என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • அ.தி.மு.க.வை மிகப் பெரிய பேரியியக்கமாக உருவாக்குவதற்கு உழைத்தவர்.
    • ஜெயலலிதாவுக்காக மிகுந்த நம்பிக்கையோடு பணியாற்றியவர்.

    நெல்லை:

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவால் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இந்தநிலையில் பாளையங்கோட்டையை அடுத்துள்ள திருத்து கிராமத்தில் அவரது உடல் அடக்கம் இன்று நடை பெறுகிறது.

    இதனையொட்டி அவரது இல்லத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. தொடங்கிய காலத்தில் இருந்தே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்காக மிகுந்த நம்பிக்கையோடு பணியாற்றியவர் கருப்பசாமி பாண்டியன். இந்த பகுதி மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று அ.தி.மு.க.வை மிகப் பெரிய பேரியியக்கமாக உருவாக்குவதற்கு இதய பூர்வமாக உழைத்தவர். அவருடைய மறைவு தென் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

    எந்த சூழலிலும் உதவி என்று யார் தன்னை நாடி வந்தாலும் உதவியவர். அனைத்து தரப்பினருக்காகவும் உழைத்தவர். பொதுச்சேவையை நிறைவாக செய்தவர். அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    1982-ல் பெரியகுளம் மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது அவர் பணியாற்றிய விதம் எங்களுக்கெல்லாம் முன் மாதிரியாக அமைந்தது. அவருடைய ஆன்மா இறைவன் திருவடியில் அமைதியில் திளைக்கட்டும்.

    பிரிந்து கிடக்கும் சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று நினைத்தவர் கருப்பசாமி பாண்டியன். அ.தி.மு.க. தொண்டர்களின் எண்ணமும் அதுதான். அதற்கு எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆன்மாவால் வழி பிறக்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிரிப்டோகரன்சியை பறிமுதல் செய்துள்ளனர்.
    • கிரிப்டோ மோசடிகளில் இருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்தவர் ஆன்டனி செல்வன் (வயது 40). இவர் பெருமாள்புரம் ராஜ ராஜேஸ்வரி நகர் பகுதியில் ஆன்லைன் கிரிப்டோ கரன்சி டிரேடிங் தொழில் செய்து வருகிறார்.

    இவர் கடந்த 24-ந்தேதி கிரிப்டோ கரன்சி பண பரிவர்த்தனையில் ஏமாற்றப்பட்டதாக பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

    அதில் தனக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட திண்டுக்கல்லை சேர்ந்த முகம்மது ரியாஸ் (36) என்பவர் மூலம் அறிமுகமான சங்கரன் கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டையை சேர்ந்த அய்யாதுரை (37), மதுரையை சேர்ந்த இசக்கிமுத்து (28) ஆகியோர் தங்களுக்கு அமெரிக்க டாலருடன் இணைக்கப்பட்ட கிரிப்டோகரன்சி தேவைப்படுவதாக கூறி ரூ.75 லட்சம் கள்ள நோட்டுகளை கொடுத்து ஏமாற்றியதாக கூறியிருந்தார்.

    இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணையில் இறங்கினார். அதில் ரூ.75 லட்சம் மதிப்பில் சுமார் 82 ஆயிரத்து 691 அமெரிக்க டாலர் கிரிப்டோகரன்சியை முகமது ரியாஸின் மின்னணு பணப்பைக்கு (எலக்ட்ரானிக் வேலட்) மாற்றம் செய்து அதற்கான பணம் ரூ.75 லட்சத்தினை ஆண்டனியிடம் கொடுத்துள்ளனர். அவை அனைத்தும் கலர் ஜெராக்ஸ் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

    உடனடியாக மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவுபடி தனிப்படை திண்டுக்கல், பழனி மற்றும் பாலக்காடு ஆகிய இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதனிடையே வழக்கில் சம்பந்தப்பட்ட முகமது ரியாஸ், அய்யாதுரை மற்றும் இசக்கி முத்து ஆகியோர் நெல்லையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்தனர்.

