என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கதம்பம்
- ஹாலிவுட் படத்தில் நடிக்க அழைத்தார்கள்.
- எல்லா பள்ளிகளிலும் புருஸ் லீ படம் இருந்தது, இன்றும் இருக்கின்றது.
அவன் அமெரிக்காவில்தான் பிறந்தான், ஆனால் சீன தந்தை அவனை ஹாங்காங்கிற்கு கொண்டுசென்று வளர்த்தார். அவனோ பள்ளிக்கு செல்லும் பொழுதெல்லாம் நாலுவார்த்தை கற்றானோ இல்லையோ 4 பேரை அடிக்க மறக்காமல் கற்றுகொண்டான்.
அவ்வப்போது குழந்தை நட்சத்திரமாக ஹாங்காங் படத்திலும் வந்தான், ஆனால் முழுநேர தொழில் மற்றும் பொழுதுபோக்கு எங்காவது தெருவில் சண்டையிடுவது, போதாகுறைக்கு குங்பூ வேறு கற்றுவிட்டான், அட்டகாசம் தாளவில்லை.
அவன் குட்டி தாதாவாக வேறு மாறிவிட்டான், அவனுக்கு கீழ் 10 அடியாள். ஹாங்காங்கின் தெருசண்டையில் அவனே பிஸ்தா.
பொறுத்துபார்த்த தந்தை அவன் கையில் 100 டாலரை கொடுத்து அமெரிக்காவிற்கு விரட்டினார், காரணம் பொழுதுதோறும் பஞ்சாயத்து என்றால் எப்படி?
அமெரிக்கா சென்றவனுக்கு சும்மா இருக்க முடியவில்லை, சரி இங்கு அடிக்கமுடியாது எல்லோரும் இடிமாடு போல இருக்கின்றார்கள், சண்டை சொல்லிகொடுக்கலாம்..
குங்பூ கராத்தே டேக்வாண்டோ எல்லாம் கலந்து ஜீட்குண்டோ என அவனே ஒரு சண்டை கலை தொடங்கினான்.
நல்ல மாஸ்டர்தான், ஆனால் அவனின் ஆசை சினிமாவில் நடிக்க தூண்டியது, ஹாலிவுட்டில் நடிக்க சில உடலமைப்பு அவசியம், முதலில் உயரமாக நிறமாக கட்டுடலோடு நல்ல முகவெட்டில் இருக்கவேண்டும், ஐரோப்பியர் அல்லது அமெரிக்கராக இருக்க வேண்டும் என பல சட்டங்கள்.
ஒடுங்கிய தேகமும், இடுங்கிய கண்ணும் கொண்ட அந்த சீன இளைஞனை பரிகாசம் செய்தே விரட்டினார்கள், அவன் சீறியபடி சொன்னான் உங்களுக்கெல்லாம் நான் தான் போட்டி.
யார் நம்புவார்கள்? அந்த லீயினை விரட்டியே விட்டார்கள்.
ஹாங்காங் திரும்பிய லீ, புரூஸ் லீயானான். "தி பிக் பாஸ்", "ஸ்பிட் ஆஃப் பியூரி" ஆகிய இரு படங்களில் ஹாங்காங்கில் நடித்தான், பெயர் சொன்ன படங்கள்தான், ஆனால் ஹாலிவுட் கண்டுகொள்ளவில்லை.
ஓஓ.. அப்படியா இதோ பார் என "ரிட்டன் ஆப் தி டிராகன்" படத்தினை அவனே ஹாங்காங்கில் எடுத்தான், அது உலகெமெல்லாம் மக்களை கவர்ந்தது, குறிப்பாக இளைஞர்களை..
கேமரா வித்தைகள் இல்லாமல் அதிவேகமாக அதேநேரத்தில் தத்ரூபமாக சண்டைப் போடக்கூடிய திறமைசாலி என்பதை அந்தப்படம் அமெரிக்கர்களுக்கு உணர்த்தியது.
"யாராய்யா இவன் உடலை அப்படி வைத்திருக்கின்றான், எல்லா ஆயுதமும் அவன் கையில் அப்படி சுழல்கின்றது, ஆயுதம் இல்லாமலே எல்லா ஆயுதமும் சமாளிக்கின்றான் என அதிசயத்தது" உலகம்.
ஆம் அழகாலும், நடிப்பாலும், கேமரா கோணத்தாலும் இயங்கிய மேற்கு சினிமாவினை தன் சண்டைகாட்சி ஒன்றால் உடைத்து அதன் போக்கினை மாற்றினான் புருஸ் லீ.
அமெரிக்க முதலாளிகள் அவன்முன் குனிந்து நின்றார்கள், ஹாலிவுட் படத்தில் நடிக்க அழைத்தார்கள், எந்த ஹாலிவுட் அவனை விரட்டியதோ அதே ஹாலிவுட் காலில் விழுந்து அழைத்தது.
