என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
- புயல் கரையை கடந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.
- புதுச்சேரிக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமால்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.
இது, அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுற்று வட்டார பகுதிகளில் அதி கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக புதுச்சேரி, மயிலம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரிக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வித்துறை அமைச்சர் ஆ.நமசிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
- புதுச்சேரி அரசின் கோரிக்கையை ஏற்று சென்னை காரிசன் பட்டாலியன் இந்திய ராணுவ படையினர் இன்று புதுச்சேரி வந்தனர்.
- புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் புயல் காரணமாக நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நகரே வெள்ளக்காடாக மாறி உள்ளது. இதையடுத்து புதுச்சேரி அரசின் கோரிக்கையை ஏற்று சென்னை காரிசன் பட்டாலியன் இந்திய ராணுவ படையினர் இன்று புதுச்சேரி வந்தனர்.
மேஜர் அஜய் சங்வான் தலைமையில்ஆறு ஜூனியர் அதிகாரிகள் மற்றும் 62 இதர ரேங்குகளை உள்ளடக்கிய பேரிடர் நிவாரண ராணுவ குழுவினர் புதுச்சேரியில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. சுமார் 5 அடி வரை தண்ணீர் இருப்பதால் அந்த பகுதியில் தற்போது மீட்பு பணியை தொடங்கி உள்ளனர். சுமார் 100 பேர் வரை மீட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவித்தனர்
- மயிலம் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
- ஏராளமான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
சென்னையை மிரட்டிய ஃபெஞ்சல் புயல் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது.
நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய புயல் இரவு 10.30 மணியில் இருந்து 11.30 மணிக்குள் கரையை கடந்தது. பின்னர் நகராமல் ஒரே இடத்தில் நீடித்தது.
இதனால் புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுற்று வட்டார பகுதிகளில் அதி கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று காலையில் இருந்தே இந்த பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில் கரையை கடந்த போதும், கரையை கடந்து முடித்த பின்னரும் மிக கனமழை கொட்டி தீர்த்தது.
புதுச்சேரி மற்றும் மயிலம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே தொடர்ச்சியாக பெய்த மழை இரவு முழுவதும் நீடித்ததால் புதுச்சேரி மற்றும் மயிலத்தில் வரலாறு காணாத வகையில் மழை கொட்டி தீர்த்தது. மயிலத்தில் 50 செ.மீ. அளவுக்கும், புதுச்சேரியில் 47 செ.மீ. அளவுக்கும் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது.
இதன் காரணமாக புதுச்சேரி, மயிலம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கிழக்கு கடற்கரை சாலை உள்பட முக்கிய சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கின்றது. இதே போன்று மயிலம் பகுதியிலும் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
புயல் கரையை கடந்தபோது காற்றின் வேகமும் அதிகமாக இருந்ததால் பல இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. நேற்று மாலையில் இருந்தே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் புதுவை மாநிலம் இருளில் மூழ்கியது. புதுச்சேரி வெங்கட்டா நகர், பாவாணர் நகர், ரெயின்போ நகர், ஞானபிரகாசம் நகர், கிருஷ்ணா நகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பீதியில் தவித்தனர். உயிருக்கு பயந்து வீடுகளின் மாடியில் தஞ்சம் புகுந்தனர்.
புதுச்சேரி நகர பகுதியில் உள்ள உப்பனாறு வாயக்கால் நிரம்பி வழிவதால் அதை ஒட்டியுள்ள கோவிந்த சாலை, திடீர் நகர், கென்னடி நகர், வாணரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையொட்டி புதுச்சேரி மாநில அரசு துறை அதிகாரிகள் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி முழுவதும் சுமார் 10 ஆயிரம் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்த நிலையில் அங்கு வசித்து வந்த மக்கள் படகுகள் மூலமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் முகாம்களாக மாற்றப்பட்டிருந்தன. 208 முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு பொதுமக்களுக்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. இந்த முகாம்களில் 1½ லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனை புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு இன்று காலையில் நேரில் சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
புதுச்சேரியை போன்று விழுப்புரம் மாவட்டமும் ஃபெஞ்சல் புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மயிலம் பகுதியில் பெய்துள்ள மிக கன மழையால் அப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர். அப்பகுதியில் ஏராளமான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 26 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 570 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள கிழக்கு கடற்கரை சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மரக்காணத்தில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பிலான உப்பளங்கள் நீரில் மூழ்கி உள்ளது. இதனால் உப்பள உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வேதனையில் உள்ளனர். 15-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது. 17 இடங்களில் மரம் முறிந்து விழுந்தது.
