் இருந்து வந்தது.
இதன் காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மலைப்பகுதியிலும் மழை குறைந்து விட்டதன் காரணமாக இன்று அருவியில் நீர்வரத்து குறைந்து குளிப்பதற்கு ஏற்ற சூழல் உருவானது.
இதனால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் அங்கு குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. சுமார் 37 நாட்கள் தடைக்கு பின்னர் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே நேரம் கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்கி இருப்பதால் சுற்றுலா பயணிகள் அருவியை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.
- இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.1 லட்சத்தை ஆண்டு இறுதிக்குள் தொட்டுவிடும் என தங்கம் விலை கணிக்கப்பட்டது.
- தங்கம் விலை உயரத் தொடங்கி, புதிய உச்சத்தில் தினமும் பயணிக்கிறது.
சென்னை:
தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டிவிடுமோ? என பதறி இருந்த நிலையை எல்லாம், கடந்துவிட்டோம். கடந்த 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி இமாலய உச்சத்தை தொட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.1 லட்சத்தை ஆண்டு இறுதிக்குள் தொட்டுவிடும் என தங்கம் விலை கணிக்கப்பட்டது. அதேபோல, அந்த விலையையும் தொட்டது.
இந்தநிலையில், அடுத்த ஆண்டு (2026) இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை தங்கம் நெருங்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது. அதற்கேற்றாற்போல், தங்கம் விலை உயரத் தொடங்கி, புதிய உச்சத்தில் தினமும் பயணிக்கிறது.
அந்த வகையில் இன்றும் தங்கம் விலை புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,820-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரம் 560 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. அந்த வகையில், இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வெள்ளியும் வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
24-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400
23-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,160
22-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,560
21-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200
20-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
24-12-2025- ஒரு கிராம் ரூ.244
23-12-2025- ஒரு கிராம் ரூ.234
22-12-2025- ஒரு கிராம் ரூ.231
21-12-2025- ஒரு கிராம் ரூ.226
20-12-2025- ஒரு கிராம் ரூ.226
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதியன்று வெளியிடப்பட்டது.
- அடுத்த மாதம் 3-ந்தேதி மற்றும் 4-ந்தேதி ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
சென்னை:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதியன்று வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம் அடுத்த மாதம் (ஜனவரி) 18-ந்தேதி வரை நடைபெறும்.
இந்த ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், தகுதியுள்ள மக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 27-ந்தேதி (சனிக்கிழமை), 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), அடுத்த மாதம் 3-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
எனவே வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுடைய குடிமக்கள் படிவம் 6-ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். மேலும், ஒரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எந்தவொரு வாக்காளரும், முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள பெயரை நீக்கம் செய்யவோ படிவம் 7 மூலம் விண்ணப்பிக்கலாம்.
முகவரி மாற்றுதல் மற்றும் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்யவும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்யவும், படிவம்-8 மூலம் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில் எதிரே வந்த அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.
- சிகிச்சை பலனின்றி கலைவாணனும், பவுனு அம்மாளும் பரிதாபமாக இறந்தனர்.
திருவண்ணாமலை வேங்கிக்காலை சேர்ந்தவர் சக்திவேல். இவரது தாயார் பவுனு அம்மாளுக்கு (வயது 70) உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர்.
அதன்படி பவுனுஅம்மாளை காரில் விழுப்புரத்துக்கு அழைத்துச்சென்று கொண்டிருந்தனர். காரில் சக்திவேலின் மனைவி கனகவல்லி (வயது 36). சக்திவேலின் தம்பி கோவிந்தராஜ் (42), அவரது மாமனார் கலைவாணன் (60, ஆகியோர் சென்றனர்.
திருவண்ணாமலையை அடுத்த ராஜந்தாங்கல் பகுதியில் விழுப்புரம் நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில் எதிரே விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பஸ்சின் முன் பக்கத்தில் சிக்கிக் கொண்ட கார் சிறிது தூரம் இழுத்துச் செல்லபட்டதில், காரின் ஒரு பக்க மேற்கூரை முழுவதும் நசுங்கி சேதமானது.
இந்த சம்பவத்தில் சக்திவேலின் மனைவி கனகவல்லி, தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த வேட்டவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் காரில் சென்ற கோவிந்தராஜ், கலைவாணன், பவுனு அம்மாள் ஆகிய 3 பேரும் படுகாயத்துடன் துடிதுடித்தனர். அவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலைவாணனும், பவுனு அம்மாளும் பரிதாபமாக இறந்தனர். கோவிந்தராஜனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகவல்லியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் மாமியார், மருமகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பலரும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- அகிலம் எங்கிலும் அன்பின் ஒளியாகத் திகழும் இயேசு கிறிஸ்து பிறந்த தினம்.
சென்னை:
நாடு முழுவதும் இன்று கிறிஸ்துமல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில்,
மனித குலத்தில் அமைதி, கருணை, சகோதரத்துவம், நல்லிணக்கம், ஆகியவை தழைத்துச் செழிக்க நற்போதனைகளை வழங்கி, அகிலம் எங்கிலும் அன்பின் ஒளியாகத் திகழும் இயேசு கிறிஸ்து பிறந்த இந்நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் பெருவிழா நல்வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
- பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை சென்ட்ரல் வரவேண்டிய புறநகர் மின்சார ரெயில்கள் 15 நிமிடம் காலதாமதம் ஏற்பட்டது.
- கர்நாடகாவில் இருந்து சென்னை சென்டரல் வரும் விரைவு ரெயில்களும் தாமதமாக வந்தடைந்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் நிலவும் பனிமூட்டம் காரணமாக புறநகர் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை சென்ட்ரல் வரவேண்டிய புறநகர் மின்சார ரெயில்கள் 15 நிமிடம் காலதாமதம் ஏற்பட்டது.