எந்த மனிதனுக்கும் வாய்க்க கூடாத சாபம் அவனுக்கு வாய்த்த்திருந்தது, ஆம் அவன் இறந்த பின்புதான் "எண்டர் தி டிராகன்" படம் வெளிவந்தது, வெற்றி என்றால் பெரும் வெற்றி. ஆனால் அதனை காணவோ, அதனை கொண்டாடவோ புருஸ்லி இல்லை.
அவன் ஹாலிவுட்டில் நடித்தது அந்த ஒரு படம் தான், ஆனால் சாகா புகழை அவனுக்கு கொடுத்தது, அதன் பின் உலகெங்கும் அவனால் கராத்தே, குங்பூ பள்ளிகள் தொடங்கபட்டன, எல்லா பள்ளிகளிலும் புருஸ் லீ படம் இருந்தது, இன்றும் இருக்கின்றது.
அவன் சாகும் பொழுது வயது வெறும் 32. இன்றுவரை அவன் சாவு மர்மமே,
-பிரம்ம ரிஷியார்
- ஹிலாரியின் சாதுர்யமானப் பதிலைக் கேட்ட கிளிண்டன் மனம் விட்டுச் சிரித்தார்.
- நகைச்சுவையோடு இருந்தாலும் ஹிலாரி கிளிண்டனின் தன்னம்பிக்கையைத் தெளிவாகக் காட்டுகிறது..
பெண்கள் உடலளவில் மென்மை ஆனவர்கள்...ஆனால் மனதளவில் ரொம்பப் பலமானவர்கள்.அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவார்கள்.
அமெரிக்காவின் அதிபராக இருந்தப் பின் கிளின்டன் ஒரு சமயம் மனைவி ஹிலாரியுடன் காருக்குப் பெட்ரோல் போட ஒரு பெட்ரோல் பங்குக்குச் சென்றார்.
திரும்பும் வழியில் ஹிலாரி தன் கணவர் கிளிண்டனிடம், ''அந்தப் பெட்ரோல் பங்கின் உரிமையாளர் ஒரு காலத்தில் என்னை மிகவும் விரும்பினார். என்னைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டார்'' என்று தன் கடந்தக் கால செய்தியைச் சொன்னார்
உடனே. கிளிண்டன்,," நீ அவனைத் திருமணம் செய்து கொண்டு இருந்தால் உன் கணவன் பெட்ரோல் பங்க் வைத்து இருப்பவனாக இருந்து இருப்பான்'' என்று கேலியாகச் சொன்னார்...
அப்போது ஹிலாரி கிளிண்டன் "நிச்சயமாக இல்லை. அவன் என்னைத் திருமணம் செய்து இருந்தால் இப்போது அவன் அமெரிக்காவின் அதிபராக இருந்து இருப்பான் என்று பதில் சொன்னார்..
ஹிலாரியின் சாதுர்யமானப் பதிலைக் கேட்ட கிளிண்டன் மனம் விட்டுச் சிரித்தார்..
இச்சம்பவம் நகைச்சுவையோடு இருந்தாலும் ஹிலாரி கிளிண்டனின் தன்னம்பிக்கையைத் தெளிவாகக் காட்டுகிறது..
-ஜெயராமகிருஷ்ணன்
- பெண் சாலையைக் கடக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.
- மற்றொரு துறவி கோபமாக இருப்பது போல அவருக்குத் தோன்றியது.
ஜென் துறவிகள் இருவர், தொடர்ந்து பெய்த மழையினால் ஒரு குடிசையின் கீழ் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தனர்.
மழை நின்றதும் தங்களது இருப்பிடத்தை நோக்கி நகர்ந்து செல்லும்போது, வழியில் ஓர் அழகான இளம் பெண் சாலையைக் கடக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.
இதைக்கண்ட துறவிகளில் ஒருவர், "என்னாயிற்று பெண்ணே? ஏதேனும் உதவி தேவையா?"என்று கேட்டார்.
பதிலுக்கு அந்தப் பெண், "நான் என் தோழியின் திருமணத்துக்குச் செல்ல உள்ளேன். ஆனால், இந்தச் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. நடந்து சென்றால் நிச்சயம் என் அழகிய பட்டுப் பாவாடை பாழாகிவிடும்" என்று கூறி வருந்தினாள்.
"கவலைப்படாதே, என் தோள்களின் மீது ஏறிக்கொள். நீ சேர வேண்டிய இடத்தில் உன்னைச் சேர்த்துவிடுகின்றேன்" என்று கூறிவிட்டு அவளுக்கு உதவி புரிந்தார்.
திரும்பி வரும் வழியில் தன்னுடன் இருக்கும் மற்றொரு துறவி கோபமாக இருப்பது போல அவருக்குத் தோன்றியது. ''ஏன் என் மீது கோபமாக உள்ளீர்கள்?'' என்று கேட்க,
அதற்கு அவர் ''நாம் ஒரு துறவி என்பதை மறந்துவிட்டு அந்தப் பெண்ணை எப்படித் தொட்டுத் தூக்கலாம்? இது தவறானது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?" என்று கேட்டார்.