2 கோழிப்பண்ணைகளில் மழை நீர் புகுந்தது. அங்குள்ள பயிரிடப்பட்டுள்ள புடலங்காய், உளுந்து, மரவள்ளிக்கிழங்கு, தர்ப்பூசணி உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தது. பக்கிங்காம் கால்வாய் தரைப்பாலம் மூழ்கிது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டாலும் தண்ணீரை உடனடியாக வடிய வைக்க முடியவில்லை. விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் வீடு, குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலம் மூழ்கியது. மழை காரணமாக விடூர் அணை நிரம்பியது. இதன் கொள்ளளவான 32 அடியை எட்டியது. இதனால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சாத்தனூர் அணையில் இருந்து தற்போது 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இது 10 ஆயிரம் கன அடியாக உயர வாய்ப்புள்ளது. இதனால் தென் பெண்ணையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் 36 ஏரிகள் உள்ளது. மழை காரணமாக 20 ஏரிகள் நிரம்பி உள்ளது. மழை காரணமாக ஒட்டை பகுதியில் உள்ள ஏரி உடைந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், சவுக்கு, உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தது.
ஏரி கிராம பகுதிக்கு வெளியில் இருப்பதால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. திண்டிவனம், மயிலம் சாலை தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலும் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- மழை 3 மணி நேரம் பெய்யாமல் இருந்தால் தண்ணீர் வடிந்துவிடும்.
- தேங்கி உள்ள தண்ணீரை மோட்டார் வைத்து எடுத்து வருகிறோம்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். இப்போதும் எடுத்து வருகிறோம். 1971-ம் ஆண்டில் 31 செ.மீ. மழை பெய்தது. அதுதான் அதிகபட்சமான மழை. தற்போது 50 செ.மீ. மழை பெய்துள்ளது. இதுதான் அதிகபட்சமான மழை. எதிர்பார்க்காத மழை.
எல்லா வாய்க்காலிலும் தண்ணீர் நிரம்பி வழிகிறது. அமாவாசை என்பதால் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. கடல் சீற்றமாக இருந்ததால் மழைநீரை கடல் உள்வாங்கவில்லை. கடல் நீரை உள்வாங்காததால் வாய்க்கால் நிறைந்து தண்ணீர் ஊருக்குள் வந்தது. எல்லா பகுதிகளிலும் மழை அதிகமாக இருந்தது.
மழை 3 மணி நேரம் பெய்யாமல் இருந்தால் தண்ணீர் வடிந்துவிடும். தேங்கி உள்ள தண்ணீரை மோட்டார் வைத்து எடுத்து வருகிறோம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவுகள் கொடுத்து வருகிறோம்.
மக்களை வெளியே வர வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மக்கள் காவல் துறையினர் சொல்வதை கேட்டு வீட்டில் தங்கி இருக்க வேண்டும்.
நடேசன் நகர், உப்பளம் வழியாக ஆய்வு மேற்கொண்டுள்ளேன். எல்லா துறையினரும் வேலை செய்து வருகிறார்கள். தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
- அதி கனமழை, கடும் சூறாவளி காற்றுடன் புயல் கரையை கடந்த நிலையில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
- நிவாரண முகாம் செயல்படுவது குறித்து அனைத்து பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினருக்கு கலெக்டர் குலோத்துங்கள் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையை மிரட்டிய ஃபெஞ்சல் புயல் நள்ளிரவில் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதனால் மழை படிப்படியாக குறைந்து வருகிறது.