    புகார் குறித்து விசாரணையை தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் கைது செய்ததுடன், முகமது ரியாஸ் மின்னணு பணப்பையில் இருந்த ரூ.75 லட்சம் மதிப்பிலான 82691 அமெரிக்க டாலருக்கு இணையான கிரிப்டோகரன்சியை பறிமுதல் செய்துள்ளனர். அவர்களை கமிஷனர் பாராட்டினார்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், தூத்துக்குடியில் அடிக்கடி இத்தகைய மீட்புகள் நடக்கிறது. நெல்லையில் இதுதான் முதல் முறை. மோசடி செய்த முகமது ரியாஸ் தனது வாலட்டில் அதை வைத்திருந்ததால் எளிதாக பறிமுதல் செய்ய முடிந்தது.

    கிரிப்டோகரன்சி குற்ற வழக்குகளில் முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட கிரிப்டோகரன்சி மீட்கப்பட்டது இதுவே முதல் முறை.

    இந்த வகையான கிரிப்டோ மோசடிகளில் இருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிக லாப வாக்குறுதிகள் அளித்து முதலீடு செய்யுமாறு அழைப்பவர்களை நம்ப வேண்டாம். நம்பகமான நிறுவனம் மற்றும் சட்டப் பூர்வமான வழிகளில் மட்டுமே முதலீடு செய்வது பாதுகாப்பானது என்றனர்.

    • எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
    • அ.தி.மு.க.வின் தூணாக விளங்கியவர்.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள திருத்து பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி பாண்டியன் (வயது 76). அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக இருந்து வந்த இவர், 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

    சமீப காலமாக கருப்பசாமி பாண்டியனுக்கு வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு இருந்து வந்தாலும், கட்சி பணிகளை திறம்பட மேற்கொண்டு வந்தார். கடந்த 1 வாரமாக உடல்நிலை சற்று பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை திருத்து கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது. அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் கருப்பசாமி பாண்டியன் மகனும், அ.தி.மு.க. மாநில எம்.ஜி.ஆர்.இளைஞரணி துணை செயலாளருமான வி.கே.பி. சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    அப்போது முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, நெல்லை மாநகர் மாவட்ட செயலா ளர் தச்சை கணேசராஜா, புறநகர் மாவட்ட செய லாளர் இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ., கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    அதன்பின்னர் எடப் பாடி பழனிசாமி நிருபர் களிடம் கூறியதாவது:-

    போற்றுதலுக்கும், மிகுந்த மரியாதைக்கும் உரிய கருப்பசாமி பாண்டியன் தென் மாவட்டங்களில் முத்திரை பதித்தவர். எம்.ஜி.ஆர். மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அவரது காலத்தில் இருந்து கட்சியில் இருக்கிறார். கட்சியை உயிராக நேசித்த வர். தென் மாவட்ட மக்களிடம் மிகவும் மரியாதைக் குரியவராக இருந்தவர்.

    எம்.ஜி.ஆர். காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். மாவட்ட செயலராக இருந்தவர். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலத்தில் துணை பொதுச் செயலாளராக திறம்பட பணியாற்றியவர்.

    அ.தி.மு.க.வின் தூணாக விளங்கியவர். நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற போது என்னை நேரில் சந்தித்து எங்களுடைய முழு ஆதரவு உங்களுக்கு உண்டு என்று தெரிவித்தார்.

    தென் மாவட்டங்களில் உங்களுக்கு துணையாக நிற்பேன் எனக் கூறி எனக்கு வலிமை சேர்த்தவர். அவ ருடைய நினைவெல்லாம் கட்சிதான். அவருடைய இழப்பு அ.தி.மு.க.விற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத் தாருக்கும், உற்றார்-உறவினருக்கும், தென் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    அப்போது அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்கள் கல்லூர் வேலாயுதம், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், துணைச்செய லாளர் வீரபெருமாள், முன்னாள் எம்.பி.க்கள் முத்துகருப்பன், சவுந்தர் ராஜன், மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கர லிங்கம், பொருளாளர் ஜெயபாலன், துணை செயலாளர் பள்ளமடை பாலமுருகன், அணி செயலாளர்கள் ஜெயலலிதா பேரவை ஜெரால்டு, எம்.ஜி.ஆர். மன்றம் பால் கண்ணன் மற்றும் திரளான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • தொடர் மழை பெய்யும்போது மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
    • கடந்த 22-ந்தேதி பாதுகாப்பு கருதி மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இங்கு குளித்து மகிழ்வதற்காக நெல்லை மாவட்டம் மட்டும் அல்லாமல் அண்டை மாவட்டங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்யும்போது மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அந்த காலகட்டங்களில் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடைவிதிப்பது வழக்கம்.