உதவி செய்த துறவி, "தூக்கிய அந்தப் பெண்ணை அப்போதே நான் இறக்கிவிட்டேன், நீங்கள்தான் அந்தச் சம்பவத்தை இறக்காமல் மனதில் சுமந்துகொண்டு இருக்கிறீர்கள்"என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
"நாமும் நமது வாழ்வில் பிறர் ஏற்படுத்திய காயங்களை மனதில் தூக்கிக்கொண்டு செல்கின்றோம். அதனை புறக்கணித்து விட்டால் வாழ்வு என்றென்றும் ஆனந்தமே"
- இருமல் காமாலை புண்கள் வயிற்று வாயு என ஏராளமான நோய்களை குணப்படுத்துகிறது.
- அரிசி கழுவிய நீரில் ஊறவைத்து உலர வைத்து பொடி செய்து சாப்பிடுவது சிறந்தது.
ஆறு சுவை உள்ள ஒரே கனி கடுக்காயாகும்... வசம்பு, விளக்கெண்ணெய், மாசிக்காய் போல கடுக்காய்க்கும் பிள்ளை வளர்த்தி என்ற பெயர் உண்டு... கடுக்காய் வயிற்றுப் புண்கள் ஆற்றி பசியை தூண்டுகிறது.. ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது .. உடலில் வாத பித்த கபத்தை சமன் செய்கிறது.. இருமல் காமாலை புண்கள் வயிற்று வாயு என ஏராளமான நோய்களை குணப்படுத்துகிறது..
கடுக்காய்க்குள் உள்ள விதையை நீக்கி விட்டு மேலே உள்ள தோலை பொடி செய்து அப்படியே சாப்பிடலாம். ஆனால் அரிசி கழுவிய நீரில் ஊறவைத்து உலர வைத்து பொடி செய்து சாப்பிடுவது சிறந்தது.. சோற்றுக்கற்றாழை சாரில் ஊறவைத்து உலர வைத்து பொடி செய்து சாப்பிடுவது இன்னும் சிறந்தது...
சுத்தம் செய்த கடுக்காய் தோலை இரண்டு மிளகின் அளவு பாக்கு சப்பி சாப்பிடுவது போல் சாப்பிட ஜீரணம் நன்றாகி வயிற்றில் உள்ள வாயு வெளியேறி உடல் உறுதி பெறும்..
கால் ஸ்பூன் முதல் 1/2 ஸ்பூன் வரை தினமும் இரவு உணவிற்கு பின் சுடுநீரில் கலந்து சாப்பிட காலையில் மலச்சிக்கல் இல்லாமல் மலம் வெளியேறும்..
கடுக்காய் பொடியை தேன் கலந்து சாப்பிட சளியும் நெய் கலந்து சாப்பிட மூலமும் குணமாகும்...
பல் விளக்குவதற்கு ஆறாத புண்களை ஆற்றுவதற்கு பிறப்புறுப்பில் ஏற்படும் நாற்றங்களை சரி செய்வதற்கு பெருவயிறு (ascities), வயிறு வீக்கம், காமாலையை குணமாக்குவதற்கு என நிறைய பலன்கள் உண்டு... கடுக்காயை ஊறுகாயாக சாப்பிட ஜீரண கோளாறு கை கால் வலிகள் முழுவதுமாக நீங்கும்...
ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டியது கடுக்காய் ..
-ரியாஸ்
- பாடல்களை எளிமைப்படுத்தி அவர் திரையிசையில் பயன்படுத்தியிருக்கின்றார்.
- இருவரையும் அழைத்துக்கொண்டு மிதிலை நோக்கிப் பயணப்படுகின்றார்.
கவியரசு கண்ணதாசன் கம்பனைத் தாக்கிப் பேசவேண்டும், எழுதவேண்டும் எனும் நோக்கத்தோடுதான் கம்பராமாயணத்தைக் கற்கத் தொடங்கினார். ஆனால் என்ன விந்தை! அதனைக் கற்கத் தொடங்கியபின்பு அதில் முற்றாய்த் தோய்ந்துபோனார்; கம்பனின் நேசன் ஆனார்! அதன் விளைவாய்ப் பல கம்பராமாயணப் பாடல்களை எளிமைப்படுத்தி அவர் திரையிசையில் பயன்படுத்தியிருக்கின்றார். அவற்றுள் ஒரு பாடலும் அதன் பின்னணியும் வருமாறு:
இராம இலக்குவர்களின் துணையோடு தாடகையை வதம்செய்த விசுவாமித்திர முனிவர், அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு மிதிலை நோக்கிப் பயணப்படுகின்றார். அப்போது அவ்வழியில் கருங்கல் ஒன்று கிடக்கின்றது. அதன்மீது தன் பாதம் பதிக்கிறான் இராமன். உடனே ஓர் அதிசயம் நிகழ்கிறது; கல்லுருவிலிருந்து தன் முந்தைய நல்லுருப்பெற்று எழுந்தாள் காரிகை ஒருத்தி.