புதுவையில் அதி கனமழை, கடும் சூறாவளி காற்றுடன் புயல் கரையை கடந்த நிலையில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகள் பொதுமக்களுக்கான நிவாரண முகாமாக செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது.
நிவாரண முகாம் செயல்படுவது குறித்து அனைத்து பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினருக்கு கலெக்டர் குலோத்துங்கள் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை நிவாரண முகாமாக செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- புயல் புதுவை அருகே கரையை கடந்த நிலையில் கடலூரில் 18 செ.மீ. மழை பதிவாகி உள்ளது
- விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செ.மீ. அதிக மழை பதிவாகி உள்ளது.
சென்னையை மிரட்டிய ஃபெஞ்சல் புயல் நள்ளிரவில் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதனால் மழை படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் புதுவை அருகே கரையை கடந்த நிலையில் கடலூரில் 18 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செ.மீ. அதிக மழை பதிவாகி உள்ளது. புதுச்சேரியில் 47 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
சென்னை 10.8, திருத்தணி 11, மீனம்பாக்கம் 11, நுங்கம்பாக்கம் 11, செங்கல்பட்டு 11.1, திருநின்றவூர் 13, கொளப்பாக்கம் 12, புழல் 9.55, செம்பரம்பாக்கம் 9.25, எண்ணூர் 6.6, பள்ளிக்கரணை 8.02, திருவண்ணாமலை 17, செய்யாறு 16, ஆர்.கே.பேட்டை 12, காஞ்சிபுரம் 12.05, கள்ளக்குறிச்சி 10.6, திருப்பத்தூர் 7.8, வேலூர் 7.6, விழுப்புரம் 49.8, கடலூர் 18, புதுச்சேரி 47 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) December 1, 2024
- புயல் எச்சரிக்கை காரணமாக பாதுகாப்பு கருதி, புதுவை கடற்கரை சாலை நேற்று இரவு முதல் மூடப்பட்டுள்ளது.
- புயலை எதிர்கொள்ள அரசு துறைகள் உஷார்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
புதுச்சேரி:
தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக உருவெடுதுள்ளது.
இந்த புயல் இன்று மாலையில் புதுவைக்கும், சென்னைக்கும் இடையே மகாபலிபுரம், மரக்காணம் பகுதியில் கரையை கடக்கலாம் எனவும், இதனால் சூறை காற்றுடன் கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புயல் காரணமாக புதுவை கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக உள்ளது. 6 அடிக்கு மேல் அலைகள் எழும்பின. 4 நாட்களுக்கும் மேலாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை நீடிக்கிறது.
ஆழ்கடல் விசைப் படகுகள் அனைத்தும் தேங்காய்திட்டு துறை முகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவ கிராமங்களில் கடற்கரையில் நிறுத்தப்படும் படகுகள் கிரேன் மூலம் கரைக்கு ஏற்றப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை காரணமாக பாதுகாப்பு கருதி, புதுவை கடற்கரை சாலை நேற்று இரவு முதல் மூடப்பட்டுள்ளது. இன்று காலையில் கடற்கரை சாலையில் நடைபயிற்சிக்காக வந்தவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. அவர்களையும், கடற்கரையை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களையும் தடுத்து நிறுத்தி, போலீசார் திருப்பி அனுப்பினர்.