    அந்த வகையில் கடந்த வாரம் அருவிகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வந்ததால் கடந்த 22-ந்தேதி பாதுகாப்பு கருதி மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

    இந்நிலையில் இன்று காலை முதல் நீர்வரத்து சீரானதால், அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியது. 4 நாட்கள் தடைக்கு பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    • நெல்லை மாவட்டத்தில் 4 பேர் கொண்ட கும்பலால் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
    • காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உயிரிழந்தவர் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்தவர் ஜாகீர்உசேன் பிஜிலி (வயது 60). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவர் இடப்பிரச்சனை காரணமாக கடந்த 18-ந்தேதி ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக டவுனை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி அவரது சகோதரர் கார்த்திக், அவரது மைத்துனர் அக்பர்ஷா மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.

    முக்கிய குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூர்நிஷாவின் மற்றொரு சகோதரர் பீர்முகம்மதுவும் கைது செய்யப்பட்டார். நூர்நிஷாவை பிடிக்க பெண் போலீசார் அடங்கிய தனிப்படை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் ஜாகீர்உசேன் பிஜிலி கொலை தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க எடுத்துள்ளது.

    இதுகுறித்து 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டி.ஜி.பி., நெல்லை மாவட்ட கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுதொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் 4 பேர் கொண்ட கும்பலால் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவர் அந்த பகுதியில் வக்பு நிலத்தை ஆக்கிரமித்ததற்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி உள்ளார்.

    இதனால் சிலரிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உயிரிழந்தவர் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே இந்த விவகாரம் குறித்து 4 வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு டி.ஜி.பி. மற்றும் நெல்லை மாவட்ட கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 18-ந்தேதி ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
    • தலைமறைவான கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூர்நிஷாவை தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 60). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவர் இடப்பிரச்சினையில் கடந்த 18-ந்தேதி ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையில் தொடர்புடைய டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது சகோதரர் கார்த்திக், அவரது மைத்துனர் அக்பர் ஷா மற்றும் நோட்டமிட்டு தகவல் தெரிவித்த 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்திருந்தனர். தலைமறைவான கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூர்நிஷாவை தேடி வருகின்றனர்.


    இந்நிலையில், நேற்று நூர்நிஷாவின் மற்றொரு சகோதரர் பீர் முகம்மதுவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சம்பவத்தன்று அதிகாலை ஜாகீர் உசேன் பிஜிலி பள்ளிவாசலில் தொழு கையை முடித்துவிட்டு வெளியே வருவதை நோட்டமிட்டு கொலை யாளிகளுக்கு தகவல் அளிப்பதற்காக காத்திருந்த 16 வயது சிறுவனுக்கு தனது மோட்டார் சைக்கிளை வழங்கியதாக அவர் ஒப்புக்கொண்டார்.

    இதனால் கொலையில் பீர் முகமதுவுக்கு நேரடியாக தொடர்பு இல்லையென்றா லும், கொலை சம்பவம் நடக்கப்போவது தெரிந்தும் போலீசாரிடம் தகவல் தெரிவிக்காமல் இருந்ததாக கூறி போலீசார் அவரையும் இந்த வழக்கில் சேர்த்து கைது செய்துள்ளனர். இதுவரை 5 பேர் இந்த கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதனிடையே தலைமறை வாக உள்ள நூர்நிஷாவை 3 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ஆனாலும் அந்த தேடுதல் வேட்டையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. கொலையில் தொடர்புடை யவர் பெண் என்பதால் சகஜமாக சந்தேகப்படும் வீடுகளுக்குள் சென்று தேட முடியவில்லை.