கல்லொன்று காரிகையான அதிசயங்கண்டு வியந்த காகுத்தன் விசுவாமித்திரரை நோக்க, அவர் அகலிகை கல்லான வரலாற்றை அவனிடம் விலாவாரியாக விளக்கிவிட்டு, இராமனின் கைவண்ணத்தால் (அம்பெய்திக் கொன்ற செயல்) தாடகை வதைக்கப்பட்டதையும், கால்வண்ணத்தால் (பாதம் பட்டுக் கல்லுக்கு உயிர்வந்த செயல்) அகலிகை உயிர்பெற்றதையும் புகழ்ந்து ஒரு பாட்டே பாடிவிடுகிறார்.
"இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனி இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றுஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்
மழை வண்ணத்து அண்ணலே உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்
கால் வண்ணம் இங்குக் கண்டேன்."
இந்த "வண்ண"ப் பாடல் கவியரசு கண்ணதாசனின் எண்ணத்தைக் கவர்ந்துவிட, இதனைத் திரைப்படப் பாடலில் பயன்படுத்த ஏற்றதோர் சமயத்தை எதிர்நோக்கியிருந்தார் அவர்.
1962-இல் வெளியான 'பாசம்' படத்தில் திருமண நாளன்று தலைவனும் தலைவியும் டூயட் பாடுவதுபோல் ஒரு சூழலை இயக்குநர் டி.ஆர். இராமண்ணா மெல்லிசை மன்னர்களிடம் சுட்ட, அதற்கு அவர்கள் அருமையானதொரு மெட்டுக் கட்ட, 'வண்ணம்' என்ற சொல் அப்பாடலெங்கும் நிறைந்திருக்கும் வண்ணம் கவியரசு கண்ணதாசன் அற்புதமாய் வார்த்தைகளைக் கொட்ட, பி.சுசீலா, பி.பி. ஸ்ரீநிவாஸ் குரல்களில் உருவானது காலத்தால் அழியாத காவியப் பாடலொன்று!
"பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்!
கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்……."
-மேகலா இராமமூர்த்தி
- கவரிமான் தன் வாலில் உள்ள முடிகளை இழந்து விட்டால் அது உயிர் வாழாது.
- நீரில் வாழும் நண்டு, குஞ்சுகளை ஈன்றவுடன் குஞ்சுகளுக்கே இரையாகிப் போகுமாம்
சிலந்திப் பூச்சியின் முட்டையில் இருந்து குஞ்சுகள் வெளிப்பட்டவுடன், அந்த குஞ்சுகள் எல்லாம் சேர்ந்து தாய் பூச்சியைக் கடித்துத் தின்றுவிடுமாம். இங்கு சிலந்தியின் உயிருக்கு அதன் முட்டையே கூற்றமாக அமைகிறது.
கலைமான், கடமான், காட்டெருமை போன்ற விலங்குகளின் நீண்டு வளர்ந்த கொம்புகள் கானகத்தில் புதர்களிடையே சிக்கிக் கொள்வதால், அதிலிருந்து விடுபட முடியாமல், பட்டினி கிடந்தோ அல்லது புலி, சிறுத்தை போன்றவற்றால் தாக்கப்பட்டோ உயிரைவிட நேர்கிறது. இங்கு அந்த விலங்குகளின் நீண்ட கொம்புகளே அவற்றுக்குக் கூற்றம் ஆகிறது.
கவரி மான் தன் வாலில் உள்ள முடிகளை இழந்து விட்டால், அது உயிர் வாழாது; இங்கு, அதன் வால் முடியே அதற்கு கூற்றம் ஆகிறது.
நீரில் வாழும் நண்டு, குஞ்சுகளை ஈன்றவுடன், அந்த குஞ்சுகளுக்கே இரையாகிப் போகுமாம்; இங்கு நண்டுக்கு அதன் குஞ்சுகளே கூற்றமாகிப் போகிறது.
ஒரு மனிதன், மற்றவர்களைப் பற்றி வரை முறையின்றி வசை மொழிகளைக் கூறினால், அந்த வசைமொழிகள் அவன்மீது கடும் பகையையும் வெறுப்பையும் ஏற்படுத்தி, இறுதியில் அவன் உயிருக்கே தீங்காக முடிந்து விடுகிறது. இங்கு அவனது நாவே அவனுக்குக் கூற்றமாக அமைந்து விடுகிறது என்கிறது சிறுபஞ்சமூலம் என்கிற அறநூல்.
"சிலம்பிக்குத் தன்சினை கூற்றம்; நீள்கோடு
விலங்கிற்குக் கூற்றம்; மயிர்தான் வலம்படா
மாவிற்குக் கூற்றம்; ஞெண்டிற்குத் தன்பார்ப்பு;
நாவிற்கு நன்றல் வசை !"