அரக்கோணம்-சென்னை கடற்கரை, திருவள்ளூர்-பொன்னேரி இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்களும் தாமதம் ஏற்பட்டது.
திருத்தணி, திருவள்ளூர், கடம்பத்தூர், கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் மின்சார ரெயில்கள் 15 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது.
இதேபோல் கர்நாடகாவில் இருந்து சென்னை சென்டரல் வரும் விரைவு ரெயில்களும் தாமதமாக வந்தடைந்தது. மங்களூர் விரைவு ரெயில், அசோகபுரம் காவிரி விரைவு ரெயில் காலதாமதமாக சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடைந்தது.
- உலகம் முழுவதும் அன்பு, கருணை, மகிழ்ச்சி ஆகியவை நிலவ வேண்டும் என்று விரும்பினார்.
- இயேசுவின் கொள்கைகளும், போதனைகளும் தான் உலகம் இன்று கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம்.
இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில்,
மன்னிப்பது மட்டுமே மகத்தான மனிதகுணம் என்பதை போதித்த இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏழைகளிடத்திலும், பாவிகளிடத்திலும் இயேசுபிரான் அன்பு காட்டினார். உலகம் முழுவதும் அன்பு, கருணை, மகிழ்ச்சி ஆகியவை நிலவ வேண்டும் என்று விரும்பினார். மனிதர்களை மட்டுமின்றி, விலங்குகளையும் நேசித்தார். உன் மீது நீ அன்பு காட்டுவதைப் போல அடுத்தவர் மீதும் நீ அன்பு காட்டுவாயாக! என்று அன்பின் மகத்துவத்தை புரிய வைத்தவர். தமது வாழ்நாளின் கடைசி நொடி வரை அன்பையும், கருணையையும் காட்டியது மட்டுமின்றி, எதிரிகளுக்கு மன்னிப்பையும் வழங்கினார்.
இன்றைய உலகிற்கு தேவை பொருளாதார வலிமையோ, படைபலமோ அல்ல. மாறாக அவற்றை விட மிகவும் சக்தி வாய்ந்த அன்பு, கருணை, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை ஆகியவை தான். இயேசுவின் கொள்கைகளும், போதனைகளும் தான் உலகம் இன்று கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் ஆகும்.
இயேசு பிரான் போதித்ததைப் போலவே உலகில் அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்; கருணை காட்டுவோம். அதன் மூலம் ஒட்டுமொத்த உலகமும் அமைதி, கருணை, வளம், ஒற்றுமை, மகிழ்ச்சி, சகோதரத்துவம், நல்லிணக்கம் உள்ளிட்டவற்றால் நிறையட்டும். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அனைத்து வகையான தட்கல் முன்பதிவு வழிகளிலும் இந்த புதிய வசதி பொருந்தும்.
- 5 ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஓ.டி.பி. சரிபார்ப்புக்கு பின் டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டு உள்ளது.
சென்னை:
நீண்டதூர பயணத்தை மேற்கொள்ளும் நபர்களின் முதல் தேர்வாக ரெயில் சேவை உள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் பயணிப்போர் அதிகளவில் ரெயில்களிலேயே பயணிக்கின்றனர். ரெயில்களில் பயணம் செய்வோரில் 85 சதவீதம் பேர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது.
இதையடுத்து, ரெயில் டிக்கெட் முன்பதிவுகளில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க ஆதார் அட்டை இணைப்பு முறையை ரெயில்வே வாரியம் அமல்படுத்தியது.
இதேபோல, பயணிகள் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அவர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒருமுறை கடவுச்சொல் (ஓ.டி.பி.) சரிபார்க்கப்பட்ட பின்னரே டிக்கெட்டுகளை புக்கிங் செய்ய முடியும் என்ற புதிய வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம், மொபைல் செயலி மற்றும் ரெயில்வே கவுண்ட்டர் உட்பட அனைத்து வகையான தட்கல் முன்பதிவு வழிகளிலும் இந்த புதிய வசதி பொருந்தும். தட்கல் முன்பதிவுகளை உறுதிசெய்வதும், உண்மையான பயணிகளுக்கு தட்கல் டிக்கெட்டுகளைப் பெறுவதற்கான சிறந்த அணுகலை வழங்கும் நோக்கத்துடன் இது கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது 5 ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஓ.டி.பி. சரிபார்ப்புக்கு பின் டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரலில் இருந்து அகமதாபாத் செல்லும் நவ்ஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12656), சென்னை சென்டிரலில் இருந்து ஹவுரா செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் (12842), சென்னை எழும்பூரில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22158), சென்னை சென்டிரலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22160), ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22158) ஆகிய 5 ரெயில்களில் கடந்த 23-ந்தேதி முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது கடவுச்சொல் சரிபார்க்கப்பட்ட பின்னரே டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
- கன்னியாகுமரியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குடில் திறப்பு விழாயில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.
இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயேசுவின் பிறப்பை கொண்டாடும் வகையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குடில் திறப்பு விழா மற்றும் அலங்கார விளக்குகள் இயக்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி., கலந்து கொண்டு தனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.

- பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
- விபத்தில் உயிரிழந்த ஒன்பது நபர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் மீது அரசு விரைவுப் பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி குறித்து அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை எழுத்தூர் கிராமம் அருகில் நேற்று மாலை சுமார் 7.30 மணியளவில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன்பக்க டயர் எதிர்பாராதவிதமாக வெடித்ததில் பேருந்து தன் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பை தாண்டி எதிர்புற சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டு கார்கள் மீது மோதிய விபத்தில் இரண்டு கார்களிலும் பயணம் செய்த ஐந்து ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் உட்பட ஒன்பது நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில், பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த ஒன்பது நபர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.