பாண்டி மெரீனா கடற்கரை செல்லவும் தடை விதித்த போலீசார் தடுப்புகளை வைத்து பாதையை மூடினர். நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம், ஊசுட்டேரி படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறை காற்று வீசுவதோடு, 15 செ.மீ.க்கு மேல் கனமழையும் பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுவை மக்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்து கொள்ளும்படியும் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
புதுவையில் புயல் நிலவரம், கரையை கடக்கும் நேரம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்புக்காக அனைவருக்கும் செல்போனில் ஒரே நேரத்தில் எஸ்.எம்.எஸ் அனுப்பவும் பேரிடர் மேலாண்மை துறை திட்டமிட்டுள்ளது. புயலை எதிர்கொள்ள அரசு துறைகள் உஷார்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
மேலும் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. தாழ்வான பகுதியில் குடியிருப்போரை தங்க வைக்க புதுவையில் 208 நிவாரண முகாம்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதில் 121 முகாம்கள் பொதுமக்கள் தங்குவதற்காக தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு வருபவர்களுக்கு சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதி, பிரட், பால், உணவு வழங்கப்படுகிறது. புயல் பாதிப்புக்கு ஏற்ப மற்ற நிவாரண முகாம்களை திறக்கப்படும்.
தாழ்வான பகுதிகள் மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நிவாரண முகாம்களுக்கு வரும்படி வருவாய்த்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
கடந்த 2 நாட்களில் 13 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக பல்வேறு துறைகள் அடங்கிய பேரிடர் மீட்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த குழுவில் இடம் பெற்றுள்ள 400 பேர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் இரவு, பகலாக செய்து வருகின்றனர். இந்த பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி, கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளையும், உத்தரவுகளையும் வழங்கியுள்ளனர்.
புதுவையில் கடற்கரையை புயல் நெருங்கி வருவதை எச்சரிக்கும் வகையில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புதுவையில் இன்றுடன் தொடர்ந்து 4-வது நாளாக அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவைக்கு ஏற்கனவே ஒரு தேசிய பேரிடர் மீட்பு குழு வரவழைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கூடுதலாக மேலும் ஒரு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அரக்கோணத்திலிருந்து புதுவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் புதுவை போலீசார், வருவாய்த் துறையினருடன் இணைந்து மீட்பு நடவடிக்கையில் இறங்க தயார் நிலையில் உள்ளனர்.
புயலை எதிர்கொள்ள நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து, பொதுப்பணித்துறை ஊழியர்கள் தயாராக உள்ளனர். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவசர தொலைபேசி எண்களான 112 மற்றும் 1077, வாட்ஸ்அப் எண் 94889 81070 ஆகியவற்றில் பொதுமக்கள் புயல் பாதிப்பு, மரங்கள் விழுதல், மின்சாரம் துண்டிப்பு உட்பட பிரச்சனைகள் குறித்து 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுவை அரசின் மீன்வளத்துறை சார்பில் 50 படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கினால் அதை வெளியேற்ற 60 மோட்டார்களை பொதுப்பணித்துறை தயார் நிலையில் வைத்துள்ளனர். காவல்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, மின்துறை அதிகாரிகள், பிற அரசு துறை ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.
குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் ஆயிரக்கணக்கான பிரட் பாக்கெட், பால் விநியோகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சூறை காற்றால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க நகரம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளனர்.
பல திரைப்படங்களில் இடம்பெற்ற புதுவை பழைய துறைமுக பாலம் 2022-ம் ஆண்டு இடிந்தது. புயலின் கடல் அலைகள் சீற்றத்தால் இந்த பாலம் முழுமையாக இடிந்து விழும் நிலை உருவாகியுள்ளது. புதுவை கடற்கரை சாலைக்கு நாளை காலை 10 மணி வரை பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு கலைவாணன் தலைமையில் போலீசார் கடற்கரை சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுவை முழுவதும் முக்கிய சந்திப்புகளில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு தேவையான உதவிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு பணியில் இவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்த நிலையில் புதுவையில் இன்று அதிகாலை முதல் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. சூறை காற்றுடன் மழை பெய்ய தொடங்கியுள்ளது. வானம் இருண்டு கருமேகங்களுடன் திரண்டு காணப்படுகிறது. புயல் எச்சரிக்கை, பள்ளிகள், அரசு அலுவலகங்கள் விடுமுறையால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர்.