-வை,வேதரெத்தினம்
- உடலிலேயே பெரிய செல் பெண்களின் கருமுட்டை.
- மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்றுவிடுகிறது.
* உடலிலேயே பெரிய செல் பெண்களின் கருமுட்டை. சிறிய செல் ஆண்களின் விந்தணு.
* ஒருவர் வயிறு நிறைய சாப்பிட்ட பின், அவரது கேட்கும் திறன் சற்று குறையும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன்.
* மாலை வேளையை விட, காலையில் அனைவரும் ஒரு செ.மீ உயரமாக இருப்போம்.
* பிறக்கும் போது ஆரம்பத்தில் அனைத்துமே கருப்பு மற்றும் வெள்ளையாகத் தான் தெரியும்.
* அனைவருக்குமே ஒரு கண் வலிமையாகவும், ஒரு கண் பலவீனமாகவும் இருக்கும்.
* ஒவ்வொருவருக்கும் விரல் ரேகைகள், நாக்கில் உள்ள ரேகைகள் மற்றும் வாசனை மாறுபடும்.
* இரவில் படுக்கும் போது, படுக்கை அறையானது மிகவும் குளிர்ச்சியாக இருந்தால், கெட்ட கனவுகள் வரக்கூடும்.
* மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்றுவிடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே.
ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானையின் காது அளவிற்கு வளர்ந்திருக்கும்.
* உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள்.
* மனிதனின் மூளையானது பகல் நேரத்தை விட, இரவில் தான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இதற்கான காரணம் இதுவரை சரியாக யாராலும் சொல்ல முடியவில்லை.
* உடலில் மற்ற இடங்களை விட, முகத்தில் வரும் முடியின் வளர்ச்சி மிகவும் அதிகமாக இருக்கும்.
* ஆண்களின் இதயத்துடிப்பை விட பெண்களின் இதயம் வேகமாக துடிக்கும்.
* ஆண்களை விட பெண்கள் இரு மடங்கு வேகமாக கண்ககளை சிமிட்டுவார்கள்.
* பெண்களை விட ஆண்களுக்கு தான் விக்கல் அடிக்கடி வரும்.
* கால் விரலில் வளரும் நகங்களை விட, 4 மடங்கு அதிகமாக கைவிரலில் நகங்களானது வேகமாக வளரும்.
* குழந்தைகள் பிறக்கும் போது, கண்கள் நீல நிறத்தில் இருக்கும். பின் உடலில் மெலனின் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க கருவிழியானது உண்மையான நிறத்தைப் பெறும்.
* குழந்தைகள் பிறக்கும் போது நுரையீரல் பிங்க் நிறத்தில் இருக்கும். சுவாசிக்க, சுவாசிக்க, காற்றில் இருந்து கலந்து வரும் மாசு காரணமாக தான் நுரையீரல் நிறம் கருமையாக மாறிவிடுகிறது.
* சராசரியாக ஒரு பெண் அறுபது வயதை எட்டும் போது, 450 குழந்தைகளை பெற்றெடுக்க தேவையான முட்டைகளை வெளியிட்டிருப்பாள்.
- இறையாற்றலின் தன்மை ஒரு செங்குத்துக் கோட்டின் நிகழ்வாக உள்ளது.
- மூன்று காலத்தின் அசைவுகள் ஒரு கிடைக்கோட்டின் செயல்பாடுகளாக விளங்குகிறது.
அன்பு ஓஷோ, ' நிகழ் காலத்தில் வாழுங்கள் என்று பலமுறை நீங்கள் அழுத்தமாக சொல்கிறீர்கள். அதன் காரணத்தை அருள்கூர்ந்து விளக்குங்கள்.
ஓஷோ : மூன்று காலங்களில், நிகழ்காலத்தில் மட்டும் நீங்கள் இருக்க மாட்டீர்கள்.
கடந்த கால நிகழ்வுகளின் கவலைகள்..
அல்லது எதிர்காலம் பற்றிய கற்பனைகள்..
இவை இரண்டும் தான் உங்கள் வாழ்க்கையாகி விட்டது.
உண்மையில், மனிதர்களின் எண்ணம், செயல் இவை இரண்டும் நிகழ்காலத்தில் இருந்தால் தான் வாழ்க்கையின் சுவை தெரியும்.
இயற்கையில், எதிர்காலம் தான், நிகழ்கால மாகி, அது உடனே கடந்த காலமாக மாறி கொண்டே இருக்கிறது.
இந்த மூன்று காலத்தின் அசைவுகள் ஒரு கிடைக்கோட்டின் செயல்பாடுகளாக விளங்குகிறது.
இறையாற்றலின் தன்மை ஒரு செங்குத்துக் கோட்டின் நிகழ்வாக உள்ளது.
இந்த இரண்டு கோடுகளும் நிகழ்காலத்தில் தான் சந்திக்கின்றன.