    இதனால் தனிப்படையில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் இருந்தால் தேடுதல் எளிதாகும் என்று மாநகர போலீஸ் கமிஷனரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் இன்று தனிப்படை யில் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர், ஒரு பெண் போலீஸ் சேர்ந்து, நூர்நிஷாவை தேடும் பணியில் ஈடுபட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • சரண் அடைந்த கார்த்திக், அக்பர்ஷா ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
    • மாணவனை போலீசார் கைது செய்து, அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் ஜாமியா தைக்கா தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 60). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவர் டவுனில் உள்ள ஒரு பள்ளிவாசலில் முத்தவல்லியாக இருந்து வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தவுபிக் என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 18-ந் தேதி அதிகாலையில் ஜாகீர் உசேன் பிஜிலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்து விட்டு வீடு திரும்பிய போது 3 பேரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தவுபிக், அவருடைய சகோதரர் கார்த்திக், மனைவி நூர்நிஷா மற்றும் அக்பர் ஷா ஆகியோரை தேடி வந்தனர். இதில் கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். கிருஷ்ணமூர்த்தியை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

    சரண் அடைந்த கார்த்திக், அக்பர்ஷா ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களுடைய உறவினரான 16 வயது சிறுவன், இந்த கொலை சம்பவத்திற்கு உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அந்த சிறுவனை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    பிளஸ்-1 படித்து வரும் அந்த சிறுவன், சம்பவத்தன்று ஜாகீர் உசேன் பிஜிலி தொழுகையை முடித்து விட்டு பள்ளிவாசலில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றதை கொலையாளிகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மாணவனை போலீசார் நேற்று கைது செய்து, அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நூர்நிஷாவை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் ஜாகீர் உசேன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

    ஜாகீர் உசேன் கொலை வழக்கில் சரணடைந்த அக்பர்ஷாவின் சகோதரர் பீர் முகமது (37) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜாகீர் உசேனை கொலை செய்ய அக்பர்ஷாவின் சகோதரர் பீர் முகமது உதவியதாக கிடைத்த தகவலின்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    • அரசு ஊழியர்களும் தி.மு.க. மீது வெறுப்பில் உள்ளனர்.
    • தேர்தலுக்கு இன்னும் காலங்கள் உள்ளதால் 6 மாதத்திற்கு பின் சூழல் மாற வாய்ப்புள்ளது.

    நெல்லை:

    தொகுதி மறு சீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டுக்குழு கூட்டத்திற்கு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள் இன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு வந்துள்ளனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பா.ஜ.க. நிர்வாகிகள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தி இருந்தார்.

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற குழு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தனது வீட்டில் நிர்வாகிகளுடன் சேர்ந்து கருப்பு கொடி ஏந்தியும், சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்தும் எதிர்ப்பை தெரிவித்தார்.

    அப்போது நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் முத்து பலவேசம், நிர்வாகி கார்த்திகேயன் உள்பட பலர் உடன் இருந்தனர். தொடர்ந்து நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. பலவீனமாக உள்ளதால் தேவையில்லாத பிரச்சனையை கையில் எடுக்கிறது. டங்ஸ்டன் விவகாரத்தை கையில் எடுத்தனர். மத்திய அரசு அதனை நேரடியாக கையில் எடுத்து நல்ல முடிவை தந்தது. நமக்கு தண்ணீர் தராத கேரள முதல்-மந்திரி, கர்நாடக துணை முதல்-மந்திரி ஆகியோரை அழைத்து தி.மு.க. அரசு கூட்டம் நடத்துகிறது. மொழி கொள்கை பிரச்சனை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

    ஏதாவது ஒரு மொழி படிக்கலாம் என்பதை தான் மத்திய அரசு மொழி கொள்கையில் சொல்கிறது. மும்மொழி கொள்கைக்கு 95 சதவீதம் பேர் ஆதரவாக உள்ளனர். பா.ஜ.க. நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் தானாக முன்வந்து கையெழுத்துபோட்டு வருகின்றனர்.

    இந்தி இல்லாவிட்டாலும் தென்னிந்திய மொழி கூட கற்கலாம். தி.மு.க அரசு கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தும் அறிவிப்புடனேயே நிற்கிறது. அதனால் தான் மத்திய அரசை ஏதாவது ஒரு கதையை வைத்து குறை கூறுகின்றனர்.

    மக்களை திசை திருப்பவே தி.மு.க. இது போன்ற செயலில் ஈடுபடுகிறது.

    டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்போம் என தேர்தல் வாக்குறுதியை கொடுத்துவிட்டு படிப்படியாக கடையை உயர்த்தும் நிலையில் உள்ளது. அரசு ஊழியர்களும் தி.மு.க. மீது வெறுப்பில் உள்ளனர்.

    மின்கட்டணம், தொழில்வரி, சொத்துவரி உயர்வால் தொழில் முனைவோர் திணறும் நிலைக்கு ஆளாகின்றனர்.

    எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால் தி.மு.க.விற்கு பாதகமான நிலை உண்டாகும். தேர்தலுக்கு இன்னும் காலங்கள் உள்ளதால் 6 மாதத்திற்கு பின் சூழல் மாற வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிருஷ்ணமூர்த்தி, அவரது சகோதரர் கார்த்திக், மனைவி நூர்நிஷா மற்றும் அக்பர்ஷா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • மாணவனை கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி(வயது 60). ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரான இவர் டவுனில் உள்ள ஒரு பள்ளி வாசலில் முத்தவல்லியாக இருந்து வந்தார்.

    இவர் கடந்த 18-ந்தேதி அதிகாலை ரம்ஜான் நோன்பை முன்னிட்டு அருகே உள்ள ஜாமியா தைக்கா பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்தது.

    இதுகுறித்து டவுன் போலீசார் நடத்திய விசாரணையில் அவருக்கும், தொட்டிப்பாலம் தெருவில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் இடையே இருந்து வந்த இடப்பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதுதொடர்பாக கிருஷ்ணமூர்த்தி, அவரது சகோதரர் கார்த்திக், மனைவி நூர்நிஷா மற்றும் அக்பர்ஷா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் கோர்ட்டில் சரண் அடைந்த நிலையில், 2 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்று கோர்ட்டில் மீண்டும் அவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த கிருஷ்ணமூர்த்தியை தனிப்படையினர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த நிலையில் அவருக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கார்த்திக், அக்பர் ஷாவிடம் நடத்திய விசாரணையில், அவர்களது உறவினரான 16 வயது சிறுவன் ஒருவன் இந்த கொலை சம்பவத்தில் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நேற்று மாலையில் சிறுவனை பிடித்து விசாரித்தனர். பிளஸ்-1 படிக்கும் அந்த சிறுவன், சம்பவத்தன்று ஜாகீர் உசேன் பிஜிலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு புறப்பட்டதை கொலையாளிகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தது தெரியவந்தது.

    இதையடுத்து மாணவனையும் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள நூர்நிஷாவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • கிருஷ்ண மூர்த்தியின் மனைவி நூருன்னிஷா தலைமறைவானார்.
    • கிருஷ்ண மூர்த்தி மற்றும் ஏட்டு ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் ஜாமியா தைக்கா தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 60). போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தார். கடந்த 2009-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை இவர் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்ட ஜாகீர்உசேன் பிஜிலிக்கும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தவ்பிக் என்பவருக்கும் இடையிலான நிலம் தொடர்பான பிரச்சனையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இதற்கிடையே இந்த கொலையில் தச்சநல்லூரை சேர்ந்த கார்த்திக், டவுனை சேர்ந்த அக்பர்ஷா ஆகிய 2 பேர் நெல்லை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    இந்நிலையில் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி காட்டுப்பகுதியில் மறைந்திருந்த கிருஷ்ணமூர்த்தியை சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் தலைமையிலான தனிப்படையினர் பிடிக்க முயன்றனர்.

    அப்போது அவர் காவலர்களை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார். இதில் ஏட்டு ஆனந்துக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்தி அவரை பிடித்து கைது செய்தனர்.

    தொடர்ந்து கிருஷ்ண மூர்த்தி மற்றும் ஏட்டு ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று இரவு கிருஷ்ண மூர்த்தியின் காலில் இருந்து குண்டுகள் அகற்றப்பட்டது. இதையறிந்த கிருஷ்ண மூர்த்தியின் மனைவி நூருன்னிஷா தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒரு தனிப்படையினர் அவரை பிடிக்க திருவனந்தபுரம் விரைந்துள்ளனர்.