இதனால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு இருள் சூழ்ந்து இருந்ததால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி வாகன ஓட்டிகள் சென்றனர். சூறைகாற்று கடும் குளிருடன் வீசுவதால், ஸ்வெட்டர், ஜெர்கின் போன்றவற்றை பொது மக்கள் அணிந்திருந்தனர்.
புயல் எச்சரிக்கை காரணமாக பல பகுதியில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி, உணவுப் பொருட்களை வாங்கி வைத்தனர். வீடுகளில் தண்ணீரையும் சேமித்து வைத்துள்ளனர். மின்சாரம் தடைபடலாம் என்பதால் விளக்குகள், செல்போன்களுக்கு சார்ஜ் ஏற்றி வைத்துள்ளனர்.
புதுவையை எப்போது புயல் கடக்கும்? பாதிப்புகள் ஏதும் ஏற்படுமா? என வானிலை மையத்தின் அறிவிப்புகளை தொடர்ந்து மக்கள் கவனித்து வருகின்றனர். அடுத்தடுத்து வரும் புயல் எச்சரிக்கை அறிவிப்புகள் புதுவை மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
- அரசு மருத்துவ கல்லூரியில் அரசு ஒதுக்கீடாக 28 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டது.
- மாணவர்களை சேர்க்காத மருத்துவ கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள எம்.டி., எம்.எஸ்., மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கு புதுச்சேரி அரசின் சென்டாக் மூலம் கடந்த 26-ந் தேதி முதற்கட்ட கலந்தாய்வு நடத்தி சீட் ஒதுக்கீடு செய்தது.
அரசு மருத்துவ கல்லூரியில் அரசு ஒதுக்கீடாக 28 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டது அதுபோல் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் அரசு ஓதுக்கீடாக 64 இடங்கள் ஒதுக்கப்பட்டது.
இம்மாணவர்கள் நவ. 27-ந் தேதி முதல் அடுத்த மாதம் 4-ந் தேதி வரை சீட் கிடைத்த கல்லூரியில் சேர அறிவுறுத்தப்பட்டனர்.
அதன்படி தனியார் மருத்துவ கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்புக்கு சீட் கிடைத்த 64 மாணவர்கள் சேர முற்பட்டபோது, அந்த கல்லூரி நிர்வாகம் மாணவர்களை சேர்க்க மறுத்துவிட்டது.
எங்களுடைய கல்லுாரி சிறுபான்மையினர் கல்லூரி என்பதால் 50 சதவீதம் தர விருப்பம் இல்லை என வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் எனவே இம்மாணவர்களை சேர்க்க முடியாது என அக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துவிட்டது.
இதனால் கொந்தளிப்பு அடைந்த மாணவர்கள், பெற்றோர் சங்கங்களுடன் சென்டாக் வளாகத்தில் திரண்டனர். அவர்களிடம் சென்டாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சிறுபான்மை கல்லூரி வழக்கு தொடர்ந்துள்ளது உண்மை தான். ஆனால் மாணவர் சேர்க்கைக்கு எந்த இடைக்கால தடையும் இல்லை. இதனால் தான் சென்டாக் மூலமாக மாணவர்கள் சேர்க்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து, சுகாதார துறை செயலர் முத்தம்மாவிடம் பெற்றோர் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று முறையிட்டனர்.
கவுன்சிலிங் விதிமுறைகளின்படி, மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். மாணவர்களை சேர்க்காத மருத்துவ கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என அரசு செயலர் முத்தம்மா எச்சரிக்கை விடுத்தார். அதையேற்று மாணவர்கள், பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.
- கணவருடன் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து கர்ப்பிணி சென்று கொண்டிருந்தார்.
- திருடர்கள் நகை பறிக்கும்போது பைக்கில் இருந்து கர்ப்பிணி தவறி விழுந்தார்.
புதுச்சேரியில் பைக்கில் சென்று கொண்டிருந்த கர்ப்பிணியிடமிருந்து நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கணவருடன் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து கர்ப்பிணி சென்று கொண்டிருந்தார். அவர்களை பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2 பேர் கர்ப்பிணியின் நகையை பறித்து சென்றனர்.