குழந்தை எப்போதும் ஆனந்தத்தில் சிரித்தபடி நமது மனதை கவர்வதற்கு காரணம், அதற்கு இறந்த காலமும் தெரியாது, எதிர்காலமும் தெரியாது.
அதை தெரிந்து கொள்ளும் வரையில், குழந்தை நிகழ்காலத்தில் மட்டுமே இறையாற்றலின் தன்மையுடன் வளர்ந்து வருகிறது.
நீங்கள் நிகழ்காலத்தில் வாழ்ந்து வந்தால், இறைவனின ஆற்றலையும் பெற்று, மகிழ்ச்சியுடன் வாழலாம்.
கவலை என்பதற்கே இடமில்லாமல் போய்விடும்.
அதனால்தான், நான் மீண்டும் சொல்கிறேன்.
' நிகழ்காலத்தில் மட்டுமே வழுங்கள்.'
- தானே செல்லும் படை என்பதனால், தானைப் படை என அழைக்கப்பட்டது.
- மூன்று படைகளும் தரைப்படைகளாகவே இருந்தன.
தொண்டர்கள் தங்கள் தலைவரை தானைத்தலைவன் என்று புகழ்வது உண்டு. அதற்கு என்ன பொருள் தெரியுமா..?
தற்போது, முப்படைகள் என்பது, தரைப்படை, கடற்படை, வான்படை என்பதாகும். இதைப்போல சங்க காலத்திலும் முப்படைகள் இருந்தன.. ஆனால் அப்போதைய மூன்று படைகளும் தரைப்படைகளாகவே இருந்தன. அவை தானைப் படை , யானைப் படை , குதிரைப் படை.
தானைப்படை என்பது காலாட்படை ஆகும். குதிரைப் படையும், யானைப் படையும் காலாட்படையில் வராது.
போர்க் கருவிகளைத் தாங்கி, நடந்து சென்று போரிடுகிற வீர்களை மட்டும் கொண்ட படையே தானைப் படை ஆகும். தானே செல்லும் படை என்பதனால், தானைப் படை என அழைக்கப்பட்டது. "தானைத் தலைவன்" என்றால், தானைப் படையின் தலைவன் எனப் பொருள்.
யானை மீதும், குதிரை மீதும் போர்வீரகள் அமர்ந்து செல்லும் யானைப் படை, குதிரைப் படை என்கிற மற்ற இருவகைப்படைகளும், போர் வீரகளால் செலுத்தப்படும் படைகளாகும்.
குதிரைகளைக் கொண்டே தேர்கள் இயக்கப்படுவதால், "தேர்ப்படை" என்பது குதிரைப் படையின் உட்பிரிவாகவே கருதப்பட்டது.
-தபூசங்கர்
- ஒவ்வொரு மனிதனை சுற்றியும் ஆரா என்ற சூட்சும பகுதி இருக்கிறது.
- எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே.
ஆரத்தி எடுப்பது ஏன்? பழக்கமா? பண்பாடா? மூடநம்பிக்கையா?
ஆரோக்கியம் கிடைக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை.
ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாள தட்டில் மஞ்சள் அரைத்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீர் சிவப்பாக மாறும். அதில் கற்பூரம் ஏற்றி சம்பந்த பட்டவரின் இடம் வலம் மூன்று சுற்று சுற்றி விடுவதையே ஆரத்தி என்கிறோம்.
இது ஏன் செய்யப்படுகிறது?
ஒவ்வொரு மனிதனை சுற்றியும் ஆரா என்ற சூட்சும பகுதி இருக்கிறது. மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் கிருமி தொற்று முதலியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்த பின்னர்தான் உடலில் புகுகிறது.
புதிதாக திருமணம் முடிந்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடிந்து வரும் இளம் தாய், நீண்ட தூரத்து ஆன்மீக பயணம் முடித்து வருபவர்கள், வெற்றி பெற்ற பின் வீடு திரும்புபவர்களுக்கு ஆரத்தி எடுக்கும் பழக்கம் தமிழர்களிடம் உண்டு.
இவர்கள்மேல் தான் பலரின் திருஷ்டி விழ வாய்ப்பிருக்கிறது. மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு.
ஆரத்தி எடுக்கப்படும் நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம்.
ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேர வரும் விஷ அணுக்களை அழித்து நம் நலனை பேணுவதோடு மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்கப்படுகிறது,
வீட்டினுள் நுழையும் முன்னரே ஆரா சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் விஷ அணுக்களை அகற்றி தூய்மை படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டிற்குள் அழைத்து செல்வது தமிழர் பழக்கம்.
எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே.
-சுந்தர்ஜி
- ஒரு குடும்பத்தில் சகஜமாக எட்டு, பத்து பிள்ளைகள் பெற்றெடுத்த காலம்.
- பட்டம் செய்து .. நூலில் மாஞ்சா தடவி .. டீல் விட்ட காலம்.
1950... 60களில் ...