    இந்நிலையில் ஜாகீர் உசேன் பிஜிலி ஏற்கனவே இடப்பிரச்சனை தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த போது அது குறித்து போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை எனவும், முறையாக விசாரணை நடத்தி இருந்தால் கொலையை தடுத்து இருக்கலாம். எனவே முறையாக விசாரணை நடத்தாத டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன், அப்போதைய உதவி கமிஷனராக இருந்த செந்தில்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து நேற்று இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் உதவி கமிஷனர் செந்தில்குமாரை சஸ்பெண்டு செய்து டி.ஜி.பி. இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • இரவு நேரங்களில் கரடியின் நடமாட்டம் உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
    • அப்பகுதியினர் மிகுந்த அச்சம் அடைந்துள்ள நிலையில், அந்த கரடியை வனப்பகுதிக்குள் விரட்டவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே நெசவாளர் காலனியில், வயல் வெளியில் அமைந்துள்ள அக்னி சாஸ்தா கோவில் பகுதியில் நேற்றிரவு கரடி ஓன்று புகுந்தது. தொடர்ந்து அங்கும் இங்குமாக உலா வந்து பூஜை பொருட்களை சேதப்படுத்தியது. இந்த சம்பவம் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைராலாகி வருகிறது.

    மேலும் கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள தெற்கு பாப்பான்குளம், கோல்டன் நகர், நெசவாளர் காலனி, கோல்டன் நகர் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் கரடியின் நடமாட்டம் உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    தொடர்ச்சியாக மலை அடிவார கிராம பகுதிகளில் கரடியின் நடமாட்டம் இருப்பதால் அதை கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்குமாறு வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடையம் மேற்குத் தொடர்ச்சி மலையில் சிறுத்தை, யானை, கரடி, உள்பட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ள நிலையில், இவற்றில் யானை மற்றும் கரடி இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன.

    இந்நிலையில் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள பூவன்குறிச்சி என்ற கிராமத்தில் நேற்று இரவு ஒற்றைக் கரடியானது சுற்றி திரிந்தது. இதனை அப்பகுதியினர் செல்போனில் வீடியோ எடுத்த நிலையில் அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

    இதனால் அப்பகுதியினர் மிகுந்த அச்சம் அடைந்துள்ள நிலையில், அந்த கரடியை வனப்பகுதிக்குள் விரட்டவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகபட்சமாக தென்காசியில் 42 மில்லி மீட்டர், செங்கோட்டையில் 38 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
    • தென்காசியில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கி பெரும்பாலான இடங்களில் இன்று அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. சில இடங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்தது. நள்ளிரவில் சில இடங்களில் பயங்கர இடி-மின்னலுடன் மழை பெய்தது.

    அதிகபட்சமாக தென்காசியில் 42 மில்லி மீட்டர், செங்கோட்டையில் 38 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. ஆய்குடியில் 23 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது . மழை காரணமாக குற்றாலத்தில் மிதமான அளவில் அனைத்து அருவியிலும் தண்ணீர் கொட்டி வருகிறது.

    தென்காசியில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. பாவூர்சத்திரம், ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு 2 மணி அளவில் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுரண்டை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    அணைகளை பொறுத்தவரை குண்டாறு மற்றும் அடவிநயினார் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக குண்டாறு அணையில் 26.20 மில்லி மீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 11 மில்லி மீட்டரும் மழை பெய்தது. ராமநதி மற்றும் கடனாநதி அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் தலா 8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்தது. நெல்லை மாநகரப பகுதியிலும் இரவில் மழை பெய்த நிலையில் இன்றும் அதிகாலையில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    மாநகரில் பாளையங்கோட்டையில் 7.20 மில்லி மீட்டரும், நெல்லையில் 6.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தில் அம்பை, கண்ணடியன் கால்வாய் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. இன்றும் அதிகாலையில் சாரல் மழை பெய்தது. அணைகளை பொறுத்தவரை பாபநாசம் அணையில் லேசான சாரல் மழை பெய்த நிலையில் சேர்வலாறு அணை பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 23 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அணையின் நீர்வரத்து 214 கன அடியாக இருந்து வருகிறது. அணை நீர்மட்டம் உயர்வில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லை.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூர், விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி பகுதிகளில் சிறிது நேரம் மழை பெய்தது.

    ×