திருடர்கள் நகை பறிக்கும்போது பைக்கில் இருந்து கர்ப்பிணி தவறி விழுந்தார். இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நகையை பறித்து சென்றவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
- தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.
தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று புயலாக மாறுகிறது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக அடுத்த 4 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
நாகையில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விடுமுறை குறித்து அறிவித்தார்.
இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் மற்றும் கனமழை காரணமாக புதுச்சேரி கல்வி அமைச்சர் ஆ.நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
- இன்று மாலை ஃபெங்கல் புயல் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
- புதுச்சேரியில் காலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
இன்று காலை 11.30 மணி நிலவரப்படி திரிகோண மலையில் இருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
அடுத்த சில மணி நேரத்தில் (மாலை 5.30) மணிக்கு வடக்கு வடமேற்கில் நகர்ந்து சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை , கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இன்று ஃபெங்கல் புயல் உருவாக உள்ள நிலையில் புதுச்சேரியில் காலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. ஆதலால் புதுச்சேரியில் கடற்கரை சாலைக்கு செல்லும் அனைத்து வழிகளும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளன.
- லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லசுடன் பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நெருக்கமாகியுள்ளனர்.
- சாய் ஜெ.சரவணன்குமார் கவனித்து வந்த குடிமை பொருள் வழங்கல்துறை திருமுருகனுக்கு வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அரசு நடக்கிறது.
அமைச்சரவையில் பா.ஜ.க. சார்பில் நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமார் ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர். அமைச்சர் பதவி கிடைக்காத பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு வாரிய தலைவர் பதவி வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் வாரிய தலைவர் பதவி வழங்கப்படவில்லை. இதனால் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். டெல்லி சென்றும் புகார் தெரிவித்தனர்.
தற்போது லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லசுடன் பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நெருக்கமாகியுள்ளனர். இந்நிலையில் பா.ஜ.க. அமைச்சர் சாய் ஜெ.சரவணன் குமாரும் அதிருப்தியில் உள்ளார். தனக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கப்படவில்லை என்றும், அமைச்சரவை பட்டியலில் கடைசி இடம் ஒதுக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
என்.ஆர்.காங்கிரஸ் பெண் அமைச்சர் சந்திரபிரியங்கா நீக்கப்பட்டதை தொடர்ந்து காரைக்காலைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன் புதிய அமைச்சராக பதவியேற்றார். அவர் பதவியேற்ற பின் அமைச்சர்களின் துறைகளை முதலமைச்சர் ரங்கசாமி மாற்றம் செய்தார்.
அதில் சாய் ஜெ.சரவணன்குமார் கவனித்து வந்த குடிமை பொருள் வழங்கல்துறை திருமுருகனுக்கு வழங்கப்பட்டது. சாய் ஜெ.சரவணன்குமார் வசம் இருந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நகர அடிப்படை சேவை துறைகள் முதலமைச்சர் ரங்கசாமிக்கு மாற்றப்பட்டது. தற்போது அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமாரிடம் ஆதிதிராவிடர் நலத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் ஆகிய 3 துறைகள் மட்டுமே உள்ளது.
இதனால் சாய் ஜெ.சரவணக்குமார் அதிருப்தியில் உள்ளார்.
தனக்கு கூடுதல் துறைகளை பெற பல்வேறு வகையிலும் முயற்சித்து வருகிறார். தனது துறை மாற்றம் குறித்து கவர்னர், முதலமைச்சரிடம் கேட்டுள்ளார். அமைச்சரவையில் தன்னை கடைசி இடத்துக்கு தள்ளி விட்டதாகவும் முறையிட்டார். தனது ஆதங்கத்தை கட்சி மேலிடத்திடம் தெரிவிக்க அமைச்சர் சாய் ஜெ.சரவணன் குமார் டெல்லி சென்றுள்ளார்.
அங்கு மேலிட தலைவர்களை சந்தித்து பேச தொடர்ந்து அவர் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்