மணிக்கூண்டு கடிகாரத்தை பார்த்து நேரம்.. காலம்.. தெரிந்து கொண்ட காலம் ..
6 மணி சங்கு .. 10 மணி சங்கு ... 1 மணி சங்கு... 5 மணி சங்கு .. 8 மணி சங்கு... .. சங்கு ஊதலை கேட்டு நேரம் தெரிந்துகொண்ட காலம்..
கைக்கடிகாரம் அரிதாக இருந்த காலம்... கைக்கடிகாரம் கட்டியவர்களை வசதி படைத்தவர்களாக பார்த்த காலம்...
பெரிய கூட்டுக் குடும்பங்கள்..ஓயாத பிள்ளைகள் சத்தம்.
பிள்ளைகளெல்லாம் வீட்டின் நடு கூடத்தில்... ஒன்றாக விளையாடி.. கதை பேசி.. பாய் விரித்து.. ஏழரை மணிக்கெல்லாம் தூங்கி ..காலை ஆறு மணிக்கு முன் எழுந்த காலம்.
வீட்டுக்கு ஒரு மாடு ... மாட்டு கொட்டகை ... கோனார் கறந்த பாலில் தயிர் உரைக்கு ஊற்றி காலையில் மத்தை வைத்து மோர் கடைந்து... திரண்ட வெண்ணையில் நெய் உருக்கிய காலம்..
வீட்டு முன் .. பெண்கள் சாணி தெளித்து.. அதிகாலையில் கோலம் போட்ட நாட்கள் ..
சாணி பூசிய அடுப்பாங்கரை .. கரி படிந்த சமையக்கட்டு ... தரையில் உட்கார்ந்து .. ஊதாங்குழாயில் ஊதி ... புகையுடன் போராடி.. விறகை பற்றவைத்து .. சமையல் செய்த காலம்.
பெரியவர்களை ஜாதி பெயர் ... பட்டப்பெயர்... சொல்லி மரியாதையாக கூப்பிட்ட காலம் ..
வீட்டிலேயே பிரசவம் ... மிட் வைப் என்று சொல்லக்கூடிய நர்சு அம்மாக்கள்.. செலவில்லாமல் பிரசவம் பார்த்த காலம் ..
14..15 வயதில்கூட பெண்களுக்கு திருமணம்... ஒரு குடும்பத்தில் சகஜமாக எட்டு, பத்து பிள்ளைகள் பெற்றெடுத்த காலம்
எல்லாம் பாட்டி வைத்தியம் தான் ..
வீட்டிலேயே வடகம் ...முறுக்கு அச்சில் விரித்த துணியில் பிழிந்து ... அதனுடன் தாளிக்கிற வடகம் உருட்டி வெயிலில் காய போட்ட காலம்.
டெலிகிராம் தந்தி வந்தால் வீடே கூடி என்ன செய்தி வந்துள்ளது என்று ஆர்வத்துடன் கேட்ட சமயம்.
பொழுதுபோக்கு ... தாயம் .. பல்லாங்குழி.
சட்டினி .. துவையல் .. குழம்பு மிளகாய் கொத்தமல்லிஅரைப்பதற்கு அம்மி குலவி..
தோசை இட்லி மாவுக்கு ஆட்டுக்கல்...
குறவர்கள் கூவி விற்ற கொக்கு, மணிப்புறா, கௌதாரி, உள்ளான் மற்றும் காட்டு முயல்கள்..
கோமணம் கட்டி ... வீட்டு கேணியில் .. பூட்டுக்கயிறு போட்டு .. வாளியில் தண்ணீர் இறைத்து குளித்த காலம்..
பெரிய திண்ணை வீடுகள்.. நடந்து செல்பவர்கள் தைரியமாக வீடுகளில் செம்பு தண்ணி வாங்கி குடித்து .. திண்ணையில் ஓய்வெடுத்து சென்ற காலம்.
பள்ளிகளுக்கு ஒரு சின்ன மஞ்ச பையில்.. சிலேட்டு, சிலேட்டு குச்சி இரண்டு மூன்று புத்தகங்கள் .. ஸ்கூல் பாக் பற்றி தெரியாத காலம்
பள்ளிப் பிள்ளைகள் வாத்தியாரிடம் பிரம்படி வாங்கி .. பெஞ்சு மேல் ஏறி நின்ற காலம்.
பள்ளிப்பருவத்தில் சில்லு, பளிங்கி, பம்பரம் விளையாடிய காலம்..
"சாட் - பூட் – த்திரி" போட்டு ... ஐஸ் பாய்.. கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிய காலம்..
பசித்தால் .. தட்டு கடையில் பாட்டி விற்ற .. ஜவ்வு மிட்டாய் ..தேன் மிட்டாய் .. கமர்கட்டு
ஐஸ் அபூர்வமாக பார்க்கப்பட்ட காலம் ..; மரங்களில் ஏறி குரங்கு விளையாட்டு..
பட்டம் செய்து .. நூலில் மாஞ்சா தடவி .. டீல் விட்ட காலம்.
டி.வி., செல்போன் இல்லாத காரணத்தால்.. கதை சொல்பவர்களுக்கு நல்ல மவுசு ... குறிப்பாக சினிமா கதை கேட்பதென்றால் ஆர்வமுடன் கேட்ட காலம்.
சைக்கிள் டியூப் ரப்பரில் கேட்டாபெல்ட் செய்து சிட்டுக்குருவிகளை வேட்டையாடிய காலம்..
சைக்கிளில் ஊர் சுற்றிய காலம் ...
சைக்கிள் ரிம்மில் குச்சியை வைத்து ரோட்டில் ''ரோதை' ஒட்டிய காலம்... குரங்கு பெடல் போட்டு .. சைக்கிள் ஓட்ட கற்ற காலம் ..
சினிமா பைத்தியங்களாக .. ஒரு சினிமா விடாமல் .. நாலணா தரை டிக்கெட்டில் சினிமா பார்த்த காலம்.. படம் பார்த்த பிறகு அந்த பட பாட்டு புத்தகங்களை வாங்கி ... சினிமா பாடல்களை மனப்பாடம் செய்து பாடிய காலம் ..
பூரண மதுவிலக்கு.. குடிப்பழக்கம் என்னவென்று தெரியாத காலகட்டம்..
கரி என்ஜின் பொருத்திய ரெயில் வண்டியில் பயணம் செய்து தலைமுடியில் எல்லாம் கரித்தூள் ஆகிய காலம் ..
லாரி டயரில்.. தோல் வார் கோத்த செருப்பு வாங்கி ... எங்கு போனாலும் நடந்து சென்ற காலம் ..
போன் அபூர்வமாக இருந்த காலம் ... பக்கத்து பணக்கார வீட்டு போனை நம்பி வாழ்ந்த காலம் ..
மாட்டு வண்டி .. குதிரை வண்டியில் ... சவாரி செய்த காலம் ..
கார்கள் கிராமத்திற்கு சென்றால் ""பிளசர்" வந்திருக்கு" என்று ஆச்சிரியமாக பார்த்த காலம்..
சிறுவர்கள் மேல் வார் பொருந்திய அரை டவுசர் ..அரை டிராயர் ..போட்ட காலம் ..
மணிக்கூண்டு ராணி பூங்காவில் .. தினந்தோறும் .. மக்கள் கூடி .. ஆல் இந்தியா ரேடியோ .. ஆகாஷவாணி ஆறரை மணி நியூஸ் கேட்ட காலம்..
"நிரந்தரம் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் நிரந்தரமின்றி போக,மாற்றங்கள் மட்டுமே நிரந்தரமாக்கிப் போகும் காலத்தின் சுழற்சியால்.."
-எஸ்.பி.அந்தோணிசாமி
- சுவாசக் கோளாறுகளுக்கும் சிறந்த தீர்வாக உள்ளது.
- வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
நார்த்தங்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வர ரத்தம் சுத்தம் அடையும், வயிற்றுப்போக்கு, வாதம் நீங்கும், உடல் சூட்டை தணிக்கும். மேலும் மூட்டு வலிக்கு சிறந்தது. இதன் சாற்றை தண்ணீர், உப்பு அல்லது நாட்டு சர்க்கரை கலந்து பருக பித்த வாந்தி குணமாகும்.
துளசி சாறை அடிக்கடி குடிப்பதால், போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் அழுத்தத்தையும், அழற்சியையும் குறைக்கிறது. சுவாசக் கோளாறுகளுக்கும் சிறந்த தீர்வாக உள்ளது.
ஒரு கிண்ணத்தில் சிறிதளவு எலுமிச்சை சாறு, வெள்ளரிக்காய் சாறு, பாலாடை, தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் தயார் செய்யவும். இதை, வாரத்திற்கு மூன்று முறை கருமை உள்ள இடத்தில் தடவி ஊறவிட்டு 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் ஒரு மாதத்தில் கருமை நீங்குவதை காணலாம்.
கிரீன் டீயை பஞ்சில் நனைத்து முழங்கை மற்றும் முட்டிகளில் தினமும் காலை மற்றும் மாலையில் துடைத்து வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறத் தொடங்கும்.
நெல்லிக்கனியில் உள்ள ஆண்டி ஆக்ஸிடேட் நோய் நொடிகளில் இருந்து உடலை காத்து, முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை இருக்க செய்யும் சக்தி இதற்கு உண்டு.
பச்சை மிளகாய் காரத்திற்கு மட்டுமல்ல...கலோரிகளை எரித்து கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டது. வேகமாக செரிமானம் ஆகும். நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைகிறது.
அதில் ஆண்டி பாக்டீரியா இருப்பதால் நோய் தொற்றுகள் வராமல் தடுக்கிறது. வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
-அகஸ்தியர் நாகலிங்கம்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்